SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீலமேகன் திருமங்கையானார்

2023-01-31@ 11:37:39

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஆழ்வார் திருநகரிக்கு அருகில் குறையலூரில் படைத்தலைவனின் மகனாக நீலமேகன் என்பவர், அவதரித்தார். திருவாலியில் வளர்ந்து வந்த அழகுமங்கை குமுதவல்லியைத் திருமணம் செய்து தரச் சொல்லி நீலமேகன் கேட்டார். குமுதவல்லியோ, ‘திருவிலச்சினை பெற்றுப் பரமபாக வதரான இவனையேதான் மணம் முடிப்பேன்’ என்று கூறிவிட்டாள். நீலன் அதாவது நீலமேகன் அவ்வாறே பரமபாகவதனாக மாறிவந்து குமுதவல்லியைத் தன்னை மணமுடிக்கக் கேட்டார். குமுதவல்லியோ, ஒரு விரதமிருப்பதாகவும், அந்த விரதம் முடிந்த பின்னரே திருமணம் செய்ய முடியும்’ எனவும் குறிப்பிட்டார்.

‘தினமும் ஆயிரம் திருவைணவருக்கு அன்னதானம் செய்ய வேண்டும் என்பதே தன்னுடைய விரதம்’ என்றாள். எனவே அவளுடைய விரதத்தை நிறைவேற்றி வைத்துப் பின் அவளை மணக்க நீலன் முயன்றார். நீலன் அதற்கெனத் தம் பொருள் எல்லாம் செலவழித்தார். இறுதியில் அரசனுக்குக் கட்ட வேண்டிய கப்பம் கட்டப் பணமில்லாமல் போயிற்று. கப்பப்பணம் கட்டாததால், பிள்ளையார் கோயிலில் நீலன் சிறை வைக்கப்பெற்றார். மூன்று நாள் அன்ன ஆகாரமின்றி இருந்தார். பெருமாளிடம் உருகி வேண்டினார். நறையூர்ப் பெருமாள் காஞ்சிபுரம் பார்வதி நதியில் புதைந்துள்ள நிதியை எடுத்துக் கப்பம் செலுத்திச் சிறையிலிருந்து விடுபட ஆணையிட்டார். வேகவதியில் கிடைத்த புதையலைக் கொண்டு கப்பம் செலுத்தினார்.

மீண்டும் பொருளின்றிப் போகவே வழிப்பறியில் இறங்கலானார். செல்வச் சிறப்பு வழங்கும் அன்னை, திருமகளாம் இலக்குமி நீலனுக்கு உதவிடும்படித் திருமாலை வேண்டினார். தாயார் வேண்டுகோளை ஏற்றுத் திருமாலும், திருமகளும் மணமக்களாய் மாறினர். பூர்ண மகரிஷியின் புதல்வியாய்த் தோன்றினாள் இலக்குமி. திருமால் அழகிய மணவாளனாய் ஆலிநகர் வந்தார். திருமகளை அழகிய மணவாளன் மணம் முடித்தார். மணமக்கள் மணம் முடித்துப் பொற்குவியல்களுடன் சென்று கொண்டிருந்தனர்.

பெரிய திருமணக்குழு பொற்குவியல்களுடன் செல்வதைக் கேள்வியுற்றுப் பொருளைக் கொள்ளையிட நீலன் வேதராசபுரம் வந்தார். மணமக்களை வழிமறித்துப் பொருள்களைக் கொள்ளையடித்து அதனைக் கட்டி வைத்து மூட்டையாகத் தூக்க முயன்றபோது, அவரால் அதனைத் தூக்க முடியவில்லை.மணவாளன், தான் ஏதோ மந்திரம் போட்டுக்கொள்ளைப் பொருளைத் தூக்கவியலாமல் செய்துவிட்டான் என எண்ணி, நீலன் மணவாளனை வெட்ட வாளினை உருவினார்.

அழகிய மணவாளனாய் வந்த பெருமாள், நீலனை அருகில் அழைத்து மந்திரத்தைக் கூறுவதாய்க் கூறிச் செவிகளில் எட்டெழுத்து மந்திரமான ‘ஓம் நமோ நாராயணா’ வை ஓத ஞானமும், தன் முற்பிறப்பும் நீலனான திருமங்கைக்கு விளங்கியது. குமுதவல்லி எனும் திருமங்கையினால் திருமால் பக்தியில் திளைத்தமையால் நீலன் திருமங்கையாழ்வார் ஆனார். நறையூர், திருநகரி, மங்கை மடம் ஆகியன திருமங்கையின் வாழ்வுடன் தொடர்புடைய திருத்தலங்கள் ஆகும்.

தொகுப்பு: பரிமளா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்