SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எண்ணிய மணக்கோலம் காண அருள்கிறாள் சாமாயி

2023-01-13@ 15:12:04

முக்குடி, சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவிற்குட்பட்டது முக்குடி கிராமம். இங்கு கோயில் கொண்டு அருள்கிறாள் மாயக்குருவி, சாமாயி அம்மன். சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு, முக்குடி கிராமத்தில் செருப்பு தைக்கும் தொழிலாளி கந்தையா தனது மனைவியோடு வாழ்ந்துவந்தார். அந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதனையறிந்த அந்த பகுதியினர், அவர்களை மலைமீது அருள்பாலிக்கும் அழகர் ஆலயத்துக்குச் சென்று வேண்டிக் கொள்ளுமாறு கூறினார்கள்.

அதனையேற்று அவர்களும் அழகர் ஆலயம் சென்று வழிபாடு செய்துவந்தனர். அன்றிரவு அங்கேயே படுத்து தூங்கினார்கள். கந்தையா கனவில் தோன்றிய பெருமாள், கந்தையாவுக்கு ஆண் குழந்தை பிறக்கும் எனவும் அதற்கு மாயக்குருவி என்ற பெயர் வைக்க வேண்டும் எனவும் கூறினார். அதன்படியே கந்தையா மனைவி கர்ப்பமுற்றாள். அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

மாயன் அருளால் பிறந்த மாயக்குருவி   
     
மாயக்குருவியின் பெற்றோர் செருப்பு தைப்பவர்கள். அவர்களுக்கு அங்கு அதிக வருமானம் இல்லை என்பதினால் அவர்கள் நதிக்கு அந்தப் பக்கத்தில் இருந்த ஒரு பண்ணைக்குச் சென்று வேலை பார்த்து வந்தார்கள். தினமும் மாயக்குருவியின் தாயார் அவனையும் வேலைக்குச் செல்லும்போது அழைத்துச் செல்வாள்.  ஒரு நாள், அவள் வேலைக்குச் செல்லும் முன் வைகை ஆற்றுக்கு இக்கரையில் உள்ள உடை மரத்தில் தொட்டில் கட்டி மாயனைத் தூங்க வைத்த பிறகு அக்கரைக்குச் சென்று வயலில் நடவு வேலை செய்தாள். விஷ்ணு அவர்களுடன் விளையாட நினைத்தார்.

பெரும் மழையையும், அந்த நதியில் பெரும் வெள்ளத்தையும் திடீரென ஏற்படுத்தினார். மாயக்குருவிக்கு பாதுகாப்பாக இருக்க ஒரு ஐந்து தலை நாகப்பாம்பையும் குடையாக அனுப்பினார். செம்மறியாடு ஒன்று அந்தக் குழந்தைக்குப் பாலூட்டியது. அந்த குழந்தையின் தாயார் பதறினாள். மூன்று நாட்கள் கழித்து வெள்ளம் வடிந்த பிறகு தொட்டில் கட்டிய இடத்துக்கு வந்த தாய், குழந்தையைத் தூக்கியபோது ஆடு மேய்க்கும் ஒருவர் குறுக்கிட்டார்.
மூன்று நாட்களாகக் குழந்தையை செம்மறி ஆடும், பாம்பும் காத்தன.

இனி செம்மறி ஆட்டுக்கறி சாப்பிடுவதில்லை, பாம்புகளை கொல்வது இல்லை என சத்தியம் செய் என்று கேட்டார். மாயனின் தாயும் சத்தியம் செய்து குழந்தையைத் தூக்கிச் சென்றாள். நாட்கள் ஓடின.  ஒருநாள், முக்குடி வழியாக வந்த வேடன் ஒருவன் வல்லத்தான் குருவி ஒன்றைக் கொண்டு வந்தான். அந்தக் குருவி மேல் ஆசைப்பட்ட மாயக்குருவி அதை வாங்கித் தரும்படி தாயிடம் அடம் பிடித்தான். “ஐயா உங்களுக்கு செருப்பு தைச்சுத் தாறோம். அந்தக் குருவியை எம் புள்ள கேக்கிறான். குடுப்பீங்களா?” என்று கேட்டாள் மாயக்குருவி தாய். வேடனும் மறுப்புச் சொல்லாமல் அந்தக் குருவியை மாயக்குருவியின் கையில் கொடுத்தான். அதைச் செல்லமாக வளர்த்து வந்தான் மாயக்குருவி.

ஒருநாள் பொழுதில் மலர்ந்த காதல்
       
மதுரை சித்திரை மாதத்திருவிழாவில் சித்தலக்குடி ஊரில் இருந்து வந்த இளமங்கை, மாயக்குருவியின் கையில் இருந்த குருவியைப்பார்த்து மகிழ்ச்சி பொங்கி குருவியின் மேல் கொண்ட மோகத்தால், மாயக்குருவியைப் பின் தொடர்ந்தாள்.  இளம் பெண் ஒருவர் பின் தொடர்வதை அறிந்த மாயக்குருவி யார் என்று கேட்க, தன் ஊரையும், பேரையும் சொன்ன அவள், தனது பெற்றோர் பற்றியும், மாயக்குருவியின் பின்னால் வந்த காரணத்தையும் கூறினாள். அவள் பெயர் சாமாயி, பெயரைக் கேட்ட மாயக்குருவி, சாமாயின் பெயர்க் காரணம் கேட்டான்.

அதற்கு, சாமத்தில் பிறந்ததால் தனக்கு சாமப் பொழுதை ஆளும் அந்த ஆதிபராசக்தியின் பெயரை சாமாயி என்று தனது பெற்றோர் இட்டதாக கூறினாள்.
இருவரும் பேசிக் கொண்டிருக்க, அழகர் ஆற்றில் இறங்கிவிட்டு செல்ல, பொழுதும் புலர்ந்தது. இரவு முழுக்க ஒரு ஆணுடன் பேசிவிட்டு வந்ததை உறவினர்கள் அறிந்ததால், அசிங்கப்பட்டு போகும் என்று எண்ணிய சாமாயின் பெற்றோர்கள், மாயக்குருவியின் பெற்றோரை அழைத்து சம்மந்தம் பேசினர்.

வைகை ஆற்றுக்குள் வைத்து ‘‘இதுதான் பொண்ணு. இதுதான் மாப்பிள்ளை” என்று  மாயக் குருவிக்கும், சாமாயிக்கும் பாக்கு மாற்றி நிச்சயம் செய்து, திருமணத்திற்கு நாள் குறித்தனர்.  ஒருநாள், குளத்தில் குளிக்கச் சென்ற மாயக்குருவி தனது வளர்ப்பு குருவியான வல்லத்தான் குருவியை கரையில் விட்டுவிட்டு குளித்தான். அவன் தண்ணீருக்குள் மூழ்கி இருக்குபோது, அந்தக் குருவி அருகில் இருந்த ஒரு மரத்தின் பொந்துக்குள் சென்று அமர்ந்து கொண்டது.

குளித்து முடித்து வெளியே வந்த மாயக்குருவி தனது வல்லத்தான் குருவி மறைந்திருந்த மரம் அருகே வந்தான்.  குருவியின் சத்தம் கேட்டு அது மறைந்திருந்த மரத்தின் பொந்தில் கையை விட்டான் குருவியை பிடிக்க, அப்போது அதே பொந்தில் மறைந்திருந்த பாம்பு அவனை கடித்துவிட்டது. அவன் மயங்கி கீழே விழுந்தான்.  இதனைக் கண்டவர்கள் மாயக்குருவியின் தாயாரிடம் சென்று செய்தியைக் கூற, ஓடி வந்து மகனை தன் மடிமீது வைத்துக் கொண்டு பெருமாளை நினைத்து ஒப்பாரி வைத்தாள்.  அந்த நேரம் அவள்  மடியிலேயே மாயக்குருவி உயிர் நீத்தான். முத்தாலக்குடிக்கு தகவல் அனுப்பிய பெற்றோர், மாயனின் உடலை மயானத்துக்கு எடுத்துச் சென்றனர்.

மாண்டவன் மாயனின் உடலை அண்டாத தீ

மாயனின் உடலை எரிக்க முயற்சித்தனர். ஆனால், உடலை நெருப்பு பற்றவில்லை. அப்போது அவனுடைய தாயாருக்கு சாமி வந்து, சாமாயி நெருப்புடன் வந்து அவனுக்கு தீ மூட்டினால் மட்டுமே என் மகன் உடல் மீது தீ பிடிக்கும் என்று கூறினாள். உடனே அனைவரும் சாமாயிக்கு தகவல் அனுப்ப, தகவலை கேட்ட சாமாயி துடிதுடித்துப் போனாள். குடி தண்ணீர் எடுக்கச் சென்றவள் கிணற்றடியில் குடத்தை அப்படியே போட்டுவிட்டு முக்குடிக்கு ஓடிவந்தாள் சாமாயி. மாயனின் உடலைக் கண்டு அழுது புரண்டாள்.

அவனது உடலில் நெருப்பு பற்றாததற்குக் காரணத்தைப் புரிந்து கொண்டாள். மாயனோடு உடன்கட்டை ஏற முடிவெடுத்தாள். அவளுக்கு நெருப்பு கிடைக்கவில்லை. அவளும் யாரிடமாவது நெருப்பை வாங்கிக் கொண்டுவர எண்ணி, அனைவரிடமும் சென்று நெருப்பு பானை கேட்டாள். ஆனால், எவரும் அவளுக்கு அதை தர முன் வரவில்லை.

மன்னன் கொடுத்த தீக்கங்கு

ஆகவே அவள் சிவகங்கை மன்னனிடம் சென்று கேட்க அவளுடைய துயரத்தைப் புரிந்து கொண்ட மன்னன் அவளுக்கு தங்கத்தினால் ஆன கரண்டியினால் மூன்று முறை எடுத்த நெருப்பை தர அதை அவள் தனது முந்தானையில் முடிந்து வைத்துக் கொண்டு சுடுகாட்டுக்குச் சென்றாள். அனைவருடைய கண்களும் நீர் நிறைந்த குளம்போல் இருந்தது. நெருப்பை குண்டத்தில் போட்டு தீ மூட்டிய சாமாயி, வல்லத்தான் குருவியை பிடித்துக் கொண்டு அந்த தீயில் விழுந்து மடிந்தாள். அன்று முதல் மாயக்குருவி, சாமாயியைத் தெய்வமாக்கி வழிபடுகின்றனர்.

இரண்டு வருடத்திற்கு ஒரு முறை, மாயக்குருவிக்கும் சாமாயிக்கும் திருமணம் நடக்க இருந்த அதே வைகாசி மாதத்தில் அதே நட்சத்திரத்தில் அல்லது பௌர்ணமியை ஒட்டி வரும் வெள்ளிக்கிழமையில் திருவிழாவைத் தொடங்கி மூன்று நாட்கள் தொடர்ந்து நடத்துகிறார்கள். முக்குடிக்கு அருகிலுள்ள புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் ஒவ்வொரு முறையும் மாயக்குருவி, சாமாயி சிலைகளைச் செய்து தருகிறார்.

மாயனுக்குக் குருவி பிடித்தமானது என்பதால் மாயனின் கையில் குருவியும், இடுப்பில் இருந்த குடத்தை போட்டுவிட்டு ஓடிவந்ததால் சாமாயியின் இடுப்பில் குடமும் இருக்குமாறு சிலைகள் செய்து வைக்கின்றனர். சிலைகள் செய்யப்படும் கிராமத்திலிருந்து திருமணக் கோலத்தில் வெள்ளிக்கிழமை இரவில் இருவரையும் முக்குடிக்கு தூக்கி வருகிறார்கள். அங்கே பழைய சிலைகளை அகற்றி விட்டு புதிய சிலைகளை வைத்து வழிபடுகிறார்கள்.

அன்றிரவு பதினோரு மணிக்கு மேல் பொங்கல் வைத்துப் படைக்கிறார்கள். மூன்றாவது நாள் சாமாயி உடன்கட்டை ஏறிய இடத்தில் நூற்றுக்கணக்கான பானைகளை வைத்து பூமி குளிர பொங்கலிடுகிறார்கள். மாயனின் தாய் செய்த சத்தியத்தின்படி, இன்றைக்கும் அந்த கோயிலில் வழிபடும் மக்கள் செம்மறி ஆட்டுக்கறி உண்பதில்லை. பாம்பைக் கண்டாலும் அடிப்பதில்லை.

தொகுப்பு: சு. இளம் கலைமாறன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • freddie-cyclone

  மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!

 • patrick-day-1

  அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!

 • france-123

  பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!

 • sydney-world-record

  புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்

 • padmavathi-kumbabhishekam-17

  சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்