SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

2023-01-30@ 17:35:35

நன்றி குங்குமம் ஆன்மீகம்

508. புருஜிதே நமஹ (Purujithey namaha)

(503-வது திருநாமம் கபீந்த்ர முதல் 512-வது திருநாமம் ஸத்யஸந்த வரை - தருமத்தின் வடிவமாக இருக்கும் ஸ்ரீராமனின் பெருமைகள்)தசரதன் தனக்குப் பிறந்த நான்கு குழந்தை களான ராமன், லட்சுமணன், பரதன்சத்ருக்னன் ஆகியோரை வசிஷ்டரிடம் கல்வி பயிலச்செய்தார். அப்போது லட்சு மணன் எந்நேரமும் ராமனை விட்டுப் பிரியாமல் கூடவே இருந்து பணிவிடைகள் செய்து வந்தான். சத்ருக்னன் அவ்வாறே ராம பக்தனான பரதனைவிட்டுப் பிரியாது உடனிருந்து பரதனுக்கு அனைத்துவிதப் பணிவிடைகளும் செய்துவந்தான்.

அந்த நாட்களில் காலை நேரங்களில்ராமனும், லட்சுமணனும் சோலைகளுக்குச் சென்று அங்கே தவத்திலும் இறை வழிபாட்டிலும் ஈடுபட்டு வரும் முனிவர்களை அடிபணிவார்களாம். அந்த முனிவர்கள் கூறும் நல் வார்த்தைகளையும், அறிவுரைகளையும் கேட்டு, அவர்களுக்குத் தங்களால் இயன்ற பணிவிடைகளையும் ராம, லட்சுமணர்கள் செய்வார்கள்.அதன்பின் பகல் முழுவதும் வசிஷ்டரின் குருகுலத்தில் வித்தைகளைப் பயில்வார்கள். தங்கள் குலகுருவான வசிஷ்டரிடம் மிகுந்த பக்தியும் மரியாதையும் கொண்டவர்களாய், அவரையே தெய்வமாக எண்ணி வழிபட்டுவந்தார்கள்.

மாலைப்பொழுது வந்தவாறே, ராம லட்சு மணர்களும் அயோத்தி நகர்ப் புறத்துக்கு வருவார்களாம். அச்சமயம் எதிரில் வரக் கூடிய பொதுமக்கள் ஒவ்வொருவரையும் பார்த்து, நீங்கள் நலமாக உள்ளீர்களா, உங்கள் வீட்டில் எல்லோரும் நலமா என்றெல்லாம் பலவாறு விசாரிப்பார்களாம். அவ்வாறு ராம லட்சுமணர்கள் பேசும் இனிய வார்த்தைகளைக் கேட்ட மக்கள், கார்முகில் பொழியும் மழையைக் கண்டு மகிழும் பயிர்களைப்போல் என பெருமகிழ்ச்சி அடைவார்களாம்.

இதைக் கம்பர் பால காண்டத்தில், திருஅவதாரப் படலத்தில்,

வீரனும் இளைஞனும் விரிபொழில்களின் வாய்
ஈரமோடு உறைதரு முனிவரர் இடைபோய்
சோர்பொழுது அணிநகர் துறுகுவர் எதிர்வார்
கார்வர அலர்பயிர் பொருவுவர் களியால்


மேலும், ஏழையர் யாவது உதவி என்று கேட்டுவந்தால், அவர்களுக்குத் தேவையான உதவிகளை எல்லாம் உடனே செய்து விடுவானாம் ராமன். அதனால் குடிமக்கள் யாவரும் ராமனை உளமார வாழ்த்திவந்தார்கள்.ராமனுடைய நன்னடத்தை, பணிவு, நற்பண்புகள் உள்ளிட்டவற்றைக் கண்டு வியந்து வசிஷ்டரும் ராமன் மீது மிகுந்த அபிமானம் கொண்டிருந்தாராம். எல்லாவற்றுக்கும் மேலாக, அயோத்திமக்கள் ராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்னன் ஆகிய நான்கு இளவரசர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனையோடு அயோத்தியில் உள்ள அனைத்துக் கோயில்களுக்கும் சென்று தினசரி வழிபாடு செய்து விட்டு வருவார்களாம். இதையும் கம்பர்,


ஏழையர் அனைவரும் இவர்தட முலைதோய்
கேழ்கிளர் மதுகையர் கிளைகளும் இளையார்
வாழிய என அவர் மனன் உறு கடவுள்
தாழ்குவர் கவுசலை தயரதன் எனவே


இவ்விடத்தில் கம்பர், கௌசல்யாவும் தசரதனும் ராமனை எவ்வளவு வாழ்த்துவார்களோ அவ்வளவு தூரம் நாட்டு மக்கள் அத்தனை பேருமே ராமனிடம் அன்பு காட்டி அவனை வாழ்த்தினார்கள் என்கிறார். இப்படி பலதரப் பட்ட மக்களும் ராமனைப் போற்றிக் கொண்டாட என்ன காரணம் என்று பார்த்தால், அதை ஒரே ஸ்லோகத்தில் வால்மீகி தெரிவிக்கிறார்;

ஸத்யேன லோகான் ஜயதி, தீனான் தானேன ராகவ:
குரூன் சுச்ரூஷயா தீமான், தனுஷா யுதி சாத்ரவான்


தான் கடைப்பிடிக்கும் சத்தியத்தால் உலகங்களையே வென்றான் ராமன். தானத்தால் ஏழைகளின் மனங்களை வென்றான் ராமன். தனது பணிவிடைகளால் குருமார்களின் மனங்களை வென்றான். வில் எடுத்துப் போர்புரியும் தன் மிடுக்கால் எதிரிகளின் மனங்களைக் கூட வென்றுவிட்டான் ராமன். அதனால்தான் எல்லாரும் ஒன்று போல் ராமனை எப்போதும் வாழ்த்துகிறார்கள்.

இப்படி அனைவரின் மனங்களையும் வென்ற ராமன், புருஜித் என்று அழைக்கப்படுகிறார்.புருஜித் என்றால் பலரின் மனங்களை வென்றவர். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 508 - வது திருநாமம்.
``புருஜிதே நமஹ’’ என்று தினமும் சொல்லி வந்தால் நம் மனங்களையும் ராமன் தன்பால் ஈர்த்து, தூயபக்தி வளர அருள்புரிவார்.

509. புருஸத்தமாய நமஹ (Purusatthamaaya namaha)

ராமன் தனது அவதாரத்தை நிறைவு செய்து வைகுண்டத்துக்குப் புறப்படும் சமயம். அயோத்தி மக்கள் அத்தனை பேரும் ராமனைப்பின்தொடர்ந்து வந்தார்கள். அவர்கள் அத்தனை பேரையுமே தன்னோடு அழைத்துச் சென்ற ராமன், அவர்களை ``சாந்தானிக லோகம்’’ என்ற உலகில் சேர்த்தான். அங்கிருந்து அடுத்த கட்டமாக அவர்கள் வைகுண்ட லோகத்தை அடையும் பேற்றைப் பெறுவதற்கும் வழிவகை செய்தான் ராமன்.

இந்நிலையில், அனுமனையும் ராமன் வைகுண்டத்துக்கு அழைக்க, ``சுவாமி, தாங்கள் இதுவரை சொன்ன எல்லாக் கட்டளைகளையும் சிரமேற்கொண்டு நிறைவேற்றினேன். ஆனால் இப்போது தங்களது உத்தரவுக்குக் கீழ்ப்படிய முடியாத சூழலில் அடியேன் உள்ளேன்’’ என்றார்.

``என்ன ஆயிற்று அனுமனே, உங்களை வைகுண்ட லோகத்துக்குத்தானே அழைத்தேன்’’ என்று கேட்டார் ராமன். அதற்கு அனுமன்,

``ஆம் பிரபுவே, தாங்கள் கூறியதைப் புரிந்து கொண்டுதான் பதில் சொல்கிறேன்’’.

ஸ்நேஹோ மே பரமோ ராஜன் த்வயி நித்யம் ப்ரதிஷ்டித:
பக்திச்ச நியதா வீர பாவோ நான்யத்ர கச்சதி


``அடியேன் உங்களிடத்தில் மிகுந்த அன்பும் பக்தியும் எப்போதும் கொண்டிருக்கிறேன். ஆனால், அந்த அன்பு பக்தி அனைத்தும் ராமனாகிய இந்த வடிவில்தான் பூண்டிருக்கிறேன். இந்தத் திருக்கோலத்தில் தரிசித்த உங்களை இனி வைகுண்டநாதனாகத் தரிசிக்கக் கூட மனமில்லை. எப்போது என் ராமபிரானைத் தரிசித்து விட்டேனோ, இந்த வடிவைத் தவிர்த்து வேறு வடிவில் என் மனம் ஈடுபடாது. எனவே நீங்கள் வைகுண்டம் சென்றபின்னும் இதே வடிவைத் தியானித்துக்கொண்டு இங்கேயே இருந்துவிடுகிறேன்’’ என்றார் அனுமான்.

``என்ன சொல்கிறீர் அனுமனே’’? என்றுகேட்டார் ராமன். அதற்கு அனுமான், ``வைகுண்டத்தில் ராம நாம சங்கீர்த்தனமோ, ராமாயண உபன்யாசமோ நடைபெறுமா’’? என்று ராமனிடம் கேட்டார். (வைகுண்டத்தில் விரும்பும் அனைத்தும் கிடைக்கும் என்பது சாஸ்திரங்களில் தெளிவு. எனவே இங்கே சொல்லப்படும் விஷயங்கள் யாவும் அனுமனின் ஏகாந்த பக்தியின் பெருமையை விளக்கும் கோணத்தில் மட்டும் அனுபவிக்கத் தக்கவை) ராமனோ, ``இல்லை அனுமனே. வைகுண்டத்தில் சாமவேத கானம்தான் பாடுவார்கள்.

ராம நாம சங்கீர்த்தனமோ, ராமாயண உபன்யாசமோ நடைபெறாது’’ என்றார். அதைக் கேட்ட அனுமான், ``ராமநாமத்தைப் பாடாத இடத்தில் நான் இருந்து என்ன செய்யப்போகிறேன். அதனால் வைகுண்டத்துக்கு நான் வரவில்லை. இந்தப் பூலோகத்தில் எங்கெல்லாம் ராமநாமம் பாடுகிறார்களோ, எங்கெல்லாம் ராமாயண வரலாற்றைப் பாராயணம் செய்கிறார்களோ, அங்கெல்லாம் நான் சென்று இருந்துவிடுகிறேன். எனக்கு வைகுண்டம் வேண்டாம்’’ என்று பதிலளித்து விட்டார்.

``என்னைப் பிரிந்து உங்களால் இருக்கமுடியுமா, நான் இப்போது வைகுண்டம் சென்று விடுவேனே’’ என்று கேட்டானாம் ராமன். அதற்கு அனுமான், ``நமக்குப் பிரிவு ஏது பிரபுவே, ராம நாமத்தின் வடிவில் என் நாவிலேயே நீங்கள் இருந்து கொண்டே இருக்கிறீர்கள். முன்பு நான் கண்டேன் சீதையை என்று சொன்ன போது என்னைத் தோளோடு தோள்சேர ஆரத் தழுவிக் கொண்டீர்களே. அந்தத் தோள்களின் வாசம் இன்னும் எனது தோள்களில் இருக்கின்றது. நுகர்ந்து பார்த்தாலே உங்கள் ஸ்பரிசம் இப்போதும் என் தோள்களில் தெரிகிறதே. இவற்றையும் கடந்து உங்களைத் தரிசிக்க நினைத்தால், திருவரங்கத்தில் நீங்கள் பூஜித்த அரங்கன் இருக்கிறார். அவரைப் போய்த் தரிசித்துக் கொள்கிறேன்’’ என்று விடையளித்தார்.

``புரு’’ என்பது ராமனின் குணங்களாகிய கடலில் மூழ்கி இருக்கும் அனுமானைப் போன்ற மிகச்சிறந்த அடியார்களைக் குறிக்கும். ``ஸத்தம:’’ என்றால் அவர்களை விட்டுப் பிரியாமல் உடன் இருப்பவர் என்று பொருள். ``புருஸத்தம:’’ என்றால் உயர்ந்த அடியார்களை விட்டுப் பிரியாமல் எப்போதும் அவர்களுடன் இருப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 509-வது திருநாமம்.

நாமும் ``புருஸத்தமாய நமஹ’’ என்றுதினமும் சொல்லி வந்தால், ராமன் நம்மோடு எப்போதும் இருந்து, நம் நாவை விட்டு அவனது ராம நாமம் பிரியாதிருக்கும்படி அருள்புரிவார்.

510. வினயாய நமஹ (Vinayaaya namaha)

அகம்பனன் என்ற ஒரு அரக்கன் பெண் வேடத்தில் ராவணனிடம் ஓடி வந்தான். பதற்றத்தில் ஓடி வரும் அவனைப் பார்த்து என்ன ஆயிற்று என்று ராவணன் கேட்டான். ஜனஸ்தானத்தில் இருந்த கரன், தூஷணன், திரிசிரஸ் உள்ளிட்ட நம் 14000 அரக்கர்கள் மாண்டுபோனார்கள் என்ற அதிர்ச்சிச் செய்தியைத் தெரிவித்தான் அகம்பனன்.``என்ன உளறுகிறாய்’’ என்று கேட்டான்ராவணன்.

``லங்கேஸ்வரா, நான் உண்மையைத்தான் சொல்கிறேன். ராமன் என்ற ஒரே வீரன் அத்தனை பேரையும் அழித்துவிட்டான்’’ என்றான் அகம்பனன். இது ராவணனுக்கு மேலும் அதிர்ச்சியைக் கொடுத்தது. ``என்ன சொல்கிறாய், தேவர்களோ வேறு யாரும் உதவி செய்யாமல் ஒரு மனிதனால் எப்படி அத்தனை வலிமை மிக்க அரக்கர்களை அழிக்க முடியும்’’? என்று மீண்டும் கேட்டான் ராவணன். அதற்கு அகம்பனன், ``அந்த ராமன் மிகச்சிறந்த வீரன், அசகாய சூரன். நான் பெண்வேடம் போட்டுக்கொண்டதால் உயிர் பிழைத்தேன். இல்லாவிடில் என்னையும் அந்த ராமன் அழித்திருப்பான்’’ என்றான்.

``இப்போதே ராமனை நான் அழிக்கிறேன் பார்’’ என்று கோபத்துடன் எழுந்தான் ராவணன். அதைக் கண்ட அகம்பனன், ``மன்னா உங்களால் ராமனை அழிக்க முடியாது. நான் ஒரு வழி சொல்கிறேன். அந்த ராமனுக்குச் சீதை என்ற அழகான மனைவி ஒருத்தி இருக்கிறாள். அவளை நீங்கள் அபகரித்து வந்தால், அவளைப் பிரிந்த துயரத்தில் ராமனே மாண்டுவிட வாய்ப்புள்ளது’’ என்றான். அகம்பனனின் ஆலோசனைப் படி தாடகையின் மகனான மாரீசனிடம் சென்றான் ராவணன். ராமனின் மனைவியான சீதையை அபகரித்து வர வேண்டும் என்று மாரீசனிடம் சொன்னான் ராவணன்.

ராமனிடம் மோதுவது என்பது பேராபத்தை விளைவிக்கும் என்று அறிவுரை சொல்லி, இத்தகைய தவறான முடிவைக் கைவிடுமாறு அறிவுறுத்தி ராவணனை மீண்டும் அரண்மனைக்கே அனுப்பிவைத்தான் மாரீசன். அப்போதுதான் ராவணனின் அரண்மனைக்குச் சூர்ப்பணகை வந்தாள். காதும் மூக்கும் அறுபட்டு வந்த சூர்ப்பணகை ராவணனிடம், ``ராமனும், லட்சுமணனும்தான் என்னை இந்த நிலைக்கு ஆளாக்கினார்கள். அந்த ராமனின் மனைவி சீதை பேரழகி. ராவணா, அவள் உனக்கு மனைவியாக இருந்தால் நன்றாக இருக்குமே என எண்ணி அவளைக் கவர்ந்து வரப் பார்த்தேன். அதனால்தான் இந்த நிலைக்கு அவர்கள் இரு வரும் ஆளாக்கிவிட்டார்கள்’’ என்று கூறினாள்.

மேற்கொண்டு சீதையின் அழகையும் சூர்ப்பணகை வர்ணிக்க, ராவணனின் மனதில் காமம் உண்டானது. அதுவரை ராமனைப் பழிவாங்க வேண்டும் என்ற உணர்வு மட்டுமே கொண்டிருந்த அவன், மெல்ல மெல்லக் காமத்துக்கு வசப்பட்டான். மீண்டும் மாரீசனிடம் சென்று சீதையை அபகரித்து வரவேண்டும் என்றான். மாரீசன் ராவணனிடம், பிறன் மனைவி நோக்குதல் எவ்வளவு பெரிய பாபம் என்பதை எடுத்துரைத்தான்.

``ராவணா, ராமன் பிரம்மச்சாரியாக இருக்கும் போதும் நான் அவனிடம் அடி வாங்கி உள்ளேன். சீதையை மணந்த பின்னும் நான் அவனிடம் அடி வாங்கி உள்ளேன். விஸ்வாமித்ர யாகத்தைக் காக்கும்போது, பிரம்மச்சாரி ராமன் பாணத்தால் தாக்கி என்னைக் கடலில் வீழ்த்தினான். அதன் பின், ராமன் சீதையுடன் வனவாசம் வந்த சமயம், நான் மிருக வடிவில் அவர்களைத் தாக்க முற்பட்டேன். அப்போதும் ராமன், பாணத்தால் என்னைத் தாக்கினான். பிரம்மச்சாரி ராமன் அடித்த அடியைவிட சீதையின் கணவன் ராமன் அடித்த அடிக்கு வலிமை அதிகம். (ஏனென்றால் தனியான திருமாலை விடத் திருமகளுடன் கூடிய திருமாலுக்கே சக்தி அதிகம் என்பது சித்தாந்தம்) அவ்வளவு வலிமை மிக்க ராமனிடம் மோதினால் அழிவாய்’’ என்று அறிவுரை சொன்னான் மாரீசன்.

ஆனாலும் அவன் பேச்சைக் கேட்காத ராவணன், ``என் பேச்சை நீ கேட்காவிட்டால் உன்னைக் கொல்வேன்’’ என்று மாரீசனை மிரட்டினான். ``உன் கையால் மாள்வதற்கு ராமன் கையால் மடிவதே மேல்’’ என்ற எண்ணத்துடன் மாய மான் வடிவில் போகச் சம்மதித்துப் போனான் மாரீசன். எதிர்பார்த்தபடியே மாண்டும் போனான்.

ஆனால் உண்மையில் இந்த மாரீசன் என்பவன் கொடிய அரக்கன். இவன் இவ்வளவு தூரம் நல்ல அறிவுரைகள் சொல்பவனாக மாறியதற்கு எது காரணம் என்று சிந்தித்தால், ராமன் அடித்த அடிதான் காரணம். இரண்டு முறை ராமனிடம் அடி வாங்கியதன் விளைவால்தான், தனது அரக்க குணத்தை வெளிப்படுத்தாமல், இலங்கையில் ஓரமாக ஒதுங்கி வாழ்ந்து வந்தான். ராவணனுக்கும்கூட அறிவுரை சொல்லி ராமனிடம் மோத வேண்டாம் என்று அறிவுறுத்தினான்.

இப்படி மாரீசன் போன்ற பெரும் அரக்கர்களைக் கூட அனாயாசமாக அடக்குவதால், ``ராமன் வினய:’’ என்று அழைக்கப்படுகிறார். இவ்விடத்தில் `வினய’ என்பதற்கு அரக்கர்களைத் தன் வீரத்தால் அடக்குபவர் என்று ஸ்ரீபராசர பட்டர் பொருள் கூறியுள்ளார். வினய: என்பதற்கு பணிவு மிக்கவர் என்று பொருள் இருந்தாலும்கூட, அது ராமனிடம் இருப்பது ஊரறிந்த விஷயமே. மாரீசன் போன்ற அரக்கர்கள் வினயத்தோடு தன்னைப் பணியும்படிச் செய்ய வல்லவன் ராமன் என்பதை வலியுறுத்தவே, வினய:  அரக்கர்களை அடிபணியச் செய்பவர் என்ற பொருள் இங்கே எடுத்தாளப்பட்டது. அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 510-வது திருநாமம்.``வினயாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வந்தால் நம் மனத்தை அடக்கும் ஆற்றல் நமக்குக் கைவரும்படி ஸ்ரீராமன் அருள்புரிவார்.

511. ஜயாய நமஹ(Jayaaya namaha)

ஒரு முறை அனுமான் தன் அன்னை அஞ்ஜனா தேவியைத் தரிசிக்க ஆவலுற்று ராமரிடம் அனுமதி பெற்றுக் கிளம்பினார். அதே தருணத்தில், ராமரின் தரிசனத்துக்காகக் காசிராஜனும் கிளம்பினான். வழியில், காசி ராஜனைப் பார்த்த நாரதர், ‘எனக்கு நீ ஒரு காரியம் செய்ய வேண்டுமே!’ என்று காசிராஜனிடம் சொன்னார். ‘தங்கள் கட்டளை என் பாக்கியம்’ என்றான் காசி ராஜன். ‘அங்கு ராமனின் சபையில் எல்லோருக்கும் வந்தனம் செய். ஆனால், அங்கு இருக்கும் விஸ்வாமித்திரருக்கு மட்டும் வந்தனம் செய்யாதே. அவரைக் கண்டுகொள்ளாதே!’ என்றார் கலக நாரதர்.

சற்று யோசித்துப் பார்த்த காசிராஜன்,நாரதர் வாக்கை மீற வேண்டாம் என நினைத்து, நாரதரிடம் அவர் சொல்லியபடி செய்வதாக வாக்களித்துவிட்டு, ராமரது அரச சபைக்குச் சென்றான். அங்கிருந்த வசிஷ்டர் உள்ளிட்ட அனைவரையும் வணங்கி ஆசி பெற்றான். ராமனை வணங்கினான். ஆனால், விஸ்வாமித்திரரை மட்டும் வணங்கவில்லை. இதைக் கவனித்த விஸ்வாமித்திரர், ராமனைத் தனியே சந்தித்தார்.

`ராமா, இன்று அரச சபைக்கு வந்தகாசிராஜன் என்னைத் தவிர அனைவரையும் வணங்கினான்! வேண்டுமென்றே என்னை அவமானம் செய்துவிட்டான்! இன்று மாலைக்குள் அவன் தலையைக் கொண்டு வந்து என் காலடியில் நீ சேர்க்க வேண்டும்’ என்று ராமனுக்கு உத்தரவிட்டார் விஸ்வாமித்திரர். இந்த செய்தியை அறிந்து கொண்டு ``ஐயோ...’’ என்று அலறியவாறே நாரதரை நோக்கி ஓடினான் காசிராஜன். நாரதர் அவனுக்கு ஆறுதல் கூறி, அனுமனின் தாயான அஞ்ஜனா தேவியிடம் காசிராஜனைச் சேர்த்துவிட்டார். உங்கள் காலில் விழுந்த காசிராஜனை நீங்கள்தான் காக்க வேண்டும் என்று அஞ்ஜனா தேவியிடம் கோரினார் நாரதர்.

அதேநேரம் உற்சாகத்துடன் அனுமான் உள்ளே நுழைந்தார். அஞ்ஜனா தேவி,காசி ராஜனுக்கு, தான் அளித்த வாக்குறுதியைக் கூறி, ராமரின் பிரதிக்ஞையையும் கூறி, `மகனே அனுமந்தா! நீதான் நம்மைச் சரண் அடைந்த காசி ராஜனைக் காப்பாற்ற வேண்டும். உன் அன்பான அன்னையின் வேண்டுகோள் இது’ என்றாள்.``தாயே! இதுவரை என்னிடம் நீங்கள் ஒன்றுகூடக் கேட்டதில்லையே! முதல் முறையாக ஒன்றைக் கேட்கிறீர்கள்! அதைச் செய்யாமல் இருந்தால் நான் உண்மையான மகன் அல்லவே! வருவது வரட்டும்! காசிராஜன் உயிருக்கு நான் உத்தரவாதம்’’ என்று உறுதியளித்தார் அனுமான்.

அனுமான், காசிராஜனை சரயுநதிக்கரைக்கு அழைத்துச் சென்றார். `நீங்கள் இந்த நதியில் கழுத்து வரை ஜலத்தில் மூழ்கி, ராம.. ராம.. என்று ஜபிக்க ஆரம்பியுங்கள்!’ என்று கூறினார். காசி ராஜனும் அவ்வாறே சரயுநதியில் கழுத்து வரை ஜலத்தில் மூழ்கி, பயபக்தியுடன் ராம நாமத்தை ஜபிக்கலானான். சரயுநதிக்குக் காசி ராஜன் வந்ததை அறிந்து மொத்த ஜனங்களும் சரயு நதிக்கரைக்கு வந்து விட்டார்கள். ராமனும் இதை அறிந்து சரயு நதிக்கரைக்கு வந்தார். பார்த்தால், அனுமனும் காசி ராஜனும் ராம நாமத்தை ஜபம் செய்துகொண்டு இருந்தார்கள். ராமன் தனது பாணத்தை எய்தபோது, ராமநாமத்தை ஜபிக்கும் இருவரையும் வலம் வந்துவிட்டு, அவர்களைத் தாக்காமல் பாணம் ராமனிடமே திரும்ப வந்துவிட்டது.

இதுபோல் மூன்று முறை ராமன் பாணங்கள் விட்டுப் பார்க்க, மூன்று பாணங்களுமே இருவரையும் வலம் வந்து ராமனிடமே திரும்ப வந்து விட்டன. இதைப் பார்த்த வசிஷ்டர், ராமன் ஒருபுறம், அனுமான் மறுபுறம் என்று இருப்பதைத் தடுக்க விரும்பி, இக்கலகத்துக்குக் காரணமான நாரதரை அங்கே அழைத்து வந்தார். கலகத்தை முடித்து வைக்குமாறு நாரதரிடம் கோரினார் வசிஷ்டர். அங்கே வந்த நாரதர், ராம பாணத்தைவிட ராம நாமத்துக்கு வலிமை அதிகம் என்று உலகுக்கு உணர்த்தவே நான் இத்தகைய ஒரு கலகத்தைச் செய்தேன். இதைப் பார்த்தஅத்தனை பேரும் `ராம நாமம்’ எவ்வளவு உயர்ந்தது என்பதை உணர்வார்கள் அல்லவா என்றார்.

இப்போது காசி ராஜன் தலையை விஸ்வாமித்திரர் காலில் போட வேண்டும் என்ற கட்டளையை ராமன் நிறைவேற்றி ஆக வேண்டுமே என்று கேட்டார் வசிஷ்டர். அதற்கு நாரதர், தலையை வெட்டிப் போட வேண்டாம், தலையைப் போட்டால் போதுமே. காசிராஜனை, விஸ்வாமித்திரருக்கு ஒரு நமஸ்காரம் செய்யச் சொல்லுங்கள், எல்லாம் சரியாகிவிடும் என்றார். அவ்வாறே காசிராஜன் நமஸ்கரிக்க, விஸ்வாமித்திரரும் கோபம் தணியப்பெற்றார்.

ஆக இதிலிருந்து நாம் உணர்வது என்னவென்றால், ராமநாமம் ஜபிக்கும் அனுமனைப் போன்ற பக்தர்களை ராமன் வெல்வதில்லை. மாறாக அந்த பக்தர்களால் ஜெயிக்கப்பட்டவனாக ஆகிவிடுகிறான் ராமன். அதனால்தான், ``ஸ்ரீராமன் ஜய:’’ என்று அழைக்கப்படுகிறார். ஜய: என்பது பொதுவாக வெற்றியைக் குறிக்கும். இங்கே பராசர பட்டர் விளக்குகையில், பக்தர்களை ஜெயிக்க வைத்து, அவர்களின் அன்புக்குத் தோற்பவர் ஜய: என்று இத்திருநாமத்தை விளக்கியுள்ளார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 511-வது திருநாமம்.``ஜயாய நமஹ’’ என்று தினமும் சொல்லிவந்தால், நமக்கும் இறைவனைக் கட்டுப்படுத்தவல்ல அந்த பக்தி நிறையும்படி ஸ்ரீராமன் அருள்புரிவார்.

திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • well-collapes-31

  ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

 • parliammmm_moddi

  இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

 • boat-fire-philippines

  பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

 • us-desert-train-acci-30

  அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

 • mexico-123

  மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்