SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராஜராஜ சோழனின் சகோதரி குந்தவை எழுப்பிய மாணிக்கேஸ்வரர் கோயில்!

2023-02-01@ 10:00:11

பனையபுரம் அதியமான்

உலகின் அரிய பொக்கிஷமாகத் திகழும் தஞ்சை பெரிய கோயிலை உருவாக்கியவன் சோழ மன்னன் ராஜராஜ சோழன் என்பது உலகறிந்த செய்தி. இதே காலத்தில் ராஜராஜ சோழனின் மூத்த சகோதரி குந்தவை பிராட்டியார் அதே கலைநயத்துடன் எழுப்பியுள்ள கலைப் பொக்கிஷமான சிவாலயம் ஒன்று எந்தவித சிதைவுமின்றி புதுப்பொலிவுடன் ஊர்மக்களின் உள்ளார்ந்த பராமரிப்பில் சிறப்பாகத் திகழ்ந்து வருவது வியக்க வைக்கும் தகவல். அந்தக் கோயில் அமைந்திருக்கும் தலம் - தாதாபுரம்.

தாதாபுரத்தின் புராதனப் பெயர் ராஜராஜபுரம். ‘வெண்குன்றக் கோட்டத்தின் நல்லூர் நாட்டின் ராஜராஜபுரம்’ எனக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இவ்வூர் தற்போது தாதாபுரம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு பெயர் மருவியதற்கான காரணம் தெரியவில்லை. ஆலயத்தில் கல்வெட்டுகள் நிறைந்து காணப்படுகின்றன. சுமார் நூறு வருடங்களுக்கு முன் இந்தியத் தொல்லியல் ஆய்வறிக்கையின் மூலம் பல கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் இவ்வூரின் ஆலயங்கள் பற்றியும், இவ்வாலயங்களுக்கு வழங்கப்பட்ட கொடைகள் பற்றியும் அறிய முடிகிறது.

இரண்டாம் ராஜராஜசோழன், முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன், இரண்டாம் ராஜேந்திரன் ஆகியோர், இந்தக் கோயிலுடன் வைத்திருந்த தொடர்பு பற்றி பதினான்கு கல்வெட்டுகள் தகவல் தருகின்றன. இக்கல்வெட்டுகளின் மூலம் ரவிகுல மாணிக்கேஸ்வரர் கோயில், குந்தவை விண்ணகர் ஆழ்வார் கோயில் மற்றும் குந்தவை சமணக் கோயில் என மூன்று கோயில்கள் தாதாபுரத்தில் எழுப்பப்பட்டுள்ள விவரமும் தெரிய வருகிறது. எனினும், மாணிக்கேஸ்வரர் கோயில் மற்றும் குந்தவை விண்ணகர் ஆழ்வார் கோயில் (கரிவரதராஜப் பெருமாள் கோயில்) இரண்டும் சிறந்த சான்றாகத் திகழ்ந்து வருகின்றன. மாணிக்கேஸ்வரர் ஆலயம், பராந்தக சோழ குந்தவை தேவியால் எழுப்பப்பட்டதைக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

பனையூரைச் சேர்ந்த நிர்வாக அதிகாரி மூலம் மணிகண்டேஸ்வரர் ஆலயத்தில் இருந்த பல்வேறு ஆபரணங்களையும், முத்து வெள்ளி போன்ற ஆலயப் பொருட்களையும் ஆய்வு செய்து இருப்புப் பட்டியல் தயார் செய்ததைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதேபோல, ராஜராஜனின் 19 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு இன்னுமொரு தகவல் தருகிறது. அதாவது, குந்தவை பிராட்டியின் பணியாளர் ஒருவர் நந்தா விளக்கு எரிய, ஆடுகளைக் நிவந்தமாகக் கொடுத்ததைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளது. ராஜராஜனின் 25ம் ஆட்சியாண்டு கல்வெட்டு, குந்தவை பிராட்டியார் ஆலய விளக்கெரிக்க வழங்கிய கொடையை விவரிக்கிறது. இக்கோயில் மற்றும் தஞ்சை கோயில் இரண்டும் சம காலத்தைச் சார்ந்தவை என வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

தற்போது ‘காமாட்சி உடனாய மாணிக்கேஸ் வரர் கோயில்’ என்றழைக்கப்படும் இவ்வாலயம், பழங்காலத்தில் மணிகண்டேஸ்வரர் கோயில் என்று மட்டுமே அறியப்பட்டு வந்தது. கோயிலின் பலிபீடம், நந்தி மண்டபம், முக மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம் என அனைத்தும் கருங்கற்களைக் கொண்டு கற்றளியாக அமைக்கப்பட்டுள்ளன. பலிபீடம் குவிந்த தாமரை வடிவில் கல்மேடை மீது அமைந்துள்ளது. நந்தி மண்டபம் குந்தவை நாச்சியாரின் கலைப்பாணிக்குச் சான்றாகத் திகழ்கிறது. நந்திதேவர் இறைவனை நோக்கிய வண்ணம் கம்பீரமாக வீற்றிருக்கிறார்.

முகமண்டபம், மகாமண்டபத்தின் முன்புறமாக அமைந்துள்ளது. இம்மண்டபத்தை அடைய வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் ஏழு படிகள் உள்ளன. வாயிலின் இருபக்கங்களிலும் யாளியின் முகம் வனப்புடன் செதுக்கப்பட்டுள்ளது. இந்த முகமண்டபத்தின் கூரை, உட்குவிந்த நிலையில் மடிப்புகளுடன் காணப்படுகிறது. மகாமண்டபம் சதுர வடிவில் விசாலமாக அமைந்துள்ளது. இரு வரிசைகளில் பிரமாண்டமான நான்கு தூண்கள் இம்மண்டபத்தைத் தாங்கி நிற்கின்றன. நடுவேயுள்ள நான்கு தூண்கள் அகன்றும், பருத்தும் கலைநயத்துடனும் விளங்குகின்றன. மகா மண்டபத்தில் இடைநாழிக்குச் செல்லும் வாயிலின் இருபுறங்களிலும் துவார கணபதியும், ஆறுமுகரும் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகின்றனர். வடகிழக்குப் பகுதியில் வெளிவாயில் கதவுக்கு உட்புறமாகச் சந்திரன் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்.

கருவறையின் முன்பான அர்த்த மண்டபம் இரண்டு வரிசைகளில் நான்கு பெரிய தூண்களுடன் காணப்படுகிறது. சுவர்களை ஒட்டிய நான்கு அரைத் தூண்களுடன் சேர்த்து மொத்தம் எட்டுத் தூண்கள் அமைந்துள்ளன. இத்தூண்கள் நுணுக்கமான வேலைப்பாடுடன் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தூண்களின் மீதுள்ள விதானத்தில் பூதகணங்கள் வரிசையாக அணிவகுக்கின்றன. அவை விதானத்தைத் தாங்கிப் பிடித்திருப்பது போன்ற கோலம் ரசிக்கத்தக்கது.

அர்த்த மண்டபத்திற்கும் மகா மண்டபத்திற்கும் இடையே அமைந்துள்ள அந்தராளத்தில் வடக்கிலும், தெற்கிலும் திருச்சுற்றை வலம் வரும் வகையில்  வாயில் அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்திருக்கிறது. தற்போது அது மூடப்பட்டுள்ளது. அர்த்த மண்டபத்தைக் கடந்ததும், சதுர வடிவக் கருவறையில் மூலவர் பிரமாண்டமாக கிழக்கு நோக்கி காட்சி தருகின்றார். வட்ட வடிவமான ஆவுடையார் மீது அமைந்துள்ள இந்த சிவலிங்கமே மாணிக்கேஸ்வரர். லிங்கத்தின் நெற்றியில் பிரம்ம சூத்திரக் கோடுகள் அமைந்துள்ளன.

மகா மண்டபத்தின் நடுவே தென்திசையை நோக்கிய வண்ணம் மாணிக்கவல்லி சந்நதி அமைந்துள்ளது. நான்கு கைகளுடன் காணப்படுகிறார் அம்மன். மேல் வலக்கை அங்குசத்துடனும், கீழ்வலக்கை அபய முத்திரையுடனும், மேல் இடக்கை பாசக் கயிற்றுடனும், கீழ் இடக்கை வரத முத்திரையுடனும் அமைந்துள்ளன. இந்த அம்மன் சிற்பமானது, கி.பி.17ம் நூற்றாண்டைச் சேர்ந்த செஞ்சி நாயக்கர் கலைப்பாணி என வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். கல்வெட்டில் காமாட்சி என்ற பெயர் காணப்படுகின்றது.

கணபதி, தட்சிணாமூர்த்தி, சந்திரன், சூரியன், காளையோடு நிற்கும் வீணாதரர், திருமால், துர்க்கை, சண்டிகேஸ்வரர், பைரவர், சப்தமாதாக்கள், துவாரபாலகர்கள் என அனைத்துச் சிற்பங்களும் குந்தவை பிராட்டியாரின் சிற்பக்கலை ஈடுபாட்டை பறைசாற்றுகின்றன. கருவறைக் கோட்டத்தில் அமைந்துள்ள நர்த்தன கணபதி, கல் குடையுடன் காட்சி தருவது அபூர்வ கோலமாகும். அதேபோல, விநாயகர் சந்நதியில் அமைந்துள்ள கணபதி வடிவம் கலை நயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. துவார பாலகர்கள் இருவரும் சிற்பக்கலை பெருமைக்கு மெருகூட்டுகின்றனர். இதேபோல வீணை ஏந்தி நிற்கும் சிவனது உருவம் கருவறையின் தென்புறத்துச் சுவரில் இரு தூண்களுக்கும் மத்தியில் அமைந்துள்ளது. பிற சிற்பங்களும் தனித்தன்மையுடனும், கலைத்தன்மையுடனும் அமைந்துள்ளன.

திண்டிவனம் - வந்தவாசி நெடுஞ்சாலையில் திண்டிவனத்திற்கு வடமேற்கே சுமார் 15 கி.மீ. தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது. திண்டிவனத்திலிருந்து பேருந்து வசதி உண்டு. சென்னை கோயம்பேட்டிலிருந்தும், திண்டிவனத்திலிருந்து வந்தவாசிக்கும் செல்லும் பேருந்துகளில் பயணித்து, தாதாபுரம் கூட்டுச்சாலை அல்லது பேட்டை எனப்படும் வெள்ளிமேடு பேட்டை என்ற இடத்தில் இறங்கிக் கொண்டு, ஆட்டோ அல்லது ஷேர் ஆட்டோ மூலம் தாதாபுரத்தை அடையலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • spain-trees-24

  ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

 • gandhi-13

  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

 • taipei-fashion-week-taiwan

  தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

 • kalifffo1

  தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

 • pak-123

  பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்