காத்து அருளும் காஞ்சி காமாட்சி
2023-01-30@ 12:47:01

* காமாட்சி எனும் திருநாமத்தில் கா என்பது சரஸ்வதியையும், மா என்பது லட்சுமியையும் குறிக்கும். அட்சி என்பது கண்ணாக உடையவள் என்று பொருள்படும். அதாவது கலைமகளையும், திருமகளையும் தன் இரு கண்களாகக் கொண்டவள் காமாட்சி என்பதையே அவளது திருப்பெயர் உணர்த்துகிறது.
* இந்த கோயிலின் முதல் பிராகாரத்தில் ஆதிசங்கரர் யோகாசனத்தில், தியான நிலையில் அமர்ந்துள்ள காட்சியைக் காணலாம்.
* காமாட்சி தேவி காரடையான் நோன்பு மேற்கொண்டு கம்பா நதி வெள்ளப் பெருக்கிலிருந்து ஈசனைக் காப்பாற்றியதால், இந்த தலத்தில் காரடையான் நோன்பு விசேஷமாக அனுசரிக்கப்படுகிறது.
* காமாட்சியம்மன் முன் உள்ள ஸ்ரீசக்ரத்தில் ‘வசின்யாதி வாக்தேவதைகள்’ எட்டு பேரும் அருள்கின்றனர். இந்த சக்ரத்திற்கே அர்ச்சனை, வழிபாடு, பூஜை எல்லாம் நடக்கின்றன.
* அம்பிகை ஸ்ரீசக்ரத்தில் பிந்து மண்டல வாசினியாக முக்கோணத்துள் அருள்பவள் என்று கூறப்பட்டுள்ளதால், கருவறை முக்கோண வடிவில் அமைந்துள்ளது. ஆதி சங்கரரால் நிறுவப்பட்ட பெருமையுடையது இந்த ஸ்ரீசக்ரம்.
* காமாட்சியின் கோஷ்டத்தில் வாராஹி, அரூபலட்சுமி, சௌந்தர்ய லட்சுமி, கள்ளவாரணப் பெருமாள் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இதில் கள்ளவாரணர் 108 திவ்ய தேச பெருமாள்களில் ஒருவர்.
* வாராஹியின் எதிரே உள்ள சந்தான ஸ்தம்பத்தை வலம் வந்து வணங்குபவர்களுக்கு மழலை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.
* மேற்கு, வடக்கு கோபுரங்களின் இடையே உள்ள கணு மண்டபத்தில் காமாட்சிதேவி பொங்கலுக்கு முந்தைய பத்து நாட்கள் எழுந்தருள்வாள். பொங்கலன்று அந்த மண்டபத்தை காய்கனிகளால் அலங்கரித்து பாத வடிவில் காணப்படும் பங்காரு காமாட்சிக்கு முழுத் தேங்காய் நிவேதனம் நடக்கும்.
* காயத்ரி மண்டபத்திற்கு செல்லும் வழியில் உள்ள அன்னபூரணியை தர்மத்வாரம், பிட்சாத்வாரம் போன்ற துவாரங்கள் மூலமும் தரிசிக்கலாம்.
பிட்சாத்வாரத்தின் மூலம் அன்னபூரணியை வணங்கி ‘பவதி பிட்சாந்தேஹி’ என கையேந்தி பிச்சை கேட்டு வழிபட்டால் நம் வாழ்வில் உணவுப் பஞ்சம் வராது என்கிறார்கள்.
* இந்த தலத்தில் மூலஸ்தான காமாட்சி, தபஸ் காமாட்சி, பிலாகாஸ காமாட்சி, உற்சவ காமாட்சி, பங்காரு காமாட்சி ஆகிய ஐந்து காமாட்சிகள் அருள்கின்றனர்.
* காஞ்சிபுரத்திலுள்ள எல்லாக் கோயில்களும் காமாட்சியம்மன் கோயிலை நோக்கியே அமைந்துள்ளன. விழாக்களின் போது அந்த ஆலயங்களின் உற்சவ மூர்த்திகள் எல்லோரும் காமாட்சியம்மன் ஆலயத்தை வலம் வந்து செல்வது வழக்கம்.
* ஒவ்வொரு பௌர்ணமியன்றும் அம்பிகைக்கு நவாவரண பூஜை செய்யப்படுகிறது. 51 சக்தி பீடங்களில் தேவியின் எலும்புகள் இந்தக் காஞ்சியிலே விழுந்ததாகக் கருதப்படுகிறது. ஒட்டியாண பீடம் என இந்த பீடம் சிறப்பிக்கப்படுகிறது.
* ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரத்தன்று காமாட்சியம்மன், ஏகாம்பரநாதர் திருமணம் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும்.
* ஈசன் அளித்த இரண்டு நாழி அளவு நெல்லினைக் கொண்டே இவ்வுலகில் 32 அறங்களையும் வளர்த்ததால் அறம் வளர்த்த நாயகி என்ற சிறப்புப் பெயரும் இந்த அன்னைக்கு உண்டு. இத்தேவி அமர்ந்துள்ள இடம் காம கோட்டம் என அழைக்கப்படுகிறது. காம கோட்டம் என்றால் விரும்பியவற்றையெல்லாம் தருவது என்று பொருள்.
* பிறவியிலேயே பேச்சிழந்த மூகன், காமாட்சியின் அருளால் பேசும் சக்தியைப் பெற்று ``மூக பஞ்சசதீ’’ எனும் 500 அதியற்புதமான பாடல்களைப் பாடியிருக்கிறார்.
மேலும் செய்திகள்
ஸ்ரீராம தரிசனம்!
வளங்களை அள்ளித் தரும் வசந்த நவராத்திரி
பனை உறை தெய்வம்
செழிப்பான வாழ்வருளும் செல்லியம்மன்
ராஜயோகம் தரும் கும்பகோணம் ராமஸ்வாமி
துயர் நீக்கி அருள் சேர்க்கும் லலிதாம்பிகை அம்மன்..!!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி