வளங்கள் தரும் வைகுண்ட ஏகாதசி
2023-01-02@ 17:07:03

ரத்னாங்கி சேவையும், முத்தங்கி சேவையும்
வைகுண்ட ஏகாதசி, முக்கோடி ஏகாதசி, பரமபத ஏகாதசி, அத்யயன உற்சவம் என்று பல பெயர்களால் வழங்கப்படும் வைகுண்ட ஏகாதசி, அன்று மது, கைடபர்களை, நம்பெருமாள், உத்தர துவார மார்க்கமாக (பரமபத வாசல், வடக்கு வாசல்) வழியாக மோட்சம் சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெறும். அன்று பெருமாள் ரத்னாங்கி சாத்திக் கொண்டு தம்முடைய திவ்யமான வடிவழகை காட்டி அருளுவார். இதைப் பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் திருவரங்கத்தில் திரள்வார்கள்.
விலை உயர்ந்த துப்பட்டாவை சமர்ப்பித்து அரங்கனின் திருவருளைப் பெறுவார்கள். பெருமாள் பகிரங்கமாக துப்பட்டா சாத்தி கொள்ளும் சந்தர்ப்பம் இது. ஏகாதசி தினமும், அதை அடுத்த சில தினங்களும், முத்தினால் செய்த அங்கியை மூலவர் அணிந்து கர்ப்பக் கிரகத்தில் காட்சி தருவார். இந்த சேவைக்கு ‘முத்தங்கி சேவை’ என்று சொல்கிறார்கள்.
1 வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே:
ஏகாதசி விரதம், மனிதப்பிறவி எடுத்த ஒவ்வொருவருக்கும் சொல்லப்பட்டது. சுவாமி நம்மாழ்வார், தன்னுடைய பாசுரத்தில் ஒரு விஷயத்தைச் சொல்கின்றார். தேவர்கள்கூட, வைகுந்தத்தை அடைய முடியாது. வைகுண்டத்தை அடைவதற்கான ஒரே வழி மனிதர்களாகப் பிறந்து, இந்த கர்ம பூமியில் வாழ்ந்து, திருமால் அடியார்களாய் இருந்து, சாஸ்திரத்தில் சொல்லப் பட்ட ஏகாதசி முதலிய விரதங்களை முறையாகக் கடைபிடித்து, பகவானை சரணாகதி அடைந்தால் மட்டுமே, வைகுண்டத்தை அடையமுடியும்.
இதை ஒரு பாசுரத்தில் சொல்லுகின்றார்.வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர் வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுத என்று வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர் வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே தேவர்கள் கூட மனித வடிவம் எடுத்து நாரயணனை சரணாகதி செய்து வைகுண்டம் புக வேண்டும். வேறு விதி இல்லை என்கிறார்.
2 வைகுண்ட ஏகாதசி என்று ஏன் பெயரானது?
மார்கழி மாத ஏகாதசிக்கு “வைகுண்ட ஏகாதசி” என்று பெயர். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இந்த வரலாறு, ஸ்ரீபிரஸன்ன சம்ஹிதையில் தெரிவிக்கப்படுகின்றது. நாராயணன் பிரளயத்துக்குப் பின்னர், ஆலிலையின் மேல் பள்ளி கொண்டு, தம்முடைய நாபிக் கமலத்தில் இருந்து, உலகத்தைப் படைப்பதற்காக நான்முகக் கடவுளை படைத்தார். ஸ்ரீமன் நாராயணனின் பிள்ளை பிரம்மா என்று புராணங்கள் கூறுகின்றன. பிரம்மாவிடம் வேதத்தைக் கொடுத்து உலகத்தைப் படைக்கச் சொன்னார்.
வேதத்தினை ஆதாரமாகக் கொண்டு நான்முகன் உலகங்களையும், உலகத்தின் உயிர்களையும் படைக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில், தன்னால் மட்டுமே இந்த உலகத்தை படைக்க முடியும் என்கின்ற ஒரு ஆணவம் நான்முகனுக்கு வந்துவிட்டது. ஒருவருக்கு வந்த ஆணவம், சரியான நேரத்தில் போகாவிட்டால், ஆணவமே அவரை அழித்துவிடும் என்பதை உணர்ந்த ஸ்ரீமன் நாராயணன், நான்முகனின் ஆணவத்தை அழிக்க திருவுள்ளம் கொண்டார்.
மது, கைடபர் என்ற இரண்டு அசுரர்களை அனுப்பி வைத்தார். இருவரும் பிரம்மாவின் கையிலிருந்த வேதத்தை அபகரித்துக் கொண்டு மறைந்துவிட்டனர். கைப்பொருளை இழந்த நான்முகன், படைக்கும் வழி அறியாது தவித்து திகைத்தார். தன் தவறை உணர்ந்தார். திருமாலிடம் சென்று முறையிட்டார். தனக்கு வேதங்களை மீட்டுத் தருமாறு வேண்டி நின்றார்.
3 ஹயக்ரீவ அவதாரமும் வைகுண்ட ஏகாதசியும்:
திருமாலும் ஹயக்ரீவராக அவதரித்து, மது, கைடபர்களை அழித்து வேதங்களை மீட்டுத் தந்தார். மனித உடல் அமைப்பில், வெள்ளை குதிரை முகத்துடன் திருமால் எடுத்த இந்த அவதாரம் தசாவதாரங்களுக்கு முற்பட்டது. மது, கைடபர்கள் பெருமாளிடம் தங்களுக்கு வைகுண்டம் தருமாறு பிரார்த்தனை செய்தனர். அவர்களிடம் பகவான், ‘மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி அன்று உங்களுக்கு மோட்சம் தருகின்றேன்’ என்று வாக்களித்தார்.
4 சொர்க்க வாசல் (பரமபத வாசல்) திறப்பு:
மார்கழி மாச ஏகாதசி அன்று வைகுண்டத்தின் வடக்கு வாசல் கதவைத் திறந்து, மது, கைடபர்களை உள்ளே அனுமதித்தார். அதனால், மது, கைடபர்களுக்கு வைகுண்டம் தந்த ஏகாதசி என்பதால் ‘வைகுண்ட ஏகாதசி’ என்று சொல்கின்றார்கள். அன்று மது, கைடபர்கள், “இந்த நல்ல நாளிலே யாரெல்லாம் விரதம் இருப்பார்களோ, அவர்களுக்கும் இந்த வைகுண்டம் அளிக்க வேண்டும்” என்று வேண்ட, திருமால் அதற்கு இசைந்தார்.
எனவேதான், மார்கழி மாத ஏகாதசியில் பெருமாள் கோயில்களில் உள்ள வடக்கு வாசல் கதவை, வைகுண்ட வாசலாகக் கருதி, மக்கள் பயபக்தியோடு, அந்த வழியாகச் சென்று பெருமாளை வைகுண்ட ஏகாதசி தரிசனம் செய்கின்றனர். ஒருவகையில், இது நிஜமான வைகுண்டத்தை அடைவதற்கு முன் நடக்கும் ஒத்திகையைக் காட்ட வந்த விழா என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
5இராபத்து திருநாள்:
அழகிய மணவாளன் மண்டபத்தில் நம்மாழ்வாரை எழுந்தருளச் செய்து, பத்து நாட்கள் திருவாய்மொழியை, திருமங்கையாழ்வார் தேவகானத்தில் அபிநயத்தோடு இசைத்தார். பத்தாம் நாள் வேதங்களைச் சொல்லி முடித்த பிறகு, இரவு திருவாய் மொழியைப் பாடி முடித்து, நம்மாழ்வார், பெரிய பெருமாளின் திருவடிகளில் சேர்ந்ததை, ஒரு நாடகமாக நடித்துக் காண்பித்தார். அழகிய மணவாளனையும் நம்மாழ்வாரை ஏக ஆசனத்தில் இருத்தினார்.
திருவாய்மொழியின் ஈரத்தமிழை கேட்டு உகந்த பெருமாள், நம்மாழ்வாருக்கு மாலைபிரசாதம், கஸ்தூரி திருமண் காப்பு முதலியவைகளைத் தந்து ஆழ்வாருக்கு விடை தர, ஆழ்வார், திரும்ப தன் ஆஸ்தானமான திருநகரிக்கு மேள, தாள, பல்லக்கு மரியாதைகளுடன் புறப்பட்டார். ஆழ்வார் திருநகரியில் சேர்த்துவிட்டு திரும்ப வருகின்ற பொழுது தை மாதம் அஸ்த நட்சத்திரம் ஆகிவிடும்.
இந்த உற்சவம் திருமங்கை ஆழ்வார் காலம் வரையில், வருடா வருடம் இதே முறையில் நடந்தது. அப்பொழுது 10 நாட்கள் மட்டுமே இரவில் திருவாய் மொழியைப்பாடுகின்ற திருவாய்மொழித் திருநாளாக நடைபெற்றது. இதனை இரவில் நடத்துவதால் இராபத்து திருநாள் என்று பெயர்.
6 அரையர் சேவை:
திருமங்கையாழ்வார் காலத்திலும் சரி, நாதமுனிகள் காலத்திலும் சரி, திருவரங்கத்தின் பெருவிழாவாக, மார்கழித் திருவிழா, முத்தமிழ் விழாவாகவே மலர்ந்திருந்தது. இந்த மூன்று தமிழையும் உள்ளடக்கிய ஒரு தொண்டு “அரையர் சேவை” என்று அழைக்கப்படுகிறது. அரையன் என்றால் அரசன் என்று பொருள். (புள் அரையன் - கருடன்). இப்பொழுது தமிழகத்தில் திருவரங்கம், திருவில்லிபுத்தூர், ஆழ்வார் திருநகரி ஆகிய திருத்தலங்களில் இந்த கலைவடிவம் நிகழ்த்தப்பட்டு வருகிறது.
திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசிக்கு முன்பாகவும் பின்பாகவும், இந்த அரையர் சேவை நடக்கும். நாதமுனிகள் ஆழ்வார்களின் பாசுரங்களைப் பரப்புவதற்காக தமது மருமக்களாகிய மேலை அகத்து ஆழ்வான், கீழை அகத்து ஆழ்வான் ஆகிய இருவருக்கும் இசையுடன் பாசுரங்களைக் கற்றுக் கொடுத்தார். அவர் வழியினர்களே, இசை நாடக அபிநயத்தோடு பாசுரங்களைப் பாடும் “அரையர்கள்.” அரையர் சேவையின் மிக முக்கியமான விஷயம் மேடை இருக்காது.
இறைவன் முன்னால் பிரபந்தப் பாடல்களைப் இசையோடு பாடுவார்கள். அவர்கள் கையில் உள்ள ஒரு தாளத்திற்கு நாதமுனிகள் என்று பெயர். ஒரு தாளத்திற்கு நம்மாழ்வார் என்ற பெயர். தலையில் வெல்வெட்டால் செய்யப்பட்ட குல்லாய் அணிந்திருப்பார்கள். நாதமுனிகள் பேரரான ஆளவந்தார், தம்முடைய குமாரனுக்கு `திருவரங்கப் பெருமாள் அரையர்’ என்று பெயர் சூட்டினார். திருவரங்கப் பெருமாள் அரையர், ராமானுஜரின் ஐந்து ஆசிரியர்களில் ஒருவர். இந்த அரையர்கள் திருவரங்கத்தில் முத்தமிழ் கைங்கரியத்தைச் செய்வதற்காகவே இருந்தனர். ‘‘வரம் தரும் பெருமாள் அரையர்’’ ‘‘நாத வினோத அரையர்’’ என்ற அருளப்பாடுகள் உண்டு.
மேலும் செய்திகள்
சனிப் பெயர்ச்சி பரிகாரத் தலங்கள்
ஸ்ரீராம தரிசனம்!
தென்னக அயோத்தியில் வண்ண ஓவிய ராமாயணம்!
அஷ்ட பைரவத் தலங்கள்
தோஷ நிவர்த்தி தலங்கள்
ஆபத்தை களையும் அஷ்ட பைரவர்கள்
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!