SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சியாமளா தேவியை போற்றுவோம்!

2023-01-21@ 17:40:32

நன்றி குங்குமம் ஆன்மிகம்

சியாமளா நவராத்திரி (ஜனவரி 22.1.2023 முதல் 30.1.2023 வரை)

இந்த நவராத்திரிக்கு சியாமளா நவராத்திரி என்று பெயர். இந்த ஒன்பது நாட்களும் சங்கீத இசைப்பாடுவதாலும், சங்கீதத்தில் ஈடுபட்ட இசை வல்லுனர்களை அம்மனாக பாவித்து தாம்பூலம், தட்சணை தந்து மகிழ்விப்பதாலும், சியாமளா (மீனாட்சி) தேவியின் பூரண அருள் கிடைக்கும்.

நம் புண்ணிய பூமியில் நவராத்திரி என்னும் விழா நான்கு விதமாக கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படும் நவராத்திரி நம் அனைவருக்கும் தெரிந்ததே. ராமநவமி சமயத்தில் பிரதமை திதி முதற்கொண்டு, வடநாட்டில் தேவி உபாசகர்கள், ``லலிதா நவராத்திரி விழா’’ என்றும், ஆடி மாதப் பிரதமை நாள் தொடங்கி வரும் நவராத்திரியை ``வாராஹி திருவிழா’’ என்றும் நான்காவதாக கொண்டாடப்படும் நவராத்திரி விழா, ``சியாமளா நவராத்திரி விழா’’ என்றும் கொண்டாடப்படுகிறது. இது தைமாதப் பிரதமை நாளிலிருந்து ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் சிறப்பான விழாவாகும்.

ஜெகன் மாதா ஸ்ரீலலிதாமகாதிரிபுர சுந்தரியின் கையிலிருக்கும் கரும்பு, வில்லின் அதிதேவதையான சியாமளா தேவி, அறிவு என்னும் தத்துவத்தின் தலைவியாக விளங்குபவள். மனம் என்னும் வில், அறிவு என்னும் அம்பை கட்டுப்படுத்துகிறது. எனவே சியாமளா தேவியின் அருள் இருந்தால்தான் மனதையும் அறிவையும் அடக்கி, அம்பிகையிடம் நம்மை லயிக்கச் செய்ய முடியும்.

தனது மந்திரியான சியாமளா தேவியின் ஆலோசனை பெற்றே அம்பிகை லலிதா பரமேஸ்வரி எதையும் செய்வாள். இதனால், சியாமளா தேவிக்கு மந்திரிணி என்னும் பெயருமுண்டு. அம்பிகையின் வலப்புறம் வீற்றிருக்கும் பெருமை கொண்ட சியாமளா தேவி, மன இருளை அகற்றி ஞான ஒளியைத் தருபவள். தேவியின் ஒன்பதாவது வடிவமான சியாமளா தேவியை உஜ்ஜயினியில் வணங்கியதால், மூடனாயிருந்த காளிதாசன் மகாகவியானான் என்கிறது புராணம். மூடமாய் முடங்கிக் கிடந்த காளிதாசனுக்கு அன்னை சியாமளா தேவியின் பெருங்கருணை மகாகவியாக மாற்றியது.

மதங்க முனிவரின் மகளாகப் பிறந்ததால், மாதங்கி என்றும் அழைக்கப்படுகிறாள். சியாமளா தேவியை தியானிப்பவர்களுக்கு வாக்கு, இசை, கல்வி, கேள்விகளில் நல்ல தேர்ச்சி போன்றவை சித்திக்கும்.மாதங்கிக்கு பதினாறு பெயர்கள் உள்ளன அவை;சங்கீத யோகினி, சியாமா, சியாமளா, மந்திர நாபிகா, மந்திரிணி, சசிவேசானி, பிரதானேசி, சுகப் பிரியா, வீணாவதி, வைணிகி, முத்ரிணி, பிரியகப் பிரியா, நீபப் பிரியா, கதம்பேசி, கதம்பவனவாசினி, சதாமாதா ஆகியவையாகும். மாதங்கிதேவி எட்டு கரங்களை உடையவள். ஒவ்வொரு கரங்களிலும் ஒரு சிறப்புத் தன்மை உண்டு.

அவளுடைய ஒரு திருக்கரத்தில் உள்ள சம்பாகதிர், உலகியல் இன்பங்களையும், மற்றொரு கரத்திலுள்ள தாமரை மலர், கலை உள்ளத்தையும், இன்னொரு கரத்திலுள்ள பாசம் ஈர்ப்புச் சக்தியையும், வேறொரு கரத்திலுள்ள அங்குசம் அடக்கியாளும் திறனையும், காரிகை உலகியல் ஞானத்தையும், கிளி ஆத்ம ஞானத்தையும், இரு கைகளில் ஏந்திய வீணை சங்கீத ரசனையையும் அருளுகின்றன.

மேற்கண்ட வடிவுடைய தேவியையே காளிதாசனின் `சியாமளா தண்டகம்’ கொண்டாடுகிறது. சியாமளா தண்டகத்தை துதிப்பவர்களுக்கு தேவி பேரருள் புரிகிறாள். காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் சியாமளா தேவியின் திருவுருவத்தை காணலாம். மந்திர சாஸ்திரப்படி மதுரை மீனாட்சியே சியாமளா தேவியாக விளங்குகிறாள் என்பது சான்றோர் நம்பிக்கை.

அதனால்தான், அங்கு எண் கை வடிவமும், சக்கரமும் இதன் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டுள்ளன. சியாமளா தேவிக்கு லகு மாதங்கி, வாக்வாதினி, நகுலி எனப்படும் மூன்று அங்க - உபாங்க தேவதைகள் உள்ளனர். அவர்களைப் பற்றி காளிதாசனின் தன்னுடைய உரையில் விளக்கமாக தெரிவித்துள்ளார்.  தெரிந்துகொள்வோம்.

லகு மாதங்கி

‘‘மாணிக்க வீணாம் உபலாலயந்தீம்
மதாலஸாம் மஞ்சுள வாக் விலாஸாம்
மஹேந்த்ர நீலத்யுதி கோமளாங்கீம்
மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி.’’


மாணிக்கமயமான வீணையை வாசிப்பவளும், அழகான வாக்கு உடையவளும், நீலநிற ஒளி பொருந்திய உடலினாளும், மதங்க முனிவரின் மகளுமான இவள் அருள் இருந்தால் அனைத்துக் கலைகளும் லகுவாகும்.

வாக்வாதினி

‘‘அமலகமல ஸம்ஸ்தா லேகினி புஸ்தகோத்யத்
கரயுகள ஸரோஜா குந்த மந்த்ரகௌரா
த்ருதசதா கண்டோல்லாஸி கோட்ரபீடா
பவதுபவ பவபயானாம் பங்கின பாரதி ந.’’
நம் சந்தேகங்களை குருவிடம் கேட்டு அறிய வேண்டும் என்பதே வாக்வாதினியின் பொருள். அடிக்கடி குருவிடம் சென்று நம் சந்தேகங்களைக் கேட்டாலொழிய உண்மைப் பொருளை அறிய முடியாது. சில விஷயங்களை ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்தால்தான் உண்மையை உணர முடியும்.

நகுலி

ஞானத்தை அடைந்தால்கூட தவறு செய்வதற்கான சில சந்தர்ப்பங்கள் ஏற்படலாம். விஷம் போன்ற அத்தவறுகளால் நாம் பாதிக்கப் படாமல் காப்பாற்றுபவள் நகுலி. நகுலம் என்றால் கீரிப்பிள்ளை. கீரியைக் கண்டு விஷப் பாம்புகள் அஞ்சி விலகுவதைப் போல நகுலியின் அருளால் தவறுகள் நம்மை விட்டு விலகிச் செல்லும் என்பது உட்கருத்து.

சியாமளா சகஸ்ரநாமம், ராஜமாதங்கி சகஸ்ரநாமம் என இரண்டு அதியற்புதமான சகஸ்ரநாமங்களைச் சொல்லி பயனடையலாம். காளிதாசனின் சியாமளா தண்டகமும், ஆதிசங்கரரின் மீனாட்சி பஞ்சரத்னத்தைத் துதித்தாலும் சிறப்பான பலன்களை பெறலாம்.எனவே இந்த நவராத்திரி நாட்களில் அன்னை சியாமளாவையும், அவளது மறு உருவான மீனாட்சியம்மனையும் வழிபடுவோமாக.

தொகுப்பு: அனுஷா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • gandhi-13

  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

 • taipei-fashion-week-taiwan

  தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

 • kalifffo1

  தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

 • pak-123

  பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

 • cherry-blossom-tokyo

  டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்