SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

யாரேனும் தாகமாயிருந்தால் என்னிடம் வரட்டும்

2023-01-30@ 16:03:23

என்னிடம் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும் (யோவான் 7:37)

யோவான் நற்செய்தியாளர் தமது நூலின் முடிவாக “இயேசுவே இறைமகனாகிய மேசியா என நீங்கள் நம்புவதற்கும், நம்பி அவரது பெயரால் வாழ்வு பெறுவதற்குமே இந்த நூலில் உள்ளவை எழுதப்பட்டுள்ளன” (யோவான் 20:31) என்று கூறியுள்ளார். ஏதோ ஒரு கட்டாயத்தின் பேரிலோ அல்லது பொருட்களைக் கொடுத்தோ இயேசு கிறிஸ்துவின் மீதோ அல்லது வேறு எந்தக் கடவுள் பேரிலோ நம்பிக்கை வர வைக்க முடியாது. இயேசு கிறிஸ்துவின் மீது ஒருவர் நம்பிக்கை கொள்வதற்கு அவரது நம்பிக்கை தரும் வார்த்தைதான் அடிப்படையாக அமைகிறது.

யோவான் தமது நூலின் தொடக்கத்திலேயே ‘‘அவரிடம் வாழ்வு இருந்தது’’ என்று கூறியுள்ளார். இயேசு கிறிஸ்துவை வாழ்வுடனும், அழியா வாழ்வுடனும் தொடர்புப் படுத்தி இந்த நூல் முழுவதும் பேசப்பட்டுள்ளது. அவற்றுள் ‘‘வாழ்வு தரும் உணவு நானே”, ``உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே”, ``வழியும், உண்மையும் வாழ்வும் நானே” முதலியவற்றைக் கூறலாம். தொடக்கத்தில் குறிப்பிட்ட ‘‘யாரேனும் தாகமாயிருந்தால் என்னிடம் வரட்டும்” என்ற இயேசுவின் கூற்று எசாயா தீர்க்கரின் கூற்றுக்கு இணையாக உள்ளது. (எசாயா 55:1-3).

‘‘தாகமாயிருப்பவர்களே நீங்கள் அனைவரும் நீர்நிலைகளுக்கு வாருங்கள்; கையில் பணமில்லாதவர்களே, நீங்களும் வாருங்கள்; தானியத்தை வாங்கி உண்ணுங்கள், வாருங்கள், காசு பணமின்றித் திராட்சை இரசமும் பாலும் வாங்குங்கள்” எனும் எசாயாவின் கூற்று கடவுள் எவ்வாறு இல்லாமையில் இருப்பவர்கள் மீது அக்கறை கொண்டுள்ளார் என்பதையும் அவர்களுக்காகப் பணமில்லாப் பரிவர்த்தனையை நடத்துகிறார் என்பதையும் விளக்குகிறது.  இவ்வுலக மதிப்பீடுகளின் படி இயங்கும் ஆட்சி பணம் உள்ளவர்களின் நலனை முதன்மைப்படுத்தி இயங்குவது.

ஆனால் கடவுளாட்சி தத்துவம் என்பது ஏதும் இல்லாதவர்களையும், சமூகத்தால் ஒடுக்கப்பட்டவர் களையும், சமூக இழிவுக்கு ஆளானவர்களையும் முதன்மைப்படுத்தி இயங்குவது ஆகும். உயிர் வாழ்வதற்கு தண்ணீர் உணவு எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு கடவுளின் வார்த்தையும் முக்கியம். எசாயா இது பற்றிக் கூறுகையில், ‘‘எனக்குச் செவிகொடுங்கள், என்னிடம் வாருங்கள்; கேளுங்கள்; அப்பொழுது நீங்கள் வாழ்வடைவீர்கள்.” எனக் கடவுள் அழைப்பதாகக் கூறுகிறார். இயேசு கிறிஸ்துவின் வார்த்தையும் அப்படிப்பட்டதுதான். அது மனுக்குலத்திற்கு வாழ்வளிக்கிறது.

அது வாழ்வு மறுக்கப்பட்டோருக்கும், வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து தவிப்பவர்களுக்கும் வாழ்வாக அமைகிறது. இயேசுவின் சீடரான பேதுரு இதை வலியுறுத்தும் வகையில் ‘‘ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன” எனக் கூறியுள்ளார். வாழ்வு தருகின்ற கடவுளின் வார்த்தைதான் இயேசு கிறிஸ்துவாக மனித உருவில் தோன்றியதென யோவான் நற்செய்தியில் கூறப்படுகிறது. மனிதராக வந்த கடவுளின் வார்த்தையாகிய இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கைகொள்வது நிலைவாழ்வை நமக்கு அளிக்கிறது.

தம்மிடம் வரும் யாவருக்கும் வாழ்வளிக்கும் இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்வதற்கு நிபந்தனைகள் ஏதுமில்லை. காணிக்கை ஏதும் தேவையில்லை. எவ்வித சடங்குகளும் கூட அவசியமில்லை. மாறாக நம்மில் முந்தி அன்புகூர்ந்துள்ள கடவுளிடம் முழுமனதோடு நாம் அன்பு கூறவேண்டும். அவ்வாறே நம்மீது நாம் அன்பு கூறுவது போல நமக்கு அடுத்து இருப்பவரிடமும் எவ்விதப் பாகுபாடும், எதிர்பார்ப்புமின்றி அன்பு கூற வேண்டும் என்பதுதான்.

பேராயர் J. ஜார்ஜ் ஸ்டீபன். (Bishop, Madras).

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • spain-trees-24

  ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

 • gandhi-13

  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

 • taipei-fashion-week-taiwan

  தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

 • kalifffo1

  தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

 • pak-123

  பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்