சூரியக் கோயில்கள்
2023-01-12@ 17:12:46

நன்றி குங்குமம் ஆன்மிகம்
சூரிய வழிபாடு என்பது உலகின் மிகவும் பழமையான வழிபாடாகும். பழந்தமிழர்கள் பாலை நிலத் தெய்வங்களில் ஒன்றாக சூரிய பகவானாம் ஆதித்தனை வணங்கியுள்ளனர். ரிக் வேதம், சூரிய வழிபாடு பற்றிக் கூறுகிறது. தொல்காப்பியம், சிலப்பதிகாரம் ஆகியவற்றில் சூரியனுக்குக் கோயிலும், வழிபாடும் இருந்துள்ளது என தெரிவிக்கிறது.
சூரிய வழிபாடு என்றால் தமிழ்நாட்டில் நினைவில் வருவது தஞ்சை மாவட்டம் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள சூரியனார் கோயில். கி.பி.1079-1120 ஆண்டு வாக்கில் ஆண்ட முதலாம் குலோத்துங்கன்தான் இந்தக் கோயிலைக் கட்டியதாக கல்வெட்டில் அறிகிறோம். காலவ முனிவர் மட்டுமின்றி, பிற்காலத்தில், பல தேவர்களும் இங்கு வந்து வழிபட்டு தங்கள் தோஷங்கள் நீங்கப் பெற்றுள்ளனர்.
இங்குள்ள சூரியனார் கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலினுள் சூரிய புஷ்கரணி உள்ளது. அதில் ஸ்நானம் செய்துவிட்டு கோயிலின் கருவரையிலுள்ள உஷா, பிரத்யுஷா சமேத ஸ்ரீசூரிய பகவானை தரிசிக்க வேண்டும். பிறகு அருகில் உள்ள திருநீலக்குடி சென்று சிவனையும், பார்வதியையும் தரிசிக்க வெண்குஷ்டம் உள்ளிட்ட சகலதோஷங்களும் மறையும்.
கோனார்க் என்றால் மூலையிலுள்ள சூரியக் கடவுள் எனப் பெயர். ஒரு காலத்தில், கடலுக் கருகில் இந்த கோயில் இருந்தது. கோயில் இளர் சிவப்பு மணற்பாறைகள் மற்றும் கருப்பு கிரானைட் கற்களால் எழுந்துள்ளது. சூரிய பகவான் தாமரை மலரில் அமர்ந்தவர் என்பதால் ‘பத்ம ஷேத்ரம்’ என்ற சிறப்புப் பெயரும் இந்தக் கோயிலுக்கு உண்டு. ஒடிசாவின், கேசரி மன்னரால் கோயில் கட்ட 16 வருடங்கள் ஆனதாம். போர்ச்சுகீசியர்களால் சிதைக்கப்பட்ட பின் 1910-ஆம் ஆண்டு வாக்கில் நடந்த அகழ்வாராய்ச்சியில், இந்த கோயில் கண்டு பிடிக்கப்பட்டு, மீண்டும் புனரமைக்கப்பட்டது.
கலைக்கும், சிலைகளுக்கும் உலகப் புகழ் பெற்றது இந்த கோணார்க் கோயில். கோயில் தேர் போன்ற அமைப்பிலுள்ளது. போக மண்டபத்தில், சூரியனுடைய சிலையை காணலாம். மகிஷாசுரமர்த்தினி, பூரிஜகந்நாதர், சிவன், பார்வதி, கிருஷ்ணர் என அனைத்து கடவுள் சிலைகளும் அழகாக வடிக்கப்பட்டுள்ளன. இங்கு டிசம்பர் மாதம் நடைபெறும் நடனத் திருவிழாவில், ரதசப்தமி விழாவும் மிகவும் பிரபலம். அப்போது ஏராளமான பக்தர்கள், இங்கு குவிகின்றனர். இந்தக் கோயிலை யுனெஸ்கோ பாரம்பரிய நினைவிடமாக அறிவித்துள்ளது. ஒடிசா கட்டிடக்கலையைப் பின்பற்றி, சதுரம் மற்றும் பிரமிட் பாணியில் கோயில் அமைந்துள்ளது மிக சிறப்பான ஒன்றாகும்.
மோதேரா சூரியன் கோயில்குஜராத் மாநிலம் மோதேராவில் உள்ள சூரியன் கோயில், சோலங்கி வம்ச முதலாம் பீமதேவனின் மனைவியால் கி.பி.1026-ல் கட்டப்பட்டது. மெக்சனா மாவட்டம், புஷ்பாவதி நதிக்கரையில் இந்த கோயில் உள்ளது. அழகிய வேலைப் பாடுகளுடன் கூடிய சூரிய குளம் இங்குள்ளது. இவற்றின் படிக்கட்டுகளுக்கிடையே 108 சிறு சிற்பங்களையும், முகப்பின் மேல் விஷ்ணு, கணபதி, நடராஜர், பார்வதி என பல தெய்வங்களின் சிலைகளையும் தரிசிக்கலாம். இங்கு நாட்டியாஞ்சலி சிறப்பாக நடைபெறுகிறது.
சபாமண்டபம், 52 தூண்களால் ஆனது. தூண்கள் அனைத்தும் அழகிய வேலைப்பாடுகள் கொண்டவை. ராமாயணம், மகாபாரதம், கிருஷ்ண லீலா காட்சிகள் என அழகாக உள்ளது. கருவறையில் ஒரு காலத்தில் தங்கத்தில் சூரியன் சிலை அமைந்திருந்தது. அவை திருட்டுபோக, இன்று மாற்று சிலை காட்சி தருகிறது. மார்ச் -20, செப்டம்பர்- 21 ஆம் தேதி, ஒவ்வொரு வருடமும் சூரியஒளி, கருவறையில் உள்ள சூரிய பகவான் மீது விழுவது கண்கொள்ளாக் காட்சி. அலகாபாத்திலிருந்து 102.கி.மீ., தொலைவில் இந்த கோயில் உள்ளது.
அரசவல்லி சூரியன் கோயில்
ஆந்திர பிரதேசம், ஸ்ரீகாகுளம் நகரிலிருந்து, வெறும் ஒரு கிலோமீட்டர் தொலைவில், அரசவல்லி கிராமத்தில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. கலிங்க மன்னர் தேவேந்திரனால் 7 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் சிதிலமடைந்துவிட, 17,18 ஆம் நூற்றாண்டில் புனரமைக்கப்பட்டது. இங்குள்ள தீர்த்தக் குளத்தில் ஸ்நானம் செய்து விட்டு பக்தர்கள் சூரிய பகவானை தரிசிக்கின்றனர். இங்கு, ரதசப்தமி விழா மிகவும் விசேஷமாக நடைபெறுகிறது. கருவறை மூலவருக்கு சூரியநாராயண ஸ்வாமி என்று பெயர்.
சூரிய கோயில், மார்தாண்ட
8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு அற்புதமான கோயில். ஜம்மு-காஷ்மீரில் மார்தாண்ட சூரியன் கோயில் உள்ளது. கர்கோடா வம்சத்தால் கட்டப்பட்டது. சிதிலமடைந்துள்ள இந்தக் கோயிலில் வியக்க வைக்கும் சிக்கலான சிற்பங்கள் உள்ளன. இது பீடபூமியின் மேல் அமைந்துள்ளது.
தஷிணாக்கா கோயில், கயா
கயாவில் அமைந்துள்ள இந்த சூரியக் கோயில், வாயு புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. விஷ்ணுபாத் கோயிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள இந்த ஆலயம், குவி மாடம் வடிவ உச்சியுடன் கூடிய எளிமையான கட்டிடக்கலையைக் கொண்டுள்ளது. கயாவின் உத்தரகா கோயில் மற்றும் கயாதித்யா கோயில் என இரண்டு சூரியக் கோயில்கள் உள்ளன.
கதார்மல் சூரியக் கோயில்
உத்தரகண்ட் மாநிலத்தின் குமாவுன் கோட்டத்தில், அல்மோராவில் உள்ள கிராமத்தில் பழமையான சூரியன் கோயில் உள்ளது. 9-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தனித்தனி சந்நதிகளில் பல தெய்வங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தொகுப்பு: மகாலட்சுமி சுப்ரமணியன்
Tags:
சூரியக் கோயில்கள்மேலும் செய்திகள்
தென்னக அயோத்தியில் வண்ண ஓவிய ராமாயணம்!
அஷ்ட பைரவத் தலங்கள்
தோஷ நிவர்த்தி தலங்கள்
ஆபத்தை களையும் அஷ்ட பைரவர்கள்
நந்தி வடிவ தொந்தியுடன் துவாரபாலகர்கள்
சிவஸ்தலம் அறிவோம்!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!