‘பாங்கு’ சொல்லுதல் எப்படி உருவானது?
2023-01-27@ 16:02:26

இறைத்தூதர் அவர்கள் தம் சத்திய அழைப்புப் பணியைத் தொடங்கிய ஆரம்பக் கட்டத்தில் ஒரு சிக்கல் எழுந்தது. ஐவேளைத் தொழுகைக்காக மக்களை அழைக்க ஒரு வழிமுறை தேவைப்பட்டது. ஒவ்வொரு நேரத் தொழுகைக்கும் வீடுவீடாய்ப் போய் அழைத்துக் கொண்டிருப்பது நடைமுறைச் சாத்தியம் அல்ல. ஏதேனும் ஒரு வழிமுறையைப் பின்பற்றி தொழுகைக்கான அழைப்பை உருவாக்க வேண்டும் என்று நபிகளாரும் தோழர்களும் கலந்துரையாடிக் கொண்டிருந்தார்கள். நபித்தோழர்கள் பல ஆலோசனை களை முன்வைத்தார்கள். ஒருவர், “தொழுகை நேரம் வந்தவுடன் கொடியை உயர்த்தலாம், அதைப் பார்த்து மக்கள் தொழுகைக்கு வருவார்கள்” என்றார். இன்னொருவர் “எக்காளம் போன்ற ஏதேனும் ஒரு கருவியால் ஊதலாம்” என்றார்.
மற்றொருவர் “கிறிஸ்துவர்கள் செய்வது போல் மணி அடிக்கலாம்” ...... என்றார். இந்த ஆலோசனைகள் எதுவுமே சரிப்பட்டுவரவில்லை. இதே சிந்தனையில் நபித்தோழர்கள் கலைந்துசென்றனர். அப்துல்லாஹ் பின் ஜைத் எனும் நபித்தோழரும் இதே கவலையில் மூழ்கியிருந்தார். அப்படியே உறங்கிவிட்டார்.
அவருக்கு ஓர் அழகிய கனவு...! தாம் கண்ட கனவு குறித்து அந்தத் தோழரே கூறுகிறார், கேட்போம்:
“கனவில் ஒருவர் கையில் மணி ஒன்றை வைத்துக் கொண்டு என்னைக் கடந்துசென்றார். அப்போது நான் அவரிடம், ‘இறைவனின் அடியாரே...இந்த மணியை எனக்குத் தருவீர்களா?’ என்று கேட்டேன். அவர், ‘இதைக் கொண்டு என்ன செய்வீர்?’ என்று கேட்டார். ‘இதன் மூலம் மக்களைத் தொழுகைக்கு அழைப்பேன்’ என்று கூறினேன்.
“இதைவிடச் சிறப்பானதை நான் அறிவிக்கட்டுமா? என்று அவர் கேட்டதும், ‘அறிவியுங்கள்’ என்றேன். உடனே அவர் ‘அல்லாஹு அக்பர்... அல்லாஹு அக்பர்....’ என இன்று பாங்கில் பயன்படுத்தும் வாக்கியங்களைக் கற்றுக் கொடுத்தார். “காலையில் நபியவர்களிடம் வந்து நான் கனவில் பார்த்ததைத் தெரிவித்தேன். நபிகளார் மகிழ்ந்தார். ‘இறைவனின் நாட்டப்படி இது உண்மையான கனவுதான்.
நீங்கள் கனவில் பார்த்ததை பிலாலுக்குச் சொல்லிக் கொடுங்கள். அதை அவர் மக்களுக்கு அறிவிப்பார். உங்கள் குரலைவிட அவருடைய குரல் உயர்ந்தது’ என்றார். அவ்வாறே நான் பிலால் அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தேன். அதை அவர் உரக்கச் சொன்னார்.” (ஆதாரம்: அபூதாவூத்) பாங்கு சொல்லும் வழக்கம் இப்படித்தான் உருவாகியது. உலகம் முழுக்க இன்றளவும் இந்த வழிமுறைதான் கடைபிடிக்கப்படுகிறது.
- சிராஜுல் ஹஸன்
இந்த வாரச் சிந்தனை
“இறைவன் நன்கு அறிபவனாகவும் நுண்ணறிவு மிக்கவனாகவும் இருக்கிறான்.”
(குர்ஆன் 4:26)
மேலும் செய்திகள்
அண்ணல் நபிகளாரின் அன்பு வெள்ளம்
கடவுள் அனைத்திலும் பெருமை பெறுவார்
புண்ணியங்களிலும் ஆண்-பெண் சமமே!
நம்பிக்கையூட்டும் இறைவாக்கு
தீயோர்க்கு அஞ்சேல்
லெந்து காலம்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி