SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பசுவைப் பறக்கவைத்த தியாகேசர்!

2023-01-19@ 17:03:22

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஒரு சமயம் சோழ மன்னன் உலக நன்மைக்காக மிகுந்த பக்தியுடன் பெரிய வேள்வியைச் செய்தான். அந்த வேள்வியில் கலந்துகொண்ட அந்தணர்களுக்கு அவன் உயர்ந்த  பசுக்களைத் தானமாக அளித்தான். அந்தணர்கள், தாம் செய்யும் சிவபூஜைக்கு வேண்டிய பாலையும் வேள்விக்கு வேண்டிய நெய்யையும் பெறுவதற்காகப் பசுக்களைத் தானமாக அளிப்பது வழக்கம். பசுக்கள் வளர்வது போல், அந்தணர்களுக்கு தேஜசும், பெருமையும், ஞானமும் விருத்தியாகின்றன. அதனால் அந்தணர்கள் பசுக்களைப் பெறுவதிலும் அவற்றைப் பேணிக் காப்பதிலும் அதிக ஆர்வம் காட்டு கின்றனர். மன்னர்கள், ‘‘இளமையானதும் அதிக பால் தருவதும் குற்றமற்றதுமான பசுக்களையே தானமாக அளிக்க வேண்டும்’’ என்று சாத்திர நூல்கள் கூறுகின்றன.

சோழ மன்னன், தாம் செய்த வேள்வியில் கலந்து கொண்ட வேதப்பிரகாசன் என்பவருக்கு மிக உயர்ந்த பசுவை அளித்தார். அந்த பசு தெய்வீகத் தன்மை கொண்டது. முற்பிறவியின் புண்ணியத்தால் அதற்கு நல்லறிவு வாய்த்திருந்தது. அவர் மகிழ்ச்சியுடன் அதைப் பெற்றுக் கொண்டு, தமது இல்லத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, பூர்வ
ஜன்மத் தீவினையால் அவர் உள்ளத்தில் தீய எண்ணங்கள் தோன்றத் தொடங்கின.

அவர், அந்தப் பசுவை நோக்கினார். ‘‘ஏற்கனவே நம்மிடம் நிறைய பசுக்கள் உள்ளன.  இப்போது பொற்காசுகள்தான் நமக்குத் தேவை. இந்தப் பசு அழகாகவும் கொழுத்தும் இருக்கிறது.

அதனால், இதை நல்ல விலைக்கு விற்றுவிடலாம்’’ என்ற எண்ணம் அவர் உள்ளத்தில் தோன்றின. அவரது எண்ணத்திற்கேற்பப் பசுக்களை வாங்கி விற்கும் வியாபாரி எதிரே வந்து கொண்டிருந்தார். அவருக்குப் பசுவைப் பார்த்ததும் பிடித்துப்போனது.  ‘‘இந்த மாடு கொழுத்து உள்ளது.  அந்தணனுக்கு தானமாக வந்ததுதானே.. இதை இவரிடம் குறைந்த விலைக்கு வாங்கினால் அதிக விலைக்கு விற்கலாம்’’ என்று எண்ணினான். அந்தணனிடம் ‘‘சுவாமி, இந்தப் பசுவை விற்க விரும்புகிறீர்களா, இதற்கு நல்ல விலை தருகிறேன்’’ என்றான். அந்தணர் மகிழ்ந்தார். சில பொற்காசுகளுக்கு மாட்டை விற்று விட்டு மன மகிழ்ச்சியுடன் வீட்டுக்குத் திரும்பினார்.

தன்னை விற்றுவிட்டதை அறிந்த பசு வருந்தியது. ‘‘உயர்ந்த அறிஞனான இந்த வேதியனை அடைந்தோம்.  இவன் வீட்டில் இருந்தவாறே சிவபுண்ணியச் செயல்களுக்கு உதவியாக இருந்து புண்ணியம் பெறுவோம் என்று எண்ணினோமே.. இப்படி குறைந்தவிலைக்கு விற்றுவிட்டானே என்ன செய்வது?'' என்று எண்ணியபடியே வியாபாரியைத் தொடர்ந்தது.

சற்று தூரம்தான் சென்றிருப்பார்கள். அங்கு ஒருவன் வந்தான். பசுக்களைக் கொன்று தின்பதில் அவனுக்கு விருப்பம் அதிகம். எதிரே வந்துகொண்டிருந்த பசுவைப் பார்த்ததும், அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சி உண்டாகிவிட்டது. ‘‘விருந்துக்கு ஏற்ற பசுவாக இருக்கிறது. பார்க்கும்போது ஏற்படும் எண்ணமே சுவையாக இருக்கிறது. தின்றால் எப்படி இருக்கும்!

என்ன விலை கொடுத்தாவது இந்த பசுவை வாங்கிவிட வேண்டும்’’ என்று எண்ணினான்.வியாபாரியிடம் பசுவைத் தனக்குத் தரும்படி கேட்டான். முதலில் மறுப்பது போல் நடந்த வியாபாரி, அதிக விலைவைத்துக் கூறினான். மாமிசத்தின் மீது இருந்த விருப்பத்தால் விலையைப் பற்றிக் கவலைப் படாமல் அதிக விலை கொடுத்து அதை வாங்கினான். வெட்டி விருந்து சமைக்க விரைந்து பசுவுடன் வீடு திரும்பினான்.பசுவின் மனதில் துக்கம் பிறந்தது. ‘‘சிவபெருமானே! உம்மைத் திருமுழுக்காட்டும் பால் தரும் இனத்தில் பிறந்தேன் என்று கர்வம் கொண்டேன். அரண்மனையில் உள்ள ஆலயத்திற்கு நாள்தோறும் ஐம்பொருளைத் தந்து மகிழ்ந்திருந்தேன். மன்னன், வேதியருக்குக் கொடுத்தபோது வேதமூர்த்தியாக விளங்கும் உன்னை ஒலிவடிவில் காதாரக் கேட்டு மகிழ்வோம் என எண்ணினேன்.

அந்த எண்ணமெல்லாம் தவிடுபொடியாகிவிட்டது. வீணாகக் கொலை வாளினால் வெட்டுண்டு மடியப்போகிறேன். இது, தகுமா? முறையா? தர்மம்தானா?’’ எனப் பலவாறு எண்ணியது. துயர மிகுதியால் அதன் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது. அதன் மனம் ‘‘தியாகேசா, தியாகேசா’’ என்று கதறியது.தீன ரட்சஷகனான தியாகேசன் மனம் இரங்கினான். பசுவின் மீது அருள் செலுத்தினான். அந்தக் கணமே அதற்குச் சிறகுகள் முளைந்தன. பசு விண்ணில் செல்லும் ஆற்றல் பெற்று நொடிப்பொழுதில் விண்ணில் பறக்கத் தொடங்கியது.

திருவாரூருக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் அதற்குள் உதித்தது. விரைந்து பறந்து திருவாரூருக்கு வந்து சேர்ந்தது. ஆலயத்தை அடைந்து தியாகேசர் சந்நதி முன்பாக நின்றது. அந்த வேளையில் தியாகேசர் அருளால் அதன் கன்றும் வான் வழியே வந்து சேர்ந்தது. இரண்டும் தியாகேசரை வணங்கி ஆனந்தக் கண்ணீர் பொழிந்தன. பின்பு அந்த ஆலயத்திலுள்ள பட்டியைச் சென்று சேர்ந்தன.பசு பறப்பதைக் கண்டவர்கள் வியந்தனர். அரசனும் செய்தி அறிந்தான். திருவாரூரில் அந்தப் பசு இருப்பதைத் தெரிந்து கொண்டு அங்கு வந்தான். எல்லோரும் தியாகேசன் அருள் பெற்ற அந்த பசுவினை வணங்கி மகிழ்ந்தனர்.

அதற்கிடையே அந்த பசுவை விற்ற பணத்துடன் சென்ற அந்தணன் வீட்டை அடைந்தபோது, அவனது மகன் மாண்ட செய்தி காத்திருந்தது. அவனால் துக்கத்தை அடக்கமுடியவில்லை. மனம் சோர்ந்து வீழ்ந்தான். மடியில் இருந்த காசுகள் சிதறி வீழ்ந்து சிரிப்பது போல இருந்தது.பசுவை வாங்கிய வியாபாரியின் உடலில், நமைச்சல் ஏற்பட்டது. சற்று நேரத்தில் அது தொழுநோயாகித் துன்புறுத்தத் தொடங்கியது.

பசுவை வெட்டித் தின்னும் ஆசை கொண்டவன் உடல் கொதிப்படைந்து உயிரையே விட்டுவிட்டான். அனைத்துச் செய்திகளையும் மன்னன் அறிந்தான். மக்களும் அறிந்தனர். அந்தணர்கள் தானமாக வந்த பொருளை விற்கக் கூடாது. அதுவும் புண்ணியப் பொருளான பசுவை விற்கவேகூடாது.

தானமளிப்பவர்களும் அந்தணர்களின் தன்மையை அறிந்தே அதற்கேற்ப தானம் அளிக்க வேண்டும். பசுக்களை வதை செய்யக் கூடாது. வதைக்க எண்ணுவதும்,  துணை நிற்பதும் பாவம்.
பசுக்களைக் காப்பதும் போற்றுவதும் புண்ணியம். பசுவை உண்ண விரும்புவது கொடிய பாவம் என்று பலவாறு சாத்திரங்கள் கூறுவதை நினைவுபடுத்தி ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டனர். பசுவினைக் காத்து அருள்புரிந்த பரமனான தியாகேசப் பெருமானின் கருணை வெள்ளத்தை ஒருவருக்கொருவர் சொல்லியும் கேட்டும் மகிழ்ந்தனர்.

தொகுப்பு: பூசை. ச. அருணவசந்தன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • eartheyaa

  ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

 • kerala-fest-beauty-28

  அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

 • isreal-22

  இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

 • ADMK-edappadi-palanisamy

  அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

 • germanysstt1

  ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்