மகரசங்கராந்தியும் மாமன்னர்களின் கொடையும்!
2023-01-18@ 17:18:27

நன்றி குங்குமம் ஆன்மிகம்
முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்
சோழர் வரலாற்றில் மிக உன்னதமாகப் போற்றப்பெற்றவன் கங்கையும் கடாரமும் கொண்ட இராஜேந்திர சோழனாவான். விஜயநகர அரச வரலாற்றில், மிகச் சிறப்பாகப் போற்றப்பெற்றவர் கிருஷ்ணதேவராயராவார். இந்த இரண்டு பேரரசர்களும் தை முதல் நாளான மகரசங்கராந்தி நாளில் முறையே காவிரியிலும் கிருஷ்ணவேணியாற்றிலும் (கிருஷ்ணா) நீராடித் திருக்கோயில்களுக்கு நிவந்தங்கள் அளித்தனர் என்பதை ஹளகன்னடத்தில் உள்ள ஒரு கல்வெட்டும், தமிழில் உள்ள சாசனங்களும் எடுத்துரைக்கின்றன.
கர்நாடக மாநிலத்துச் ஸ்ரீரங்கப்பட்டணத்து வட்டத்தில் பாலமூரி (பலகுலா) எனும் ஊர் உள்ளது. கிருஷ்ணராஜசாகருக்கும் ஸ்ரீரங்கப்பட்டணத்துக்கும் இடையே காவிரி வலம் சுழித்து ஓடும் இடத்தில் இவ்வூர் உள்ளது. இவ்வூரில் திகழும் அகஸ்தியேஸ்வரர் கோயிலுக்கு மேற்காக உள்ள கற்பலகையில் திகழும் ஹளகன்னட எழுத்தில் அமைந்த ஒரு கல்வெட்டுச் சாசனம் மும்முடிச் சோழனாகிய இராஜராஜனின் புகழினைக் கூறி, பின்பு அவன் மைந்தன் பற்றிய (இராஜேந்திர சோழனின்) வரலாற்று நிகழ்வொன்றினை ஆண்டுக் குறிப்புகளோடு கூறுவதோடு அவன் வகித்த பதவி, அவன் புரிந்த மாவெற்றிகள் ஆகிய அனைத்தையும் தெளிவாக எடுத்துரைக்கின்றது. இச்சாசனத்தை ஓர் அரிய இரத்தின மணியென்றே நாம் கூறலாம்.
சக்ரேஸ்வரனாகிய இராஜராஜசோழன் கங்கபாடி, இரட்டபாடி, மலைநாடு, ஈழம், நுளம்பம் (நுளம்பபாடி), ஆந்திரம், கொங்கு, கலிங்கம், பாண்டிய நாடு ஆகியவற்றை வென்று சோழநாடு என அவற்றைத் தன்னுடையதாக மாற்றிக்கொண்டான் என்று அக்கல்வெட்டு முதலில் அப்பேரரசனின் சாதனைகளை எடுத்துக் கூறுகின்றது. ஸ்ரீகோவிராஜராஜகேசரி வர்மரான ராஜராஜன் எனும் அப்பெருவேந்தனின் பாதத் தாமரைகளாகிய மலர்களை மொய்க்கின்ற வண்டாகத் திகழ்பவன் பஞ்சவன்மாராயன் என்றும், அவன் வேங்கி மண்டலம், கங்க மண்டலம் ஆகியவற்றின் மகாதண்டநாயகனாக விளங்குவதோடு, அவனுடைய தோள்வலிமைதான் எவ்வளவு? என்று கூறி அவன் வெற்றிகளைப் பட்டியலிட்டுள்ளது.
இங்கு இராஜேந்திர சோழன்தான் பஞ்சவன் மகாராயன் என்ற குறிப்பு இல்லை என்றாலும், இதே ஸ்ரீரங்கப்பட்டணம் வட்டத்தில் உள்ள கிரங்கூர் இராமதேவர் கோயில் கல்வெட்டால் அவன் இராஜேந்திர சோழன்தான் என்பதை உறுதியாகக் கொள்ள முடிகின்றது. இக்கல்வெட்டு பொறிக்கப்பெற்றபோது அவன் இளவரசனாக முடிசூட்டப் பெற்றிருக்கவில்லை. அதனால் இராஜேந்திரசோழன் என்ற அவனுடைய அபிடேக நாமத்தை இங்குக் காண முடியவில்லை.வேங்கி மண்டலம், கங்கமண்டலம் ஆகியவற்றின் மகாதண்ட நாயகனாக இருந்த பஞ்சவன் மாராயன் துளுவம், கொங்கணம், மலயம் ஆகியவற்றை வென்றதோடு சேர மன்னனையும் வென்றான் என்று கூறுகின்றது. தெலுகம், இரட்டிங்கம், பல்வாலதேசம் (பலவம்) ஆகியவற்றையும் தன் ஆற்றலால் வெற்றிகண்ட இவன் மும்முடிச் சோழன் பெற்றெடுத்த களிறு (மும்முடிச்சோழன் காந்தவாரணம்) என்று பஞ்சவன் மாராயனின் புகழினைக் குறிக்கின்றது.
மும்முடிச் சோழன் என்று சிறப்பித்துக் கூறப்பெறும் மாமன்னன் இராஜராஜனின் புதல்வனாகிய இராஜேந்திர சோழன்தான், மகாதண்டநாயகனாகிய பஞ்சவன் மாராயன் என்பதை எந்த ஐயத்திற்கும் இடமில்லாமல் இச்சாசனம் எடுத்துரைக்கின்றது.இக்கல்வெட்டுச் சாசனத்தில் கடைப்பகுதியில், சக ஆண்டு 934 ஆகிய பரிதாபி ஆண்டு ஸ்ரீராஜராஜ சோழ தேவரின் இருபத்தெட்டாவது ஆட்சியாண்டு (கி.பி.1022) எனக் குறிக்கப்பெற்றிருப்பதோடு, அவ்வாண்டு உத்திராயண சங்கராந்தி நாளில் மாதண்ட நாயகனாகிய பஞ்சவன் மாராயன் பளிகோலா எனும் ஊரில் திகழும் வலம்புரி தீர்த்தத் துறையில் நீராடியபோது அவ்வூர் இறைவனுக்கு (அகத்தியேஸ்வரர்க்கு) ஒவ்வொரு நாளும் இருமுறை நான்கு பள்ளா அரிசியில் நிவேதனம் செய்யவும், ஒரு நுந்தா விளக்கு எரிக்கவும் கொடை நல்கி ஆணையிட்டது குறிக்கப்பெற்றுள்ளது. இவ்வாறு கங்கைகொண்ட இராஜேந்திர சோழன் தை முதல் நாளில் காவிரியில் புனித நீராடியதோடு மகர சங்கராந்தி நாள் முதல் அங்குள்ள கோயிலில் நிவேதனம் செய்ய நிவந்தமும் அளித்துள்ளான்.
பேரரசர் கிருஷ்ணதேவராயர் கி.பி. 1517-ஆம் ஆண்டில் மகரசங்கராந்தி நாளில் கிருஷ்ணா நதியில் நீராடி உண்டவல்லி அனந்தசாயி பெருமாள் முன்பும், விஜயவாடா மல்லிகார்ஜுனர் சந்நதியிலும் அமர்ந்து சோழ மண்டலத்திலுள்ள முக்கிய விஷ்ணு தலங்கள், சிவத்தலங்களில் மகரசங்கராந்தி புனித நாளில் பூஜைகள் நடைபெறுவதற்காகத் தனது அரசாங்கத்திற்குப் பல்வேறு வரிகள் மூலமாகக் கிடைக்கும் பத்தாயிரம் வராகன் பொன்னை நிவந்தமாக அளித்ததோடு, அத்தலங்களின் பட்டியலையும் அரசு ஆணையாக வெளியிட்டார். அவ்வாணை தமிழ்நாட்டுக் கோயில்கள் பலவற்றில் கல்வெட்டாகப் பொறிக்கப்பெற்றது. அக்கல்வெட்டு வாசகம்தனை இனிக் காண்போம்.
“ஸ்வஸ்திஸ்ரீ விஜயாப்புதய சாலிவாகன சகாப்தம் 1439 இதன்மேல் செல்லா நின்ற ஈஸ்வர சம்வத்சரம் ஸ்ரீமன் மகாமண்டலேசுவரன் அரிராய விபாடன் பாஷைக்கு தப்புவராய கண்டன் கண்டநாடு கொண்டு கொண்ட நாடு கொடாதான் பூர்வ தக்ஷிண பச்சிம உத்தரசது சமுத்திராதிபதி ஸ்ரீவீரப்பிரதாப ஸ்ரீவீரகிருஷ்ணதேவராயர் சோழமண்டலத்து விஷ்ணு ஸ்தானம் சிவஸ்தானம் முதலான தேவஸ்தானங்களுக்கு சோடி, சூலவரி, புறவரி, அரசு பேறு மற்றும் உண்டானது எல்லாம் சர்வமானியமாக திருபுளம் பற்றின தர்மசாசனராயசம்” என அக்கல்வெட்டு தொடங்குகிறது.
நம் விஜயநகரத்திலிருந்து புறப்பட்டு, பூர்வதிக்கு விசையார்த்தம் எழுந்தருளி உதயகிரி துர்க்கமும் யரிசிக்கொண்டு திருமலை ராகுத்தராயனையும் பிடித்துக் கொண்டு வினிகொண்டை வெல்லம்கொண்டை, நாகார்சுன கொண்டை, கொண்டவீடு, கொண்டபல்லி, ராசமகேந்திர வரம் முதலான துர்க்கங்களும் இருசிக்கொண்டு பிரதாப ருத்ர கசபதி குமாரன் வீரபத்திரனையும், கிரசந்திரன் உத்தண்டகான் முதலான சாமந்தரையும் சீவாக்கிரமமாகப் பிடித்துக் கொண்டு பிரதாப ருத்ர கசபதியையும் முறியவெட்டி பொட்டுனூரில் ஜயஸ்தம்பம் நிறுத்தி என்று கூறி அவர் பெற்ற வெற்றிகள் பட்டியலிடப்பெற்றுள்ளன.
அடுத்து, சோழமண்டலத்தில் தேவஸ்தானம் திருச்சிராப்பள்ளி, திருஈங்கோய்மலை, சந்தலகை, திருக்காட்டுப்பள்ளி, திருமழபாடி, வல்லம், தஞ்சாவூர், திருநல்லூர், திருவாரூர், திருநகரி, திருவையாறு, திருவெழுந்தூர், இராசு இராமபாளையம், திருவாஞ்சியம், திருப்புகலூர், திருப்பனந்தாள், திருநாங்கூர், தாடாளங்கோயில், சீர்காழி, அரிகண்டபுரம் உள்பட இரண்டாற்றுப்பற்று சீமை, புவனேகவீரன் பட்டனசீமை, ராசராஜேச்சுர சீமை, வீரமடக்கு சீமை, வழுதலம்பட்டு சீமை, வழுவத்தூர் சீமை, பெரம்பூர் சீமை, குழித்தண்டலை சீமை உட்பட்ட விஷ்ணு ஸ்தானம் சிவஸ்தானம் தேவஸ்தானங்களில் பூர்வம் முதலாக அரைமணைக்கு இறுத்து வருகிற சோடி, சூலவரி, ஆயம், ஸ்தலயாதிக்கம், பதினாயிரம் பொன்னிலே அந்த அந்த தேவஸ் தானங்களுக்கு, மகரசங்கராந்தி புண்ணிய காலத்திலே கிருஷ்ணவேணி தீரத்திலே உண்டவல்லி அநந்தசாயி சந்நதியிலும் விசயவாடை மல்லிகார்சுனதேவர் சந்நதியிலுமாக தாராபூர்வமாக சர்வ மானியமாக விட்டு தர்மசாசன ராயசமும் பாலித்தோம்.
இந்த ராயச பிரமாணத்திலே எல்லா தேவஸ்தானங்களிலும் சிலாசாசனம் எழுதுவிச்சு பூஜை புனஸ்காரமும் அங்கரங்க வைபோகமும் திருப்பணிகளும் சாங்கோபாகமாக நடத்திக்கொண்டு சுகத்திலே இருக்கவும் என்று கிருஷ்ணதேவராயர் அளித்த கொடை பற்றி விவரிக்கப்பெற்றுள்ளது. சாசனத்தின் இறுதியில் இந்த தர்மத்திற்கு அகிதம் நினைத்தவன் தங்கள் தங்கள் மாதா, பிதாவையும், கோ, பிராமணரையும் வாரணாசியிலே கொன்ற பாவத்திலே போகக் கடவாராகவும் என்று குறிப்பிடப்பெற்றுள்ளது.
திருஈங்கோய்மலை உள்ளிட்ட சாசனம் குறிப்பிடும் அனைத்து கோயில்களிலும் இக்கல்வெட்டின் நகல் பொறிக்கப் பெற்றது. கர்நாடக மாநிலத்துப் பலகுலாவில் காவிரியில் உத்தராயண சங்கராந்தி நாளில் நீராடி இராஜேந்திர சோழன் அளித்த கொடையும், கிருஷ்ணா நதியில் உத்தராயண சங்கராந்தியில் நீராடி கிருஷ்ணதேவராயர் பல தலங்களுக்கு அளித்த கொடையும் வரலாறு கூறும் சாசன முத்திரைகளாக இன்றும் விளங்குகின்றன.
மேலும் செய்திகள்
சபரியும் ராமனும்!
புனர்பூச நட்சத்திரமும் புனிதன் ஸ்ரீராமபிரானும்
அயோத்தியை மீட்ட குசன்
கணவன் உயிரை மீட்ட காரடையான் நோன்பு
கீரை சென்ற தூது
அவனுக்கு உண்டு உனக்கு இல்லை
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!