SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

1000 கூடு அமைத்து சிட்டுக் குருவிகளை காக்கும் மார்க்கெட் வியாபாரிகள்

2014-01-10@ 10:08:49

‘சிட்டுக்குருவி‘, பெயரை உச்சரித்ததுமே ஒரு உற்சாகம் நம்மை தொற்றிக்கொள்ளும். அதன் சுறுசுறுப்பு, அங்கும் இங்கும் வெட்டி வெட்டி பறக்கும் அதன் தனித்தன்மை, மனிதர்கள் வசிக்கின்ற பகுதியிலும் சகஜமாக வளரும் அதன் இயல்பு, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரையும் கவரும். அதன் சிறிய உடல்வாகு, தனக்காக அமைத்துக்கொள்ளும் சிறு கூடு, குஞ்சுகளுக்கு உணவூட்டும் அழகு எல்லாமே வசீகரம். 16 முதல் 24 செ.மீ நீளத்துடன் கறுப்பும், கரும் சாம்பல் நிறத்தில் உடலழகை பெற்ற ஆண் குருவிகளும், கூடவே மஞ்சள் மற்றும் பழுப்பு நிற கோடுகளுடன் கூடிய பெண் குருவிகளும் காணப்படும்.

காதல் வயப்படும் போது ஜோடியாக திரியும். இதுதான் சீசன் என்று இல்லாமல்  ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் உண்டு, அதுதான் சிட்டுக்குருவியின் ஸ்பெஷல். ஒரு முறை 4, 5 முட்டைகள் இடும். 15 நாட்களில் குஞ்சு கள் ரெடி. அடைகாப்பதில் இங்கு ஆணுக்கு பெண் பாகுபாடு இல்லை. இருவருக்குமே அதில் சம உரிமை உண்டு.இன்றைய சுற்றுச்சூழல் மாறுபாடும், அறிவியல் வளர்ச்சி தந்த முன்னேற்றத்தால் மனித நடவடிக்கைகளும், இயற்கையையும், அதன் பாதுகாப் பில் இருந்த பறவையினங்களையும் அழிப்பது ஒருபுறம் இருந்தாலும் அதே மனிதன் பறவைகளை பாதுகாக்கவும் அவை சுதந்திரமாக வாழவும் வழி செய்கிறான்.

நாகர்கோவில் - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நகரை விட்டு சற்று ஒதுங்கிய ஒழுகினசேரி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்து காணப்படும் ‘அப்டா‘ காய்கறி மார்க்கெட்தான் இன்று சிட்டுக்குருவிகள் கூட்டத்தின் வாழ்விடமாக உள்ளது. வயல் வெளிகளுக்கு நடுவே உணவு, உறைவிடம், பாதுகாப்பு என்று சிட்டுக்குருவிகளுக்கு தேவையான, உதவியான அம்சங்கள் ஒருங்கே கிடைப்பதால் இங்கே சிட்டுக்குருவிகள் கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. ஆரம்பத்தில் இங்கு சில ஜோடி சிட்டுக்குருவிகள் வலம் வந்துள்ளன.

இவற்றை பார்த்த வியாபாரிகளும், சமூக ஆர்வலர்களும் அதன் வளர்ச் சிக்கு உதவினர். மனித இருப்பிடத்தில் வாழ்ந்தாலும் சிட்டுக்குருவிகள் மனிதனோடு பழகாது என்பதால் இயற்கையாகவே சிட்டுக்குருவிகள்  வாழ வழி செய்தனர். மார்க்கெட் முழுவதும் காங்கிரீட் கட்டிடம், இரும்பு தூண்கள்தான் என்றாலும் அவற்றின் இடையே மரத்தாலும், அட் டை பெட்டியாலும், மூங்கில் துண்டுகளையும் கொண்டு தயார் செய்யப்பட்ட செயற்கை கூடுகளை சிட்டுக்குருவிகளுக்காக வடிவமைத்து வைத்தனர். இன்று 1000க்கும் மேற்பட்ட கூடுகள் மார்க்கெட் பகுதி முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன.

காகங்கள், கழுகுகள் போன்ற பறவைகள், பாம்புகள்,  பூனைகள் போன்ற பிற விலங்கினங்களிடம் இருந்து முழு பாதுகாப்பு சிட்டுக்குருவிகளுக்கு உண்டு. காய்கறிகள், பழங்கள், கீரைகளில் இருந்து  கிடைக்கின்ற உணவுகள், புழுக்கள் இரையாக கிடைக்கின்றன. அருகில் உள்ள வயல்வெளிகளில் உலா வரலாம். அடைமழை பெய்தாலும்  நனையாத கூடுகள். மனித நடமாட்டம் மிகுந்த பகுதி என்றாலும் மனித அச்சுறுத்தல் துளி கூட இல்லை. இவையெல்லாம் இன்று சிட்டுக்குரு விகள் கூட்டம் கூட்டமாக வாழ வழி செய்கின்றன.

‘‘என்னதான் செயற்கையாக கூடுகள் வைத்தாலும் அது இயற்கையாக தாமே கட்டுகின்ற கூடுகளில் வாழ்வதுதான் அதற்கு பிரியம். அதனால் கடைகளின் ரோலிங் ஷட்டர்களுக்கு மேல் பகுதியில் உள்ள கூண்டுபோன்ற பகுதியில் புற்களையும், காய்ந்த வைக்கோல்களையும் கொண்டு வந்து சிட்டுக்குருவிகள் கூடுகள் அமைத்துள்ளன. முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. ஷட்டர்களை மூடினால் கூடுகள், சேதமடைவதுடன், குருவிகளுக்கும் அது கஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதால், இரவில் கூட பலர் கடைகளின் ஷட்டர்களை மூடுவதில்லை, 24 மணி நேரமும்  கடைகளை திறந்தே வைத்திருக்கிறோம்‘‘ என்கிறார் காய்கறி வியாபாரி வைகுண்டமணி.

சிட்டுக்குருவியை பாதுகாப்பதில் ஆர்வத்துடன் இருந்த அவரிடம் பேசினோம் ‘‘இங்கு நான் மட்டுமல்ல, வியாபாரிகள் பலரும் சிட்டுக்குருவி களை வளர்க்க ஆர்வம் காட்டுகிறோம். மாதந்தோறும் ஒருமுறை கூட்டம் நடத்துகிறோம். அதிகாரிகளையும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும் அழைத்து ஆலோசனை கேட்கிறோம். இந்த சிட்டுக்குருவிகளால் எங்களுக்கு எந்த தொல்லையும் இல்லை. அருகில் வயக்காடு இருப்பதால் வயல்வெளிகளில் அவை சுற்றித் திரிகின்றன. முட்டையிட்டால் அவற்றை காகங்கள் தூக்கி செல்லாது. பாம்புகள் வர வாய்ப்பு இல்லை.

அந்த  அளவுக்கு பாதுகாப்பாக அவற்றின் கூடுகள் உயரத்தில் உள்ளன. நாங்கள் கூடுகளை மட்டுமே வைக்கிறோம். அவற்றில் புற்களையும், பஞ்சு போன்ற பொருட்களையும் குருவிகளே கொண்டு வந்து கூடுகளை மேலும் தனக்கு இதமாக்கி கொள்கிறது. இங்கு பறக்கின்ற பூச்சிகளை கொத்தி தின்னும். அவை ‘கீச்‘ ‘கீச்‘ என்று சத்தம்போட்டு பறப்பதும், குஞ்சுகளுக்கு உணவு கொடுப்பதும் அதன் அழகே தனிதான். குருவிகள்  கூட்டம் சேர்ந்துவிட்டால் பல இங்கிருந்து கூட்டத்தோடு வேறு பகுதிகளுக்கு வெளியேறவும் செய்கின்றன.

இங்கிருந்து வேறு பாதுகாப்பான இடங்களுக்கும் அவை சென்று வளருவதால் இந்த இனம் இன்னும் பெருகவும் வாய்ப்பு உள்ளது. சிட்டுக்குருவி இனம் அழிந்து வருகிறது என் கின்றனர். ஆனால் நாங்கள் தினமும் அவற்றின் கண்முன்தான் காலை பொழுதில் விழிக்கிறோம் என்பதில் சந்தோஷம்‘‘ என்றார். சிட்டுக்குருவியை வளர்க்க கூடுகள் அமைத்து வியாபாரிகளுக்கு உதவும் விலங்குகள் ஆர்வலர் ஆசிரியர் டேவிட்சனை சந்தித்தோம். அவர் ‘‘இயற்கையை நேசிக்க அறிவியல் பற்றி படிக்க வேண்டும் என்றில்லை. யார் வேண்டுமானலும் இயற்கையை நேசிக்கலாம், பாதுகாக்கலாம்.

பறவைகள், விலங்கினங்களுக்கு உதவலாம். சிறுவயதிலேயே நண்பர்களுடன் சேர்ந்து துப்பாக்கியுடன் காடுகளில் வேட்டைக்கு செல்வது உண்டு. அப்போதிருந்தே விலங்குகள் மீது ஈடுபாடு உண்டு. கடந்த 2000ம் ஆண்டில் தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தொடர்பான ‘கான்செப்ட்‘ ஒன்றை உருவாக்கும் போட்டி நடத்தினர். அதில் ஆங்கில பாடம் வழியாக எவ்வாறு சுற்றுச்சூழல் விழிப்பு ணர்வு செய்ய முடியும் என பாடல் பொருளை விளக்கும்போது சுற்றுச்சூழலையும் விளக்கினேன். நான் தயாரித்த கருத்துரு தேர்வு செய்யப் பட்டு எனக்கு தேசிய விருது தந்தார்கள்.

நான் முதலில் ‘அப்டா‘ காய்கறி மார்க்கெட்டில் சென்ற போது அங்கு 6 ஜோடி சிட்டுக்குருவிகள் இருந்தன. அது அவை வளர்வதற்கு உதவி யான இடமாக இருந்ததை உணர்ந்தேன். நாங்கள் அவற்றுக்கு உதவினோம். கூடுகளை அமைத்து கொடுத்தோம். மரப்பெட்டிகளை தயார்  செய்து வைத்தோம். குருவிகள் எண்ணிக்கை பெருக பெருக பெட்டிகளின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்தினோம். ஏறக்குறைய எல்லா  கடையின் மேல் பகுதியிலும் இன்று ஒரு கூடு இருக்கும். அவற்றில் சில குருவிகளையும் நீங்கள் பார்க்கலாம்.

மனிதனை போலத்தான், சிட்டுக்குருவிகளும். உணவு, நீர், பாதுகாப்பு கிடைப்பதுடன் பிற விலங்கினங்களால் தொந்தரவு வரக்கூடாது என்று எண்ணும். அதற்கு அதன்  வாழிடம் முக்கியம். முன்பெல்லாம் வீடுகள் மர வேலைப்பாடுகளுடன் இருக்கும். ஓட்டு வீடுகள், ஓட்டுக்கூரை கொண்ட பள்ளி கட்டிடங்களில் அவற்றின் மர சட்டங்களுக்கு இடையே கூடுகட்டி சிட்டுக்குருவிகள் வாழும். இன்றோ எல்லாம் காங்கிரீட் மயமாகிவிட்டது. செல்போன் டவர் கதிர்வீச்சுகள், வாகனத்தில் இருந்து வெளியேறும் புகை, பயிர்களுக்கு தெளிக்கப்படும் பூச்சி மருந்து போன்றவையும் சிட்டுக்குருவிகளுக்கு பெரிய அச்சுறுத்தல்தான்.

இன்று தமிழகத்தில் 400க்கும் மேற்பட்ட ஜோடி சிட்டுக்குருவிகளை ஒரே இடத்தில் பார்க்க முடியும் என்றால் அது இங்கேதான் இருக்க முடியும். அதில் எங்களுக்கு மிகுந்த சந்தோஷம் உண்டு‘‘ என்றார். சிட்டுக்குருவிகளை பாதுகாக்க பல்வேறு விஞ்ஞான ஆய்வுகள், ஆராய்ச்சிகள் நடக்கிறது. பல நாடுகள் சிட்டுக்குருவிகளை பெருமைப்படுத்தி தபால் தலைகள் வெளியிட்டுள்ளன. சிட்டுக்குருவிகளையும் கவுரவப்படுத்தும் வகையில் மார்ச் 20 ‘ஊர்க்குருவி தினம்‘ என கொண்டாடப்படுகிறது. சிட்டுக்குருவிகள் அன்று விவசாயிகளின் நண்பன், இன்று வியாபாரிகளின் நண்பனாகியுள்ளது, இவர்களை போல நாமும் சிட்டுக்குருவிகளின் காவலனாய் இருப்போம்.

-எம்.இராஜகுமார்
படங்கள்: எஸ்.மதன்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • tirupati-4th-day-30

  திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

 • ian-florida

  புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

 • America_electric plane

  முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

 • chennai-heavy-rain

  சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

 • tirupati-brahmotsavam-28

  கோவிந்தா! கோவிந்தா!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம்.. சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்