SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாஸ்து சாஸ்திரம் வளமான வாழ்வைத் தரும்

2023-01-12@ 15:58:30

நம்முடைய நல்வாழ்விற்காகவும், கஷ்டங்கள் குறையவும், காலத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவும், வாழும் இடத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு வாழவும் பல சாஸ்திரங்களை முக்காலமும் உணர்ந்த ரிஷிகளும், முனிவர்களும் நமக்குக் கொடுத்திருக்கிறார்கள். இந்த சாஸ்திரங்கள்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிரிவு. வைத்தியத்திற்கு `ஆயுர்வேதம்’ என்று பெயர். காலநிர்ணய சாஸ்திரத்திற்கு `ஜோதிடம்’ என்று பெயர். வாழும் இடத்தை பற்றிய சாஸ்திரத்திற்கு `வாஸ்து சாஸ்திரம்’ என்று பெயர். அன்று உள்ள மக்கள் இந்த சாஸ்திரங்களின் அடிப்படைகளையெல்லாம் ஓரளவு தெரிந்து வைத்திருந்தார்கள்.

எந்த சாஸ்திரமும் போகிறபோக்கில் சொல்லப்பட்டது அல்ல. அதற்கென்று பலகாலம் உழைத்து, அதன் பலா பலன்களை சோதித்து, எதிர்காலத்தில் வாழ்பவர்கள் இதனைப் பயன்படுத்தி பயன் பெற்று நல்வாழ்வு வாழவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் இயற்றப்பட்ட சாஸ்திரங்கள்.  இந்த சாஸ்திரம் குறித்து அந்தக் காலத்தில் அனுபவத்தில் இருந்ததால், அந்த ஊரிலோ தெருவிலோ இருக்கக்கூடிய பெரியவர்களைக் கேட்டு காரியங்களைச் செய்தனர். அதனால் அதிக சிரமம் இல்லாமல் இருந்தனர். `சிற்ப சாஸ்திரம்’, `மனையடி சாஸ்திரம்’, `வாஸ்து சாஸ்திரம்’ என இந்த சாஸ்திரத்தில் விஞ்ஞானம் உண்டு, மெய்ஞானமும் உண்டு. இந்த சாஸ்திரத்தின் மூலம்,

1. சுகாதாரமான வாழ்க்கை
2. ஆரோக்கியமான வாழ்க்கை
3. வீட்டிற்குள் வெளிச்சம்
4. நல்ல காற்று
5. புழங்கும் வசதி


எனப் பல விஷயங்களும் அனுசரித்தே வாஸ்து சாஸ்திரத்தை அந்த காலத்தில் வடிவமைத்தனர். வாஸ்து புருஷன், பகவான் ஸ்ரீமன் நாராயணனின் அம்சம் என்பார்கள். இந்த உலகில் உள்ள எல்லாப் பொருள்களும் வஸ்து என்று சொல்வார்கள். அந்தப் பொருள்களின் அதிபதி வாஸ்து. எல்லாப் பொருள்களிலும் ஊடுருவி இருப்பவன் ஸ்ரீமன் நாராயணன் என்கின்ற புருஷன் என்பதால், அவன் வாஸ்து புருஷன் என்று அழைக்கப்படுகின்றான். அவருடைய நாபியிலிருந்து படைக்கப்பட்டவன் பிரம்மன். எனவே வாஸ்துவை பார்க்கும்போது, இடத்தின் மையப்பகுதியை பிரம்மஸ்தானம் என்று சொன்னார்கள்.

எந்தச் சாஸ்திரத்தையும் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றுவதோ, தவறாகப் புரிந்து கொள்வதோ ஆபத்து. காலதேசவர்த்தமான கணக்குகள் உண்டு.
ஒருசில வீடுகளில், வாஸ்து குறைபாடுகள் இருப்பது போல் தோன்றும். ஆனால், தோன்றுமே தவிர, உண்மையில் அதற்கான பரிகாரங்களும் அதிலேயே இருக்கும். அதனால், அந்தக் குடும்பம் சிரமமின்றி சிறப்பாக இருக்கும். இவ்வளவு வாஸ்து குறைபாடு உடையவர்கள் எப்படி சிறப்பாக இருக்கிறார்கள் என்று கேட்கத் தோன்றும். அங்கே உள்ள அம்சங்களை எல்லாம் எடைபோட்டு நிபுணர்கள், வாஸ்து குறைபாடுகள் இருந்தாலும் அதை நிவர்த்தி செய்யக்கூடிய விஷயங்கள் இருப்பதைக் கண்டுபிடித்துவிடுவார்கள்.

சில இடங்களில் வாஸ்து குறைபாடுகள் இல்லாதது போல் தோன்றும். ஆனால், குடும்பத்தில் சில விரும்பத்தகாத விளைவுகள், எதிர்பாராத சம்பவங்கள் அல்லது சுபகாரியத் தடைகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அங்கும் இந்த வாஸ்து சாஸ்திரத்தில் நன்கு புலமை பெற்றவர்கள், தெய்வ பலத்தால் யூகித்து மறைமுகமாக இருக்கக்கூடிய வாஸ்து கோளாறுகளை மிகத் துல்லியமாகக் கண்டுபிடித்து சரி செய்துவிடுவார்கள். நமது நண்பர் பிரபல வாஸ்து சாஸ்திர நிபுணர் ஒருவர் இருக்கிறார். அவர் நெடுஞ்சாலைத் துறையில் உயர் பதவிகள் வகித்து ஓய்வு பெற்றவர். திரு.ஆர்.வி.சுவாமி என்று பெயர். அவருடைய அனுபவத்தைச் சொன்னார்.
ஒரு பெரிய முக்கியஸ்தர் வீட்டுக்கு அவரை அழைத்திருந்தார்கள். அந்த வீட்டு மூத்த பிள்ளைக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆகியிருந்தது.

மகனுக்கும் மருமகளுக்கும் ஆகவில்லை. எப்போது பார்த்தாலும் கணவன் - மனைவி இடையே சண்டை, கருத்து வேறுபாடுகள். இது நாளுக்கு நாள் தீவிரமடைந்துகொண்டே வந்தது. அப்பொழுதுதான் யாரோ ஒரு நண்பர் சொல்லி அந்த வீட்டை நண்பர் சென்று பார்த்தார். அவர் அந்த வீட்டைப் பார்த்த போது, வீடு நன்கு அலங்காரமாக இருந்தது. பெரிய வீடு. தென் கிழக்கு மூலையில் ஒரு அறை. நல்ல பெரிய வசதியான அறை. “இதை யார் பயன்படுத்துகிறார்கள்?” என்று கேட்டார். பெரிய அறையாக, வசதியான அறையாக இருப்பதால், புதுமணத் தம்பதியர் அதைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னார்கள்.

உடனே நம்முடைய நண்பர் சொன்னார்; இன்று இரவு முதலே இந்த அறையை அவர்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லுங்கள். அவர்களுக்கு வேறு ஒரு அறையை காட்டி, அந்த அறையைப் பயன்படுத்தச் சொல்லுங்கள் என்று சொல்லி சில சிறு மாற்றங்களைச் செய்தார். அந்த வார்த்தைகள், அந்த தம்பதியர் மன மாற்றங்களுக்கு காரணமாக இருந்தது. நுட்பமான பிரபஞ்ச சக்தியின் இயக்கங்கள் இது என்பதை உணர வேண்டும். ஒரு இடத்தை பார்த்தால், நமக்கு அசூயை ஏற்படுவதும், ஒரு இடத்தைப் பார்த்தால் அங்கேயே உட்கார்ந்துவிடலாம் என்று தோன்றுவதும், ஒரு வீட்டுக்குச் செல்லும் பொழுது இங்கே இருந்து எப்போது கிளம்பி வெளியே செல்வது என்று நினைப்பதும், சிலர் வீட்டுக்குச் சென்றால் தூக்கம் வருவதும், சிலர் வீட்டுக்கு சென்றால் வெவ்வேறு விதமான உணர்வுகள் ஏற்படுவதும், சில வீட்டுக்குச் சென்றால் ஒருவித அலாதியான மனச் சாந்தியும் அமைதியும் ஏற்படுவதும் நாம் உணரமுடியும்.

இவைகளெல்லாம் அங்கே இருக்கக்கூடிய பல்வேறு விதமான கண்ணுக்கு தெரியாத பிரபஞ்ச சக்திகள் என்பதை உணர வேண்டும். அதைப்போலவே கோயிலுக்கும் உண்டு. பெரும்பாலான கோயில்கள் ஆகம விதிப்படியும், சில்பமனையடி சாஸ்திர விதிப்படியும் அமைத்திருப்பார்கள்.  அங்கே சென்று பிராகாரத்தில் அமர்ந்தால் கோபம், பதற்றம் தணிந்து மனம் அமைதி பெற்று வருவதாக உணர்கிறோம். தெளிவு கிடைக்கிறது. பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கிறது. தீர்வு தருபவர்களைச் சந்திக்க வைக்கிறது. இந்த பிரபஞ்ச சக்தி கண்ணுக்குத் தெரியாத ஒரு இணைப்பை ஏற்படுத்திக் கொண்டே இருப்பதை நாம் உணர முடியுமே தவிர, பெரிதாக நிரூபிக்க முடியாது.

இன்னொரு விஷயம், ஜாதகங்களுக்கும், வாஸ்துவுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று நீங்கள் கேட்கலாம். எல்லா சாஸ்திரங்களும் ஒன்றுக்கொன்று இணைந்ததுதான். ஜாதகத்திலே பலமுறை உண்டு. நாடி முறை, வேத ஜோதிட பராசர முறை, ஜைமினி முறை, கிருஷ்ணமூர்த்தி முறை, இப்போது நெல்லை வசந்தன் முறை  என்று பல முறைகள் உண்டு.  நடக்கக்கூடிய சம்பவம் ஒன்றுதானே. வழியும் கணிதமுறையும் தானேவேறு. வாஸ்து சாஸ்திரமும் அப்படித்தான்.  ஒருவர் வாழ்வில் ஏதோ பிரச்னைகளால் சிரமப்படுகிறார் என்றால், வசிக்கின்ற வீட்டினுடைய வாஸ்து கோளாறும் அப்பொழுது நடக்கக்கூடிய அவருடைய ஜாதக தசா புத்திகளுக்கும் ஒரு நுட்பமான தொடர்பு இருக்கும்.

வாஸ்து சாஸ்திர தோஷங்களாக இருக்கட்டும், ஜாதகத்தில் இருக்கக்கூடிய கிரக தோஷங்களாக இருக்கட்டும், அது செயல்படுவதற்கான காலம் என்று ஒன்று உண்டு.  ஜுரத்தில் தவிப்பவன் மழையிலே நனைந்து நோயை அதிகமாக்கிக்கொள்வது போல, ஒருவருடைய ஜாதக தசைபுத்திகளும், வாஸ்து குறைகளும் இணைந்தே செயல்பட்டுக் கொண்டிருக்கும். எனவே இரண்டையும் சரி செய்ய வேண்டும். அதற்கான பிரார்த்தனை செய்ய வேண்டும்.  விதி இருந்தால் விதி விலக்குகளும் உண்டு என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். சின்னசின்ன விஷயங்களை மாற்றுவதன் மூலமும், ஜாதக தோஷ நிவர்த்தி பிரார்த்தனைகளும் வாஸ்து குறைபாடுகளையும் ஜாதக தோஷங் களையும் போக்கும்.

நாம் நடைமுறையில் பார்க்கலாம். சிலருக்கு கஷ்டங்கள் வருகின்றபொழுது அந்த இடத்தில் வாழமுடியாத ஒரு சூழ்நிலை ஏற்படும். மாற்றங்கள் செய்துகொண்டால், நல்லது என்று தோன்றும். பிரபஞ்ச சக்திகள் அவர்களுக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை சூசகமாக உணர்த்தும். அதை கவனித்து மாற்று ஏற்பாடுகள் பரிகாரங்கள் செய்ய வேண்டும்.

தொகுப்பு: தேஜஸ்வி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • somaliya-dead-2

  சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

 • aus-fish-21

  ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

 • eqqperr1

  ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி

 • freddie-cyclone

  மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!

 • patrick-day-1

  அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்