SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சின்னச் சின்ன வாஸ்து மாற்றங்களைச் செய்து சிறப்பாக வாழுங்கள்

2023-01-19@ 12:27:22

வாஸ்து சாஸ்திரம் பெரிய கடல். அதை அப்படியே அச்சு அசலாக பின்பற்ற முடியுமா என்று சில நண்பர்கள் கேட்கிறார்கள். அதிலே உள்ள அடிப்படையான விஷயங்களை நாம் தெரிந்து கொண்டு இயன்ற அளவுக்கு அதனைப் பின்பற்றினால் போதும். ஒரேடியாக அதை முற்றிலுமாக பின்பற்ற வேண்டியதில்லை. வாஸ்து சாஸ்திரத்தில் எட்டு திசைகளாகப் பிரித்துக் கொள்ளுகின்றார்கள்.

கிழக்கு திசை

முதல் திசையாக கிழக்கு இருக்கிறது. எந்த விஷயத்தையும் நாம் கிழக்கில் இருந்துதான் ஆரம்பிக்கிறோம். ஒரு விளக்கை ஏற்றி வைக்கிறோம் என்று சொன்னால் கிழக்காக விளக்கேற்றி வைக்கின்றோம். பெரும்பாலான கோயில்கள் பிரதானவாயில் கிழக்கு வாயிலாக இருக்கும். பெரும்பாலான தெய்வங்கள் கிழக்கு நோக்கி அருள்புரிவார்கள்.  கிழக்கு என்பது இந்திரனுடைய திசை.

இவர் சந்தான விருத்திக்கும் சகல ஐஸ்வரியங்களுக்கும் காரணமாக இருக்கின்றார். அஷ்டதிக் பாலகர்களுக்கும் இவர்தான் தலைவராக இருக்கின்றார். இவர் வெள்ளை யானை எனப்படும் ஐராவதமும் மீது ரத்ன மாணிக்கங்களை அணிந்து காட்சி தருகின்றார். இவருடைய தேவிக்கு இந்திராணி என்று பெயர்.

இவருடைய அருள் பூரணமாக பெற வேண்டுமானால் இந்த கிழக்கு திசையானது நன்கு விசாலம் உடையதாகவும், சுத்தமாகவும், எந்த தடைகளும் இல்லாமல் இருக்க வேண்டும். ஒரு வீட்டில் நீங்கள் காலி இடம் விட வேண்டும் என்று சொன்னால் கிழக்கு திசையில்தான் அதிகமான இடத்தைவிட வேண்டும். அரசாங்க அலுவலகங்கள், அரசு ஊழியர்கள் இல்லங்கள் கிழக்குப் பக்கம் தலைவாசல் உள்ளதாக இருந்தால் சிறப்பாக இருக்கும்.

தென்கிழக்கு

தென் கிழக்கு என்பது அக்னி மூலை (ஆக்னேயம்) என்று சொல்வார்கள். மிகவும் தூய்மையானது. எல்லா பாவங்களையும் அழிக்கவல்லது. அதனால்தான் யாகங்கள் ஹோமங்கள் வளர்க்கும்போது அக்னியிடம் எல்லாவற்றையும் கொடுத்து அனுப்புகிறோம். அவருக்கு இரண்டு தேவிகள் உண்டு. ஒரு தேவிக்கு ஸ்வாஹா என்று பெயர். ஒரு தேவிக்கு ஸ்வதா என்று பெயர். தென்கிழக்கு திசையில் பெரும்பாலும் சமயலறையை வைப்பது நல்லது. மின்சார சாதனங்களை வைத்துக் கொள்ளலாம்.

ஆனால், படுக்கையறை கட்டாயமாக அக்னி மூலையில் இருக்ககூடாது. அதே போல, மழைநீர், கழிவுநீர் இவைகளெல்லாம் அந்த திசையில் தேங்கக்கூடாது. தென்கிழக்கில் ஏதேனும் பள்ளம், குளம் கழிவுநீர் வாய்க்கால் போன்றவை இருந்தால் பல விதமான சுபகாரியத் தடைகள் ஏற்படும். கோர்ட் வம்பு வழக்குகள் ஏற்படும் என்கிறது வாஸ்து சாஸ்திரம்.

தெற்கு திசை

தெற்கு என்பது கால தேவனுடைய திசை. அவருக்கு தர்மராஜா என்று பெயர். இந்த திசை துல்லியமாக அமைய வேண்டும். இத்திசையில் கழிவறை கூடாது. தண்ணீர் தொட்டி போன்ற பூமிக்கடியில் இருக்கக்கூடிய விஷயங்கள் இருக்கக் கூடாது. அதை போலவே தெற்கு திசையில் காலியிடங்கள் அதிகம் இருக்கக் கூடாது. இருந்தால் அது வீட்டு முதலாளிக்கு அல்லது வீட்டுத் தலைவனுக்கு ஆகாது. நோய் நொடிகளையும், துன்பங்களையும் தரும். அந்த திசையை மிகச் சரியாக அமைத்துக்கொள்ள வேண்டும்.

தென்மேற்கு திசை

தென் மேற்கு திசைக்கு `நைருதி திசை’ என்று பெயர். கன்னிமூலை என்று சொல்வார்கள். பெரும்பாலான கோயிலில் கணபதியை வைத்திருப்பார்கள். இந்த திசையில் எந்தத் தடைகளும் இருக்கக் கூடாது. அந்த மற்ற திசைகளுக்கு எல்லாம் தேவர்கள் இருப்பார்கள். இந்த திசைக்கு ராட்சசர்கள் இருப்பார்கள். அவருடைய தேவிக்கு காரிகை என்று பெயர்.

இந்த திசை எக்காரணத்தை முன்னிட்டும் அதிகமாக வளரக்கூடாது. இயன்றளவு இந்த திசையில் அதிக கனமுள்ள பொருள்களைப் போட வேண்டும். திறப்பு இல்லாமல் அடைக்க வேண்டும். பெரிய மரங்களை வளர்க்கலாம். பெரிய கட்டடங்களைக் கட்டலாம். அப்படி அந்த திசையை பாதுகாப்பாக வைத்திருந்தால், நமக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும்.

மேற்கு திசை

மேற்கு திசைக்கு வருண திசை என்று பெயர்.  மழைக்கு அதிபதி இவர். வலது கையில் பாம்பும் இடது கையில் பாசக் கயிறும் கொண்டவர். இவருடைய துணைவிக்கு பத்மினி என்று பெயர் இவருடைய வாகனம் முதலை. கிழக்கு திசை வளரவேண்டும். மேற்கு திசை வளரவே கூடாது. மேற்கு திசை அதிகம் வளர்த்தால் பலவிதமான நிர்ப்பந்தங்கள் ஏற்படும். எனவே இதை வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும். பெரும்பாலும் குருமார்கள், ஆசிரியர் தொழில் செய்பவர்கள், அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள் போன்றவர்களுக்கு மேற்கு வாசல் உகந்தது.

வடமேற்கு

இதற்கு வாயு மூலை என்று பெயர். காற்று ஒரு இடத்தில் நிற்காது. நகர்ந்து கொண்டே இருக்கும். இந்த இடத்தில் பொருள் வைத்து விற்பனை செய்பவர்கள் விருத்தி அடைவார்கள். பொருளானது விற்பனை ஆகிக் கொண்டே இருக்கும். அதைப்போல, ஒரு தோஷபரிகாரமாக திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு இந்த வாயு மூலை உகந்தது.

சில நாட்கள் அவர்கள் அந்த இடத்திலே படுக்கை அறையை அமைத்துக் கொண்டால் சீக்கிரம் திருமணம் ஆகி புகுந்த வீடு சென்றுவிடுவார்கள். இந்த திசையில் கர்ப்பிணிப் பெண்கள் படுத்துக் கொண்டால் சீக்கிரம் சுகப்பிரசவமாகும். வடமேற்கு திசை குறைந்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் வம்சவிருத்தி ஆரோக்கியம் தீர்க்காயுள் உண்டாகும்.

வடக்கு திசை

வடக்கு திசை குபேர மூலை. குபேர திசை என்பார்கள். செல்வத்திற்கு அதிபதி. பண பீரோ, பணப் பெட்டி வடக்கு பார்த்து வைக்க வேண்டும். இந்த திசை கிழக்கு திசையுடன் சேர்த்து வளர்ந்திருக்க வேண்டும். அப்படி இருந்தால், அங்கே செல்வமும் மகிழ்ச்சியும் உண்டாகும். எக்காரணத்தை முன்னிட்டும் இந்த இடத்திலே தடைகளை அமைக்கக்கூடாது. காற்றோட்டமாக இருக்கவேண்டும்.

அதிகமான கனமுள்ள பொருட்களை வடக்கு திசையில் போட்டு அடைக்கக்கூடாது. வடகிழக்கு அல்லது வடக்கு தலைவாசல் உள்ளவர்கள் அந்த இடத்திலே மிக கனமான இரும்பு பொருட்களை வைக்கக் கூடாது. சிலர் வீட்டு வாசலில் கால் வைக்க முடியாது. அத்தனை தடைகள் இருக்கும். அது கூடாது. அப்படி வைத்தால் அவர்களுக்கு தொழில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு.

வடகிழக்கு

வடக்கிலிருந்து கிழக்கு பக்கமாக நகர்ந்தால் வடகிழக்கு திசை. அதற்கு `ஈசான்ய திசை’ என்று பெயர். வடகிழக்கு திசைக்கு அதிபதி ஈசானன். இருப்பதிலேயே புனிதமான திசை. ஈசனுக்கு துணைவி கௌரி. காளை மாடு வாகனமாக உடையவர். மரணத்தை வெல்பவர். குழந்தை களைக் காப்பவர். இந்தத் திசையில் ஏதேனும் ஒரு தண்ணீர் அல்லது தண்ணீர் தேங்கும் இடம், சிறிய தண்ணீர் தொட்டி, இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அந்த வீட்டில் சகல ஐஸ்வரியங்களும் பொங்கும். மரண பயம் அகலும். குழந்தைகள் நன்றாகப் படிப்பார்கள்.

சந்தான விருத்தி இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். எக்காரணத்தை முன்னிட்டும் இந்தத் திசையை அடைத்து விடக்கூடாது. இந்தத் திசையில் காற்று வராத வண்ணம், ஜன்னல்கள் வைக்காமல் இருக்ககூடாது. வளர வேண்டும் என்று நினைத்தால், வடகிழக்கு திசையும், கிழக்குத் திசையும் மட்டும்தான் வளர வேண்டும். மற்ற திசைகள் வளரக்கூடாது அதைப் போலவே தென் மேற்கில் மேல்நிலை தொட்டி அமைத்துக் கொள்ளலாம். வடகிழக்கு திசையில் முதியவர்கள் அறையை அமைத்துக் கொள்ளலாம்.

மேற்கில் படுக்கை அறை, பூஜை அறை, கழிவறை முதலியவற்றை ஏற்படுத்தலாம். கிழக்கு திசையில் பூஜையறை இருக்கலாம். சாப்பாடு அறை பயன் படுத்தலாம். குழந்தைகள் அறையாக அமைத்துக் கொள்ளலாம். இதைப் போன்ற ஒரு சில அடிப்படை விஷயங்களைப் புரிந்து, வீடு, வீட்டின் அறைகளை அமைத்துக் கொண்டால் வாஸ்து குறைபாடு இன்றி, நம்மால் நன்றாக வாழ முடியும்.

தொகுப்பு: தேஜஸ்வி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • spain-trees-24

  ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

 • gandhi-13

  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

 • taipei-fashion-week-taiwan

  தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

 • kalifffo1

  தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

 • pak-123

  பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்