SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வில்லிபாரதம் உருவாக்கமும் உபதேசங்களும்

2023-01-23@ 17:38:52

நன்றி குங்குமம் ஆன்மிகம்

பகுதி - 2 சென்ற இதழின் தொடர்ச்சி

இவற்றைத் தவிர, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் எழுதிய `புலவர் புராணம்’ எனும் நூல், வில்லிபாரதம் உருவான வரலாற்றை வேறுவிதமாகக் கூறுகிறது. வில்லிப்புத்தூராரும் அவர் தம்பியும் ஒருவருக்கொருவர் மிகுந்த அன்புடையவர்கள். திருமணம் ஆன அவர்கள், ஸ்ரீவில்லிப்புத்தூர் வந்து, ஒன்றாக ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள். அங்கு இருந்த காலத்தில் தான் மூத்தவருக்கு வில்லிப்புத்தூரார் என்ற பெயர் உண்டானது.

 அதே காலத்தில் கொங்குநாட்டை ஆண்ட மன்னர் ஆண்டான் பிள்ளை என்பவருக்கு, வடமொழியில் உள்ள மகாபாரதத்தைத் தமிழாக்கம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டானது. ‘‘தலைசிறந்த புலவரான வில்லிப்புத்தூரார் தமிழில் பாரதம் பாடினால் நன்றாக இருக்கும். ஆனால், கல்விச்செல்வத்துடன் பொருட்செல்வத்தையும் நன்றாகவே பெற்றிருந்த வில்லிப்புத்தூரார், உடனே பாடிவிட மாட்டார். ஏதாவது சூழ்ச்சி செய்துதான், அவரை எழுத வைக்க வேண்டும்” என்று தீர்மானித்த மன்னர், அதற்கான செயல்களில் இறங்கினார். திறமைசாலியான ஒரு பெண்ணை அழைத்து, ‘‘நீ ஸ்ரீவில்லிப்புத்தூருக்குப்போ! அங்கே வில்லிப்புத்தூராரும் அவர் தம்பியும் ஒரே குடும்பமாக ஒற்றுமையாக இருக்கிறார்கள்.

நீ அவர்கள் குடும்பத்தில் உள்ள பெண்களுடன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்! அவர்களுக்குள் கலகம் உண்டாக்கு!” என்று அனுப்பினார் மன்னர். மன்னரின் உத்தரவுக்காகவும் அவர் கொடுத்த ஏராளமான பொன்னுக்காகவும், திறமைசாலியான அந்தப்பெண்ணும் உடனே ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்றாள். அங்கே ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருந்த சகோதரர்களின் குடும்ப ஒற்றுமையைக் குலைத்தாள்.

சதோதரர்களுக்குள் பிளவு உண்டானது. சொத்து பிரிக்கும் விஷயமாக மன்னரிடம் முறையிட்டார்கள். விசாரிக்கும் பொறுப்பு மன்னர் ஆண்டான் பிள்ளையிடம் வந்தது. அவர், ‘‘முதலில் மகாபாரதத்தைத் தமிழில் பாடுங்கள்! பிறகு உங்கள் எண்ணப்படிச் செய்கிறேன்” என்றார்.வில்லிப்புத்தூரார் மகாபாரதத்தைப் பாடி முடித்தார். அதைக் கண்ட மன்னருக்கு மகிழ்ச்சி உண்டானது. அவர் வில்லிப்புத்தூராரிடம் நடந்தவற்றையெல்லாம் சொல்லி, ‘‘தமிழில் பெரும் புலமைபெற்ற நீங்கள், மகாபாரதத்தைப் பாட வேண்டும் என்பதற்காகவே நான் இப்படிச் செய்தேன். என் விருப்பத்தை நீங்கள் நிறைவேற்றிவிட்டீர்கள். உங்கள் விருப்பம் என்ன? நான் நிறைவேற்றுகிறேன்.

சொல்லுங்கள்!” என்றார்.‘‘மன்னா! சொற்போரில் என்னிடம் தோற்றுப்போகும் புலவர்களின் காதுகளை நான் அறுக்க வேண்டும். அதற்கு நீங்கள் ஒப்புதல் தர வேண்டும்” என்றார் வில்லிப்புத்தூரார்.மன்னரும் ஒப்புக்கொள்ள, அதன்படியே வில்லிப்புத்தூராரும் தன்னிடம் தோற்ற புலவர்களின் காதுகளை அறுத்தார். வில்லிபாரதம் உருவானதற்கு, இப்படியும் ஒரு வரலாறு உண்டு. வில்லிப்புத்தூராரின் மகன் வரந்தருவார், அனந்தன் எனும் புலவர்களைத் தொடர்பு படுத்திச் சொல்லும் வரலாறுகளும் உண்டு. வில்லிப்புத்தூராரின் உபாரத நூலில் இருந்து ஒரு சில பாடல்களையாவது, பொருளுடன் உணர்ந்து அனுபவிக்கலாம் வாருங்கள்! ஏற்கனவே சொன்னதைப்போல வில்லிப்புத்தூராருக்கு வழிபாடு கடவுள் மகாவிஷ்ணுவாக இருந்தாலும், மற்ற தெய்வங்களை அவர் வெறுத்தது இல்லை.

அதை நிரூபிக்கும் பாடல்;
ஆசில் நான்மறைப் படியும் எண்ணில் கோடி
ஆகமத்தின்  படியும் எழுத்து ஐந்தும் கூறிப்
பூசினான் வடிவம் எலாம் விபூதியினால்
அப்பூதியினைப் புரிந்த சடைப்புறத்தே சேர்த்தான்
தேசினால் அப்பொருப்பின் சிகரம் மேவும் சிவன்
இவனே போலும் எனத் தேவர் எல்லாம்
பேசினார் வரிசிலைக்கை விசயன் பூண்ட பெரும்
தவத்தின் நிலை சிலர்க்குப் பேசலாமோ
சிவ பெருமானை நோக்கித் தவம்செய்த


அர்ஜுனனின் செயலைக்கூறும் பாடல் இது. உத்தமமான நான்கு வேதங்கள், ஆகமங்கள் ஆகியவை சொன்ன முறைப்படி `நமசிவாய’ எனும் திருவைந்தெழுத்தை உச்சரித்து, திருநீற்றைத் தன் உடம்பு எங்கும் பூசிக்கொண்டான் அர்ஜுனன்; சடைமுடியிலும் திருநீற்றைச் சேர்த்தான். அர்ஜுனனைக்கண்ட தேவர்கள், ‘‘ஒளியால் மிகுந்த அர்ஜுனன், கயிலை மலையின் உச்சியில் எழுந்தருளி இருக்கும் சிவபெருமானைப்போல இருக்கிறான்” என்று பேசிக் கொண்டார்கள். அர்ஜுனன் கொண்ட தவக்கோலத்தை - சிவக்கோலத்தை இவ்வாறு பாடிய வில்லிப்புத்தூரார், அர்ஜுனன் உள்ளத்தில் இருந்த தெய்வ வடிவத்தையும் அப்படியே, மனக்கண்களின் முன்நிறுத்துகிறார்.

 வலப்பாகம் செழும்பவளச் சோதியென்ன
வாள் நீலச்சோதி என்ன மற்றப் பாகம்
கலப்பான திருமேனி அணிந்த நீற்றால்
கதிர் முத்தின் சோதியென மேனை ஈன்ற
குலப்பாவையுடன் கயிலைக்குன்றில் வாழ்விற்குன்று
உடையோன் திருக்கோலம் குறிப்பால் உன்னிப்
புலப்பாடு புறம் பொசிய மார்பும் தோளும்
பூரித்தான் உடல் புளகம் பாரித்தானே


அற்புதமான பாடல் இது! சிவ ஆகமங்களிலும் சிவபக்தியிலும் தலைசிறந்த ஒருவரால் மட்டுமே இவ்வாறு எழுத முடியும். சிவபெருமானின் `அர்த்த நாரீஸ்வரத் திருவடிவம்’ தெளிவாக வர்ணிக்கப்பட்ட பாடல் இது. வலது பக்கம் செழும்பவள ஜோதி போலச் சிவந்து ஔி வீசும் திருமேனி; இடது பக்கம் பிரகாசமான நீல ரத்தினத்தின் ஔிபோலக் கலப்பான(சிவனும் அம்பிகையுமான அர்த்தநாரீசுரத்) திருமேனி; அணிந்து கொண்டிருக்கும் திருநீற்றால் பிரகாசமான முத்தைப்போல் ஔிவீசும் திருமேனி; மேனையின் மகளான மிக அழகான உமாதேவியுடன் கயிலை மலையில் எழுந்தருளி இருக்கும் திருமேனி; மேருமலையை வில்லாகக் கொண்ட திருமேனி, இப்படிப்பட்ட சிவபெருமானைத் தியானம் செய்து கொண்டிருந்தான் அர்ஜுனன். அப்போது அவனுக்கு ஆனந்தக்கண்ணீர் பெருக மார்பும், தோள்களும் மெய்சிலிர்த்துப் பூரித்தன.இவ்வாறு அர்ஜுனன் தவம்புரிந்த சிறப்பைப் பல பாடல்களில் விவரித்த வில்லிப்புத்தூரார்,  அர்ஜுனனுக்கு அருள் புரிய வந்த சிவபெருமானையும் விவரிக்கிறார்.

ஓர் ஏனம் தனைத்தேட ஔித்து அருளும்    
இரு பாதத்து ஒருவன் அந்தப்
போர் ஏனம் தனைத்தேடிக் கணங்களுடன்
புறப்பட்டான் புவனங்கள் எல்லாம்
சீர் ஏனல் விளை கிரிக்குத் தேவதையாம்
குழவியையும் செங்கை ஏந்திப்
பாரேனை உலகனைத்தும் பணிவுடனே
புகழ்ந்திடத் தன் பதிப் பின் வந்தாள்


முன்பு ஒரு வராகம் தன் இரு பாதங்களையும் தேடிக்காண முயன்றபோது (பிரம்ம விஷ்ணுக்கள் முடி-அடியைத் தேடிய தகவலைச் சொல்லி) திருவடிகளைக் காட்டாமல் ஔித்த சிவபெருமான், அர்ஜுனனைக் கொல்ல வரும் வராகத்தைத் தேடிப் புறப்பட்டார். சிவ கணங்களும் புறப்பட்டன. அதுமட்டுமா? மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சி நிலத்திற்குத் தெய்வமான முருகனையும் ஒரு குழந்தையாகத் தன் திருக்கரங்களில் தாங்கி அம்பிகை பார்வதி தேவியும் சிவபெருமான் பின்னாலேயே வந்தார், என்பதைச் சொல்லும் பாடல் இது.

சிவ துவேஷம் இல்லாதவர் வில்லிப்புத்தூரார் என்பதற்கு உதாரணமான பாடல்களில் இதுவும் ஒன்று. எதன் மீதும் யார் மீதும் எக்காரணத்தைக் கொண்டும் துவேஷம் (வெறுப்பு) கொள்ள வேண்டாம் என்பதில் ஆழமான பிடிப்பு கொண்ட வில்லிப்புத்தூரார், அதை மேலும் அழுத்தமாகப் பதிவு செய்கிறார்; தர்மரின் வாயிலாகவே! பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் முடித்த பின்னும், அவர்களுக்கு உண்டானதைத் தர மறுத்தான் துரியோதனன். கண்ணன், தூது செல்வதாகத் தீர்மானம் ஆனது. அந்த நேரத்தில் கண்ணனிடம் தர்மர் சொல்லிய வார்த்தைகள்...

குரு குலத்தார் போரேறே! குற்றமது
பார்க்குங்கால் சுற்றமில்லை
ஒரு குலத்தில் பிறந்தார்களுடன் வாழும்
வாழ்வினைப்போல் உறுதி உண்டோ?
இருவருக்கும் வசை அன்றோ? இருநிலம்
காரணமாக எதிர்ப்பது என்றான்


‘‘கண்ணா! குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. சகோதரர்கள் ஒற்றுமையாக வாழ்வதைப்போல நன்மை தருவது வேறு ஏதாவது உண்டா? அதை மீறி, இந்தப் பூமிக்காக இருவரும் போரிட்டால், இருவருக்கும் கெட்டபெயர் அல்லவா வரும்!” என்றார் தர்மர். என்ன மனது! என்ன மனது! தர்மரின் உயர்வைப் பாராட்டுவதா? அல்லது, அதை அப்படியே எளிமையாகப் பாடிப் பதிவு செய்திருக்கும் வில்லிப்புத்தூராரின் உயர்வைப் பாராட்டுவதா?தர்மரின் உள்ளத்து உயர்வைக்காட்டிய வில்லிப்புத்தூரார் தர்மரின் உள்ளத்து ஆழத்தையும் காட்டுகிறார்.

முந்தூர் வெம்பணிக் கொடியோன்மூதூரி னடந்துழவர் முன்றிறோறு,
நந்தூரும் புனனாட்டின் றிறம்வேண்டு நாடொன்றுநல்கானாகில்,
ஐந்தூர்வேண்டவையிலெனி லைந்திலம்வேண்டவை மறுத்தாலடு போர் வேண்டு,
சிந்தூரத் திலகநுதற் சிந்துரத்தின் மருப்பொசித்த செங்கண்மாலே.


இதைவிடத் தர்மர் இறங்கி வர முடியாது. அவர் வாக்கை, என்ன அழகாகப் பதிவு செய்திருக்கிறார் வில்லிப்புத்தூரார் பாருங்கள்!‘‘கண்ணா!  எங்களுக்கு உண்டான ராஜ்யத்தைக் கேள்! அவன் கொடுக்க மறுத்தால், ஐந்து ஊர்களையாவது கேள்! அவை இல்லாவிட்டால், ஐந்து வீடுகளையாவது கேள்! அதையும் மறுத்தால், போர்தான்; வேறு வழியில்லை” என்று கண்ணனிடம் சொன்னார் தர்மர். தர்மரின் உள்ளத்தை இவ்வாறு வெளிப் படுத்திய வில்லிப்புத்தூரார், தலைசிறந்த ஞானியான சகாதேவனின் உள்ளத்தை வெளிப்படுத்துகிறார். மிகவும் நுணுக்கமான பாடல் அது;சிந்தித்தபடி நீயும் சென்றால் என்?             
                     
ஒழிந்தால் என்? செறிந்த நூறு                       
மைந்தர்க்குள் முதல்வன் நிலம்
வழங்காமல்                                   
இருந்தால் என்? வழங்கினால் என்?                       
கொந்துற்ற குழல் இவளும் முடித்தால் என்?                                  
விரித்தால் என்? குறித்த செய்கை                      
அந்தத்தில் முடியும் வகை அடியேற்குத்        
                            
தெரியுமோ? ஆதி மூர்த்தி

‘‘உங்களுக்காக நான் துரியோதனனிடம் தூது போகப் போகிறேன். உன் எண்ணம் என்ன? சொல்!” என்ற பகவான் கண்ணனுக்கு சகாதேவன் சொன்னதாக உள்ள பாடல் இது. இப்பாடலில் மூன்று தகவல்களைச் சொல்லி, நான்காவதாக ஒரு தகவலைச் சொல்கிறான் சகாதேவன்.1 கண்ணா! நீ தூது போனால் என்ன? போகாவிட்டால் என்ன? கண்ணன் தூது போனார். 2 துரியோதனன் எங்கள் ராஜ்யத்தைக் கொடுக்காவிட்டால் என்ன? கொடுத்தால் என்ன? துரியோதனன் ராஜ்யத்தைக் கொடுக்கவில்லை.3 திரௌபதி கூந்தலை முடித்தால் என்ன? முடிக்காவிட்டால் என்ன? திரௌபதி கூந்தலை முடித்தாள்.

இந்த மூன்றிலும் நடக்கப்போவது எதுவோ, அதைத் தெளிவாக முதலில் சொல்லிவைத்து, நடக்காததை அடுத்ததாகச் சொல்லிவைத்த வில்லிப்புத்தூராரின் கவிநயம், நம்மை மகிழ்விக்கும். சகாதேவன் வாக்காக இவ்வாறு சொன்ன வில்லிப்புத்தூரார், ‘‘ஆதிப்பரம்பொருளே! கண்ணா! உன் எண்ணப்படிதான் நடக்கப்போகிறது. அது அடியவனான எனக்குத் தெரியுமா?” என்று சகாதேவன் சொன்னதாகச் சொல்லிப் பாடலை முடிக்கிறார். அதாவது, என்ன நடக்கும் என்பது ஞானிகளுக்குத் தெரியும்.

ஆனால், அவர்கள் அதை வெளிப்படையாகச் சொல்லமாட்டார்கள். சூசகமாகத்தான் சொல்வார்கள். சகாதேவன் ஞானத்தை நுணுக்கமாக வில்லிப்புத்தூரார் வெளிப்படுத்திய பாடல் இது.வில்லிபாரதம் பல நுணுக்கங்களைக் கொண்டது. அதைப் படித்து உணர்ந்தால், அருந்தமிழ் வாழும்! அல்லல்கள் நீங்கி அனைவரும் நலம் பெறுவோம்!

தொகுப்பு: பி.என்.பரசுராமன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • spain-trees-24

  ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

 • gandhi-13

  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

 • taipei-fashion-week-taiwan

  தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

 • kalifffo1

  தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

 • pak-123

  பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்