SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வார விசேஷங்கள்

2023-03-18@ 16:56:48

திருவோண விரதம் 18.3.2023 - சனி

சனிக்கிழமை பெருமாளுக்கு உரிய நாள். எந்த புண்ணிய பலனும் மாறாது கொடுக்கும் நாள் சனி. சனி பகவானுக்குரிய மகர ராசியில்தான் திருவோண நட்சத்திரம் இருக்கிறது என்பதால் சனிக்கிழமையும் திருவோணமும் கலந்து வந்தால் அந்த நாளுக்கு ஒரு மகத்தான சிறப்பு உண்டு. அப்படி மகத்தான சிறப்பு பெற்ற நாள் இன்றைய நாள். குறிப்பாக ஒவ்வொரு திருவோண நட்சத்திரத்தில் பெருமாளுக்கு விசேஷமான திருமஞ்சனங்கள் உண்டு. ஒப்பிலியப்பன் கோயிலில் சிரவணத்திற்கு கிரிவலம் போல பிரதட்சணம் உண்டு. அன்று விரதம் இருந்து பெருமாளைத் தரிசனம் செய்தால் ‘‘திரு’’ என்று சொல்லக்கூடிய அத்தனைச் செல்வங்களும் நீங்காது நிலைத்திருக்கும்.

திங்கட்கிழமையும் திருவோணமும் சேர்ந்த தினங்களாக ஆண்டிற்கு ஓரிரு தினங்கள் வரும். இந்த தினத்தில் விரதம் இருந்து அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசி மாலை சாற்றி பெருமாளையும் தாயாரையும் வழிபட வேண்டும். முதல்நாள் இரவு திட உணவு உண்ணக்கூடாது. திருவோண விரத தினத்தில் காலையில் எழுந்து குளித்து பெருமாள் ஆலயத்துக்குச் சென்று துளசிமாலை சாற்றி தரிசித்து வர வேண்டும். காலையில் துளசித் தீர்த்தம் மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும். பெருமாள் பாடல்கள், ஆழ்வார் பாசுரங்கள், விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்தல் வேண்டும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அழகான குழந்தை பாக்கியம் கிட்டும். விரத நாள் இன்று பாட வேண்டிய பாசுரம் வாமனனைப் பற்றியது.

மண்ணை இருந்து துழாவி  
‘வாமனன் மண் இது’ என்னும்,
விண்ணைத் தொழுது அவன் மேவு
வைகுந்தம் என்று கை காட்டும்,
கண்ணை உள்நீர் மல்க நின்று  
‘கடல்வண்ணன்’ என்னும் அன்னே!  என்
பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு  
என் செய்கேன் பெய் வளையீரே?


நாம் நம் பெயரில் பத்திரம் எழுதி வைத்திருக்கும் நிலம் நம்முடைய நிலமல்ல. அது பெருமாளுடைய நிலம் என்கிற செய்தியைச் சொல்லுகின்ற இந்தப் பாசுரத்தை மனம் உருகிப் பாடினால், எம்பெருமான் திருவருளால் இந்திரனுக்கு பூமி கிடைத்தது போல நமக்கும் பூமிச் செல்வங்கள் கிடைக்கும்.

விஜயா ஏகாதசி 18.3.2023 - சனி


ஸ்ரீராமபிரான் அனுஷ்டித்த ஏகாதசி. இந்த ஏகாதசிக்கு விஜயா ஏகாதசி என்று பெயர். எல்லாப் பாவங்களையும் போக்கக் கூடியது. ராமபிரான் வானரசேனையோடு இலங்கைக்குப் படையெடுத்து வருகிறார். சேதுக் கரைக்கு வந்தவுடன் நீண்ட கடலைப் பார்க்கிறார். இத்தனை வானரச் சேனைகளோடு இந்தக் கடலை எப்படித் தாண்டுவது என்று யோசிக்கிறார் தால்ப்யர் என்ற முனிவரிடம் சென்று ஆலோசனை கேட்டார். அவர் இந்த கடலைத் தாண்டக் கூடிய யோசனையைச் சொல்லுவார் என்று தால்ப்யர் ஏகாதசி உபவாசத்தைப் பற்றி எடுத்துக் கூறுகின்றார். ‘‘பங்குனி தேய்பிறையில் வரும் இந்த ஏகாதசி உபவாசம் இருந்தால், நீ எளிதில் சமுத்திரத்தைக் கடக்கலாம். ராவணனை வென்று சீதையை அடையலாம்.’’ என்று ஏகாதசி விரதத்தின் மகாத்மியத்தை முனிவர் சொல்லுகின்றார்.

தசமி அன்று தங்கம் வெள்ளி, தாமிரம், அல்லது மண்ணினால் செய்த ஒரு குடத்தை வைத்து அதில் பரிமளங்களுடன் கூடிய தீர்த்தத்தைச் சேர்க்க வேண்டும். அதன் கீழே கோதுமை முதலிய நவதானியங்களைப் பரப்ப வேண்டும். கும்பத்தின் மேல் சந்தனம் வைத்து, புஷ்பங்களைச் சுற்றி அலங்கரித்து, கும்பத்தில் உள்ள தீர்த்தத்தில் ஸ்ரீலட்சுமி நாராயண மூர்த்தியை ஆவாகனம் செய்து உபசாரம் செய்யவேண்டும். பதினாறு வகை உபசாரங்களுடன் பூஜிக்க வேண்டும். ஏகாதசியன்று காலையில் நீராடி, கும்பத்தில் ஆவாஹனம் செய்த பெருமாள் தாயாரை பல ஸ்தோத்திரங்களாலும், விஷ்ணுசகஸ்ர நாமம் போன்ற சுலோகங்களாலும், ஆழ்வார்களின் பாசுரங்களாலும் பூஜை செய்ய வேண்டும்.

அடுத்த நாள் துவாதசியில் வேதம் படித்தவர்களுக்குத் தானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் வெற்றி அடையலாம். இந்த நாளில் துளசியை வழிபடுதல், துளசியினால் விஷ்ணுவை பூஜித்தல் நன்மை பயக்கும். ராமர் அனுஷ்டித்த இந்த ஏகாதசி விரதத்தை நாம் அனுஷ்டித்தால், நம் முடைய வாழ்வில் பல வெற்றிகளை அடையலாம்.

மிருத்யுஞ்ஜய பிரதோஷம் 19.3.2023 - ஞாயிறு

திதிகளில் 13-வது திதி திரயோதசி. இந்த நாளை பிரதோஷ நாள் என்பார்கள். வளர்பிறையில் ஒரு பிரதோஷமும் தேய்பிறையில் ஒரு பிரதோஷமும் வரும். இந்த பிரதோஷ நாளில் விரதம் இருந்து நந்தியையும் சிவனையும் வழிபட வேண்டும். சனிக்கிழமை வருகின்ற பிரதோஷத்தை சனி பிரதோஷம் என்பார்கள். திங்கட்கிழமை வருகின்ற பிரதோஷத்தை சோம பிரதோஷம் என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட சிறப்புமிக்க பிரதோஷ விரதங்களில் வரும் ஞாயிற்றுக்கிழமை வரும் விரதம் மிருத்யுஞ்ஜய பிரதோஷ விரதம். இந்த பிரதோஷவிரதம், மரணபயத்தை நீக்கும்.

ஆயுளை நீட்டிக்கும். ஞாயிற்றுக்கிழமை வருகின்ற பிரதோஷ நாள் என்பதால் சூரிய பகவானுடைய அருள் கிட்டும். காலை முதல் விரதமிருந்து மாலை சிவன் கோயிலுக்குச் சென்று வணங்குவதால் துன்பங்கள் நீங்கும். நோயால் அவதிப்படுபவர்கள் கோயிலுக்குச் செல்ல முடியாவிட்டாலும், மாலை பூஜைஅறையில் ஒரு விளக்கேற்றி வைத்து, சிவபெருமானை எண்ணி கீழே, உள்ள மிருத்யுஞ்ஜ மந்திரத்தைச் சொல்லி வழிபடுவதால் நோய்கள் அகலும். கடன் தொல்லைகள் நீங்கும்.

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்ட்டிவர்த்தனம்
உருவாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் ஓம்


தண்டியடிகள் நாயனார் குருபூஜை 20.3.2023 - திங்கள்

‘‘நாட்டமிகு தண்டிக்கும் அடியேன்”  என்று திருத்தொண்டத் திருத்தொகையில் போற்றப்பட்ட தண்டியடிகள் நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். திருவாரூரில் பிறந்தவர். பிறக்கும்போதே பார்வையை இழந்திருந்தாலும் அகப்பார்வையால் (மனத்தால்) ஆரூரனை அனுதினமும் இடைவிடாது துதிக்கும் மனம் படைத்தவர்.  தண்டியடிகள் திருவாரூர்ப் பூங்கோயிலில் தேவாசிரியமண்டபத்தினுள் அடியார்களை வணங்கிவிட்டு, இறைவன் முன் வலம் வந்து, திருத்தொண்டுகள் பல செய்து வந்தார்.

ஆரூர்த் திருக்கோயிலின் மேற்புறத்திலுள்ள திருக்குளம் பக்கம் சமணர்களின் இருப்பிடம் பெருகி, குளத்தின் இடம் குறைவடைந்தது. தண்டியடிகள், குளத்தில் இறங்கி மண்ணை வெட்டியெடுத்துக் கரையிலே போடும் பணியினை மேற்கொண்டார். இவ்வாறு நாள்தோறும் தண்டியடிகள் குளத்தினைத் தோண்டக் கண்டு சமணர்கள் பொறாது அவரோடு கருத்து வேறுபாடு கொண்டு இகழ்ந்தனர். அவர் பணியை கைவிடும்படி கடுமையாகக் கூறினர். தண்டியடிகள் அதை செவியில் ஏற்காது சிவப்பணியே தவப்பணி என்று செய்வதைக் கண்டு அவரை இகழ்ந்தனர்.

‘‘உனக்கு கண்தான் இல்லை, காதும் இல்லையோ?’’ என்று செவி சுடும்படியான சொற்களைக் கூறினர் “நீ இக்காரியம் செய்து அடைந்த பையன் என்ன?” என்று கேட்க, தண்டியடிகள் ‘‘இது சிவத்தொண்டு. இதற்குப் பயன் சிவத்தொண்டு மூலம் அடைகின்ற இன்பம்தான்’’ என்று சொன்னார். ‘‘சிவத்தொண்டின் பெருமை அறிகின்ற ஆற்றல் உங்களுக்கு இல்லை. இப்பணி அழகைக் காண உங்களுக்குக் கொடுத்து வைக்கவில்லை’’ என்று சொல்ல, ‘‘ஓஹோ நீ கொடுத்து வைத்தாயோ?’’ என்று ஏகடியம் பேசினர். ‘‘ஆமாம் நான் எப்பொழுதும் என் கண்களால் சிவனுடைய திருவடிகளையே காண்கின்றேன்’’ என்று சொன்னவுடன் அவர்கள் சிரித்து, ‘‘கண்ணில்லாத நீ எப்படி சிவனை காண்பாய்? அதை எப்படி நாங்கள் நம்புவது?’’ என்று சொல்லிவிட்டு, ‘‘நீ வணங்கும் சிவனருளால் உனக்குக் கண் பார்வை வரட்டும். அதுவரை வேலை செய்யாதே’’ என்று சொன்னதோடு இவருடைய மண்வெட்டியையும் தட்டுக்களையும் பறித்து எறிந்தனர்.

தண்டியடிகள் மனம் வருந்தி சிவபெருமான் முன் அழுது முறையிட்டார். “சிவப்பணி செய்ய முடியவில்லை” என்று துடித்தார். அன்று சோழமன்னன் கனவில் தோன்றிய சிவபெருமான் தண்டியடிகளுக்கு உதவுமாறு உத்தரவிட்டார். சோழமன்னன் அடுத்த நாள் குளக்கரைக்கு வந்து இருவர் வழக்கையும் விசாரித்தான். ‘‘அடிகளாரே, நீர் கண் பெற்றது உண்மையானால் இவர்கள் இந்த இடத்தை விட்டு அகன்று விடுவார்கள். கண்பார்வை பெற்றதை இவர்களுக்குக் காட்டுவீராக’’ என்று சொல்ல, அடுத்த நிமிடம் தண்டியடிகள் சிவபெருமானை வணங்கி குளத்தில் மூழ்கி எழ, அவருடைய ஒளி வீசும் கண் பார்வையை எல்லோரும் கண்டனர். அதே சமயம் சமணர்களின் கண்பார்வை பறிபோயிற்று.

அதோடு அவர்கள் குளக்கரையை விட்டு அகன்றனர். தண்டியடிகள் தம்முடைய திருத்தொண்டினைத் தொடர்ந்து பல காலம் செய்து சிவபதம் அடைந்தார். அவருடைய குருபூஜை தினம் (பங்குனி சதயம்) இன்று. அதோடு இன்று மாத சிவராத்திரி நாள்.

சர்வ அமாவாசை 21.3.2023 - செவ்வாய்

இந்த ஆண்டின் கடைசி மாதமான பங்குனி மாதத்தின் அமாவாசை தினம். செவ்வாய்க்கிழமை குருவினுடைய பூரட்டாதி நட்சத்திரத்தில் வருகின்ற அமாவாசை. இன்று முன்னோர்களை நினைத்து நீத்தார் கடன் நிறைவேற்ற வேண்டும்
 
தெலுங்கு வருடப்பிறப்பு 22.3.2023 - புதன்

இதனை யுகாதி என்பார்கள். ஆதி என்பது தொடக்கம். அந்தம் என்பது முடிவு. யுகாதி என்பது ஆண்டின் தொடக்கம் என்ற பொருளில் வரும். பல கோயில்களில் யுகாதி ஆஸ்தானம் என்று சொல்லி பஞ்சாங்க படனம் (பஞ்சாங்கம் படித்தல்) செய்வார்கள். சாந்தரமான முறையில் இன்று சித்திரை தொடக்கம்.  காலையில் எழுந்து நீராடி தெய்வத்தை நினைத்து விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். விநாயகர், பெருமாள், கௌரி அம்பிகை மற்றும் இஷ்ட தெய்வம், குலதெய்வங்களை முன்வைத்து போளி, புளியோதரை, பால் பாயசம் செய்து தெய்வங்களுக்குப் படையல் செய்து, ஆரத்தி செய்வது வழக்கம். செய்த படையலை ஏழை எளியவர்களுக்கு வழங்குதல் வேண்டும்.

அந்த காலத்தில் உகாதி தினத்தன்று ஒரு ஜோதிடரை வீட்டிற்கு வரவழைத்து, அந்த வருடத்திற்குக் குடும்ப உறுப்பினர்களின் நேரம் எப்படி இருக்கிறது என்பது கணிக்கப்படும்.

சதாயூர் வஜ்ர தேஹாய சர்வ சம்பத்கராய
சசர்வாரிஷ்ட விணாசாய நிம்பஸ்ய தல பட்சணம்


யுகாதி பண்டிகையன்று மேலே உள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி வெல்லம் கலந்த வேப்பம்பூ பச்சடியை ஆண்கள், பெண்கள் என அனைவரும் சாப்பிட வேண்டும், இன்றிலிருந்து வசந்த நவராத்திரி உற்சவம் ஆரம்பமாகிறது.

சௌபாக்ய கௌரி விரதம் 24.3.2023 - வெள்ளி

யுகாதி பண்டிகைக்குப் பின் வருகின்ற வளர்பிறை திருதியை அன்று சௌபாக்ய கௌரி விரதம் கொண்டாடுவார்கள். அம்பாளை கொண்டாடுகின்ற இந்த விரதத்தை, மிக எளிமையான பூஜையின் மூலம் கொண்டாடலாம். சிலர் ஒரு மாத காலம் கொண்டாடுவார்கள். அடுத்து வரும் திருதியை, அட்சய திருதியை வரைக்கும் கலசத்தை ஆவாகனம் செய்து தினந்தோறும் அம்பாளை பூஜித்துக் கொண்டாடுவதன் மூலமாக பற்பல சௌபாக்கியங்கள் கிடைக்கும். இந்த விரதத்தால், வீட்டில் தடைப்பட்ட சுப நிகழ்ச்சிகளெல்லாம் தடை நீங்கி நடக்கும்.

வீட்டிலே கொண்டாட முடியாதவர்கள் ஆலயம் சென்று பெருமாள் ஆலயத்தில் தாயாருக்கும், சிவாலயமாக இருந்தால் அம்பாளுக்கும் விளக்கு போட்டு அர்ச்சனை செய்து வரலாம். புண்ணிய நதிகளில், சமுத்திரத்தில் ஸ்நானம் செய்தால் அந்தத் துணியை அங்கே விடக்கூடாது. அந்த துணிகளைக் காய வைத்து உடுத்தினால்தான் சனி பகவான் அருள் கிடைக்கும். நவக்கிரக அருள் கிடைக்கும். நவகிரக தோஷங்கள் தொடராது. குளித்த இடங்களில் துணியை விட்டுவிட்டு வருவதால்தான் மக்களுக்கு தீர்வே கிடைப்பதில்லை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • somaliya-dead-2

  சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

 • aus-fish-21

  ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

 • eqqperr1

  ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி

 • freddie-cyclone

  மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!

 • patrick-day-1

  அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்