குன்றில் குடியிருக்கும் தமிழ்க்கடவுள் குமரனுக்கு குடமுழுக்கு...!
2023-01-27@ 10:13:40

பார் போற்றும் பழநியில் பக்தர்கள் பரவசம்
தமிழ்க்கடவுள் என போற்றப்படும் தரணி போற்றும் தண்டாயுதபாணி வீற்றிருக்கும் பழநி மலைக்கோயிலில் இன்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முருகனின் அருளை பெறுவதற்காக பழநிக்கு படையெடுத்துள்ளனர். பழநி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக விளங்குவது திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில்.
இக்கோயில் தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது. இக்கோயிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை என வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடந்து கொண்டே இருக்கும்.
இக்கோயிலில் உள்ள முருகன் சிலை போகர் எனும் சித்தரால் அரிய வகை நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. இந்த சிலையில் அபிஷேகம் செய்யப்பட்டு வரும் பொருட்களை உண்டால் சகல நோய்களும் தீருமென்று இன்றுவரை நம்பப்பட்டு வருகிறது. இத்தகைய பழம்பெரும் வாய்ந்த பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கடந்த 2006ம் ஆண்டு குடமுழுக்கு நடந்தது. தற்போது 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
ஆட்சி மாற்றத்தால் விறுவிறு..
ஒவ்வொரு கோயிலிலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடத்தப்படுவது வழக்கம். இதன்படி பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு 2018ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்போதைய அதிமுக ஆட்சியாளர்களால் கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை. பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு 2019ம் ஆண்டில் கும்பாபிஷேகத்திற்கான பாலாலயம் நடந்தது.
அதன்பின், கொரோனா காரணமாக கும்பாபிஷேகப்பணி முடங்கியது. இதன்பின், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் ஆககியோரின் பெருமுயற்சியால் கும்பாபிஷேக பணிகள் சுறுசுறுப்படைந்தது.
ஏற்பாடுகள் தீவிரம்...
இதையடுத்து ரூ.16 கோடியில் கட்டுமானம் மற்றும் அழகுபடுத்துதல் பணி சிறப்புற நடந்து முடிவடைந்தது. ரூ.5 கோடியில் வெள்ளி மற்றும் தங்கத்தால் மேற்கொள்ளப்படும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த டிச. 25ம் தேதி கும்பாபிஷேகத்திற்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது. ஜன. 18ம் தேதி கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் துவங்கப்பட்டன. கடந்த 22ம் தேதி கும்பாபிஷேகத்திற்கான முதற்கால வேள்வி துவங்கியது.
நாளை பழநி மலைக்கோயில் ராஜகோபுரம், தங்க கோபுரம் மற்றும் பிரவார தெய்வங்களின் சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
தொடர்ந்து பாதவிநாயகர், சேத்ரபாலர், கிரிவீதியில் உள்ள 5 மயில் சிலைகள், படிப்பாதை, விநாயகர் சன்னதிகள், இடும்பன், கடம்பன், அகஸ்தியர் என படிப்பாதையில் உள்ள அனைத்து உபசன்னதிகளின் கோபுரங்களிலும் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகின்றன. மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் யாகவேள்விக்காக 94 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 8 கால யாகவேள்விகள் நடந்து வருகின்றன. கும்பாபிஷேகத்தை அனைத்து மக்களும் காணும் வகையில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் கோயில் நிர்வாகத்தால் எடுக்கப்பட்டுள்ளன.
ஹெலிகாப்டரில் மலர் தூவி...
பழநி மலைக்கோயில் கும்பாபிஷேக நிகழ்வின்போது ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டுள்ளது. பழநியாண்டவர் கலைக்கல்லூரியில் உள்ள ஹெலிபேடில் இறங்கி அதன்பின்பு, மலைக்கோயிலை வட்டமடித்து மலர் தூவும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2 லட்சம் பிரசாத பைகள்...
பழநி மலைக்கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு பிரசாத பைகள் வழங்கப்பட உள்ளன. பிரசாத பையில் தீர்த்தம், குங்குமம், விபூதி, பஞ்சாமிர்தம், லேமினேஷன் செய்யப்பட்ட முருகன் படம் ஆகியவை வழங்கப்பட உள்ளன. சுமார் 2 லட்சம் பிரசாத பைகள் பக்தர்களுக்கு வழங்குவதற்காக தயார் செய்யப்பட்டுள்ளன.
3 ஆயிரம் சிவனடியார்கள்...
படிப்பாதை, யானைப்பாதை, கிரிவலப்பாதை, மலைக்கோயில், வெளிப்பிரகாரம் பகுதிகளில் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிவனடியார்கள் உழவாரப்பணியில் ஈடுபட்டது சிறப்பம்சமாகும்.
19 எல்இடி திரையில்...
கும்பாபிஷேக நேரத்தில் அனைத்து பக்தர்களையும் மலைக்கோயிலில் அனுமதிக்க முடியாது என்பதால் குலுக்கல் முறையில் 2 ஆயிரம் பக்தர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய பக்தர்கள் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை காணும் வகையில் அடிவாரம், கிரிவீதி மற்றும் பஸ் நிலைய பகுதிகளில் சுமார் 18 இடங்களில் பெரிய எல்இடி திரைகள் பொருத்தப்பட்டு கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
இலவச பஸ் சேவை...
கும்பாபிஷேக தினத்தன்று பழநி நகரில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் வகையில் பஸ் நிலையம் புதுதாராபுரம் சாலையில் உள்ள மால்குடி பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து பழநி நகருக்கு போக்குவரத்து கழகங்கள் சார்பில் இலவச டவுன் பஸ் சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பக்தர்கள் இலவசமாக பழநி நகருக்கு வந்து செல்லலாம்.
நிகழ்ச்சி நிரல்
இன்றைய கும்பாபிஷேக நிகழ்ச்சி நிரலை காண்போமா?
அதிகாலை 4.30 மணி - 8ம் கால வேள்வி
காலை 7.15 மணி - பன்னிரு திருமுறை விண்ணப்பம்
காலை 8.15 மணி - புனித கலசங்கள் உலா வரும் நிகழ்ச்சி
காலை 8.45 மணி - திருச்சுற்று தெய்வங்களின் விமானங்களில் திருக்குட நன்னீராட்டு
காலை 9.15 மணி - தங்கக்கோபுரம் மற்றும் ராஜகோபுரங்களில் கும்பாபிஷேகம்
மாலை 6 மணி - வள்ளி- தெய்வானை சமேத சண்முகருக்கு திருக்கல்யாணம்.
மேலும் செய்திகள்
ராஜயோகம் தரும் கும்பகோணம் ராமஸ்வாமி
துயர் நீக்கி அருள் சேர்க்கும் லலிதாம்பிகை அம்மன்..!!
சீதளாதேவி
பங்குனி மாதத்தின் சிறப்புகளும் ராசி பலன்களும்!
வேண்டுவோருக்கு வேண்டிய வரம் அருளும் காசி விசாலாட்சி அம்மன்..!!
பெண்களின் தாலி பாக்கியத்தை காத்து அருள்புரிவாள் மீனாட்சி அம்மன்..!!
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!