SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தெளிவு பெறுஓம்

2023-01-19@ 16:50:56

நன்றி குங்குமம் ஆன்மிகம்

? வடக்கு - வடதிசை நோக்கித் தலை வைத்துப் படுக்கக்கூடாது என்பது ஏன்?
- சுஜாதா, சென்னை.

வட துருவம் காந்த சக்தி மிகுந்தது. அந்தக் காந்த சக்தி, வடக்கு நோக்கித் தலை வைத்துப் படுப்பவர்களின் மூளையைத் தாக்கும். மூளையின் செயல்திறன் குறைய ஆரம்பிக்கும். செய்யும் செயல்களில் தடுமாற்றம் ஏற்பட்டுத் தீமைகள் விளையும். இதிலிருந்து நம்மைக் கட்டிக் காப்பாற்றவே, வடக்கு நோக்கித் தலை வைத்துப்படுக்கக் கூடாது என்றார்கள். இதை ‘வடக்கிருத்தல்’ வடக்கு நோக்கி இருந்து உயிர் துறத்தல் என்று பழந்தமிழ் இலக்கியங்களும் குறிப்பிடுகின்றன. இதே தகவலை ஆன்மிகக் கதையாகவும் பதிவு செய்தார்கள்
முன்னோர்கள்.

விநாயகர் அவதாரம் செய்ததும் அவரைப்பார்க்கத் தேவர்கள் அனைவரும் வந்தார்கள். சனி பகவானும் வந்தார். சனி பகவானின் பார்வைபட்டு, விநாயகரின் தலை போய் விட்டது. சிவபெருமான், ‘‘வடக்கு நோக்கித் தலை வைத்துப் படுத்திருப்பது எதுவோ, அதன் தலையைக் கொண்டு வந்து சேருங்கள்!’’ என்றார். அதன்படியே சென்ற தேவர்கள், வடக்கு நோக்கித் தலை வைத்துப் படுத்திருந்த யானையின் தலையைக் கொண்டு வந்து விநாயகரின் உடலில் பொருத்தினார்கள். அதன் காரணமாகவே விநாயகருக்கு யானைத் தலை அமைந்தது  என ஆன்மிகமாகவும் சொல்லி வைத்தார்கள்.

? கல்யாண வீடுகள், கோயில் விசேஷங்கள் முதலான இடங்களில், வாழைமரங்களை நிறுத்தி, கட்டி வைப்பது ஏன்?
- பாபு, திருவண்ணாமலை.

மரம், செடிகள் எல்லாம் கரியமில வாயுவை வாங்கிக்கொண்டு, பிராணவாயுவைக் கொடுக்கும். பலர் கூடும் இடங்களில் வெளிப்படும் கரியமில வாயுவால் சுற்றுப்புறச் சூழ்நிலை கெட்டு, ஆரோக்கியம் கெடும். அதை நீக்கவே நாம் வெளியிடும் கரியமில வாயுவை ஏற்றுக்கொண்டு, நமக்குத் தேவையான பிராண வாயுவை அதிக அளவில் வெளியிடும் வாழை மரங்களை நிறுத்திக் கட்டி வைத்தார்கள். வாழை என்பதற்கு மற்றொரு சிறப்பும் உண்டு. வாழை இலை, வாழைச் சருகு, வாழைப்பூ, வாழைக்காய், வாழைப்பழம், வாழைத்தண்டு, வாழைப்பட்டை, வாழை(அடிக்)கிழங்கு என அனைத்தும் உபயோகப்படுவது வாழையில் மட்டுமே! புதுமணத் தம்பதிகள் அவ்வாறு வாழ வேண்டும் என ஆசி கூறும் விதமாகவே வாழை மரங்களை தார்-பூ ஆகியவற்றுடன் நிறுத்திக்கட்டி வைத்தார்கள்.

மற்றொரு காரணம்; பலர் கூடும் இடங்களில் எதிர்பாரா விதமாகப் பாம்பு முதலானவைகளால் தீங்கு விளையலாம். அப்படிப்பட்ட நேரத்தில், வாழைப்பட்டையைப் பிழிந்து அதன் சாற்றைக் குடிக்கச் செய்தால், விஷ உபாதை நீங்கும். ஒரு வேளை அதற்குள் பற்கள் கிட்டிப் போய்விட்டால், பாதிக்கப்பட்டவரை வாழைப் பட்டைகளில் கிடத்தினால், கிட்டிப்போன பற்கள் தாமாகவே விலகும்.

வாழைப்பட்டைச் சாற்றைக் குடிக்கச் செய்யலாம். வாழையின் மருத்துவ குணங்களுக்காகவும் அவை, பொதுமக்கள் கூடும் இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

? ஆலயங்களில் நடக்கும் முக்கியமான உற்சவங்களை, நிகழ்வுகளை, நேரலை என்ற பெயரில் தொலைக்காட்சிகளில் காண்பிக்கிறார்கள். இவற்றைப் பார்ப்பதால், நேரே சென்று தரிசித்த பலன் கிடைக்குமா?
- வினோத், மதுரை.

தாராளமாகக் கிடைக்கும். சொல்லப் போனால், இதன்மூலம் விளையும் பயன் அதிகமாகவே இருக்கிறது. கோயில்களில் முக்கிய நிகழ்வுகள் நடக்கும்போது, நம்மால் அருகில் சென்று தரிசிக்க முடியாது. யாரேனும் முக்கியஸ்தர்கள் வந்து விட்டால், கேட்கவே வேண்டாம். தொலைக்காட்சி நேர்முக ஒளிபரப்பிலோ, கும்பலில் சிக்காமல் வீட்டில் இருந்தபடியே தெய்வத்தை மிக அருகில் தெளிவாக தரிசிக்கலாம்.

அடுத்து, என்ன உற்சவம் நடக்கிறது? என்ன செய்கிறார்கள்? ஏன் செய்கிறார்கள்? என்பவற்றை எல்லாம் அறியும் ஆர்வம் இருந்தாலும், யாரைப்போய்க் கேட்பது? உற்சவத்தில் ஈடுபட்டவரகள் அதைக் கவனிப்பார்களா? நமக்குப் பதில் சொல்லிக் கொண்டிருப்பார் களா? தொலைக்காட்சி நேர்முக வர்ணனையில் ஒவ்வொரு நிகழ்வாகக் காண்பிக்கும் போது, அதை ஏன் செய்கிறார்கள்? இந்தக் கோயிலில் அதைச் செய்ய வேண்டிய காரணம் என்ன? எனும் தகவல்களுடன் குறிப்பிட்ட அந்த ஆலய வரலாறும், நேர்முக வர்ணனையாளர்களால் விவரிக்கப்படும்.

நேரில் சென்று தரிசித்தால் கூடக் காணக்கிடைக்காத தெய்வக் காட்சிகளைப் பலவிதமான கோணங்களில், நேர்முக ஒளிபரப்பில் தரிசிக்கலாம். திருவிழாக் காலங்களில் அந்தக்கூட்ட நெரிசலில் சிக்கி, திருவிழாவைக் காணும் சுகம் ஒருமாதிரி; அந்தக்கூட்டத்தில் சிக்கி நசுங்காமல் வீட்டிலிருந்த படியே, அந்த ஆலய வரலாறு உட்பட பலவிதமான அடிப்படை உண்மைகளை அறியச்செய்து, கண்முன்னே மிக அருகில் தெய்வதரிசனம் செய்து வைக்கும், நேர்முக ஒளிபரப்பு ஒருமாதிரி; உயர்ந்ததுதான்.

தொகுப்பு: சந்திரமௌலி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • spain-trees-24

  ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

 • gandhi-13

  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

 • taipei-fashion-week-taiwan

  தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

 • kalifffo1

  தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

 • pak-123

  பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்