SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆதவன் வழிபட்ட அற்புத ஆலயங்கள்

2023-01-18@ 12:05:12

சூரியன் தன் ஒளிக்கிரணங்களால் காலை உதயவேளையில் கோபுரவாயில் மண்டபங்களைக் கடந்து கருவறையில் நிறைந்து சிவலிங்க மூர்த்தியை ஜோதி மயமாக்கும் திருத்தலங்களும் உண்டு.  பொங்கல் நன்னாளில் இத்தலங்களையும் அருகிலுள்ளோர் தரிசிக்கலாம். இந்த தலங்களும் பாஸ்கர க்ஷேத்திரங்கள் என்றே அழைக்கப் படுகின்றன.

இந்த ஆலயங்களில் சூரியனின் ஒளி ஆண்டுதோறும் குறிப்பிட்ட சில நாட்களில் கருவறையிலுள்ள சிவலிங்கத்தின் மீது விழுகின்றன. சிலர் இது கட்டிடக்கலை நுணுக்க அமைப்பால் அமைந்த விந்தை என்பர்.  என்றாலும் பக்திமான்கள் சூரியன் தன் ஒளிமாறாமல் சிவபெருமானை வழிபாடு செய்யும் நிலை என்றே எண்ணுவர். பெரும்பாலும் காலைவேளைகளில் மட்டுமே இவ்வாறு ஒளிக்கதிர்கள் இறைவன் மீது படியும் வகையில் அமைந்துள்ளதைக் காண்கிறோம்.

சில மேற்கு நோக்கிய தலங்களில் மாலை நேரத்தில் ஒளி விழும்படியாகவும் அமைக்கப்பட்டுள்ளன. பொதுவாக மூன்று நாட்கள் மட்டுமே சூரிய ஒளிவிழும் வகையில் பல கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருச்செம்பொன் பள்ளியில் பன்னிரண்டு நாட்கள் ஒளிவிழுகிறது என்கின்றனர். பொதுவாக ஆண்டிற்கு ஒருமுறையே இப்படி ஒளிவிழும் நிலை உள்ளது. அபூர்வமாக திருநெல்லிக்கா எனும் தலத்தில் ஐப்பசி மாதத்திலும் மாசி மாதத்திலும் ஆக இரண்டுமுறை கதிர்கள் விழும்படி அமைக்கப்பட்டுள்ளன.

மேற்குறித்த அனைத்து தலங்களிலும் சிவலிங்கத் திருமேனியை மட்டுமே சூரியனின் கதிர்கள் ஒளியூட்டுகின்றன.  பனையபுரம் எனும் தலத்தில் அம்பிகையின் பாதத்திலும் ஒளி வெள்ளம் சில நாட்கள் விழுவதைக் காண்கிறோம். இனி, சூரியனின் ஒளிக்கதிரால் வழிபாடு செய்யும் திருமுறைத் தலங்களை காணலாம்.

1.   மயிலாடுதுறையை அடுத்த அன்னியூரில் பங்குனி 24 முதல் 28 வரை ஐந்து நாட்கள் - இறைவன் பெயர் - ஆபத்சகாயேஸ்வரர், இறைவியின் பெயர் - பெரியநாயகி.

2.  கும்பகோணம் நாகேசுவரசுவாமி - சித்திரை 11.12.13, ஆகிய மூன்று நாட்கள். நாகேஸ்வர சுவாமி - பெரியநாயகி.

3.   காரைக்கால் அருகிலுள்ள கோயிற்பத்து எனப்படும் திருத்தெளிச்சேரி - பங்குனி 13 முதல் பத்து நாட்களுக்கு- பார்வதீஸ்வரர்- சத்தியம்மை.

4.  தஞ்சை மாவட்டம் திருவாரூருக்கு தெற்கேயுள்ள நெல்லிக்கா மேற்கு நோக்கிய சந்நதியாக இருப்பது - ஐப்பசி தீபாவளி (கிருஷ்ண பட்ச சதுர்த்தசி முதல் ஏழு நாட்கள் - மாசி மாதம் 18 தேதி முதல் ஏழு நாட்கள் ஆக ஆண்டில் இருமுறை. நெல்லிவனநாதர் - மங்களநாயகி.

5. தஞ்சை மாவட்டம் - சாலியமங்கலத்தை அடுத்து பருதியப்பர் கோயில் என வழங்கும் பருதிநியமம் - பங்குனி 19 ஆம் தேதி - மருதீஸ்வரர் - மங்களநாயகி.

6.  விழுப்புரத்தை அடுத்த பனையபுரம் எனப்படும் புறவார் பனங்காட்டூர். சித்திரை 1 முதல் 7 ஆம் தேதி வரை - பனங்காட்டீஸ்வரர் - புறவம்பை.

7. தஞ்சாவூரிலிருந்து ஒன்பது கி.மீ தொலைவில் உள்ள திருக்கண்டியூர் - மாசி 13,14,15 ஆகிய நாட்களில் மாலை 4.45 முதல் 6.10 வரை - வீரட்டேஸ்வரர் - மங்களநாயகி.

8.   திருவாரூரை அடுத்த பேரளம் இருப்புப்பாதை நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள திருமீயச்சூரில் சித்திரை- 21 முதல் ஏழு நாட்கள்-மேகநாதர் - சௌந்தரநாயகி. இங்கு ரதசப்தமியில் விழா கொண்டாடப்படுகின்றது.

9. மகேந்திரபள்ளி - பங்குனி 1 முதல் 7 வரை - திருமேனி அழகர் - சோம வடிவாம்பிகை. - இங்கு கதிரவன் வழிபடுவதை சந்திரன், கதிரவன் எனத் தொடங்கும் சம்பந்தரின் பாடல் குறிக்கிறது.

10. இன்னம்பூர்-கும்பகோணத்தை அடுத்துள்ளது. தேவாரத்தலம் இனன் - சூரியன் இனன் வழிபட்ட தலம். எழுந்தறிநாதர் - சுகந்த குந்தளாம்பிகை.

இவைகளேயன்றித் திருமுறைத்தலங்களாக இல்லாத பரங்கிப்பேட்டை அகரம் திருமூலநாத சுவாமி கோயில், பிடாகம் சந்திரநாதசுவாமி கோயில் முதலிய எண்ணற்ற கோயில்களில் இத்தகைய சூரியக்கதிர் வழிபாட்டினைக் காணலாம்.

ஆதித்யனுக்கு அபயம் அளித்த திருநீடூர் அம்பிகை

சோழ நாட்டுத் தேவாரத் தலங்களில் ஒன்றாகத் திகழ்வது திருநீடூர் ஆகும். மயிலாடுதுறையில் இருந்து நீடூருக்குப் பேருந்து வசதி உள்ளது.
இங்கு முதல் யுகத்தில் சூரியன் வழிபட்டான் என்பர். இங்குள்ள இறைவன் சோமநாதேஸ்வரர் என்றழைக்கப்படுகின்றார். இறைவிக்கு ஆதித்ய அபயப்பிரதாம்பிகை என்று பெயர்.

ஒரு சமயம் இறைவனுடைய கோபத்திற்கு அஞ்சிய சூரியனுக்கு அபயம் கொடுத்ததால் இவள் ஆதித்ய அபயப்பிரதாம்பிகை என்று அழைக்கப்
படுகின்றாள் என்பர். இங்கு சூரியன் அம்பிகைக்கு வழிபாடு செய்ய எடுத்த குளம் சூர்ய புஷ்கரணி என வழங்குகின்றது என்பர்.

சூரியன் வழிபடும் மங்கலநாயகி


சூரியனால் வழிபாடு செய்யப்பட்டு சிறப்பு ெபற்ற திருத்தலங்களில் உள்ள அம்பிகைக்கு மங்கலநாயகி என்பதே பெயராகி விளங்குகின்றது. இத்தலங்களில் உள்ள தீர்த்தங்கள் சூரிய தீர்த்தங்கள் என்றே அழைக்கப்படுவதும் குறிக்கப்படுவதாகும். நெல்லிக்கா, பருதி நியமம், மங்கலக்குடி, குடந்தை, சிறுகுடி முதலிய தலங்கள் யாவும் சூரியன் தன்பெயரால் தீர்த்தம் அமைத்து சிவ வழிபாடு செய்த தலங்களாகும்.

இங்குள்ள அம்பிகைளின் பெயர்கள் யாவும், ‘‘மங்கல நாயகி’’ என்றே அமைந்திருப்பது எண்ணத்தக்கதாகும். காசியில் சூரியன் அமைத்து வழிபட்ட சிவலிங்கம் கபஸ்தீஸ்வரர் என்றும் அம்பிகை மங்கள கௌரி என்று வழங்குவதும் இங்கு எண்ணத்தக்கதாகும். எனவே, சூரியன் வழிபட்ட அம்பிகைக்கு மங்கல நாயகி என்பது சிறப்புப் பெயராக விளங்குவதை அறியலாம்.

தொகுப்பு: அனந்தபத்மநாபன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • gandhi-13

  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

 • taipei-fashion-week-taiwan

  தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

 • kalifffo1

  தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

 • pak-123

  பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

 • cherry-blossom-tokyo

  டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்