SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தை மாதத்தின் சிறப்புகளும் ராசி பலன்களும்!

2023-01-18@ 10:11:12

பகவத் கைங்கர்ய, ஜோதிட ஸாகர சக்கரவர்த்தி A.M.ராஜகோபாலன்

மாதங்கள் 12 என்றாலும், தை மாதத்திற்கென்று ஓர் விசேஷ மகிமையும், தெய்வீகமும் உள்ளன. தேவர்களின் உலகமான சுவர்க்கத்திற்கு, பகல் நேரம் ஆரம்பமாகும் வேளையைக் குறிக்கிறது, தை மாதம். சூரிய பகவான், தனுர் ராசியை விட்டு, மகர ராசியில் சஞ்சரிக்கும் காலமே, மகர மாதம் எனவும், தை மாதம் எனவும் போற்றப்படுகிறது. இதுவே தட்சிணாயன காலம் முடிந்து, தேவர்களின் பகல் நேரமாகிய உத்தராயண புண்ணிய காலம் ஆரம்பிக்கும் காலமுமாகும்.

இந்த உத்தராயணப் புண்ணிய தினத்திற்காகத்தான், தட்சிணாயன காலத்தில் மரித்தவர்கள் விரஜை எனும் மகத்தான புண்ணிய நதியின் கரையில், சுவர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படுவதற்காகக் காத்து நிற்கின்றனர் என, ‘‘கருட புராணம்” மற்றும் “பூர்வ ஜென்ம நிர்ணய ஸாரம்” போன்ற சூட்சும கிரந்தங்கள் விளக்கியுள்ளன. தை மாதம் பிறக்கும் தினத்தைத் தான், “மகர சங்கராந்தி” எனவும், “பொங்கல் பண்டிகை” எனவும் நாம் கொண்டாடியும், பூஜித்தும் வருகிறோம். சூரியன், மகர ராசிக்கு மாறுகிறார். ஆதலால், அன்றைய தினம் முகூர்த்த நேரம் பார்த்து, புதுப்பானையில் பொங்கல் செய்து, சூரிய பகவானுக்கு நைவேத்தியம் செய்து பூஜித்து வருகிறோம்.

ஆத்ம, பித்ருகாரகரான சூரியன், மகர ராசியில் சஞ்சரிக்கும் தைமாதம் பல குடும்பங்களில் சுப காரியங்கள் நிகழ்வதற்கு உரிய காலமாகக் கருதப்படுகிறது. ஆதலால்தான், திருமணத்திற்கு வரம் அமைவதில் தடங்கலும், தாமதம் ஏற்பட்டால், “தை பிறந்தால், வழி பிறக்கும்....” என்றொரு மூதுரையும் வழக்கில் வந்துள்ளது. தை மாதத்தின் மீது அத்தனை நம்பிக்கை, நம் மக்களுக்கு! குருவின் ஆட்சி வீடுகளான மீனத்திலும், தனுர் ராசியிலும் சூரியன் சஞ்சரிக்கும் காலங்களில், உலக மக்கள் நன்மை பெறுவார்கள் என ஜோதிடக் கலை கூறுகிறது. தை மாதத்தில் சூரியனுக்கு பொங்கல் நைவேத்தியம் செய்து பூஜிக்கும் வழக்கம் சங்க காலத்திலிருந்தே, தமிழகத்தில் இருந்து வந்துள்ளது.

குருக்ஷேத்திர யுத்தத்தில், பீஷ்மர், படுகாயமடைந்தது தட்சிணாயன காலத்தில், அவரது தாயான ஸ்ரீகங்காதேவி அவருக்கு ஒரு வரம் அளித்திருந்தாள். அதாவது, அவர் எப்பொழுது தனது சரீரத்தை விட வேண்டும் எனத் தீர்மானிக்கின்றாரோ அப்போதுதான் அவருக்கு மரணம் ஏற்படும் என்பதே அந்த வரம். தட்சிணாயன காலத்தில் சுவர்க்கத்தின் வாயில்கள் மூடப்பட்டிருக்கும் என்பதால்தான் பீஷ்மர் உத்தராயண புண்ணிய காலம் பிறக்கும் வரை காத்திருந்து, தனது சரீரத்தை விடுத்து சுவர்க்கம் புகுந்தார்.

உத்தராயணம் பிறக்கும் நன்னாளில் (தை 1) சூரியனைப் பூஜிக்கிறோம். பித்ருகாரகரான அவரைப் பூஜித்த பிறகு, பித்ருக்களையும் (மறைந்த நமது முன்னோர்கள்) பூஜித்து, அவர் களது ஆசிகளைப் பெறுகிறோம். மறுநாள், பசுக்கள், அவற்றின் கன்றுகள், காளைகள் ஆகியவற்றையும் நீராட்டி, மஞ்சள், குங்குமம் இட்டு, புஷ்பத்தினால் அலங்கரித்து, தூப, தீபங்கள் காண்பித்து பூஜிக்கின்றோம்.

பசுவின் சரீரத்தில், மும்மூர்த்திகள் என நாம் வணங்கிவரும் ஸ்ரீமகாவிஷ்ணு, ஸ்ரீசிவபெருமான், ஸ்ரீபிரம்மதேவர் ஆகியோரும், அவர்களது தேவியர்களான முறையே ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீபார்வதி, ஸ்ரீசரஸ்வதியும், கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, காவிரி, கிருஷ்ணா, சிந்து, துங்கபத்திரை, மந்தாகினி, அலகநந்தா, வேகவதீ ஆகிய புண்ணிய நதிகளும், நவக்கிரகங்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும் சூட்சும வடிவில் இருப்பதால், பொங்கலன்று பசுக்களையும், கன்றுகளையும், அவற்றிற்கு ஆதரவாகவுள்ள காளைகளையும் வழிபடுவதால், அறிந்தோ, அறியாமலோ, சந்தர்ப்பச் சூழ்நிலைகளினாலோ செய்துள்ள அனைத்து பாவங்களும் மறையும் என தர்ம நீதி நெறி நூல்கள் உறுதியளிக்கின்றன.

சூரியனே நமது இதயப் பகுதியையும், ரத்த விருத்தியையும், சருமத்தையும் பாதுகாத்து வருவதால், சூரியனைப் பூஜிப்பதால், ஆரோக்கியம் கிட்டும்.  பித்ருக்கள் மகிழ்ச்சியடைவார்கள். நமக்கு ஆத்ம பலம் கிடைக்கும். இத்தகைய புனிதம் வாய்ந்த தை மாதத்தில், ஒவ்வொரு ராசியினருக்கும் ஏற்படவுள்ள ராசி பலன்களைத் தெரிந்து கொள்வோம். கிரகங்களின் சஞ்சார பலன்களையும், அவற்றிற்கு ஏற்ப எளிய பரிகாரங்களையும் கூறியுள்ளோம். மிகப் புராதன சூட்சும நூல்களிலிருந்து எடுக்கப்பட்ட பரிகாரங்கள் இவை. நிச்சயம் பலனளிக்கும். இவற்றால் எமது வாசக அன்பர்கள் பயனடைந்தால், அதுவே நாங்கள் பெறும் பேறாகும்.

பொங்கல் பண்டிகை (மகர சங்கராந்தி)

15-01-2023 :  ஞாயிற்றுக்கிழமை பொங்கல் பண்டிகை புதுப் பானையை நன்கு அலங்கரித்து வைத்து, பொங்கலிட சுப முகூர்த்த நேரம்: காலை மணி 7:40க்கு மேல் 8-57 மணிக்குள் வைக்க, சுப முகூர்த்த நேரமாகும்.

16-01-2023 : திங்கட்கிழமை மாட்டுப் பொங்கல். நமக்காகத் தங்கள் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து, உழைக்கும் பசுக்கள், காளைகள், அவற்றின் கன்றுகள் ஆகியவற்றிற்கு நீராட்டி, மலர்களால் அலங்கரித்து பூஜிக்கவேண்டிய புண்ணிய தினம்.

17-01-2023 : செவ்வாய்க்கிழமை காணும்பொங்கல். பெரியோர்களை தரிசித்து, ஆசிபெறவேண்டிய புண்ணிய தினம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • cherry-blossom-tokyo

  டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

 • baaagh11

  பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

 • somaliya-dead-2

  சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

 • aus-fish-21

  ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

 • eqqperr1

  ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்