SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கீதையின் 700 ஸ்லோகங்களை சில வரிகளில் சொன்ன கண்ணதாசன்

2023-01-02@ 17:34:42

நன்றி குங்குமம் ஆன்மிகம்

B.R. பந்துலு எடுத்த படங்களில் மிக அற்புதமான படம் கர்ணன். வண்ணப் படமாக வெளிவந்த படம். காட்சியமைப்பும் இசையும் அந்தக்  காலகட்டத்தில் மிக அருமையாக இருக்கும். இந்துஸ்தானி மற்றும் கர்நாடக இசையின்  ராகங்களை விஸ்வநாதன் ராமமூர்த்தி குழுவினர் அதி அற்புதமாக வைத்திருப்பார்கள். அத்தனை பாடல்களுமே ஹிட் என்றுதான் சொல்ல வேண்டும். 1964-ல் தயாரித்து பந்துலு இயக்கி வெளியிட்ட இந்த படம் மிகப் பிரம்மாண்டமான காட்சி அமைப்புகளோடு அப்போதே ரூ. 40 லட்சம் செலவு செய்து எடுக்கப்பட்டது என்பார்கள். நடிகர் திலகம் சிவாஜி, என். டி. ராமாராவ், தேவிகா, சாவித்திரி, அசோகன் என பெரிய திறமைசாலிகள்  நடித்திருந்தனர். இப்போதைய பதிவு அந்தப் படத்தில் வந்த ஒரு அருமையான பாடலைப் பற்றியது.

படம் கிட்டத்தட்ட முடிந்த பிறகு தயாரிப்பாளரான பிஆர் பந்துலு அவர்களுக்கு ஒரு யோசனை வந்ததாம். போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு கீதை உபதேசிக்கும் ஒரு காட்சியை வைத்தால் என்ன என்ற யோசனைதான் அது.  உதவி இயக்குனர்களுடன் அதைக்  குறித்து விவாதித்தபோது, அத்தனை உதவி இயக்குனர்களுமே  மறுத்து விட்டார்களாம்.” இது வேண்டாம், விபரீத எண்ணம். கதையின் நிறைவுப் பகுதியில் இப்படி ஒரு காட்சியை வைத்தால் அது நீண்ட காட்சியாகத்  தான் இருக்கும். காரணம், கீதையை சுருக்கமாகச் சொல்ல முடியாது. அடுத்து அது ஒரு தத்துவ உபதேசம். மக்களுக்கு அவ்வளவு எளிதில் புரியாது. எல்லோரும் எழுந்து போய்விடுவார்கள் படத்தில் எடுபடாது” என்றெல்லாம் சொன்னாலும், தயாரிப்பாளர் பந்துலு கேட்கவில்லையாம்.

எல்லோரும் பத்மினி பிக்சர்ஸ் அலுவலகத்தில் கூடி, இது குறித்து விவாதித்துக் கொண்டிருந்தபொழுது இசை அமைப்பாளர் M.S.விஸ்வநாதன் அங்கு வந்தார். துணை இயக்குனர்கள் தயாரிப்பாளர் சொன்ன யோசனையை அவரிடம் எடுத்துச் சொன்னார்கள். சற்று நேரம் யோசித்த விஸ்வநாதன் முகம் மலர்ந்து சொன்னாராம் ‘‘அவ்வளவுதானே, கீதோபதேசக் காட்சியை நன்றாக எடுத்துவிடலாம்’’ “எப்படி?” என்று கேட்ட பொழுது “கவிஞர் கண்ணதாசன் இருக்க கவலை ஏன்? நீங்கள் இதை ஒரு உபதேசக்  காட்சியாக, உரையாடல்களோடு எடுத்தால்தான் எடுபடாது. காலமும் அதிகரிக்கும். கண்ணதாசனிடம் சொல்லுங்கள். ஒரே பாடலில் பகவத் கீதை முழுவதையும் சொல்லி விடுவார். மூன்று நிமிடங்களுக்குள் பாட்டு முடிந்துவிடும். கீதையும் புரிந்துவிடும்” என்றாராம்.

கண்ணதாசனிடம் இதைக் கூறியதும் மறுநாளே பகவத்கீதை பாட்டை எழுதிக் கொடுத்துவிட்டார். அதுவும் எளிமையாக. பாமரனுக்கும் புரியும்படியான வார்த்தைகளில். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்து, சீர்காழி கோவிந்தராஜன் பாடிய அந்தப் பாடல் பெரும் வெற்றியடைந்தது. மூன்றரை நிமிடப் பாடலில் பகவத் கீதை முழுவதையும் சொல்லிவிட்டார் கவியரசர் கண்ணதாசன்.

இந்தப் பாடல் அதிஅற்புதமானது. உண்மையிலேயே பதினெட்டு அத்தியாயங்கள் 700 ஸ்லோகங்கள் உள்ள கீதையை, பாமரனுக்கும் புரியக் கூடிய எளிய வார்த்தைகளிலே இதைவிடச் சுருக்கமாகச் சொல்ல முடியுமா? கவியரசு கண்ணதாசன் பகவத்கீதையின்  சாரத்தை 9 பிரிவுகளாகப்  பிரித்துக் கொண்டிருக்கிறார்.

மரணத்தை நினைத்து கலங்குகின்றான் விஜயன். அதுதான் முதல் அத்தியாயம் அர்ஜுன விஷாத யோகம். அப்பொழுது மரணத்தைப்பற்றி ஒரு தெளிவு அவருக்கு ஏற்படுத்த வேண்டும். இது இரண்டாவது பகுதி. உடம்பு என்றால் என்ன ஆன்மா என்றால் என்ன என்கின்ற தத்துவ விளக்கத்தைச்  சொல்ல வேண்டும். இது மூன்றாவது பகுதி. பகவான் தன்னைப்பற்றியும் சொல்லவேண்டும். இறைத்தன்மை. இது நான்காவது பகுதி. பகவானின் இரக்ககுணம் இந்தப் போர்க்களத்தில் எப்படி வெளிப்படுகிறது என்பதைச் சொல்ல வேண்டும். இது ஐந்தாவது பகுதி.

தான் பகவான் என்பதை அவன் உணர்ந்து கொள்ள தன்னுடைய விஸ்வரூபத்தைப்  பற்றி சொல்ல வேண்டும் அது ஆறாவது பகுதி. (விபூதி யோகம்)கடமையிலே வீறுகொண்டு அவனை எழ வைக்க வேண்டும். அது எட் டாவது பகுதி. புண்ணியம் பாவம் இது இரண்டும் என்ன? எப்படி செய்தால் அவை இரண்டும் அதாவது புண்ணிய பாவ விளைவுகள் ஒருவருக்கு ஒட்டாமல் இருக்கும், என்கிற தத்துவத்தைச் சொல்ல வேண்டும். அதோடு ஒரு அருமையான கீதை ஸ்லோகத்தையும் இணைக்க வேண்டும். இத்தனையும் 18 வரிகளில் சொல்லியிருப்பார் கண்ணதாசன்.

நான் இந்தப் பாடலை, வரி வரியாக கீதையின் ஸ்லோகங்களோடு இணைத்துப்  பார்க்கும் பொழுதுதான், எத்தனை ஆழமாக கீதையின் சாராம்சம் அவருடைய உள்ளத்தில் இறங்கி இருக்க வேண்டும். கீதை ஸ்லோகங்களுடைய சாரமான விஷயங்களை எடுத்து அதை தமிழிலே அத்தனை அழுத்தமாக கவிஞர் கொடுத்து இருக்கிறார் என்பதெல்லாம் புரியும்.

1. மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா...

என்ன சுவையாக கண்ணதாசன் ஆரம்பிக்கிறார் பாருங்கள். மரணத்தை எண்ணி விஜயன் கலங்குகின்றான். விஜயன் என்றால் வெற்றியைத் தவிர வேறு அறியாதவன். எது  அவனுக்கு வெற்றியைத்  தருகிறதோ, அந்த காண்டீபம் கையில் இருக்கும்போது அவன் மரணத்தை எண்ணிக் கலங்குகிறான் என்றால், தன் மரணத்தை எண்ணிக் கலங்கவில்லை.

ஆங்கிலத்தில் சொல்வார்கள். மரணத்தை எண்ணி கலங்க அவசியமில்லை. காரணம் நீ இருக்கும் வரை மரணம் வரப்போவது இல்லை. அது வந்து விட்ட பிறகு நீ இருக்கப்போவதில்லை. அதனால் எந்த விதத்திலும் நீ கவலைப்படும் படியாக மரணம் இருப்பதில்லை. ஆனால், நமக்கு மிகவும் நெருக்கமானவர்கள் மரணத்தைக் குறித்துதான் நாம் கவலைப்படுகிறோம்.

அர்ஜுனன் அதைத்தான் முதலிலே சொல்லுகின்றான்.குரு, தாத்தா, அண்ணன், தம்பி, உறவுகள், நண்பர்கள் இவர்களையெல்லாம் கொன்றுவிட்டு நான் எப்படி வாழ்வேன்? இவர்கள் மரணத்தை நான் எப்படி கண்ணால் பார்க்க முடியும்? என கவலைப்படுகிறான்.முதல் அத்தியாயமே அர்ஜுனன் கவலையைப் பற்றித்  தெரிவிப்பது. அர்ஜுன விஷாதயோகம் என்று பெயர்.

ஸோக ஸம்விக்ந மானஸ :  
சோகத்துடனும் கலங்கிய மனத்துடனும் அர்ஜுனன் இருக்கின்றான். மரணத்தை எண்ணிக் கலங்கினான் என்கின்ற அந்த கிட்டத்தட்ட நாற்பத்தி ஏழு 42 ஸ்லோகத்தின் உடைய விஷயத்தை ஒரே வரியில் சொல்லுகின்றார். மரணத்தை எண்ணிக் கலங்குகிறான்.

2. மரணத்தின் தன்மை சொல்வேன்...!

மானிடர் ஆன்மா மரணமெய்தாது..
.

இரண்டாவது அத்தியாயத்திலேயே பகவான் அர்ஜுனன்  சோகத்தை தீர்க்கக்கூடிய முயற்சியில் ஈடுபட ஆரம்பித்துவிடுகின்றான்.ஒன்றை புரிந்து கொள்ளாதவரை அதைப்பற்றி அச்சம் இருக்கும். மரணத்தைப்பற்றிய பயம்  என்று சொன்னால் மரணத்தினுடைய தன்மை என்ன என்பது அவனுக்குப் புரியவில்லை. அதனால் இரண்டாவது அத்தியாயத்தில்  அத்தனை சாரத்தையும் எடுத்து ஒருசில வரிகளிலேயே கவிஞர் மிக எளிமையாகச் சொல்லிவிடுகிறார்.

மரணத்தின் தன்மை சொல்வேன்...!
மானிடர் ஆன்மா மரணமெய்தாது...

மரணம் உடலுக்கு உயிர் இருக்க. உயிர் பிரிந்து விட்டது என்று சொன்னால், அங்கே உடல் வேறு, உயிர் வேறு ஆகிவிட்டது. உடம்பு இங்கே இருக்கிறது. உயிர் போய்விட்டது என்று சொன்னால், அது இங்கே இல்லை, போய் விட்டது என்றுதான் பொருளே தவிர, அழிந்துவிடவில்லை. இதை திருவள்ளுவரும் அழகான உவமையோடு  சொல்லுகின்றார்.

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு


தன்னுடைய கூட்டை தனித்து விட்டுவிட்டு ஒரு பறவை பறந்தது போல இந்த உயிர் பறந்து விட்டது. இரண்டும் சேர்ந்து இருந்தது. ஒன்று அழிந்தது இன்னொன்று அழியவில்லை. அழிந்தது உடல். அழியாதது ஆன்மா. ஒருவரை வெட்டினால் அவருடைய உயிர் போய்விடுகிறது. அந்த உயிர் வெட்டுப்படுவதில்லை. ஆனால் அந்த உயிர் இருந்த  உடம்பு அந்த உயிரைத்  தாங்க முடியாத ஒரு நிலையை அடைந்துவிடுகிறது என்பது தான் மரணத்தின் தன்மை.

3. மானிடர் ஆன்மா

மறுபடி பிறந்திருக்கும்

அயம் ந ஹந்தி -ஆத்மாவானது கொல்வதில்லை

ந ஹந்யதே - கொல்லப்படுவதில்லை
ந ஜாயதே- பிறப்பதில்லை (புதிதாக)
ந ம்ரியதே - இறப்பதில்லை.


ஸரீரே ஹந்யமாநே ந ஹந்யதே - உடல் வெட்டப்படும் பொழுதும் கொல்லப்படும் போதும் ஆன்மா கொல்லப்படுவதில்லை
ஸஸ்த்ராணி ந சிந்தந்தி - ஆயுதத்தால் வெட்ட முடியாது

பாவக:ந தஹதி - நெருப்பால் எரிக்க முடியாது அப்படியானால் இந்த தேகம் எப்படி கிடைக்கிறது.

ஜீவாத்மா(தேஹி) ஜீர்ணானி (பழைய, நைந்து போன) ஸரீராணி - உடல்களை, விஹாய - விட்டுவிட்டு அந்யாநி  -வேறு  நவாநி - புதிய உடல்களை, ஸம்யாதி - அடைகிறான் பிறவி என்ற நம்முடையது அல்லாத பிற வேறு ஒரு தேகத்தை எடுத்துக் கொள்ளுதல். அதனால் பிறவி எடுக்கிறோம்.

4. நீ விட்டு விட்டாலும்  அவர்களின் மேனி வெந்துதான் தீரும்

காரணம் மரணம் என்பது நிச்சயமானது. ஜாதஸ்ய ம்ருத்யு த்ருவ: - பிறந்தால் இறப்பு நிச்சயம். தவிர்க்க முடியாதது.

மேனியைக் கொல்வாய்!
வீரத்தில் அதுவும் ஒன்று.
நீ விட்டு விட்டாலும் அவர்களின் மேனி
வெந்துதான் தீரும் ஓர் நாள்...

அப்படியானால் என்ன செய்ய வேண்டும்? பகவானைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதைத்தான் அடுத்து சொல்லுகின்றார்.
மா ந அபிஜாநந்தி - என்னை அறிய வேண்டும். அதை செய்வதில்லை.

அநன்யாஸ் சிந்த யந்தோமாம் யே ஜநாபர்யுபாஸதே
தேஷாம் நித்யாபி யுக்தானாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம்
 
இதை தெரிந்து கொள்ள வேண்டும்

என்னை அறிந்தாய்! எல்லா உயிரும்
எனதென்றும் அறிந்து கொண்டாய்!
கண்ணன் மனது கல் மனதென்றோ
காண்டீபம் நழுவவிட்டாய்!


பகவானை அருகில் இருந்தும் தெரிந்து கொள்ளாததால் தான் அவன் காண்டீபத்தை நழுவவிட்டான்.
அந்த வார்த்தை கீதையில் இருக்கிறது. காண்டீபம் ஸ்ரம் ஸதே ஹஸ்தாத் -கையிலிருந்து காண்டீபம் நழுவியது

மன்னனும் நானே! மக்களும் நானே!
மரம் செடி கொடியும் நானே!
சொன்னவன் கண்ணன்
சொல்பவன் கண்ணன்...
துணிந்து நில் தர்மம் வாழ... ஆ...


இப்போது தன்னுடைய விஸ்வரூபத்தை காட்டுகின்றார். தான் யார் என்பதை காட்டுகின்றார். அந்த விபூதி யோகத்தில் சொல்லப்பட்ட கருத்துக்களையும், பத்தாவது அத்தியாயத்தில் சொல்லப்பட்ட சில கருத்துகளையும் இணைத்து, நான்கு வரிகளில் கொடுத்துவிடுகின்றார்.

அஹம் க்ரது.
அஹம் யக்ஞ: ஸ்வதா அஹம் அஹம் ஷதம்  
மந்த்ரோ அஹம் அஹம் அக்னி
அஹம் அஸ்வத்த சர்வ விருட்ஷானாம் - எல்லா மரங்களும் நானே


மன்னனும் நானே - நராணாம் நராதிபம்
புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால்
அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே!

போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் கண்ணனுக்கே!
கண்ணனே காட்டினான்! கண்ணனே சாட்டினான்!

கண்ணனே கொலை செய்கின்றான்!
நீ ஏன் கவலைப்படுகிறாய்? பலத் தியாகம் செய்து விடு. அப்படிச் செய்தால், அந்த செயலால் உன்னுடைய கர்மாவினை ஒட்டுவதில்லை.

ஸர்வாணி கர்மானிட மயி ஸந்ந் யஸ்ய   பலம்  கொடுத்துவிடு  நான் இருக்கும்போது ஏன் கவலைப்படுகிறாய்? சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ காண்டீபம் எழுக நின் கை வன்மை எழுக!

அவன் தெளிவுபெறவேண்டும். தெளிவு பெறுவது தான் காட்சி. அதை ஒரு ஆணையாக பகவான் சொல்லுகிறார்.

நஷ்டோ மோஹ: ஸ்மிருதிர் லப்தா த்வத் ப்ரஸாதந் மயாச்சுதா
ஸ்திதோஸ்மி கதஸந்தேஹ  கரிஷ்யே வசநம் தவ:


இதை என்னுடைய முடிவு பெறும் பொழுது இப்படித்தான் முடிவு பெறுகிறது. அச்சுதன் என்றால் நழுவவிடாதவன். நழுவாதவன் என்று பொருள்.

அந்த ஒரு திருநாமத்தைத்தான் அந்த இடத்திலே பகவத்கீதையில் போடுகின்றார். நான் உறுதி பெற்றேன். நான் லாபம் அடைந்தேன். எனக்கு சந்தேகம் இல்லை. நான் உன்னுடைய ஆணையை ஏற்றுக் கொள்ளுகின்றேன். இதைவிட பகவத்கீதையை யார் சொல்லமுடியும்? கண்ணன் சொன்னதை கண்ணனுக்கு தாசன் தானே சொல்லமுடியும்.

இனி கவியரசின் முழுப்பாடல் உங்களுக்காக.........

மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா...
மரணத்தின் தன்மை சொல்வேன்...!
மானிடர் ஆன்மா மரணமெய்தாது...
மறுபடி பிறந்திருக்கும். மேனியைக் கொல்வாய்!
வீரத்தில் அதுவும் ஒன்று.

நீ விட்டு விட்டாலும் அவர்களின் மேனி
வெந்துதான் தீரும் ஓர் நாள்... ஆ... ஆ...
என்னை அறிந்தாய்! எல்லா உயிரும்
எனதென்றும் அறிந்து கொண்டாய்!
கண்ணன் மனது கல் மனதென்றோ
காண்டீபம் நழுவ விட்டாய்!

மன்னனும் நானே! மக்களும் நானே!
மரம் செடி கொடியும் நானே!
சொன்னவன் கண்ணன்
சொல்பவன் கண்ணன்...

துணிந்து நில் தர்மம் வாழ... ஆ...
புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால்
அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே!

போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் கண்ணனுக்கே!
கண்ணனே காட்டினான்! கண்ணனே தாக்கினான்!
கண்ணனே கொலை செய்கின்றான்!

காண்டீபம் எழுக நின் கை வன்மை எழுக!
இக்களமெலாம் சிவக்க வாழ்க...
ஆ... ஆ... ஆ...


பரித்ராணாய சாதூனாம்
விநாசாய சதுஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய
சம்பவாமி யுகே யுகே...


தொகுப்பு: பாரதிநாதன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்