SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிவராத்திரியில் சொல்ல வேண்டிய சில பாடல்களும் ஸ்லோகங்களும்

2023-02-18@ 15:18:28

மகாசிவராத்திரி 18-2-2023

இந்த ஆண்டு மகா சிவராத்திரி சனிக்கிழமை வருவது மிக மிகச் சிறப்பு காரணம், சனிக்கு உரிய ராசியில், சூரியனுக்குரிய உத்திராட  நட்சத்திரமும், சந்திரனுக்குரிய திருவோண நட்சத்திரமும் கலந்த நிலையில் ஸ்திரவாரமான சனிக்கிழமை மகா சிவராத்திரி வருவது இந்த ஆண்டுக் குரிய விசேஷம். திரயோதசி திதி சனிக்கிழமை வந்தால் அதனை சனி
பிரதோஷம் என்று சொல்வார்கள். அந்த அமைப்பும் இந்த ஆண்டு வருகிறது.  சைவர்களுக்கு பிரதோஷ நாள் எத்தனைச் சிறப்போ, அத்தனைச் சிறப்பு  வைணவர்களுக்கு பிரதோஷ நாள். இந்த பிரதோஷ நாளில் ஸ்ரீலட்சுமி நரசிம்மரை  வணங்குவதன் மூலமாக சகல நன்மைகளையும் பெறலாம்.

சனி பிரதோஷம்  அன்று மாலை நேரத்தில், சிவன் கோயிலுக்கு செல்வதும், அங்கே நந்தி பகவானின்  அபிஷேகத்தைத் தரிசிப்பதும், சிவன் கோயில் பிராகாரத்தை வலம் வருவதும்  மிகுந்த புண்ணியத்தைத் தரும். சனிக்கிழமை பிரதோஷ விரதம் என்பது மற்ற நாளில் வரும் பிரதோஷத்தைவிட ஆயிரம் மடங்கு சிறப்பு வாய்ந்தது என்று பெரியவர்கள்  சொல்லி இருக்கின்றார்கள். அதே நேரத்தில் சிவராத்திரியும் வருகின்றது. சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் இரவு உறங்காமல் சிவபூஜை, சிவநாம ஜெபம், சிவதியானம், சிவபஜனை, சிவ
தரிசனம், சிவத்தொண்டு ஆகியவற்றைச் செய்ய வேண்டும்.

நமசிவாய என்ற மந்திரத்தை இரவு முழுவதும் உச்சரித்தால் மகத்தான பலன்கள் கிடைக்கும். வாழ்வில் செல்வம், வெற்றி ஆகியவற்றை பெற விரும்புவோர், அவசியம் சிவராத்திரி விரதம் இருக்க வேண்டும். சிவாலயத்தில் பலி பீடத்துக்கு அருகில்தான் நமஸ்கரிக்க வேண்டும். ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்ய வேண்டும். சிவாலயத்துக்குள் எப்போதும் திரியாங்க நமஸ்காரம் (இருகரங்களையும் சிரம் மேல் குவித்து) செய்ய வேண்டும். கிழக்கு நோக்கிய சந்நதியானால், பலிபீடத்திற்குத் தென்கிழக்கு மூலையில் தலை வைத்து வணங்க வேண்டும்.

தெற்கு, மேற்கு நோக்கிய சந்நதிகளில் பலிபீடத்திற்கு தென்மேற்கு மூலையில் தலை வைத்து வணங்க வேண்டும். வடக்கு நோக்கிய சந்நதியானால் பலிபீடத்திற்கு வடமேற்கு மூலையில் தலை வைத்து வணங்க வேண்டும். சிவாலயங்களும் இரவு 8 முதல் 9 மணிக்குள் பள்ளியறை பூஜை முடிந்து நடை சாத்துவது வழக்கம். ஆனால், மகாசிவராத்திரி நன்னாளில், விடியவிடிய கோயில் திறந்திருக்கும். ஒவ்வொரு  கால பூஜைகளும் விமரிசையாக நடந்தேறும் பிப்ரவரி 18-ஆம் தேதி சனிக்கிழமை  இரவு, 08.02 மணிக்கு சிவராத்திரி தொடங்குகிறது. மறுநாள் பிப்ரவரி 19,  ஞாயிறு, மாலை 04:18 மணிக்கு முடிவடையும்.

இந்த மகாசிவராத்திரி நாளில்தான்  உமையம்மையார் சிவபெருமானை மணந்து கொண்டார். தனது இடப்பாகத்தை பார்வதி தேவிக்கு வழங்கினார்.  பிரளய காலத்தில் மாசி மாத தேய்பிறை சதுர்த்தி நாளில் இரவெல்லாம் கண்  விழித்து நான்கு யாமங்களிலும் சிவனுக்கு பார்வதி பூஜை செய்தாள்.  லோக  மாதாவாகிய பார்வதிதேவி சிவனுக்கு பூஜை செய்த ராத்திரி சிவராத்திரி என்று  வழங்கப்படுகிறது. இந்த விரதத்தை சிவராத்திரிக்கு முந்தைய நாளே தொடங்கிவிட வேண்டும். அன்று பகல் உணவுக்கு பின் எதுவும் சாப்பிடக்கூடாது. உபவாசம் இருக்க வேண்டும். இரவு சிவபூஜை செய்யவேண்டும்.

நமசிவாய மந்திரத்தை தொடர்ந்து ஜெபிக்க வேண்டும். மறுநாள் காலையில் எழுந்து நீராடி, ருத்ரம் முதலிய வேத மந்திரங்களை பாராயணம் செய்ய வேண்டும். சிவபுராணத்தை ஓதவேண்டும். தேவார திருவாசகப் பாடல்களைப் பாட வேண்டும். அருகாமையில் உள்ள சிவத்தலங்களுக்குச் சென்று வழிபட வேண்டும். சிவாலயங்களில்  நான்கு யாமங்களிலும் பூஜை நடக்கும். முதல் யாமத்தில் பஞ்சகவ்வியத்தால்  அபிஷேகம் செய்வார்கள் மஞ்சள் நிறப் பட்டாடை அணிவித்து தாமரைப் பூவால் அர்ச்சனை செய்வார்கள். பாசிப்பருப்பு பொங்கல் நிவேதிக்கப்படும்.

இரண்டாவது யாமத்தில் பஞ்சாமிர்தாபிஷேகம் நடைபெறும். வெண் பட்டாடை சாத்தி சந்தனக் காப்பு செய்வார்கள்.  பாயசத்தை நிவேதனம் செய்வார்கள். மூன்றாவது யாமத்தில் தேன் அபிஷேகம் செய்து,  சிவப்பு ஆடை சாத்தி, வில்வம் மல்லிகையாலும் அர்ச்சனை செய்வர். எள் சாதம்  நிவேதனம் செய்வார்கள். நான்காம் யானத்தில் கரும்புச்சாற்றில் அபிஷேகம்  நடத்தி நத்தையா வட்டை பூவால் அர்ச்சனை செய்து சுத்த அன்னத்தை நிவேதனம்  செய்வார்கள். அன்று பல சிவன் கோயில்களில் நாட்டியாஞ்சலி விழா நடைபெறும்.  காரணம் மகா சிவராத்திரி பார்வதி தேவியுடன் சிவபெருமான் ஆனந்த நடனம் ஆடிய  நாள்.

1) சிவராத்திரி அன்று ஏன் உபவாசம் இருக்க வேண்டும்?

உபவாசம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். உபவாசம் என்பது உப+வாசம் என்று பிரியும். இறைவனுக்கு அருகில் செல்வது உண்ணாநோன்பு. அனேகமாக அனைத்து சமய நூல்களும் உண்ணாநோன்பை வலியுறுத்துகின்றன. உண்ணா நோன்பு என்பது உயிருக்கும் மட்டுமல்லாமல் உடலுக்கும் நன்மை செய்கின்றது. உடலில் உள்ள நச்சுப்பொருள்களை எல்லாம் உண்ணாநோன்பு வெளியேறுகின்றது. விரத நாளில் உண்ணாமல் இருப்பது மட்டுமல்ல, கெட்ட எண்ணங்களை எண்ணாமல் இருப்பதே உபவாசம் என்று ``பவிஷ்ய புராணம்’’ சொல்கிறது.

2) சிவராத்திரியின் நோக்கம்

ஒருவன் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று சொன்னால், அவனுக்கு வேண்டிய குணங்கள் பொறுமை, மௌனம், அகிம்சை, சத்தியம், தயை, தானம், தூய்மை, புலனடக்கம். அக விழிப்புணர்வைத் தூண்டும் இந்த குணங்களை அடையச் செய்வதே சிவராத்திரியின் நோக்கமாகும்.

3) பூஜை செய்வது

இறைவனின் பெயர்களை 16 முறை சொல்லி பூஜிப்பது ஷோடச பூஜை. 108 முறை சொல்லி பூஜை செய்வது அஷ்டோத்திரம். முன்னூறு முறை இறைவனின் நாமங்களை சொல்லி பூஜிப்பது திரிசதி. ஆயிரம் முறை சொல்லி பூஜிப்பது சகஸ்ரநாம அர்ச்சனை. ஒரு லட்சம் முறை சொல்லி பூஜிப்பது லட்சார்ச்சனை. ஒரு கோடி முறை சொல்லி பூஜையை செய்வது கோடி அர்ச்சனை.
சிவநாமத்தை ஒரு கோடி முறை சொல்வதன் மூலமாக பிறவிப்பிணி அகன்று பிறவா பேரின்ப நிலை பிறக்கும். பஞ்ச பூதங்கள் என்பது மண், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று. இது வெளியிலும் இருக்கிறது. உள்ளிலும் இருக்கிறது. ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கிறது. ஒன்று இல்லாமல் ஒன்று இருப்பதில்லை. ஒன்று குறைந்தாலும் உயிருக்கு பயனில்லை.

இந்தத் தத்துவங்களே பஞ்சபூத தத்துவங்களாக பஞ்சபூதத் தலங்களாக விளங்குகின்றன. இந்த பஞ்ச பூதங்களும் ஈஸ்வர தத்துவமாக ஒடுங்கி, சிவராத்திரியில் லயம் ஆகி, விழிப்புணர்வு பெறுகிறது. இறப்பு எனும் மாய வலையில் இருந்து விடுபட்டு மெய்ப்பொருளாகிய செம்பொருள் என்னும் இறைநிலையை அடையச் செய்வது சிவராத்திரி.

4) சிவராத்திரி வழிபாடு

ஒவ்வொரு நாளும் சராசரியாக உலகம் முழுவதும் ஒரு லட்சத்து 75 ஆயிரம் பேர் இறக்கிறார்கள். 4 லட்சம் புதிய உயிர்கள் பிறக்கின்றன. சராசரி மனிதனின் வாழ்வு 74 வருடங்கள் என்று சொல்கிறார்கள். தினசரி பிறப்பையும் இறப்பையும் கண்ணால் காண்கின்றான். பிறப்பை காண முடியாத நிலையில் பிறந்த மனிதன், தன்னுடைய இறப்பையும் காணமுடிவதில்லை. நிச்சயமற்ற தன்மையில் வாழுகின்ற இந்த மனிதனின் வாழ்க்கையில், பிறப்பு இறப்பின் நுட்பங்களை உணரச்செய்து, பேரின்ப நிலைக்கு நம்மை அழைத்துச் செல்லுகின்ற வழிபாடுதான் சிவராத்திரி வழிபாடு. இருட்டில் தொடங்கிய வழிபாடு விடியலில் முடிகிறது.

நான்கு ஜாம வழிபாட்டினால் நம்மை சுற்றி இருக்கின்ற பொய்மை ஆகிய இருள் விலகி உண்மையான வெளிச்சம், சிவந்த சுடராக, அண்ணாமலையின் உச்சியில் தெரிகின்ற தீபமாக, ஒளிப்பிழம்பாக நான்காவது ஜாமத்தின் முடிவில் நமக்கு காட்சி தருகிறது. “பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா” என்று இந்த காட்சியை சந்திரசேகர சொரூபத்தை காட்டு
வதுதான் சிவராத்திரியின் உடைய நிறைவுப்பகுதி. “நாளைய விடியல் நமக்கென்று இருக்கும்” என்ற நம்பிக்கைதான் சிவராத்திரி.

நாம் இதுவரை செய்த பாவங்களையும் பொறாமைகளையும் தொலைத்து தலைமுழுகிவிட்டு சிவராத்திரியன்று, ‘‘இன்று புதிதாய் பிறந்தோம், இது ஈசன் அளித்த வாழ்வு. நம் கையில் இருப்பதும் நம் உடம்பால் சுகிப்பதும் அவன் தந்தது” என்று உணர்ந்து, பிறருக்கும் கொடுத்து மகிழ்ந்து, பேரின்ப நிலையை அடைவது சிவராத்திரியின் நோக்கம்.

5) சிவராத்திரியில் என்ன வேண்டும்?

சிவ சிந்தனை என்பது அன்பு சிந்தனைதான். மங்கல சிந்தனைதான். சிவராத்திரியில் என்ன வேண்டும் என்று சொன்னால்,

அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்க்கெலாம் அன்பு செய்தல்
வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே
எந்தை நினதருள் புகழை இயம்பிடல் வேண்டும்
செப்பாத மேல்நிலை மேல் சுத்த சிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேதும் நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும்
தலைவா நினைப்பிரியாத நிலமையும் வேண்டுவேனே.


 - என்றுதான் வேண்ட வேண்டும்.

சிவராத்திரியின்போது ஸ்ரீருத்ரம் போன்ற வேத மந்திரத்தைச் சொல்லி
வழிபட வேண்டும்.
நமஸ்தே (அ)ஸ்து பகவான் விஸ்வேஸ்வராய
மஹாதேவாய த்ரியம்பகாய, திரிபுராந்தகாய,
திரிகாக்னி காலாய, காலாக்கினி ருத்ராய,
நீலகண்டாய, மிருத்யுஞ்சனாய,
ஸர்வேஸ்வராய, மஹாதேவாய நமஹ


பகவானே! விஸ்வேஸ்வரன் என்று சொல்லப்படுகின்ற உலக நாயகனே! தேவர்களின் தலைவனே! மகாதேவனே! முப்புரங்களை எரித்தவனே! முக்கண்ணனே, ருத்ரனே, விஷத்தை அருந்திய நீலகண்டனானவனே, காலனை வென்றவனே, அனைத்து உயிருக்கும் ஈசனே, மகாதேவனே உனக்கு நமஸ்காரம் என்று சொல்கின்ற இந்தப் பகுதியை சொல்ல வேண்டும்.

அடுத்து, குரு நமசிவாயர் அருளிய
 ஓம் எனும் எழுத்தில் உள்ளே
ஒளியதாய் விளங்குகின்ற
வாமனே கருணை நல்கும்
வள்ளலே நமசிவாய


-  என்ற மந்திரத்தைச் சொல்ல  வேண்டும்.

அற்புதத் திருவந்தாதியில் காரைக்கால் அம்மையார் அருளிய இந்தப் பாடலைப் படிக்க வேண்டும்.

பிறந்து மொழி பயின்ற பின் எல்லாம் காதல்
சிறந்து நின் சேவடியே சேர்ந்தேன்
- நிறந்திகழும்
மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே


எஞ்ஞான்று தீர்ப்பது இடர்?

இதன் பொருள்;

எனக்கு மொழி தெரிந்த காலத்திலிருந்து உன்னுடைய திருவடியையே நினைத்திருந்தேன். ஆலகால விஷத்தை குடித்து, கருப்பான கழுத்து உடைய நீலகண்டனே, தேவர்களுக்கெல்லாம் தலைவனே, என்னுடைய துன்பங்களெல்லாம் எப்போது தீரும்? என்று கேட்பதுபோல் அமைந்த இந்தப் பாடலைப் பாட வேண்டும். அடுத்து இந்த கோயில் நான்மணி மாலையில் பட்டினத்துப் பிள்ளையின் பாடல் அவசியம் ஓதவேண்டும்.

நானே பிறந்த பயன் படைத்தேன் அயன் நாராயணன் எம்
கோனே எனத் தில்லை அம்பலத்தே நின்று கூத்துகந்த
தேனே திருஉள்ளமாகி என் தீமையெல்லாம் அறுத்துத்  
தானே புகுந்து அடியேன்மனத்தே வந்து சந்திக்கவே


இறைவன் விரும்பினால் அன்றி, இந்த சிவராத்திரி விரதத்தை யாரும் இருக்க முடியாது. ``அவன் அருளால் அவன் தாள் வணங்கி” என்று சொல்வார்கள். அதனால், சிவராத்திரி விரதம் இருப்பதற்கு முன்னால், இந்த சிவராத்திரி விரதத்தை இருப்பதற்கான வாய்ப்பினை இறைவா, நீயே தந்து அருள வேண்டும். உன் உதவியின்றி இந்த விரதத்தை என்னால் இருக்க முடியாது. என்று பிரார்த்தனை செய்து கொண்டு, இந்தப் பாடலைப் பாட வேண்டும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • well-collapes-31

  ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

 • parliammmm_moddi

  இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

 • boat-fire-philippines

  பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

 • us-desert-train-acci-30

  அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

 • mexico-123

  மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்