SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தானே சிக்கலாகிக்கொள்ளும் நூலே மனிதன்

2023-01-27@ 14:47:43

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஸ்ரீகிருஷ்ண அமுதம் - 41 (பகவத் கீதை உரை)

தம் குணங்களையே பெரிதாக நினைத்து அவற்றால் கிடைக்கக் கூடிய அற்ப சந்தோஷங்களுக்காக மனிதன் தன் வாழ்நாளை வீணடிக்கிறான். ‘நன்றும் தீதும் பிறர் தர வாரா’ என்பதைப் படித்திருந்தாலும், அதன் உட்பொருளை உணரவோ, அதன்படி ஒழுகவோ அவன் முன்வர மறுக்கிறான்.

ப்ரக்ருதேர் குணஸம்மூடா: ஸஜ்ஜந்தே குணகர்மஸு
தானக்ருத்ஸ்னவிதோ மந்தான்க்ருதஸ்னவின்ன விசாலயேத் (3:29)


‘‘குணங்களின்பால் பற்றுதல் கொண்ட ஒருவன், அதனால் குணம், கர்மம் இவற்றில் மேலும் மிகுந்த மோகம் கொண்டு, மந்த புத்தியுள்ளவனாக வாழ்கிறான். தெளிந்த அறிவுடைய ஞானியோ, இத்தகைய மந்த புத்திக்காரர்களை அவர்களுடைய அஞ்ஞானத்திலிருந்து மேலே மீட்டுக்கொண்டுவர வேண்டும்.’’ இயற்கை குணங்களின்மேல் மோகம் கொண்டவர்களை, ஞானிகள் பரிதாபம் மேலிட, அக்கறையுடன் நோக்க வேண்டும் என்கிறார் கிருஷ்ணன். அப்படி மோகம் கொள்ளும் பாமரன் மனத்தளவில் குழப்பம் கொண்டவனாகத்தான் இருப்பான். அந்தக் குழப்பமே அவனுக்குப் பேருண்மையைப் புரிய வைக்காமல், மோகத்திலேயே ஆழ்த்துகிறது.

மோகம் என்று கிருஷ்ணன் எதைக் குறிப்பிடுகிறார்? ஒன்றின் மீதான வேட்கையை மட்டும் அல்ல, அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிடும் நிலையைத்தான் சொல்கிறார். அதாவது, குழப்பத்தின் உச்சநிலை; அடுத்து என்ன செய்வது என்றறியாத ஸ்டாடிக் நிலை. கிராமப்புறங்களில் பேயடித்துவிட்டதாகக் கருதப்படும் ஒருவன், உன்மத்தம் பிடித்த வனாகக் காட்சியளிப்பான். அவனுடைய கண்கள் நிலைக் குத்தியிருக்கும். எதிரே தோன்றும் காட்சிகளை அவன் பார்த்தாலும் அவன் மனம் அவற்றில் லயிக்காது.

ஸ்தம்பித்த அந்தக் கட்டத்தில், அவனுடைய முகபாவம் எப்படி இருந்ததோ அதே தோற்றத்திலேயே அவன் தொடர்ந்து காணப்படுவான். அருகிலிருந்து யார் கூப்பிட்டாலும், என்ன சொன்னாலும், அவனுக்குக் கேட்காது. இதுபோன்ற காட்சிகளுக்கும், அனுபவங்களுக்கும் பழகிப்போன பெரியவர் ஒருவர், இப்படி உன்மத்தம் பிடித்த நிலையில் இருப்பவனுடைய கன்னத்தில் பளார் என்று ஓங்கி அடிப்பார். உடனே அவன் தன் நிலைக்கு வருவான். இப்படி பிரமை தட்டிப்போய் சிலையாய் சமைந்துவிட்ட ஒருவனை இயல்பு நிலைக்குக் கொண்டுவர அந்த ‘அறை’ தேவைப்படுகிறது!

இதுவும் ஒருவகை வழிகாட்டல்தான்! பாற்கடலைக் கடைந்து கிடைத்த அமிர்தத்தை அரக்கர்கள் பங்குபோட்டுக் கொண்டுவிடக்கூடாது என்பதற்காகவே திருமால், மோகினி அவதாரம் மேற்கொண்டார். அந்த மோகினியைப் பார்த்த அசுரர்கள், தாம் எதற் காகப் பாடுபட்டோமோ அந்த அமிர்தத்தையும் மறந்தார்கள். மோகினி மீது மோகம் கொண்டார்கள், முற்றிலுமாக அழிந்து போனார்கள்! இவர்களை அச்சமயத்தில் நல்வழிப்படுத்த யாரும் இல்லை. ஏனென்றால் அந்த காலகட்டத்தில் அங்கே ஞானி யாருமேயில்லை. ஆமாம்! தேவர்களும் அமிர்தத்தை அடையத்தான் பேராவல் கொண்டிருந்தார்கள்.

கடவுளர்களும், அசுர வர்க்கம் அழியவேண்டி தேவர்களுக்கு சாதகமாகவே செயல்பட்டார்கள். அதனால்தான் தராதரம் தெரியாமல் மோகிப்பது அரக்கர்களின் சுபாவம் என்பதாக எடுத்துக் கொள்ளப்பட்டு, அதற்குத் தண்டனையாக அவர்களுக்கு அமிர்தம் மறுக்கப்பட்டது!

ஒருவன் தெருவழியே செல்கிறான். எதிர்பாராத வகையில் ஒரு வெறிநாய் அவனைப் பார்த்து, அனைத்துப் பற்களையும் காட்டி, உறுமுகிறது. அதன் கண்கள் அவனுடைய குரல்வளையையே பார்க்கின்றன. அது தன் உடலை விறைப்பாக்கிக் கொள் கிறது. அவ்வளவுதான், அவன் அப்படியே நிலைகுலைந்து போகிறான். என்ன செய்வதென்றே தெரியவில்லை. தன்மீது பாய்ந்து அந்த நாய் தன்னைக் குதறிவிடுமோ என்று திடீர் பயத்துடன் திகைக்கிறான்.

 இந்தக் காட்சியைக் காண்பவர்கள், ஒரு குரூர சந்தோஷத்துடன் அடுத்து நடக்கவிருப்பதை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் அல்லது இன்றைய கால கோலப்படி சிலர் தமது மொபைல் போனில் அந்தக் காட்சியைப் படம் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்!

அப்போது அங்கே ஒரு ஞானி வருகிறார். அவர் அவனைப் பார்த்து, ‘பதற்றப்படாதே. இயல்பாக இரு,’ என்கிறார். அதாவது, ‘உன் பயமும் அதன் காரணமான உடல் நடுக்கமும் இந்த நாய்க்கு மேலும் உற்சாகம் கொடுக்கும். அதை ஒரு நாய் என்றே, குறிப்பாக வெறிநாய் என்றே கருதாதே. அது ஏதோ ஒரு பொருள். அவ்வளவுதான். எதனால் உன்னைப் பார்த்து முறைக்கிறது, நீ ஏன் அதன் தாக்குதல் முயற்சிக்கு இலக்கானாய் என்று யோசிக்காதே,’ என்றெல்லாம் உள்ளர்த்தம் கொண்ட மூன்றே வார்த்தைகளில் அவனுக்கு ஆறுதல் அளிக்கிறார்.

அவர் அறிவுரைப்படி அவன் அமைதியாகி விடுவானானால் அந்த நாய், தான் எதிர்பார்த்ததுபோல அவன் எதிர்ப்பைக் காட்டாததால், தானும் அடங்கி, அங்கிருந்து சென்றுவிடும். அவன் அந்த நாயிடமிருந்து காப்பாற்றப்படுவான்.  ஆனால் அவரே, ‘அற்ப நாய் உன்னைப் பார்த்து முறைப்பதாவது! நீ எங்கே, அது எங்கே? விடாதே. நீயும் அதற்குச் சமமாக முறைத்துப் பார். அதைத் தாக்க முற்படு,’ என்று சொல்வாரானால், அதனால் அவனுடைய மனம் மேலும் கலங்கிக் குழம்பக்கூடும்.

ஏற்கெனவே பயந்து நடுங்கிக்கொண்டிருந்த அவனை மேலும் குழப்பாமல் நல்வழிப்படுத்துபவனே ஞானி.  அர்ஜுனனைப் பொறுத்தவரை கிருஷ்ணன் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார். அர்ஜுனனின் மனதில் நிறைந்திருக்கக்கூடிய பால்ய கால உணர்வுகளை அழிக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறார். அந்த காலத்து நட்பு, அந்த காலத்தில் வயது முதிர்ந்த உறவுக்குத் தான் காட்டிய மரியாதை, அந்த காலத்தில் தான் போற்றிய குரு உறவு எல்லாமும் இப்போது வந்து அவனைக் கலங்கடித்துக்கொண்டிருக்கின்றன.

அதெல்லாம் அந்த காலத்து உணர்வுகள். அப்போதைய சூழலுக்கு ஏற்புடையதாக இருந்திருக்கலாம். ஆனால் இப்போது, இவனைப் போலவே அந்த மென் உணர்வுகளுக்கு மரியாதை தர எதிர்தரப்பினர் முன்வராதபோது, இவன் மட்டும் ஏன் அதையே எண்ணிக் குமைந்து போகவேண்டும்? தர்மம் தழைக்க வேண்டியதற்கான இந்தப் போரில் அர்ஜுனன் மனம் கலங்காதிருக்க வேண்டும். ஓர் அஞ்ஞானியாய், போர்க்களத்துக்குச் சற்றும் ஒவ்வாத மனபிரமையுடன் அவன் இருத்தலாகாது. ஒரு ஞானியாக, தான் அவனுடைய குழப்பத்தைத் தீர்க்க வேண்டும் என்று கருதி அதையே கிருஷ்ணன் செய்துகொண்டிருக்கிறார்! தன்னுடைய இந்த நிலையே ஒரு ஞானிக்கும் இருக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்.

கிருஷ்ணன் வலியுறுத்திக் கூறுவதெல்லாம் ஒன்றுதான். எதிரிலிருப்பவர்கள் சகோதரர்கள், பாட்டன்மார்கள், குருமார்கள் என்றெல்லாம் அர்ஜுனன் யோசித்து மயங்குகிறானே, அவனைப்போல எதிர்த் தரப்பில் யாராவது சிந்திப்பது போலத் தெரிகிறதா, இல்லையே! அவர்களுக்கு இல்லாத பற்றும், பாசமும் இவனுக்கு மட்டும் ஏன் பொங்கிப் பிரவிகிக்க வேண்டும்? சரி, துரியோதனன் முதலான சகோதரர்களும், கர்ணன் போன்ற நண்பர்களும், சிறு வயதிலிருந்தே பாண்டவர்களுடன் எதிரிகளாகவே பழகினார்கள் என்றே வைத்துக் கொண்டாலும், பீஷ்மர், துரோணர் போன்ற குருமார்களுமா அப்படி பாவித்தார்கள்? இல்லையே! ஆனால் அந்த குருமார்களும், பாண்டவர்களுக்கு எதிராகக் களம் இறங்கியிருக்கிறார்கள் என்றால், இதற்கு என்ன அர்த்தம்?

 போர் என்று வந்துவிட்டால், தான் எதிர்க்கப்பட வேண்டியவர்கள் யாருமே அனுதாபமோ, மரியாதையோ, நட்புறவோ பாராட்டப்பட வேண்டாதவர்கள் என்றுதானே அவர்கள் கருது
கிறார்கள்?  வெற்றி அல்லது தோல்வி என்ற இரண்டே முடிவுகளுள் ஒன்றை அடைவதுதான் போரின் நியதி என்றாலும், வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்டு முழுமூச்சாக அவர்கள் செயல்படும்போது, பாசமும், நட்பும் எங்கிருந்து முளைவிடும்?

அர்ஜுனன் ஒருவன் மனம் குழம்பி, போரிலிருந்து விலகிவிட்டால் மட்டும் போர் நின்றுவிடுமா என்ன? அவ்வாறு விலகும் அவனை தருமனோ, பீமனோ, நகுல, சகாதேவனோ பின்பற்றுவார்களா என்ன? தான் சூதில் இழந்ததை இந்தப் போர் திரும்பத் தருமோ இல்லையோ, தன்மீது ஏற்பட்டிருக்கும் களங்கம் துடைக்கப்படலாம் என்று எதிர்நோக்கியிருக்கும் தர்மன், இந்த தர்மயுத்தத்திலிருந்து விலக சம்மதிப்பானா? துரியோதனனின் துடையைப் பிளந்து அதனால் பெருகும் குருதியையே திரௌபதியின் கூந்தலுக்கு எண்ணெயாகப் பூசுவதாக சபதம் செய்திருக்கும் பீமன் ஒதுங்கி விடுவானா? சாஸ்திரம் கற்றறிந்த நகுல, சகாதேவன் போரின் முடிவு என்னவாக இருக்க முடியும் என்று ஊகித்தறிந்திருப்பார்களே, அவர்களும் இந்தப் போர் நடக்க வேண்டும் என்றுதானே எதிர்பார்க்கிறார்கள்!

அனைவருக்கும் மேலாக  திரௌபதி, தான் பட்ட அவமானங்களுக்குப் பழிதீர்க்க வேண்டும் என்ற குரோதத்துடன் காத்திருக்கிறாளே, அவளை சமாதானம் செய்ய முடியுமா? தன் சேலையைப் பற்றியிழுத்த துச்சாதனன் மட்டுமல்ல, அந்தக் காட்சியை வேட்கை மிகுந்து பார்த்து, ரசித்துக் கைகொட்டி சிரித்தார்களே, துரியோதனனும், கர்ணனும் இவர்களை
உயிரோடு விட்டுவிட அவள் சம்மதிப்பாளா?

இப்படி, ஒவ்வொருவர் கோணத்திலிருந்தும் இந்தப் போர் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அப்படியிருக்கும்போது, அர்ஜுனன் பலவீனமான ஒரு காரணத்தைச் சொல்லி போரிலிருந்து விலகுவானானால், அவனைப் புறந்தள்ளிவிட்டு மற்றவர்கள் போரைத் தொடர மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? அவர்களுக்கெல்லாம் தம் நோக்கம் நிறைவேற வேண்டும் என்பதுதானே ஒரே குறிக்கோள்? இதை ஏன் அர்ஜுனன் புரிந்துகொள்ள மாட்டேனென்கிறான்?

ஒருவேளை போரை மறுத்து அர்ஜுனன் விலகினான் என்றால், தன் மனதுக்கு மிகவும் நெருங்கியவர்களுடன் போரிடத் தயாராக இல்லாத அவனுடையப் ‘பெருந்தன்மையை’ மற்றவர்கள் புரிந்துகொள்ளவா போகிறார்கள்? அதைவிட, அவனை ஒரு கோழை என்று கேலிதானே செய்வார்கள்?  இத்தனை காலம் அவனிடம் இருந்ததாகச் சொல்லப்படும் வில்வித்தை எல்லாம் வெறும் ஏமாற்றுதானா? ஏதேனும் மாயை செய்துதான் அந்த வில் அற்புதங்களை அவன் நிகழ்த்தினானா என்றெல்லாம் அவதூறு கிளப்பமாட்டார்களா?

தன்னை, தன் திறமையை அவன் நிரூபிக்கவேண்டிய காலத்தின் கட்டாயம் இந்தப் போர். இதில் அன்புக்கும், அஹிம்சைக்கும் மனம் மாறி இவன் ஒதுங்குவானால், இவனுக்கும் புறமுதுகிட்டு ஓடுபவனுக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருந்துவிடப் போகிறது! கிருஷ்ணனின் வருத்தம் இதுதான். அதனால்தான் பலவாறாகப் பேசி அர்ஜுனனின் மனமாற்றத்துக்கு முயற்சிக்கிறார்.

மயி ஸர்வாணி கர்மாணி ஸம்ன்யஸ்யாத்யாத்மசேதஸா
நிராசீர்நிர்மமோ பூத்வா யுத்யஸ்வ விகதஜ்வர (3:30)


‘‘உன்னுடைய கர்மங்களையெல்லாம் எனக்கு அர்ப்பணம் செய்துவிடு. உன் சித்தத்தைத் தெளிவாக்கிக் கொள். அதிலிருந்து ஆசையையும், மோகத்தையும் அழித்தொழித்து விடு. இதனால் நீ மனக் கொதிப்பிலிருந்து விடுபடுவாய். ஏனென்றால் இப்போது உன்னிடமிருந்து ‘நான்’ எனும் அகம்பாவம் அகன்றுவிடுகிறது. அப்படி மனம் தெளிவு பெறும் பட்சத்தில், உன்னால் எளிதாக இந்தப் போரில் இறங்க முடியும். இதன் நோக்கத்தையும் நிறைவேற்ற முடியும்.’’

ஒரு நூல்கண்டை எடுக்கிறோம். மிகவும் எச்சரிக்கையாக அதன் ஒரு முனையைக் கண்டு பிடிக்கிறோம். அந்த முனையிலிருந்து நூலைத் தொடர்ந்து இழுக்கும்போது எப்படியோ சிக்கல் ஏற்பட்டுவிடுகிறது. அந்தச் சிக்கலுக்குள் எங்கெங்கோ நூல் முனை தன்வழியைத் தேடும்போது, சிக்கல் இன்னும் அதிகமாகிவிடுகிறது. இப்போது நூல் முனையும் விரல்களிலிருந்து நழுவி சிக்கலுக்குள் ஐக்கியமாகிவிடுகிறது.

உடனே மனதில் சோர்வு. இந்தச் சிக்கலை எப்படி சரி செய்வது? சிக்கலுக்குள் முடிச்சுகளும் விழுந்துவிட்டால், முற்றிலும் மீட்கவே முடியாதே! இனி இது நம் முயற்சிக்கு அப்பாற்பட்டதாகி விடுகிறது. நம்மால் முடியாததாகிவிடுகிறது. பக்கத்தில் நம் தாயார் அமர்ந்திருக்கிறார். அவர் ஊசியில் நூல் கோத்து மிக எளிதாகத் தையல் வேலை பார்ப்பவர்.
வீட்டினுள் அவரவர் தேவைக்கேற்ப சிறிய கிழிசலோ, பெரிய ஆடையோ தைத்துக் கொடுக்கும் தேர்ந்த தையல் கலைஞர். அவருக்கு நூல்கண்டும், நூல்வழியும், சிக்கலிலிருந்து நூலை மீட்பதும் எளிதானது. அவரிடம் உதவி கோரலாம்.

என்ன வேடிக்கை பாருங்கள். நூல் ஒன்றுதான். அது ஒரு கண்டாக இருக்கிறது. புற பாதிப்பு எதுவும் இல்லாமல் இருந்தும் அது, தானே சிக்கலாகிக்கொள்கிறது. தனக்குத் தானே கற்பனைகளையும், கோபத்தையும், வன்மத்தையும், பொறாமையையும் வளர்த்துக்கொண்டு மிகுந்த மனச்சிக்கலுக்குள்ளாகும் மனிதனைப் போல!  நம்மால் எந்தச் சிக்கலிலிருந்தும் வெளிவர முடியும். ஆனால் நமக்கு நூல்வழிபோல சரியான வழி தெரியவேண்டும். அது தெரியாத பட்சத்தில், தெரிந்தவரிடம் சரணடைவதுதானே முறை? சிக்கலிலிருந்து விடுபடும் வழியும் அதுதானே?

(கீதை இசைக்கும்)

தொகுப்பு: பிரபு சங்கர்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • well-collapes-31

  ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

 • parliammmm_moddi

  இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

 • boat-fire-philippines

  பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

 • us-desert-train-acci-30

  அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

 • mexico-123

  மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்