SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நடனமாடும் நடராஜரின் திருவுருவங்கள்

2023-01-06@ 17:37:44

நன்றி குங்குமம் ஆன்மிகம்

* மயிலாடுதுறை அருகேயுள்ள ஆனந்தத் தாண்டவபுரத்தில் நடராஜர் காலின் கட்டை விரலால் மட்டுமே நின்றுகொண்டு எந்தப் பிடிப்பும் இல்லாமல் மூக்குக்கு நேரே மற்றொரு காலைத் தூக்கி கால் சாயாமல் நடனமாடும் நிலையில் காட்சி தருகிறார்.

* மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் சிவபெருமான் நடனமாடும் ஐந்து சபைகளைக் குறிக்கும் வகையில் ஐந்து நடராஜ மூர்த்தங்கள் அமைந்துள்ளன. மார்கழித் திருவாதிரை நாளில் இந்த ஐந்து நடராஜர்களும் ஒருசேரப் புறப்பட்டு ஆலயத்தை வலம் வருகின்றனர்.

* திருவொற்றியூரிலுள்ள படம்பக்க நாதர் கருவறையின் வாயிலில் உள்ள துவாரபாலகரின் முன்னுச்சியில் நடராஜர் திருவுருவம் அமைக்கப் பட்டுள்ளது. சிவபெருமான் ஆதிரை நாளில் சூரிய மண்டலத்தின் நடுவே நடமாடியவாறே உலகைப் படைத்தார் என்று நம்பப்படுகின்றது. இதையொட்டியே திருவாதிரை நாளில் சூரியப் பிரபையின் நடுவில் நடராஜ மூர்த்தியை எழுந்தருள வைத்து வீதியுலாக் காண்கின்றனர்.

* சுசீந்திரத்தில் நிலைக் கண்ணாடியே நடராஜப் பெருமானாக வணங்கப்படுகின்றது.

* சென்னையை ஒட்டி அமைந்துள்ள திருத்தலங்களில் ஒன்று திருமணம். இங்குள்ள நடராஜர் சிவகாம சுந்தரிக்குத் திருவாதிரை நாளில் திருமண விழா கொண்டாடப்படுகிறது.

* திருச்செந்தூரில் ஆவணியிலும், மாசியிலும் நடைபெறும் பெருந்திருவிழாக்களின் போது ஆறுமுகநயினார் எனப்படும் பெரிய உற்சவ மூர்த்தி பவனிவருகின்றார். இவரை முன் பக்கம் ஆறுமுகராகவும், பின்பக்கம் நடராஜராகவும் அலங்கரித்து உலா வருவார்.

* கும்பகோணம் - (கோனேரி ராஜபுரம்) திருநல்லம் உமாமகேஸ்வரர் கோயிலிலுள்ள நடராஜர் சுயம்பு நடராஜர். மனிதர்கள் போல் கைகளில் ரேகையும், கால்களில், நரம்புகளும் தெரியும். நாற்பது அடி நீளமுள்ள மண்டபத்தில் ஒரு கோடியிலிருந்து நடராஜரைப் பார்த்தால் ஐம்பது வயது தோற்றம் உடையவராய்த் தெரியும். அருகே வர..வர... முப்பது வயது இளமையாகத் தோன்றும்.

* திருச்சி அருகேயுள்ள ராஜபுரம் கிராமத்தில் உள்ள காசி விஸ்வநாதர் லிங்கத்தை மார்கழி திருவாதிரை அன்று காலை ஆறு மணிக்கு சூரிய பகவான் தன் ஒளிக்கதிர்களால் வழிபடுகிறார்.

* ராமநாதபுரத்தின் அருகேயுள்ள உத்திரகோச மங்கை ஆலயத்தில் உள்ள நடராஜர் சிலை மரகதத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக அந்த உருவத்தைப் பார்க்க இயலாது. மிக அருகில் சென்று சூரியனைப் பார்க்க முயல்வது போன்றதாகும். எப்போதும் அவரது மேனி சந்தனக் காப்பிட்டுத்தான் இருக்கும். இந்த சந்தனக்காப்பையும் ஆண்டுக்கு ஒருமுறை திருவாதிரை நாளில் குருக்கள் தமது கண்களை நன்றாகத் துணியால் கட்டிக் கொண்டுதான் இடுவார். அப்படி முழுவதும் சந்தனக் காப்பிட்ட பின்னரே மற்றவர்களால் காணமுடியும்.

* மார்கழி மாதம் திருவாதிரை நாளில் தாண்டவ தீபாராதனை தென்காசியிலும், குற்றாலத்திலும் இடம்பெறும். ஆனந்த பைரவி ராகத்தை நாதஸ்வரக் கலைஞர் இனிமையாக வாசிக்க, சிவாச்சாரியார் அப்போது பெரிய தீபாராதனைத் தட்டை ஏந்தி அந்த இசைக்கு ஏற்றபடி அசைந்து தீபாராதனை செய்வார். இதுவே தாண்டவ தீபாராதனை என்று வழங்கப்படுகிறது. இதை லயித்துக் காண்கிறபோது அம்பலவாணரே ஜோதிரூபமாய் ஆடுவது போன்ற காட்சி தோன்றும்.

* தஞ்சை மாவட்டம் திருச்செங்காட்டாங்குடி திருத்தலத்தில் நடராசப் பெருமானின் புசங்க லலிதா, கஜசம்கார மூர்த்தி, ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி, கால சம்கார மூர்த்தி, கங்காள மூர்த்தி பிட்சாடணம மூர்த்தி, திரிபுரசம்கார மூர்த்தி, பைரவர், உத்திராபதியார் ஆகிய தாண்டவ மூர்த்திகள் அத்தனையையும் சிற்ப வடிவில் ஒரே திருத்தலத்தில் காணலாம்.

* நெல்லை மாவட்டத்திலுள்ள மானூரில் உள்ளது. நடராஜரின் சபை ‘‘ஆச்சரிய சபை’’ எனப்படுகிறது. நெல்லை நெல்லையப்பர் கோயிலின் மேற்குப் பிராகாரத்தில் தாமிரசபை உள்ளது. இதன் விதானம் மரத்தாலும் தாமிரத் தகடுகளாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. அதன் நேர் எதிரே சந்தன சபாபதி உள்ளார்.

அதன் வலப்புறம் உள்ள நடராஜரை தாமிரசபாபதி என்பார்கள். சபை தாமிரசபை எனப் படும். அம்மன் கோயில் முன்புறம் வடக்குப் பக்கம் சிவபெருமான் ஆனந்த நடனம் சிந்து பூந்துறையிலுள்ள சபை ‘தீர்த்த சபை’ யாகும்.

* திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்தில் தியாகேசர் ஆருத்ரா அன்று திரிபுர சுந்தரி அம்மன் எதிரே பதினெட்டு வித நடனமாடுவார். நடராஜரின் ஜடா முடியில் பதினாறு சடைகள் உள்ளன. இது பதினாறு கலைகளைக் குறிக்கிறது.

* சிதம்பரத்துக்கு அடுத்தபடியாகத் திருவாதிரை உற்சவம் சிறப்பாக நடைபெறுவது லால்குடியில்தான். இங்குள்ள நடராஜர் உற்சவ விக்ரகத்திற்கு திருமுழுக்காட்டும் போது இடது கையின் விரல்களிலிருந்து திருமுழுக்குத் திரவம் சரியாக இடு பாதத்தில் விழும்.

* சென்னைக்கு அருகில் உள்ள திருமழிசை என்ற திருத்தலத்தில் உள்ள நடராசர் சிலை கமலபீடத்தில் அமைந்துள்ளது. நடராஜரின் இடது கண் பார்வையும், அம்பாளின் வலது கண் பார்வையும் ஒன்றை யொன்று பார்த்துக் கொள்வது போல் அமைந்துள்ளது விசேஷம்.

பஞ்ச சபைத் தலங்கள்

1) திருநெல்வேலி - தாமிரசபை - திருத்தாண்டவம்  
2) திருக்குற்றாலம் - சித்திரசபை - திரிபுரதாண்டவம்   
3) திருவாலங்காடு - இரத்தினசபை -  ஊர்த்துவ தாண்டவம்  4) திருத்தில்லை (சிதம்பரம்) - பொற்சபை  - ஆனந்த தாண்டவம்
5) மதுரை - வெள்ளிசபை - சந்தியா தாண்டவம்

தொகுப்பு: ஆர். ஜெயலெட்சுமி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • spain-trees-24

  ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

 • gandhi-13

  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

 • taipei-fashion-week-taiwan

  தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

 • kalifffo1

  தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

 • pak-123

  பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்