SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிசயம் அநேகமுற்ற பழநி

2023-02-06@ 12:26:55

‘‘ஞானத் தபோதனரை வா என்றழைக்கும் அண்ணாமலை’’ என்று திருவண்ணாமலையைக் குறிப்பிடுவர். அந்த ஞானியர் வாழும் மலைக்கு இன்னொரு மலையை இணையாகச் சொல்ல வேண்டும் எனில் பழநி மலையை மட்டுமே சொல்ல முடியும். பழநி மலையைச் சுற்றிலும் எண்ணற்ற சித்தர்கள். குடிகொண்டு விளங்குகிறார்கள். சில இடங்களில் சித்தர்கள் வாழ்வார்கள். சில தலங்களில் வழிபட்டிருப்பார்கள். ஆனால் பழநியில் மட்டும் தான் சித்தரே முருகனை ஸ்தாபித்துள்ளார். ஆம், போகர் என்ற புகழ்மிகு சித்தர் ஒன்பது வகையான பாஷானங்களைக் (விடம்)கொண்டு உருவாக்கியதே ஞான தண்டாயுதபாணி சுவாமி ஆவார்.

இந்த நவபாஷானத்தின்மீது பட்டுவரும் அத்தனை அபிஷேகப் பொருட்களும் மிகவும் மருத்துவத் தன்மை வாய்ந்தவை. சுவாமியின் மீது அபிஷேகமான பஞ்சாமிர்தம், இரவில் சாற்றி காலையில் களையப்படும் இரவுக்கால சந்தனம், அபிஷேகம் செய்யப் பெற்ற சிரசுவிபூதி, கௌபீன தீர்த்தம் என அனைத்தும் உடற்பிணியையும் உள்ளப்பிணியையும் குணப்படுத்த வல்லன.முருகன் எழுந்தருளியுள்ள இம்மலைக்குப் பெயர்க்காரணம் உண்டு. உலகை யார் முதலில் வலம் வருவார்கள் என்ற போட்டியின் விநாயகப் பெருமான் ஞானப்பழத்தைப் பெற்றுவிட, கோபம் கொண்ட முருகப் பெருமான் நின்ற குன்றே பழநியாகும். ‘நீயே பழம்’ என்ற பொருளில் தமிழ்மூதாட்டி ஔவையார் ‘பழம் நீ’ என்றார். அதனால் இம்மலை ‘பழநி’ என்று காரணப் பெயர் பெற்றது.

உலகிலேயே இரண்டு படைவீடுகள் ஒன்றாக அமையப்பெற்ற பகுதி இப்பழநி மலை. அடிவாரத்திலுள்ள திருவாவின்குடி மூன்றாம் படைவீடாகும். மலைமீது உள்ள பழநியாண்டவர் சந்நதி ஐந்தாம் படைவீடாகும். ஆம். திருத்தணி முதலிய குன்றுகள் அனைத்தும் குன்றுதோறாடல் என்ற வகைமையில் ஐந்தாம் படைவீடாகிறது. அதனால் தான் இவ்வூரைக் கும்பிடுவதே பெரும் பேறு என்கிறார் அருணகிரிநாதர். ‘‘உனது பழநிமலை எனும் ஊரைச் சேவிக்க அறியேனே’’ என்று முருகனைக் கும்பிடுவது மட்டுமே சிறப்பல்ல. இந்த பழநி மலையாகிய ஊரைக் கும்பிடுவதே பெரும் சிறப்பு என்று பாடியிருக்கிறார்.

அப்படிப்பாடுவதற்கு மற்றொரு காரணமுண்டு. சில தலங்களில், சில கடவுளர்களிடம், சில மந்திரங்களைச் சொல்ல இகநலன்களோ அல்லது பரநலன்களோ ஆகிய இரண்டில் ஒன்று மட்டும்தான் கிடைக்கும். (இக நலன் - இந்த மண்ணுலக வாழ்விற்கான நலன்கள்; பர நலன்- விண்ணுலகில் வாழ்வதற்கான நலன்கள்).
ஸ்ரீசக்ரத்தில் பிந்துவை அடக்கியுள்ள முக்கோணம் கீழ் நோக்கியவாறு வைத்துப் பூசித்தால் இகநலன்கள் கிடைக்கும். மேல் நோக்கியவாறு வைத்துப் பூசித்தால் பர நலன்கள் கிடைக்கும்.

ஸ்தூல பஞ்சாட்சரத்தைச் சொன்னால் இக நலன்களும் கிட்டும். பஞ்சாட்சரத்தைச் சொன்னால் பர நலன்களும் கிடைக்கும். ஆனால், இந்தப் பழநி முருகனை வழிபட்டு அவனது ஆறெழுத்து மந்திரத்தைச் சொன்னால் இகம் மற்றும் பரம் ஆகிய இருவகை நலன்களும் கிடைக்கும் என்பதை,

‘‘இசைபயில் சடாட்சரம் அதனாலே
இகபர சௌபாக்கியம் அருள்வாயே
பசுபதி சுவாக்யம் உணர்வோனே
பழநிமலை வீற்று அருளும் வேலா’’


என்று பழநிமலைத் திருப்புகழில் பாடியிருக்கிறார் அருணகிரிநாத அடிகள். இருபெரும் நலன்கள் அருள்வதால் தான் இம்மலைக்கு மனிதர்கள் மட்டுமின்றி சித்தர்களும் முத்தர்களும் அதிகமாக வருகின்றனர். சந்தனம் மணக்கும் இம்மலையின் மீது குடி கொண்டுள்ள தண்டாயுதபாணிக்குச் சாற்றும் அரைத்த சந்தனம், காலையில் விழாக்கால பூஜையின் போது பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த சந்தனத்தை உட்கொள்ளும் போது சற்றுக் கசப்பாகத்தான் இருக்கும். ஆனால், இதை உண்போர்க்கு உடல் நலத்தைக் காத்து வாழ்வை இனிப்பாக மாற்றும்.

சங்க காலத்தில் ‘பொதினி’ என்று அழைக்கப்பட்ட இப்பழநியில் சரவணப் பொய்கை என்ற திருத்தீர்த்தம் திகழ்கிறது. இந்த தீர்த்தத்திற்கு உலகிலுள்ள அத்தனைத் தீர்த்தங்களும் அடங்கும். இதனை,

‘‘தரணிதனில் அறுபத்து அறுகோடி தீர்த்தமும் உன் சரவணத்துள் அடக்கம்’’

என்கிறது ஒரு பாடல். தீர்த்தங்களில் சிறந்தது கங்கை. அந்த கங்கையும் கூட இந்த சரவணப் பொய்கையில் அடக்கம் என்பதால் தான்

 ‘‘காசியின் மீறிய பழநி’’

    - என்று குறிப்பிடுகிறார் அருணகிரிநாதர்.

சித்த புருஷர் போகரின் ஜீவசமாதி, மனங்கவரும் மரகதலிங்கம், தண்டத்துகன் காட்சி தரும் தண்டாயுதபாணி வள்ளிசுனை, அருகிலேயே இடும்பன்மலை மலையைச் சுற்றிலும் சித்தர்கள், அடிவாரத்தில் திருவாவின்குடி என்று சிறப்புகளாலேயே கட்டமைக்கப்பட்டது பழநி என்பதால் தான் ‘பழநிமலை’ என்ற ஊரை வணங்குவதற்கே தவம் செய்திருக்க வேண்டும் என்பதை, ‘‘உனது பழநிமலையெனும் ஊரைச் சேவிக்க அறியேனே’’ என்று பாடுகிறார், அருணாகிரிநாதர். ஒவ்வொரு தலத்திலுள்ள முருகனைக் கும்பிடுவதற்குத்தான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஆனால், இந்த பழநிமலை என்ற ஊரைக் கும்பிடவே தனியாகப் புண்ணியம் செய்திருக்க வேண்டும். பழநி என்னும் ஊர்ப் பெயரைச் சொல்லுவது புண்ணியம். அப்படிச் சொல்லுபவர்களின் பாதத்தைப் பணிவதும் புண்ணியம். இதனை

‘‘படிக்கின்றிலை பழனித் திருநாமம்; படிப்பவர்தாள்
முடிக்கின்றிலை;’’ என்கிறது


கந்தர் அலங்காரம். நக்கீரர், அருணகிரிநாதர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், மாம்பழக் கவிச்சிங்க நாவலர், பாம்பன் சுவாமிகள் போன்ற அருளாளர்களால் பாடல் பெற்ற பழநியை நினைப்பதும் துதிருப்பதும் புண்ணியத்திலும் புண்ணியம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • spain-trees-24

  ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

 • gandhi-13

  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

 • taipei-fashion-week-taiwan

  தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

 • kalifffo1

  தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

 • pak-123

  பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்