SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கூடாரை வல்லியும் போகியில் ஆண்டாள் திருக்கல்யாணமும்

2023-01-11@ 14:11:18

நன்றி குங்குமம் ஆன்மிகம்

கூடாரைவல்லி (11.1.2023) போகி - ஆண்டாள் திருக்கல்யாணம் (14.1.2023)

மார்கழி மாதத்தை தனுர் மாதம் என்று சொல்லுகின்றோம். வைணவர்கள் இதை “திருப்பாவை மாதம்” என்று சொல்லுவார்கள். காரணம், திருப்பாவை 30 பாசுரங்களும், நாளுக்கு ஒரு பாசுரமாக 30 நாட்கள் இந்த மாதத்தில் ஓதுவது வழக்கம். கோயில்களில் மட்டுமல்ல; ஒவ்வொரு வைணவர்கள் இல்லத்திலும் காலை திருவாராதனம் செய்யும் பொழுது திருப்பாவையைப் பிரதானமாகச் சொல்வார்கள். விடியல் காலை, வீதிகளில் திருப்பாவையைப் பஜனை பாடி வலம் வருவார்கள். கோயில்களில் காலை பூஜையை, “திருப்பாவை பூஜை” என்று சொல்வதும் உண்டு. சகல வேத சாரமான இந்த திருப்பாவை 30 பாசுரங்களும் ஆன்மிகத்தின் அழுத்தமான, உன்னதமான, ஒழுக்க நெறியைச் சொல்வன.

இந்த மார்கழி மாதத்தின் முப்பது நாட்களில்;

1. வைகுண்ட ஏகாதசி திருநாள் வருகிறது.
2. கூடாரைவல்லி என்னும் உன்னதமான நாள் வருகிறது.
3. போகிப்பண்டிகை அன்று ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகின்றது. இதில் மிக முக்கியமான கூடாரைவல்லி பற்றியும், போகியில் நடைபெறும். ஆண்டாள் திருக்கல்யாணம் பற்றியும் நாம் சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம்.

1. கூடாரைவல்லி

திருப்பாவையின் இருபத்தி ஏழாவது பாசுரம். அந்தப் பாசுரத்தின் முதல் சொல்லையே திருநாள் பெயராக வைத்துவிட்டனர். மானுடப் பெண்ணாக தோன்றி மாதவனையே மணாளனாக பெற்ற நாள். அந்த நாளில், என்ன பிரதானம்? எப்படிக் கொண்டாட வேண்டும்? என்பதை அந்தப் பாசுரமே சொல்லிவிடும்.

அந்த அற்புதமான பாசுரம் இது;

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உன்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம்பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்


திருப்பாவை நோன்பின் பயனை முழுவதுமாக பெற்றுவிட்டதாகச் சொல்லும் பாசுரம். கோவிந்தனால் அளிக்கப்பட்ட சூடகம், தோள்வளை, தோடு, செவியில் அணியும் கொப்பு, கால் தண்டை உள்ளிட்ட பலவகை அணிகலன்களை அணிந்து, புத்தாடை புனைந்து, அலங்கரித்துக் கொண்டு அரங்கனை எண்ணி அகமகிழ்கிறாள். மேலும் அக்காரவடிசல் எனும் நெய் ஒழுகும் சர்க்கரைப் பொங்கலை கண்ணனுக்கு அமுதாக படைத்து தானும் அடியார்களோடு உண்டு மகிழ்ந்த நாள் கூடாரைவல்லி.

ஆண்டாள் அவதரித்துத் திருப்பாவை பாடிய ஸ்ரீவில்லிபுத்தூரில், கூடாரவல்லித் திருநாள் வெகு சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலையில் அர்த்த மண்டபத்தில், சிறப்பான அலங்காரங்களுடன் ஆண்டாள் நாச்சியார் திருக்காட்சி அளிப்பார். 108 பாத்திரங்களில் அக்காரவடிசலும், வெண்ணெயும் வைக்கப்பட்டிருக்கும்.கூடாரவல்லி திருநாளின் சிறப்பு அம்சமே இந்த அக்காரவடிசல் மற்றும் வெண்ணெய் நைவேத்தியம்தான். திருப்பாவை பாசுரங்கள் சேவிக்கப்படும். ஆண்டாளுக்கு தீபாராதனை நடைபெறும். ஆண்டாளின் அர்ச்சா மேனி சந்நதிக்கு முன்பு உள்ள அர்த்த மண்டபத்தில் எழுந்தருளி இருப்பது விசேஷம்.

ஆண்டாள் அழகருக்கு சமர்ப்பிக்க எண்ணிய நூறு தடா அக்கார அடி சிலையும், நூறு தடா வெண்ணெயையும் ஆண்டாளுக்கு பின் வந்த ராமானுஜர் அழகருக்குச் சமர்ப்பித்து, ஆண்டாளின் மனோரதத்தை பூர்த்தி செய்தார். அதன் பிறகு, ராமானுஜர் ஆண்டாளை தரிசிப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தார். தம்முடைய மனோரதத்தை நிறைவேற்றிய ராமானுஜரை வரவேற்கும் முகத்தான் ஆண்டாள் கருவறைக்கு முன்னால் உள்ள அர்த்த மண்டபத்துக்கு வந்து “அண்ணா” என்று அழைத்ததாகச் சரித்திரம்.

அதை நினைவுறுத்தும் பொருட்டே சந்நதி விட்டு ஆண்டாள் அர்த்த மண்டபத்துக்கு எழுந்தருளுகிறார். கூடாரவல்லி நாளின் போது, 250 கிலோ அரிசி, 120 லிட்டர் பால், 15 கிலோ கல்கண்டு, கிலோ கணக்கில் முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை என எல்லாம் சேர்த்துப் பல மணி நேரம் சுண்டக் காய்ச்சித் தயாரிக்கும் அக்காரவடிசலும் வெண்ணெயும் வடபத்ரசாயி பெருமாளுக்கு நைவேத்தியமாக செய்யப்படுகிறது. எல்லாப் பெருமாள் கோயில்களிலும் இந்த நிவேதனம்தான்.பகவானுக்கு இரண்டு குணங்கள் உண்டு.

1. அவனோடு கூடியவர்களை அவன் ஆதரிப்பான்.

2. அவரோடு கூடாது அவன் பக்தர்களை எதிர்க்கின்றவர்களை அவன் வென்றுவிடுவான்.

இரணியன் பகவானை மட்டும் எதிரியாக நினைத்த வரை எந்த ஆபத்தும் அவனுக்கு இல்லை. அவனுக்கு ஆபத்து எப்போது வருகிறது என்று சொன்னால், பகவானுடைய அடியவனான பிரகலாதன் என்னும் பக்தனை துன்புறுத்தியபோது, பகவான் இரணியனை வென்றான்.

கூடாரை வெல்லும் கோவிந்தன், கூடியவர்களிடம் தோற்பான் என்பதும் அதில் உள்ள சூசகமான பொருள். அப்படி தோற்பதே தனக்கு வெற்றியாக நினைப்பான். இதற்கு உதாரணமாக மகாபாரதத்தில் வரும் ஒரு சம்பவம். பீஷ்மர் கண்ணனிடம் பிரதிக்ஞை செய்கிறார்.‘‘நீ போர்க்களத்தில் ஆயுதம் எடுக்க மாட்டேன் என்று சொன்னாய் அல்லவா, உன்னை நான் ஆயுதம் எடுக்க வைக்கிறேன்.’’ சொன்னது போலவே ஒருநாள் மிகக் கடுமையான போர் நடக்கிறது. அர்ஜுனனால் பீஷ்மரை சமாளிக்க முடியவில்லை. கண்ணபரமாத்மா குதிரைகளின் கடிவாளத்தை வீசி எறிந்துவிட்டு, சக்கராயுதத்தை கையில் பிடித்துக் கொண்டு கீழே குதித்து பீஷ்மரை கொல்லப் போகிறார்.

அடுத்த கணம் தன்னுடைய வில்லையும் அம்பையும் எறிந்துவிட்டு பீஷ்மர் கைகூப்பி, “வா கண்ணா வா, உன்னால் நான் கொல்லப்பட்டால் அதைவிட எனக்கு மகிழ்ச்சி வேறு எதுவும் இல்லை எனக்கு மோட்சம் இப்போதே கிடைத்துவிட்டதாக உணர்கிறேன்” என்று சொல்ல, அர்ஜுனன் குதித்து கண்ணனை சமாதானப்படுத்தி தேருக்கு அழைத்துச் செல்கிறான். ‘‘உன்னை ஆயுதம் எடுக்க வைக்கிறேன்” என்று அன்போடு சொன்ன பீஷ்மருடைய வாக்கை மெய்ப்பிப்பதற்காகதான் தோற்றவன் பகவான். எதிரிகளை அம்பினால் வெல்லும் பகவான், பக்தர்களிடம் அன்பினால் தோற்பார் என்பதைச் சூசகமாகச் சொல்லும் பாட்டுதான் இந்த பாட்டு.

பக்தர்களின் சகல கோரிக்கைகளையும் நிறைவேற்றி வைப்பதாக அமைந்த இந்தப் பாட்டிலே, தான் அடைந்த பல்வேறு விதமான ஐஸ்வர்யங்களையும் பட்டியலிடுகிறாள். “நெய்யுண்ணோம் பாலுண்ணோம்’’ என்று விரதத்தின் துவக்கத்தில் சொன்ன ஆண்டாள், இந்தப் பாசுரத்தில் நிறைய நெய் ஊற்றி பால் சோறு மூடும் படியாக நிவேதனம் செய்து, எல்லோரும் குளிர்ந்து கூடி பகவானுடைய பிரசாதத்தை உண்ணும் நாள் இந்த நாள். கூடாரவல்லி என்றும் 27-ஆம் நாள் பாசுரத்தில், `பால் சோறு மூட நெய் பெய்து’ என்று இருப்பதால், இந்த நாளிலே பிரத்தியேகமாக அக்கார அடிசில் என்னும் பிரசாதத்தையும் வெண்ணெயும் பெருமாளுக்குச் சமர்ப்பிப்பார்கள்.

இன்றைக்கும் இந்த உற்சவம் அழகர்மலையில் நடைபெற்று வருகிறது. கூடாரைவல்லி நாளில், கள்ளழகருக்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றன. கூடாரைவல்லித் திருநாளில், ஆண்டாளிடம், திருமணத் தடை உள்ளவர்கள் பிரார்த்தனையை வைத்தால், கல்யாணயோகம் கைகூடிவரும். இல்லத்தில் சகல நன்மைகளையும் தந்தருளுவாள் ஆண்டாள். சேராத உறவுகளைச் சேர்த்து வைக்கும் நாள் கூடாரைவல்லி.

2. ஆண்டாள் திருக்கல்யாணம்

ஸ்ரீமன் நாராயணன் வராக அவதாரம் எடுத்து இரண்யாட்சனை வென்று பூமியை மீட்டார். இந்த வைபவத்தை ஆண்டாள் பின்வரும் பாசுரத்தால் பாடுகின்றாள்;

பாசித் தூர்த்து கிடந்த பார்மகட்கு பண்டொருநாள்
மாசு உடம்பில் நீர் வாரா மானம் இலாபன்றியாம்  
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராவே


“மானம் இலாப் பன்றி” என்று கேலி செய்வது போல் தோன்றினாலும், உண்மையான அர்த்தம், உபமானம் இல்லாத பன்றி; அதாவது வராகரின் இந்தச் செய்கைக்கு, வரம்பு கட்டவே முடியாத பெருமை பெற்றவர் என்பது பொருள். இப்படிப்பட்ட செய்கையைச் செய்தவரை யாருக்குத்தான் பிடிக்காது? லட்சுமி வராகனாக, பூமியை மேலே உத்தாரணம் செய்ய வரும்போது, பூமி பிராட்டி, வராக பிரானைப் பார்த்து ‘‘இந்த உலகத்தில் உள்ள மக்களுக்கு உய்யும் வழியைக் காட்ட வேண்டும்’’ என்று பிரார்த்தனை செய்கின்றாள். அப்பொழுது வராகப்பெருமாள் மூன்று செயல்களைச் செய்தால், ஒருவன் எளிதாக உய்வு பெற முடியும் என்று உபதேசிக்கிறார்.

1. பெருமாளுக்கு மாலை சாற்றுதல்

2. விளக்கு போடுதல்

3. அவருடைய நாமங்களை பாடுதல்

இதைச் சாதாரணமாக உபதேசமாகச் சொன்னால், மக்கள் கடைபிடிக்க மாட்டார்கள். தானே அதை கடைபிடித்து அதன் பலனை பெற்றதைக் காட்ட வேண்டும் என்று நினைத்த பூமிநாச்சியார், ஆண்டாளாக அவதரித்தாள். பெரியாழ்வார் பெண் பிள்ளையாக அவதரித்த ஆண்டாள் நாச்சியார், மார்கழி மாதத்தில் நோன்பு நோற்று கண்ணனையே கணவனாக அடையவேண்டும் என்று பிரார்த்தனையை வைக்கின்றார்.

எனவே திருப்பாவை என்பது அனுஷ்டான பிரபந்தம் (Practical Prabandam) என்று போற்றப் படுகின்றது. மார்கழி மாதத்தின் நிறைவுநாள், 30-வது பாசுரத்தில், ஆண்டாளுக்கு எம்பெருமான் பிரத்யட்சமாகக் காட்சி அளித்தான். அப்படி காட்சியளித்த நாள் போகித் திருநாள் என்று பிரபந்நாம்ருத தர்ப்பணம் என்கிற நூல் தெரிவிக்கிறது.

அந்தநாளில், ஆண்டாளுக்கு பெருமாள் காட்சிதந்ததால், பெரியவர்கள் அந்த நாளை ஆண்டாள் திருக்கல்யாண வைபவமாகக் கொண்டாடுகிறார்கள். எல்லா போகங்களும் வளர வேண்டும் என்றால், போகிப்பண்டிகை அன்று ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் செய்து வைக்க வேண்டும். அதனால், பெரும்பாலான வைணவக் கோயில்களில் மார்கழி நிறைவு நாளான போகிப்பண்டிகை அன்று ஆண்டாள் திருக்கல்யாண உற்சவத்தை நடத்துவார்கள். இந்த திருக்கல்யாணத்தை தரிசிப்பவர்கள் அனைத்து ஐஸ்வர்யங்களையும் பெறுவார்கள் என்பதை திருப்பாவையின் இந்தப் பாடல் தெரிவிக்கிறது.

வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி
அங்கப் பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான்கோதை சொன்ன

சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்
எம்பாவாய்.


இந்த மார்கழி மாதத்தில் கூடாரவல்லி திருநாளிலும் (11.1.2023) எனும் போகிப்பண்டிகை (14.1.2023) அன்று ஆண்டாள் திருக்கல்யாண உற்சவத்திலும், நாம் அனைவரும் பங்கு பெற்று எல்லா விதமான நலன்களையும் பெறுவோம்.

தொகுப்பு: முனைவர் ஸ்ரீராம்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • well-collapes-31

    ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

  • parliammmm_moddi

    இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்