SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா! தமிழ் ஞானப் பழம் நீயப்பா!

2023-02-04@ 16:50:33

நன்றி குங்குமம் ஆன்மிகம்

தைப்பூசம்: 5-2-2023

தமிழ்க்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடு, பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். பாலகனின் கோபம் காரணமாக உருப்பெற்ற இத்தலத்தின் மகிமை சொல்லில் அடங்காதது. அந்தத் தலவரலாறு பொதுவாக அனைவரும் அறிந்ததே. தனக்குப் பழம் கிடைக்காத கோபத்தில் முருகன் கயிலையைவிட்டு வந்தமர்ந்த தலமல்லவா பழநி! சான்றோர் பலரும் அவரின் சினம் நீக்க முயன்றும் முடியாதுபோகவே, பெற்றோரே இத்தலத்தில் பிரசன்னமாகி ‘‘முருகா, நீயே ஒரு ஞானப்பழம்தானே! பழம் நீயே’’ என்று அன்பொழுக கேட்க, முருகனின் மனம் உருகியது. பழம்நீ என்ற ஒற்றைச் சொல்லில் முருகனின் சினந்தணிந்த இத்தலமே பின்பு பழநி என்று மருவியது.

சினம் கொண்ட முருகன் மயிலுடன் வந்து இறங்கிய இடம் திருஆவினன்குடி. முந்தைய காலங்களில் பழநி, திருஆவினன்குடி என்றே அழைக்கப்பட்டது. ஆவினன்குடி  என்னும் பெயர், பின்னர் திருவாவினன்குடி என்று மாற்றம் பெற்றது.  திரு+ஆ+இனன்+கு+டி என்று பிரித்துப் பொருள் கூறுவர். ‘திரு’ என்றால்  லக்குமி, ‘ஆ’ என்றால் காமதேனு இனன் என்றால் சூரியன், ‘கு’ என்றால் பூமி,  ‘டி’ என்றால் அக்கினி என்று பொருளாகும். மயில் நின்ற இந்த இடத்தில் அமைந்த  ஆலயத்தில்தான் முருகன் மயில்மேல் அமர்ந்து குழந்தை வேலாயுத சுவாமியாய்  காட்சியளிக்கிறார். ஆனால் மலைமீது உள்ள சிவமைந்தன் வாகனமின்றி தனியாகவே  அருள் பாலிக்கிறார்.

கேரளம் உள்ளிட்ட பல பக்தர்கள் திருஆவினன்குடி  தரிசனம் முடித்தபின்பே மலைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.  நக்கீரர் போற்றிப் பாடிய திருத்தலம் திருவாவினன்குடி. பழநி  திருத்தலத்தில் திருவாவினன்குடி கோயிலும், மலைக்கோயிலும் புகழ்பெற்றவை. தேவர்களும், சித்தர்களும் தங்கிப் புனிதம் பெற்ற திருக்கோயில்கள் இவை. பழநி கோயிலில் நடைபெறும் முதன்மைத் திருவிழாவான பங்குனி உத்திரத்திற்கு  திருஆவினன்குடியில்தான் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறும். வெள்ளிரத  புறப்பாடும் திருஆவினன்குடி கோயிலில் இருந்துதான் நடைபெறும்.

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில், 9ம் நூற்றாண்டில் உருவானதாக வரலாறு கூறுகிறது. சேரமான் பெருமான் எனும் மன்னனால் கட்டப்பட்ட இக்கோயிலின் மூலவர்சிலை போகர் எனும் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. எங்கும் இல்லாத சிறப்பு இது. இது வீரம், பூரம், ரசம், ஜதிலிங்கம், கண்டகம், கவுரி பாசாணம், வெள்ளைப் பாசாணம், மிருதர்சிங், சிலசட் ஆகிய வீரிய பாஷாணங்களின் கலவையாகும். நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்ட மூலவர் சிலையில் அபிஷேகம் செய்யப்படும் பொருட்களை பிரசாதங்களை உண்டால் தீராத நோய்களும் தீரும் என்பது ஆண்டாண்டுகாலமாக நிலவிவரும் நம்பிக்கை. அதனால்தான் மூலவரை உருவாக்கிய போகரும் இன்றளவும் பேசப்படுகிறார்.

இந்த தண்டாயுதபாணிசிலை இரவில் வியர்க்கும் தன்மை உடையது. இந்த வியர்வைத் துளியில் அறிவியலே வியக்கும் வண்ணம் மருத்துவத்தன்மை கொண்டது. ராக்கால பூஜையின் போது, சிலைக்கு சந்தனம் பூசப்படும். பின்பு அடியில் பாத்திரம் ஒன்று வைக்கப்படும். மறுநாள் காலை அந்த சந்தனம் கலைக்கப்படும்போது, வியர்வைத் துளிகள் பாத்திரத்தில் வழிந்து நிற்கும்.

சந்தனமும் பச்சை நிறமாக மாறியிருக்கும். வியர்வை, கவுபீன தீர்த்தம் எனப்படும். சந்தனமும், கவுபீன தீர்த்தமும் அருமருந்தாக கருதப்படுகின்றன. இன்றும் போகர், புலிப்பாணி பரம்பரையில் வந்தவர்கள் கோயில் நிர்வாகத்தின் உதவியோடு இந்த இடத்தை பராமரித்து வருகின்றனர். போகர் வழிபட்ட புவனேஸ்வரி அம்மன், மரகதலிங்கம், எந்திர சக்கரங்கள் இன்றும் சுவாமி வழிபாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்தலத்தின் பிரசித்தி பெற்ற, பிரமாண்ட திருவிழா என்றால் அது, தைப்பூசமே.  தைமாதம், பூசநட்சத்திரத்தோடு நிறைந்த முழுமதி கூடும் மங்கள நாளில்  பழநியாண்டவருக்கு கொண்டாடப்படுகிறது, தைப்பூசத் திருவிழா. இந்நாள்,  அன்னை உமாதேவியாரிடம் தாரகன் என்ற அரக்கனை அழிப்பதற்கு முருகப்பெருமான்,  வெற்றிவேல் வாங்கிய தினமாகும். அரக்கனை அழித்து உலக உயிரினங்களை  துன்பத்தில் இருந்து மீட்டது தை மாதப் பூச நட்சத்திர தினத்தில்தான். இதனைப்  போற்றும் வகையில் தைப்பூச விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. பழநியின்  ஊர்க்கோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் கோயிலில்  கொடியேற்றத்துடன் தொடங்கி, பத்து நாட்கள் வெகு சிறப்பாக இத்திருவிழா  நடைபெறும்.

தைப்பூச முருகனை காண, 15 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள்  தங்களின் நேர்த்திக் கடனான காணிக்கையைச் சுமந்து, பாதயாத்திரையாய் பழநியை  நோக்கி வருவது வழக்கம். ஆம், பாதயாத்திரைதான் இந்தவிழாவின் முக்கியமான  அம்சம். பல நூறு கி.மீ. தூரம் பனி, வெயில்  பொருட்படுத்தாது குடும்பத்துடன் இரவு, பகலாக பாதயாத்திரையாகவே பல பக்தர்கள்  பழநி நோக்கி வருகின்றனர். தைப்பூச  முருகனைக் காண பக்தர்கள் காவியுடை அணிந்து, விரதம் இருந்து இப்புனித  பயணத்தை மேற்கொள்வர். குறிப்பாக காரைக்குடியைச் சுற்றியுள்ள செட்டிநாட்டுப்  பக்தர்கள் கூட்டம் கூட்டமாக ஆறுமுகக் காவடி சுமந்து வந்து காணிக்கை  செலுத்தி வழிபட்டுச் செல்கின்றனர்.

தைமாதம் பிறந்தால், பழநிநகரில்  ‘முருகா, முருகா, அரோகரா அரோகரா’ என்ற முழக்கம்தான் அதிகளவு கேட்கும்.  ஆட்டம், பாட்டம் மிகுதியாக இருக்கும். பழநியைச் சுற்றியுள்ள மண்டபங்களில்,  கிரிவீதியில் மற்றும்  சண்முகாநதியில் பக்தர்களின் காவடி ஆட்டம்  ஜொலிக்கும். நத்தம், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஜெயங்கொண்டம் போன்ற  நகரங்களில் இருந்து பக்தர்கள் சேவல் காவடி, மயிற்காவடி, வேல்காவடி,  ஆறுமுகக்காவடி சுமந்து வருகின்றனர்.

பாதயாத்திரையால் தங்களின் பாவ  வினைகள் நீங்குகின்றன என்றும் வழிநெடுக முருகன் தங்களுடன் நடந்து  வருவதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர். 150 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த  நேர்த்திக்கடன் வழிபாடு தொடர்ந்து கொண்டிருக்கிறது!

தமிழ்நாட்டின்  பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளம், ஆந்திரா, கர்நாடகா  மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் விரதம் இருந்து தைப்பூச முருகனைக் காண  வருகின்றனர். பழநி வழிபாட்டில் காவடி முக்கிய இடம் பெற்றுள்ளது. காவடி வழிபாடு மற்ற கோயில்களைவிட இங்கு அதிகம். தைப்பூச விழாவில் முருக பக்தர்கள் பல்வேறு வகையான  காவடிகளைச் சுமந்து வருகின்றனர்: 1. மயில்தோகைக் காவடி, 2. தீர்த்தக்  காவடி, 3. அலகுக் காவடி, 4. பறவைக் காவடி, 5. சுரைக்காய்க் காவடி, 6.  தானியக் காவடி, 7. இளநீர்க் காவடி, 8. தொட்டில் காவடி, 9. கரும்புக் காவடி,  10. பால் காவடி, 11. பஞ்சாமிர்தக் காவடி, 12. பன்னீர்க் காவடி, 13.  பூக்காவடி, 14. சர்க்கரைக் காவடி, 15.மலர்க் காவடி, 16. காகிதப்பூக் காவடி,  17. அலங்காரக் காவடி, 18. கூடைக் காவடி, 19. செருப்புக் காவடி, 20.  விபூதிக் காவடி, 21. வேல் காவடி, 22. வெள்ளிக் காவடி, 23. செடில் காவடி,  24. தாளக் காவடி, 25. தாழம்பூக் காவடி, 26. தயிர்க் காவடி, 27. மச்சக்காவடி, 28. சர்ப்பக் காவடி, 29. அக்கினிக் காவடி, 30. தேர்க் காவடி, 31.  சேவல் காவடி, 32. இரதக் காவடி.

இவற்றில் அலகுக் காவடி சிறப்பிடம்  பெற்றுள்ளது. பல மண்டலங்கள் விரதமிருந்து உடல் முழுவதும் சிறிய வேல்களை  குத்திக்கொண்டு பாதயாத்திரையாய் வருவர். திருப்பத்தூர், காரைக்குடி,  திண்டுக்கல், நத்தம், தேவகோட்டை பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் அலகு  குத்தி முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். உதடு, கன்னத்தில்  வெள்ளி அல்லது செம்பினால் செய்த சிறிய கம்பி போன்ற வேலினைக் குத்திக்கொள்கின்றனர். 22 அடி நீளமுள்ள அலகுக்காவடிகளைச் சுமந்து வருபவர்களும்  உண்டு. பக்தர்கள் தங்கள் உடல் முழுவதும் சந்தனம், திருநீறு பூசி முதுகில்  அலகு குத்தி, தேர் இழுத்து வருகின்றனர்.

வாய்பேசாத குழந்தைகள் பேசவும், உடல் ஊனம் விலகவும் அலகுக் காவடி எடுத்து வரப்படுகிறது.  ஆண்வாரிசு, செவ்வாய் தோஷம் நீங்குதல், தடைப்பட்ட திருமணம் நடைபெற,  கடன்தொல்லை, தீராத நோய் தீர, ஊழ்வினை நீங்க, தொழில் லாபம், ஆயுள், ஆனந்தம்  பெருக என்று ஒவ்வொருவரும் தங்களின் நீண்டநாள் பிரச்னைதீர இவ்வகை நேர்த்திக்  கடன்களை செலுத்துகின்றனர். வேண்டுதல்கள் நிறைவேறி விடுவதால் ஒவ்வொரு  ஆண்டும் பக்தர்கள் எண்ணிக்கை பழநிக்கு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.  குறிப்பாக பாதயாத்திரை மகிமை ஒவ்வொரு வீட்டிலும் எதிரொலிப்பதால்  லட்சக்கணக்கான குடும்பங்கள் பரம்பரை, பரம்பரையாகப் பாத யாத்திரை மேற்கொண்டிருக்கின்றனர்.

பழநி  தைப்பூசத் திருவிழாவிற்கு வருகை தரும் பிரசித்தி பெற்ற காவடிக் குழுக்களில்,  சேலம் மாவட்டம், எடப்பாடி பருவத ராஜகுல தைப்பூசக் காவடிகள் ஒன்று. இக்குழுவினருக்கு மட்டுமே இரவு பழநி மலைக்கோயிலில்  தங்கி வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. பாதயாத்திரையாக வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு  வழிநெடுகிலும் உள்ள பல ஊர்களில் அன்னதானம், தண்ணீர் பாக்கெட், பிஸ்கெட்,  பால், நெல்லிக்காய், சாக்லேட், அமர்வதற்கு சேர் வழங்குதல், கால்வலி நீங்க  மசாஜ், குளிக்க வசதி ஏற்படுத்துதல் என்று பல்வேறு சேவைகளைச் செய்து  வருகின்றனர். பக்தர்களுக்குச் செய்யும் சேவை முருகனுக்கு சென்றடையும் என்பதால், இவ்வாறு வழிநெடுகிலும் பாதயாத்திரைப் பக்தர்களுக்கு சேவை செய்வோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இப்போது மலைக்குச் செல்லும் பாதைகள் குறித்துப் பார்ப்போம். பழங்கால மலைக் காட்டுப்பாதை இப்போது இல்லை. பக்தர்களின் சிரமத்தைக் குறைக்க 1939ல் முதன் முதலில் படிப்பாதை அமைக்கப்பட்டது. முதியவர்கள் மற்றும் மாற்றத்திறனாளிகள் ‘டோலி’ மூலம் மேலே செல்கின்றனர். படிப்பாதையை மலையடிவாரத்தில் உள்ள பாத விநாயகர் கோயில் வழிபாட்டுடன் துவங்க வேண்டும். உடன் பொருட்கள் ஏதாவது இருந்தால் அவற்றைத் தூக்கிக் கொண்டு மலையேறத் தேவையில்லை. அருகிலேயே பாதுகாப்பு அறை வசதி உள்ளது. வின்ச் என்கிற ரோப் கார் வசதியும் உள்ளது.

மலைப்பாதையின் தொடக்கத்தில் உள்ள மண்டபத்தில் அனுமார், கருடாழ்வார், ராகு, கேது, கண்ணப்ப நாயனார், பாரிஜாத மலர், சிவலிங்கம் உட்பட பல்வேறு சிற்பங்கள் கலைவேலைப்பாட்டுடன் செதுக்கப்பட்டுள்ளதைக் காணலாம். படிப்பாதை வழியில் மயில்மண்டபம், வள்ளியம்மை சந்நதி மற்றும் இளைப்பாற மண்டபங்களும் உள்ளன. படிப்பாதையில் கன்னிமார் கோயில், நர்த்தன விநாயகர், சித்தி விநாயகர், அனுக்கிய விநாயகர், இடும்பர் கோயில், வையாபுரி சுவாமி சந்நதி, மயில் வேலாயுத சுவாமி ஆலயம், குராவடிவேலன் கோயில், சர்ப்ப விநாயகர் என சந்நதிகள் உள்ளன. திடகார்த்தமாக உள்ளவர்கள் மலையேற இந்தப் பாதையை தேர்வு செய்யலாம். இருப்பினும் நேர்க்குத்தாய் அமைந்துள்ள படிகள் சிரமத்தை ஏற்படுத்துவதால் இறங்கும்போது மட்டும் இப்பாதையை பயன்படுத்துவது உகந்தது.

திருவிழாக்காலங்களில் யானைகள் சுலபமாக மலையேறுவதற்கு படிப் பாதைக்கு அருகிலேயே படிக்கட்டுக்கள் இல்லாமல் சாய்தளமாகவே ஒரு பாதை அமைக்கப்பட்டது. இப்பாதை நாளடைவில் யானைப்பாதை என்றே பெயர் பெற்றது. தமிழகத்தில் உள்ள கோயில்களில் யானைக்கென்று ஒரு பாதை அமைக்கப்பட்டது பழநி மலைக்கோயிலில் தான். யானைப்பாதை, காவல்தெய்வமான 18ம் படி கருப்பணசுவாமி கோயிலில் இருந்து தொடங்குகிறது. இப்பாதையில் பழநி தலவரலாற்றை விளக்கும் சுதைச் சிற்பங்கள் உள்ளன. வள்ளியம்மன் சுனை என்ற வற்றாத நீர்சுனையும் உள்ளது. படிகளாக இல்லாமல் சாய்தள அமைப்பானதால் பக்தர்கள் பலரும் இதிலே செல்கின்றனர்.

கோபுரவாயிலுக்கு உள்ளே நாயக்கர் மண்டபத்தில் சுப்பிரமணிய விநாயகர், நக்கீரர், அருணகிரிநாதர் சந்நதிகள் உள்ளன. அடுத்து, வைசியர் மண்டபத்தைக் கடந்தவுடன் ஐந்துநிலை மாடங்கள் பொருந்திய ராஜகோபுர வாயில் உள்ளது. இதன் பின்னே 12 கல்தூண்கள் தாங்கிய வேலைப்பாடு நிறைந்த பாரவேல் மண்டபமும், நவரங்க மண்டபமும் உள்ளன. வாத்திய மண்டபத்திற்கு எதிரே மலைக்கொழுந்தீஸ்வரர் கோயிலின் முன்புற தூண்கள், ரதங்களின் வடிவில் செதுக்கப்பட்டுள்ளன.

பழநியின் ‘கொடுமுடி சிகரம்’ என்று இப்பகுதியை கூறுவர். இதன் வழியாக உள்ளே நுழைந்தால், மகாமண்டபத்தை அடையலாம். இதனையடுத்த அர்த்த மண்டபத்தின் இடது பக்க கல்மேடை மீது நடராஜர், சிவகாமியம்மை திருவுருவங்களை தரிசிக்கலாம். தொடர்ந்து பழநியாண்டவர் பள்ளியறை, சண்முகநாதர் சந்நதி, திருவுலா செல்லும் சின்னக்குமாரர் சந்நதி ஆகியன உள்ளன. இதற்கு அருகில் மூலவரான நவபாஷாணத்தால் ஆன முருகனின் கருவறை. இது சதுர வடிவில், சுற்றிலும் நீராழிப் பத்தியுடன் அமைந்துள்ளது. கருவறை பின்புறச் சுவரில் அதிஷ்டானத்திலிருந்து மேற்பகுதி வரை ஏழு கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. கருவறையினுள் முருகப்பெருமான் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.

திருக்கோயிலில் தினமும் அதிகாலை 6 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், தொடர்ந்து 6 கால பூஜைகளும் நடைபெறுகின்றன. பழநிமலையில் அரிய வகை மூலிகைகள், சந்தனமரம் மற்றும் கடம்ப மரங்கள் அதிகளவு உள்ளன. அடிவாரத்தில் சுமார் மூன்று கி.மீ. தூரத்திற்குப் பசுஞ்சோலைகள் நிறைந்த அழகிய கிரி பிராகாரங்கள் உண்டு. இந்த இருபுறமும் கடம்பு, வேம்பு முதலிய பலவகை மரங்கள் உள்ளன. கிரிவீதியைச் சுற்றி பல மடாலயங்கள் உள்ளன.

பழநி மலையைச் சுற்றி பல்வேறு ஆலயங்கள் உள்ளன. பஞ்சமுக விநாயகர், மதுரைவீர சுவாமி, சன்னாசியப்பன், அழகுநாச்சியம்மன், மகிஷாசுரமர்த்தினி, வீரதுர்க்கை அம்மன், வனதுர்க்கையம்மன் ஆகியோர் கோயில் கொண்டுள்ளனர். கிரிவலம் வருபவர்கள் இந்த கோயில்களில் வழிபாடு செய்வது வழக்கம்.பழநியின் மற்றுமொரு சிறப்பு, பஞ்சாமிர்தம். திருப்பதி என்றதும் லட்டு நினைவிற்கு வருவது போல பழநி என்றதும் பஞ்சாமிர்தம்தான் நினைவிற்கு வரும். போகர், தான் உருவாக்கிய நவபாஷாணத்தால் ஆன முருகன் சிலைக்கு தினமும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து, அதனை உண்டு வந்ததாக இன்றளவும் நம்பப்படுகிறது. முருகன் சிலைக்கு அபிஷேகம் செய்யப்படும் பஞ்சாமிர்தத்தை உண்டால் தீராத நோய்கள் தீருமென கூறப்படுகிறது.

மலை வாழைப்பழம், கற்கண்டு, நெய், தேன், கரும்புச்சர்க்கரை, ஏலக்காய், முந்திரி ஆகியவற்றால் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுகிறது. தற்போது கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. சண்முகநதி, பழநி மலைக்கோயிலிலிருந்து வடமேற்கு திசையில், 6 கி.மீ. தூரத்தில் கோவை செல்லும் வழியில் அமைந்துள்ளது. ஆறுமுகனைக் குறிக்கும்வகையில் மேற்குமலைத் தொடரில் அமைந்துள்ள பாலாறு, பொருந்தலாறு, வரட்டாறு, பச்சையாறு, கானாறு, கல்லாறு ஆகிய ஆறு நதிகளின் முழு வடிவமே சண்முக நதி என்பர். மூலிகை கலந்துவரும் இந்த நதியில் நீராடி முருகனை வழிபட்டால் உடல்நோய், மனநோய் நீங்கும், முக்தி கிடைக்கும் என்கிறார்கள். இடும்பன் குளம், சரவணப்பொய்கை, போன்ற புண்ணிய தீர்த்தங்களும் பழநியில் உண்டு. இதுதவிர, வரட்டாறு, வையாபுரிக்குளம், வள்ளிசுனை, பிரம்ம தீர்த்தம் ஆகியவையும் புண்ணியநீர் எடுத்து வரும் நீர்நிலைகளாக உள்ளன. அயன்மிராஸ் பண்டாரங்கள் என்பவர் யார்?

பழநி முருகனுக்கு நடைபெறும் 6 கால பூஜைகளுக்கு, மலைக்கோயில் அடிவாரத்தில் உள்ள வரட்டாற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரும் உரிமை, பழநியைச் சேர்ந்த 64 அயன்மிராஸ் பண்டாரங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது அவர்களின் வாரிசுகள் இப்பணியைச் செய்து வருகின்றனர். இவர்கள் தீர்த்தம் எடுத்துவர ரோப்கார் அருகே தனியாக திருமஞ்சனப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. 6 கால பூஜைக்கு தற்போதும் இவர்கள் சுழற்சி முறையில் தீர்த்தம் எடுத்து வந்துகொண்டிருக்கின்றனர்.

கி.மு. 500ல் இருந்தே இம்மலையைச் சுற்றி உள்ள பகுதிகளில் மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. சங்ககால இலக்கியங்களில் பழநியைப் பற்றியும், பழநியை ஆண்ட மன்னர்களைப் பற்றியும் குறிப்புகள் உள்ளன. இந்த ஊரின் பழமையான பெயர் பொதினி. இப்பகுதியை ஆவியர்குடியைச் சேர்ந்த வேள் ஆவிக்கோப்பெரும்பேகன் என்ற மன்னர் ஆட்சி செய்துள்ளார். அதனால் ஆவிநாடு என்றும், பின்னாளில் வைகாவூர் நாடு என்றும் இப்பகுதி அழைக்கப்பட்டிருக்கிறது. இன்றும் பழநியின் நடுவே உள்ள குளம் வையாபுரிக்குளம் எனப்படுகிறது. இந்த மலைக்கோயில், பிற்காலப் பாண்டிய மன்னர்களின் கட்டுமான வகையைச் சேர்ந்தது.

கிபி 9ம் நூற்றாண்டில் சேரமன்னர்கள் கோயில் திருப்பணிகளைத் தொடக்கினர். கோயில் கருவறை வடபுறச் சுவரில் உள்ள சடையவர்மன் வீரபாண்டியன் கல்வெட்டு மூலம் கிபி 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. கருவறைச் சுவர்களில் உள்ள 4 கல்வெட்டுக்களில் ஒன்று (கிபி 1520) கிருஷ்ண தேவராயர் காலத்தை சார்ந்தது. இந்தக் கல்வெட்டில் தான் ஸ்ரீபழநிமலை வேலாயுதசாமி எனப் பெயர் இடம் பெற்றுள்ளது. மற்றவை, மூலவரை இளைய நயினார் (சிவபெருமானின் இளைய மகன்) என்றே குறிப்பிடுகின்றன.

விஜயநகரமன்னர் மல்லிகார்ஜுனர் காலத்தில் (கிபி 1446) அவரது பிரதிநிதியான அன்னமராய உடையார் என்பவர் இந்த பகுதிக்கு நிர்வாகியாக இருந்துள்ளார். அந்தக் காலத்தில் 3 சந்திகால பூஜைக்கும் திருவமுது, நந்தா விளக்கு, திருமாலை, திருமஞ்சனம் சாத்துவதற்கான செலவுகளுக்காக இரவிமங்கலம் என்ற ஊர் நன்கொடையாக வழங்கப்பட்டிருக்கிறது. இந்த இரவிமங்கலத்தில் கிபி 9ம் நூற்றாண்டைச் சேர்ந்த முற்காலப் பாண்டியர் காலப் பாடல் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு, அந்த கல்வெட்டு பழநி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

பழநி மலைக்கோயிலில் அழகிய சிற்பங்கள் நிறைய உள்ளன. தவக்கோலத்தில் இருக்கும் சித்தர்கள், நவவீரர்கள், கிளி, மயில், மான், துவார பாலகர்கள். பாரவேல் மண்டபம் மற்றும் அர்த்த மண்டபங்களில் வண்ண ஓவியங்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன. இப்பகுதியை ஆட்சி செய்த பாளையக்காரர்கள் மற்றும் அவரது மனைவியர் சிலைகளும் உள்ளன. மண்டப மேற்கூரைகளில் வரையப்பட்டுள்ள கொடுங்கை வடிவ ஓவியங்கள் சிற்பிகளின் திறமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. பாதவிநாயகர் கோயிலை அடுத்துள்ள மண்டபத்தில் பைரவர், பத்ரகாளி, காளத்திநாதருக்கு தன் கண்ணை எடுத்து லிங்கத்தில் அப்பும் கண்ணப்ப நாயனார், தேவசேநாதேவி திருமணம், சூரசம்ஹார சுப்பிரமணியன், வீரபாகுத்தேவர் ஆகியோர் திருவுருவங்கள் அழகிய சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

கோயிலைவிட்டு வெளியேறுகையில் கிழக்குப் பக்கமாய் சின்னதாய் ஒரு குன்று இருப்பது தெரிகிறது. அது என்ன?

தென் கயிலாயத்திலிருந்து அகத்தியர் உத்தரவுப்படி, இடும்பன் சக்திகிரி சிவகிரி ஆகிய இருமலைகளை தோள்சுமையாக சுமந்துகொண்டு வந்தான். இந்த இடத்திற்கு வரும்போது தோள்வலி ஏற்பட, மலைகளை இறக்கிவைத்துவிட்டு ஓய்வெடுத்தான். இதைப் பார்த்த பாலகுமாரன், சக்திகிரி மலையில் அமர்ந்துகொண்டார். ஓய்விற்குப்பின் கிளம்ப எண்ணிய இடும்பன் மலைகளைத் தூக்கும்போது ஒருபுறம் மட்டும் கனமாக இருந்தது. திடுக்கிட்டுப் பார்க்க அதில் பாலகன் ஒருவன் அமர்ந்திருப்பது தெரிந்தது. இடும்பன் சீற்றம் கொண்டான். வாக்குவாதத்தைத் தொடர்ந்து இடும்பனுக்கும், பாலமுருகனுக்குமிடையே சண்டை மூண்டது. இடும்பன் வதமானான்.

உயிர் போகும் நேரத்தில், அந்த பாலன் முருகனே என்றுணர்ந்த இடும்பன், ‘‘முருகா, உனக்குப் பாதுகாப்பாக உன் மலையருகே நானும் இருப்பேன். என்னைக் கடந்தே பக்தர்கள் உன்னை வந்து தரிசிக்க வேண்டும்,’’ என்று கேட்டுக்கொள்ள, அப்படியே ஆகட்டும் என்று அருட்பாலித்தார் முருகன். அதனால்தான் பழநி வரும் பக்தர்கள் முதலில் இடும்பமலை சென்று இடும்பனை தரிசித்து விட்டு பின்பு பழநி மலைக்கு வருகின்றனர். இருப்பினும் நேரமின்மை, உடல்நிலை காரணங்களால் இடும்பமலையை பலரும் தூர நின்றே வணங்கிவிட்டு முருகமலைக்குச் சென்று விடுகின்றனர்.

இடும்பன் மலைப்பகுதியில் இடும்பன், கடம்பன் ஆகியோருடன் கோபாலகிருஷ்ணன் வடக்கு நோக்கி அருட்பாலிக்கிறார். உட்பிராகாரத்தில் விநாயகர், ஈஸ்வரர், முருகன், மகாலட்சுமி, நவகிரகங்கள் ஆகிய தெய்வங்கள் உள்ளனர். பிரதோஷ நாட்களில் பிரமாண்டமான முறையில் விசேஷ பூஜைகள் இங்கு நடைபெறுகின்றன. இடும்பனுக்கு, மலையடிவாரப் பகுதியில், கேரள பக்தர்கள் பாரம்பரிய உடை அணிந்து படைத்து வழிபடுகின்றனர். இடும்பன் மலையில் சந்நதி முன்பாக பிரமாண்டமாக வீற்றிருக்கும் கருப்பணசாமிக்கு வாரம்தோறும் வெள்ளியன்று விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.

பில்லி, சூனியம் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து விரைவாக குணமடைகிறார்கள். மலைமீதுள்ள இடும்பன் சிலை, 16 அடி உயரம். இவரைத் தரிசித்தால் இருள் நீங்கும் என்பது ஐதீகம்.

இலக்கியங்களில் பழநி: திருப்புகழ், திருமுருகாற்றுப்படை, அகநானூறு, பழநி ஸ்தல புராணம், பழநி முருகன் பிள்ளைத்தமிழ், பழநியாண்டவர் மயில்விடு தூது, பழநி திருவாயிரம், பழநி தண்டாயுதபாணி பாமாலை போன்ற இலக்கியங்கள் பழநி நகரின் சிறப்புக்களையும், பழநி முருகன் வடிவத்தையும் சிறப்பிக்கின்றன.எத்துயரும் பழநி வந்தால் பஞ்சாய்ப் பறந்துவிடும். அதை லட்சக்கணக்கானோர் அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளனர். நீங்களும் பழநி சென்று வாருங்கள். ஊழ்வினை அகன்று, துன்பங்கள் நீங்கி, உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி என்றென்றும் பொங்கும்.

தொகுப்பு: கதிர்செந்திலரசு

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • spain-trees-24

  ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

 • gandhi-13

  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

 • taipei-fashion-week-taiwan

  தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

 • kalifffo1

  தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

 • pak-123

  பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்