SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தில்லையா? திருவருணையா?

2023-01-10@ 17:24:36

நன்றி குங்குமம் ஆன்மிகம்

பதினாறாம் நூற்றாண்டின் இலங்கையின் வடபகுதி அது. பரராச சிங்கம் என்னும் தமிழ் வேந்தன், இலங்கையின் வட பகுதியை ஆண்டுவந்தான். அவனது அழகான மாளிகையில் அன்று பல புலவர்கள் போவதும் வருவதுமாக இருந்தார்கள். காரணமில்லாமல் இல்லை. மன்னனின் காதல் மனைவி மன்னனிடம் ஊடல்கொண்டிருந்தாள். அவளைப் பல முறை காரணம் வினவியும், ஊடலின் காரணத்தை அரசி சொல்லவே இல்லை.

இது இப்படி இருக்க, அரசியிடம் கோபத்திற்கான காரணம் கேட்டுவிட்டு, அவள் அறையைவிட்டு ஏமாற்றத்துடன் மன்னன் வரும் வேளையில், ஒரு காட்சியை அவன் கண்டான். நெடிது உயர்ந்து வளர்ந்த மரம். அதன் அழகான பொந்தில் கிளிக்குஞ்சுகள் கீச்சிட்டுக் கொண்டிருந்தன. இறை தேடி சென்ற தாய்ப் பறவை வந்துவிட்டதா என்று அறிய குஞ்சுகள் எட்டிப்பார்த்தன. அப்போது, அந்த மரத்தின் அருகில் இருந்த வாழைமரம், காற்றில் ஆடியது. அதன் பருத்த, வாழைப் பழக் குலை பொந்தின் அருகே வந்து வந்து சென்றது. வாழைக் குலை பொந்தின் அருகில் வரும் போது எல்லாம் கிளிக் குஞ்சுகள் அஞ்சி பொந்தின் உள்ளே சென்று மறைந்து கொண்டன. காற்று நிற்கவும் குலை விலகியது. உடன் குஞ்சுகள் மீண்டும் வெளி வந்து தாயைத் தேடின. ஒவ்வொரு முறை தென்றல் வீசும் போதும் இது நடந்தது.

இந்தக் காட்சி மன்னன் மனதில் ஒரு பெரிய கேள்வியை ஏற்படுத்தியது. ‘‘கிளிக் குஞ்சுகள் காற்றில் அசைந்து ஆடும் வாழைக் குலையைக் கண்டு ஏன் அஞ்சவெண்டும்?’’ என்னும் கேள்விதான் அது. இது அரசி ஏன் கோபமாக இருக்கிறாள் என்ற கேள்வியோடு சேர்த்து அவன் மனதை வாட்டி எடுத்தது. இரண்டு கேள்விக்கும் சரியான விடையை ஒரே பாட்டில் சரியாகச் சொல்லும் புலவருக்கு பெரும் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான். அரசன் தரும் பரிசை எப்படியாவது பெற வேண்டும் என்ற ஆசையில்தான் இத்தனை புலவர்களும் அரண்மனையை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள்.

ஆனால் ஒருவராலும் சரியான பதிலைச் சொல்ல முடியவில்லை. மன்னன் உள்ளம் தளர்ந்தான். அப்போது அரசவையில் இருந்த அமைச்சர், ‘‘இலங்கைக்கு, கவி வீர இராகவர் வந்திருக்கிறார்” என்றும், ‘‘புலமையிலும் அறிவிலும் அவரை மிஞ்ச ஒருவரும் இல்லை” என்றும் சொன்னார். மன்னனுக்கு திக்கு தெரியாத இருள் காட்டில் திடீரென வந்த ஒளிப்பிழம்பு போல இருந்தது அமைச்சரின் அறிவுரை. ‘‘உடனே அந்த வீர ராகவரைத் தக்க மரியாதையோடு அழைத்து வாருங்கள்” என்று பரபரக்க கட்டளையிட்டான். ஆனால், அமைச்சர் தயங்கி நின்றார். அவரது தயக்கத்திற்கான காரணம் கேட்டான், மன்னன்.

‘‘வீரராகவருக்கு ஞானக்கண்கள் இருப்பதில் அய்யமில்லை, ஆனால் அவருக்கு, பரந்த இந்த உலகைக் காண புறக் கண்கள் கிடையாது. ஆம்.. அவர் ஒரு குருடர். கண் தெரியாத ஒருவரை மன்னர் சந்திப்பது, ஒரு துர்சகுனமாகும். அதனால்தான் தயங்குகிறேன்”  என அமைச்சர் தன் தயக்கத்துக்கான காரணத்தை சொன்னார்.

‘‘இதற்கு வேறு தீர்வே இல்லையா அமைச்சரே...”

‘‘இருக்கிறது மன்னா! அவர் தங்களை சந்திக்க வரும்போது, உங்களுக்கும் அவருக்கும் இடையில் ஒரு திரையை இடவேண்டும். இதன் மூலம் அவரை நீங்கள் சந்திக்காமல், உங்கள் கேள்விக்கான விடையை அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்”

‘‘அறிவுக்கண்கள் உடைய அவருக்கு, அறிவில்லாத நாம் அனைவரும் குருடர்கள்தான். புறக் கண்கள் உடைய நமக்கு அவர் குருடர். ஆகவே, அவரை நான் சந்திக்கக் கூடாது என்னும் விதி எனக்கு ஏற்றதாகப்படவில்லை. இருப்பினும், ராஜநீதி அதுவானால், நான் என்ன செய்ய முடியும்? அப்படியே செய்யுங்கள்” என்று மன்னன், அரை மனதாக புலவருக்கும் தனக்கும் இடையே திரையிடச் சம்மதம் தெரிவித்தான்.

 அரசனின் ஆட்கள் சென்று, வீர ராகவரை அழைத்து வந்தார்கள். வீர ராகவர், பார்வை அற்றவர் என்பதால், அவரோடு எப்போதும் ஒரு மாணவன் இருப்பான். அவருக்குத் தேவையான உதவிகள் செய்வது அவனது வேலை. இன்றும் அரசவைக்கு ராகவரோடு, அவரது மாணவனும் அவருக்கு உதவியாக வந்தான். அந்த மாணவன் கண்களில், அரசனுக்கும் ஆச்சார்யனுக்கும் இடையில் ஒரு திரை இருப்பது தெரிந்தது. நொடியில் திரை இருப்பதன் காரணம் உணர்ந்தான் மாணவன். ‘‘ராஜ நீதி” என்னும் பெயரில் நிகழும் அபத்தத்தை நிறுத்த வேண்டும் என்று அவனுக்குத்தோன்றியது. ஆகவே சூசகமாகத் திரை இருக்கும் விஷயத்தை குருவிற்கு சொல்ல தீர்மானித்தான்.

‘‘திருச்சிற்றம்பலம்! சிவ சிதம்பரம்!” என்று உரக்க குரல் எடுத்து சிவ நாம ஜெபம் செய்வது போல தனது கைகளை குவித்து மொழிந்தான். வீரராகவருக்கு விஷயம் புரிந்து போனது. அவரும் உரக்க குரல் எடுத்து சிவ நாம ஜெபம் செய்வது போல ‘‘அண்ணாமலைக்கு அரோகரா! உண்ணாமுலை அம்மைக்கு அரோகரா” என்றார். ராகவர், அரோகரா சொன்ன அடுத்த நொடி, அவர் எதிரில் இருந்த திரை பற்றிஎரிந்து சாம்பலாகிப் போனது.சுற்றி இருந்தவர்கள், நடப்பது என்ன என்று விளங்காமல் கலங்கினார்கள். வீர ராகவரே விளக்கம் தர ஆரம்பித்தார். எதிரில் இருந்த திரையை கண்ட எனது மாணவன் சமயோசிதமாக ‘‘திருச்சிற்றம்பலம்” என்றான்.

அங்கே என் அப்பன் அம்பலவாணன், சிதம்பர ரகசியமாக உருவம் இல்லாத பேரொளியாய் விளங்குகிறான். அவனை ஒரு திரை மறைத்திருக்கும். அதை அர்ச்சகர், விலக்கி எங்கும் பரந்து விரிந்து இருக்கும் ஆகாய வடிவான ஈசனை நமக்கு தரிசனம் செய்து வைப்பார். ஆக சிதம்பரத்தில் ஆகாய வடிவ ஈசனை திரைமறைத்திருப்பது போல, இங்கும் திரை இருக்கிறது என்று எனக்கு உணர்த்த என் மாணவன் திருச்சிற்றம்பலம் என்றான்.” என்று சொல்லி நிறுத்தினார் வீரராகவர்.

நிகழ்ந்த அதிசயத்தில் தன்னை மறந்த மன்னன், ‘‘நீங்கள் ஏன், அண்ணாமலைக்கு அரோகரா என்றீர்கள் புலவர் பெருமானே!” என்று ஆர்வமாக வினவினான். வீர ராகவர் புன்னகையோடு பதில் தர ஆரம்பித்தார். ‘‘அண்ணாமலை அண்ணல் அனல் (தீ) வடிவானவர். ஒளி வடிவாக அரி, அயன் முன் தோன்றி அவர் தம் ஆணவத்தை அழித்தவர். அவரது அழல் உருவை நான் தியானித்த மாத்திரத்தில் திரைபற்றிக் கொண்டது. அவ்வளவுதான் விஷயம்.” என்றபடி புன்னகை பூத்தார்.

மன்னனும், அமைச்சரும் எப்பெயர் பெற்ற மகானுக்கு அபச்சாரம் செய்ய இருந்தோம் என்று வருந்தி, அவரது திருவடியில் விழுந்து தங்கள் கண்ணீரால் அவரது திருவடியைச் சுத்தம் செய்தார்கள். அவர்களைத் தனது ஆதரவுக் கரங்களால் எழுப்பி தேற்றி ஆசி வழங்கினார் வீரராகவர். பிறகு, மன்னனின் கேள்விகளுக்கு விடை சொல்ல ஆரம்பித்தார். ‘‘மன்னர் மன்னவா! நான் தங்களைப் பேட்டி காண, தமிழகத்தில் இருந்து வந்து, இலங்கையில் பல நாள் காத்திருந்தேன். ஆனால், நான் குருடன் என்பதால் தங்களைச் சந்திக்க எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

கோயிலுக்கு செல்லும் வழியில் எனது பாடலையும் அதன் பொருளையும் கேட்ட மகாராணி, இவ்வளவு ஞானம் வாய்ந்த புலவருக்கு மன்னரைச் சந்திக்க அவரது ஊழியர்களால் அனுமதி மறுக்கப்பட்டதை அறிந்தார். இதுவே அவரது ஊடலுக்குக் காரணம்.” என்று ராகவர் சொல்லி முடித்ததுதான் தாமதம், மகாராணி ஓடி வந்து அவர் பாதத்தில் விழுந்து, ‘‘நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை சுவாமி” என்று சேவித்தாள். மன்னனும் அமைச்சரும் வெட்கத்தால் தலை குனிந்தார்கள். ராகவர் தொடர்ந்தார்.

‘‘மரத்தில் இருந்த கிளிக்குஞ்சுகள், காற்றில் அசைந்தாடிய வாழைப் பழத்தைத் தங்களை வேட்டையாட வரும், பாம்பு என பயந்து பொந்தின் உள்ளே சென்று மறைந்தன” என்று சொல்லி முடிக்கவும், கிளிகளின் குரல் ‘‘கீ...கீ..” என ராகவர் சொன்னதை ஆமோதிப்பது போல ஒலித்தது. மன்னனும் அமைச்சரும் தனது தவறை உணர்ந்தவர்களாக, பூமியில் விழுந்து இராகவரைச் சேவித்து அவருக்குப் பல பரிசுப்பொருளைத் தந்து கௌரவித்தார்கள்.

உடலில் ஊனம் இருந்தாலும் உள்ளம் நோகாமல், உறுதியோடு கல்வியைப் பல சோதனைகள் தாண்டிப் பயின்று, இறைவனை, சுந்தரத் தமிழால் கட்டி வைத்த ராகவர், அனைவருக்கும் ஒரு முன்மாதிரி ஆவார். அவரைப் போல மனம் தளராமல் பல சோதனைகளைத் தாண்டி சாதனை புரிந்து, இறைவன் திருவருளை நினைத்து நற்கதி பெறுவோம்.

தொகுப்பு: ஜி.மகேஷ்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • spain-trees-24

  ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

 • gandhi-13

  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

 • taipei-fashion-week-taiwan

  தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

 • kalifffo1

  தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

 • pak-123

  பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்