SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வார விசேஷங்கள்

2023-01-13@ 17:31:36

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

14.1.2023 - சனி  
போகிப்பண்டிகை


பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் தட்சிணாயண காலத்தின் நிறைவுநாள் கொண்டாடப் படும் பண்டிகை போகிப் பண்டிகை. “போகி” என்பது இந்திரனின் பெயர். இந்த நாள் ‘பழையன கழித்து, புதியன புகவிடும்’ நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், பயனற்றவற்றையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது.  பழந்துயரங்களை அழித்துப் போக்கும் இந்த பண்டிகையைப் ‘‘போக்கி’’ என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி ‘‘போகி’’ என்றாகிவிட்டது.

அந்த கால வழக்கப்படி ஆண்டின் கடைசி நாள் என்பதால் நடந்துமுடிந்த நல்நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. கண்ணபிரான் அவதார காலத்தில் மழை வேண்டி இந்திரனுக்கு பூஜை செய்ய வேண்டும் என்று ஆயர்பாடியில் அனைவரும் விரும்பினார்கள். அப்போது கண்ணன், “சூரியன், இந்திரன், வாயு முதலிய அனைத்துத் தேவர்களும் மந்நாராயணனுக்குக் கட்டுப்பட்டவர்கள்.

எனவே இந்திரனுக்கு பூஜை செய்வதைவிட, நமக்கு மழையைத் தருவதும், பசுக்களுக்கு நல்ல தழைகளைத் தருவதுமாகிய இந்த மலைக்கு பூஜை போடலாம்” என்று சொன்னான்.  கோவர்த்தனகிரியாகிய மலைக்கு பூஜை செய்ய, கோபம்கொண்ட இந்திரன், கடுமையான மழை பொழிய, தன்னை நம்பிய ஆயர்களையும் பசுக்களையும் காப்பதற்காகக் கோவர்த்தனகிரியைக் குடையாய்ப் பிடிக்கிறான் என்பது பாகவத புராணம்.

கண்ணனுடைய பெருமைகளை உணர்ந்த இந்திரன், இறுதியாக கண்ணனிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, கோவிந்தராஜ பட்டாபிஷேகம் செய்கின்றான்.  எனவே போகிப் பண்டிகை என்பது கோவிந்த பட்டாபிஷேக நாள் என்று வைணவ ஆலயங் களில் கொண்டாடப்படுகிறது.  குறிப்பாக, சிதம்பரத்தில் உள்ள ஆலயத்தில் அன்று கோவிந்தராஜப் பெருமாளுக்கு பட்டாபிஷேகம் செய்யப்படுகிறது. மார்கழி மாதத்தின் நிறைவு நாளான போகிப்பண்டிகை அன்று கண்ணன் ஆண்டாளுக்கு காட்சியளித்தான்.

ஆண்டாள் விரும்பிய வண்ணம் அவளைத் திருமணம் செய்துகொண்டான். எனவே, ஆண்டாள் திருக்கல்யாண நாளாக போகிப் பண்டிகை இப்பொழுதும் பல வைணவ ஆலயங்களில் கொண்டாடப்படுகிறது. போகிப்பண்டிகை அன்று அதிகாலை நீராடி பல்வேறு காய்கறிகள் சமைக்கப்பட்ட உணவை பகவானுக்கு நிவேதனம் செய்யவேண்டும். போகி அன்று, வைகறையில் ‘நிலைப்பொங்கல்’ வைக்கப்படும்.

வீட்டின் முன்வாயில் நிலைக்கு மஞ்சள் பூசி, திலகமிட்டு, தோகை விரிந்த கரும்பொன்றைச் சாத்தி நிற்கச் செய்து வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, குங்குமம் வைத்து, தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி வணங்குவர். அன்று போளி, வடை, பாயசம், மொச்சை, சிறுதானியங்கள், பருப்பு வகைகள் போன்றவை இறைவனுக்குப் படைக்கப்படும். பிறகு அனைவரும் உண்டுகளிக்க வேண்டும்.

15.1.2023 - ஞாயிறு  
பொங்கல் பண்டிகை


தை மாதத்தின் முதல் நாள். சூரியன் தன் வடதிசைப் பயணமான உத்தராயணப் பயணத்தைத் தொடங்கும் புனிதமான நன்னாள். “மகரசங்கராந்தி” என்று இந்த நாளைக் கொண்டாடுவார்கள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழிக்கேற்ப இந்த நாளை நாம் அனைவரும் மிகச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதமாகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சர்க்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப்பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கி சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.

பொங்கல் பண்டிகை அன்று, அறுத்த நெற்கதிர்களை வீட்டுக்கு எடுத்து வருவர். அந்த கதிர்களை பகவானுக்குப் படைத்து, வீட்டின் வாயில் நிலைப்படியின் மேல், பசுஞ்சாணம் கொண்டு ஒட்டி வைப்பர். அதில் மஞ்சள், சந்தனம், குங்குமம் இட்டு, பூஜைசெய்வர். அதைப்போலவே அதை அழகான வளையமாகக் கட்டி, தூக்கு கூடு போல வீட்டில் தொங்க விடுவதும் உண்டு. இன்றும் கிராமத்துப் பழைய வீடுகளில் மரத்தூண்களின் மேல் நெல்மணிக்கதிர்களால் கட்டப்பட்ட பிரிமணை வளையங்களைப் பார்க்கலாம்.

அதிலே இருக்கிற தானியங்களைப் பறவைகள் சிட்டுக்குருவிகள் வந்து உண்டு மகிழும். அந்தப் பறவைகள் சத்தம் வீடுகளில் கேட்கும்பொழுது மங்களங்கள் பெருகும். அதுவும் இன்று சூரியனுக்குரிய ஞாயிற்றுக்கிழமை. ``பொங்கலோ... பொங்கல்’’ என்று குலவையிட்டு முற்றத்தில் ஒரு தூய்மையான இடத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கே ஒரு அடுப்பை வைத்து, கோலம் போட்டு, பானையில் மஞ்சள் கட்டி, இருபுறமும் கரும்பு வைத்து, பாலில் புது அரிசி யும் வெல்லமும் சேர்த்து பொங்கல் வைக்க வேண்டும்.

பானையில் பொங்கல் எந்தப் பக்கம் வழிகிறது, எது முதலில் பொங்குகிறது என்பதை வைத்துக்கொண்டே அந்தக் காலத்தில் குறி சொல்பவர்கள் உண்டு.
எது எப்படியாயினும் குடும்பத்தோடு குதூகலமாக இப்படிப் பொங்கல் பொங்குவது நம்முடைய வாழ்க்கை நன்றாக வளர்வதைக் காட்டுகிறது. பொங்கல் வைக்கும் நேரம் காலை 8.00 மணி முதல் 10.00 மணி வரை. பகல் 11.00 மணி முதல் 12 மணிக்குள்.

16.1.2023 - திங்கள்
மாட்டுப்பொங்கல்


இன்று அவசியம் ``கோ பூஜை’’ செய்யவும். உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே மாட்டுப் பொங்கல்நாளாகும். மாட்டுப் பொங்கல் அன்று கோ பூஜை செய்ய வேண்டும். மதுரை மாவட்டத்தில் பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு உண்டு. மாட்டுப்பொங்கல் பட்டிப் பொங்கல் அல்லது கன்று பொங்கல் என்றும் சொல்வதுண்டு.

மாடுகள் மற்றும் கன்றுகளின் தொழுவம் சுத்தம் செய்ய வேண்டும். குரு ஓரையில் (காலை 8-9) அல்லது மாலை (3-4) மாடுகளுக்கு ஜலத்தில் வில்வ இலை, வெட்டிவேர், சிவப்புப் பூசணி பூ, புஷ்பம், சங்கராந்தி பொங்கல் பூஜை செய்த புஷ்பம், இவைகளை தண்ணீரில் போட்டு, அதனுடன் பன்னீர் கலந்து குளிப்பாட்டி விடவேண்டும். மாடுகளை குளிப்பாட்டி அவற்றின் கொம்புகளில் வண்ணம் பூசி அலங்கரித்து, சலங்கை கட்டிவிடுவார்கள்.
 
மேலும் அவற்றுக்குப் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு உள்ளிட்டவற்றையும் அணிவித்து மாடுகளையும், கருவிகளையும் வழிபடுவார்கள். ‘பட்டி பெருக! பால்பானை பொங்க!  நோவும் பிணியும் தெருவோடு போக!’ என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.
மாடுகளை மட்டுமின்றி உழவுக்கு உதவும் கருவிகளையும் சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைத்து மாடுகளோடு சேர்த்து அவற்றையும் வழிபடுவார்கள். மாடுகள் இல்லாதவர்கள் ``காமதேனு பூஜை’’ செய்யலாம்.

17.1.2023 - செவ்வாய்  
தாயுமானவ சுவாமிகள் குருபூஜை


தமிழ்நாட்டில், நாகப்பட்டினம் மாவட்டத்தில், திருமறைக்காடு என்று அழைக்கப்படும் வேதாரண்யத்தில் பிறந்தார்.  இவர் தந்தையார் கேடிலியப்பர் மற்றும் தாயார் கெசவல்லி அம்மையார் ஆவார்கள். திருச்சி தாயுமானேஸ்வரரின் அருளால் பிறந்த குழந்தைக்கு தாயுமானவர் என்ற பெயர் சூட்டப்பட்டது. திருச்சிராப்பள்ளியை ஆண்டுகொண்டிருந்த விஜய ரகுநாத சொக்கலிங்கரிடம் கணக்கராகப் பணிபுரிந்தவர். மிக எளிமையான, வாழ்க்கை வாழத் தேவையான பல பாடல்களை எழுதியவர்.

தவநெறியில் சிறந்து விளங்கியவர். பல திருத்தலங்களுக்கும் சென்று இறைவனைப் பாடி வழிபட்டவர். “எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே” என்று பாடியவர் தாயுமானவ சுவாமிகள்.  தாயுமானவ சுவாமிகள் திருப்பாடல் திரட்டு என்னும் நூலில் 56 தலைப்புகளில் 1452 பாடல்கள் உள்ளன.

அவற்றில் 771 பாடல்கள் கண்ணிகளாகவும், 83 பாடல்கள் வெண்பாக்களாகவும் உள்ளன. இவருடைய `பராபரக்கண்ணி’ மிகவும் புகழுடையது.
இதில் 389 கண்ணிகள் இடம்பெற்றுள்ளன. பராபரக்கண்ணியில், “அண்டகோடி புகழ்காவை வாழும் அகிலாண்ட நாயகி என் அம்மையே!” என்று தாயுமானவர் அம்பாளைப் பாடியுள்ளார்.

1736 ஆம் ஆண்டு துறவு பூண்ட தாயுமானவரை, ஒரு சித்தர் என்பார்கள். அவர் சமரச சன்மார்க்க நெறியைப் பரப்பினார்.  அவர் முக்தி பெற்ற இடம் இராமநாதபுரத்தில் உள்ள இலட்சுமிபுரமாகும். அவருடைய குரு பூஜை நாள் இன்றைய நாள்.

18.1.2023 - புதன்
சபலா ஏகாதசி


தை மாதத்தில் வருகின்ற வளர்பிறை ஏகாதசிக்கு “சபலா ஏகாதசி” என்று பெயர். இந்த ஏகாதசியில் காலையில் எழுந்து நீராடி, விரதத்திற்குத் தயாராக வேண்டும். ஏகாதசியில் துளசி இலைகளைப் பறிக்கக்கூடாது. முதல்நாளே பறித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அன்று முழுவதும் பகவான் நாராயணனை நினைத்து விரதமிருந்து, அடுத்த நாள் காலை துவாதசிபாரணை செய்து, விரதத்தை நிறைவேற்றவேண்டும்.

எக்காரணத்தை முன்னிட்டும் ஏகாதசி நாளிலும், துவாதசி பாரணை முடிந்தபிறகும் பகலில் உறங்கக்கூடாது.  இறைவனுடைய திருநாமத்தைச் சொல்ல வேண்டும். அவருடைய கீர்த்தனங்களை இசையோடு பாடவேண்டும். புராண இதிகாசங்களை வாசிக்க வேண்டும்.  ஏகாதசி விரதம் இருந்து துவாதசி அன்று நம்மால் இயன்ற அளவு தானங்களைச் செய்தால், நம்முடைய பாவங்கள் நீங்கும்.

உடல் ஆரோக்கியம் மேம்படும். வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். சந்ததி வளரும். ஏகாதசி விரதத்தை முறையாக இருக்க முடியாதவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், ஆரோக்கியக் குறைவு உள்ளவர்கள், சர்க்கரை நோய் போன்ற நோயால் அவதிப்படுபவர்கள், லேசான உணவு, பால்பழங்கள் எடுத்துக் கொண்டு உபவாசம் இருக்கலாம்.

முழுஅரிசியை எக்காரணத்தை முன்னிட்டும் உபயோகிக்கக் கூடாது. பின்ன அரிசியில், அதாவது அரிசியை உடைத்து உப்புமா போன்ற பலகாரங்களைச் செய்து லேசாக, கால் வயிற்றுக்குச் சாப்பிடலாம். இதன்மூலம் பகவானுடைய திருவருள் கிடைப்பது மட்டுமல்ல, உடல் ஆரோக்கியமும் மேம்படும் என்பது மறைமுகமான பலன் என்பதை மறந்துவிடக்கூடாது.

மற்ற விசேஷங்கள்

15.1.2023 - ஞாயிறு - சபரிமலை மகரஜோதி தரிசனம்
18.1.2023 - புதன்-ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
19.1.2023 - வியாழன் - கல்லிடைக்குறிச்சி திருவாவடுதுறை சூரியனார்கோயில் போன்ற தலங்களில் சிவபெருமானின் உற்சவஆரம்பம் மற்றும் பிரதோஷ நாள்.  
20.1.2023 -  வெள்ளி - மாத சிவராத்திரி.

தொகுப்பு: விஷ்ணுபிரியா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்