SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெண்ணெய் களவும் எழில் தாம்பும்

2022-12-29@ 15:54:32

நன்றி குங்குமம் ஆன்மிகம்

பிருந்தாவனங்களில், கானத்துக்கு என்றும் குறை இருந்ததே இல்லை. நலம் காக்கும் நல்மருந்தாக குழல் இசை இருந்து கொண்டே இருக்கிறது. சாந்திபினி முனிவரிடம், குருகுல வாசம் கண்ணன் சென்றுவிட, கண்ணனின் புல்லாங்குழல் ராதையிடம் கண்ணனின் இருப்பாக சென்று சேர்ந்தது. ஆவினங்களும் கோபியர்களும் குழலிசைக்கு உருகினார்கள். கண்ணன் உண்ட வெண்ணெய், அவனது இசையிலே இனிமையையும், கொஞ்சலையும் தந்தது. அவன் வாய் வைத்து ஊதிய அந்தக் குழலோ, ராதையிடமும் அப்படியே கண்ணனின் இசையை நல்கியது.

ராதைகளும் கண்ணன்களும் என்றும் இசைத்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். உள்ள படியே வெண்ணெய்ப் பிரியனான கண்ணனுக்கு ஆண்டாள்பிராட்டி மிகப்பெரியதும் உயரமானதுமான நூறு அண்டாக்களில் வெண்ணெய் தருகிறேன் என்று சொல்லி அல்லவா தன் காதலை தெரிவித்தாள். அலங்காரப் பிரியனும், அழகனுமான திருமாலை மேலும் அழகுறச் செய்தது கண்ணனாக அவன் உண்ட வெண்ணெய் அல்லவா?!

மின்னிய செஞ்சிறுவாய்

முன்னிரவு, உறை ஊற்றிவைத்த பால் மஞ்சள் நிலவென கெட்டித் தயிராக மாறி இருக்கும். காலையில் எழுந்திடும் யசோதை, தயிருடன் நீரும் கலந்து வெகு நேர்த்தியாக தயிரினைக் கடைவாள். வெண்பாற் கடலில் இருந்து மிதந்து வரும் வெண்பனி மலையாக வெண்ணெய் திரண்டு வரும். தனது மெல்லிய விரல்களால் அதனை உருட்டி வேறு ஒரு பானையிலே போட்டு உறியிலே வைத்துவிடுவாள். காலையில், இருந்து ஓயாது வேலை செய்து ஓய்ந்து நிற்பாள் யசோதை.

ஓய்வெடுக்க எண்ணுவாள். கொழுகொழுவென்று அழகெலாம் ஒன்றாகத் திரண்ட அழகன் கண்ணனையும், தன் அருகிலே படுக்க வைத்துக்கொள்வாள். சற்றே கண்ணயர்ந்தும் விடுவாள். உறங்குவது போல் படுத்துக் கிடந்த மாய்மாலனோ, பூனை போல் மெல்ல நகர்வான். பின் குடுகுடுவென்று தயிர், மோர், வெண்ணெய் என பானைகள் வைத்திருக்கும் அறைக்கு ஓடுவான். பானைகளுக்குள்ளே தனது அழகிய தோள்கள் செல்லும்படி முக்கால் உடலை நுழைத்து வெண்ணெயை உண்ண ஆரம்பிப்பான்.

ஒன்றும் தெரியாதது போல் மீண்டும் யசோதையுடன் வந்து படுத்துக்கொள்வான். எழுந்த யசோதையோ மினுமினுப்பான அவன் உதடு களைக் கண்டு வெண்ணெய் உண்டாயோ?! என்பாள். இல்லவே இல்லை அம்மா என்பான் மாய்மாலன். சில நேரங்களில் கண்ணன் உறங்குவதாக நினைத்து அப்படியே விட்டுவிட்டு வெளியே சென்று வருவாள் யசோதா. வந்து பார்த்தால் முற்றம் வரை வெண்ணெய்ப் பானை உருண்டிருக்கும்.

யசோதையின் வீட்டிற்குள்ளேயே பாற்கடலும், மோர்க்கடலும், தயிர்க்கடலும் இருக்கும். மிதந்தப்படி மீண்டும் உறங்குவது போல் படுத்துக் கிடப்பான் மின்னும் கார்மேக வண்ணக் கண்ணன். எத்தனை முறை உண்டாலும் மீண்டும் மீண்டும் உண்ணத் தூண்டும் சுவையுடன் வெண்ணெய் இருந்ததாம். அதனால்தான் அவ்வளவு உண்டானாம். இந்த நிகழ்ச்சியை திருமங்கையாழ்வார் இப்படிப் பாடுகின்றார்.

‘‘ஓராதவன் போல் உறங்கி, அறிவு உற்று
தார் ஆர் தடம் தோள்கள் உள்ளளவும் கைநீட்டி,
ஆராத வெண்ணெய் விழுங்கி- அருகு இருந்த
மோர் ஆர் குடம் உருட்டி,முன்கிடந்த தானத்தே
ஓராதவன் போல் கிடந்தான்....’’


இந்த அழிச்சாட்டியத்தை பார்த்து வெகுண்ட யசோதை, ஒரு நீண்ட நெடுங் கயிற்றால் கண்ணனை உரலிலே கட்டி வைத்துவிடுவாள். ஆய்ச்சியர்கள் எல்லாம் பார்த்து கேலிச் சிரிப்பு சிரிக்க, கண்ணனும் குதூகலத்துடன் சிரித்து மகிழ்வான்.

பெற்றவளின் ஏக்கம்

குழந்தைகள் குடம்குடமாகப் பால் குடிப்பார்களா? நிச்சயமாக. சமீபத்தில் முகநூலில் புகைப்படம் பார்த்தேன். மாட்டின் மடியில் இருந்து வாளியில் கறந்த பாலை பாட்டி, வாளியுடன் நீட்ட சிறு குழந்தை அம்மாவின் மடியில் இருந்து தாவி அப்படியே பருகுகிறது. கலியுக குழந்தையே இவ்வாறு பருகும் போது, தனது திருவாயில் அண்ட சராசரம் முழுவதையும் காட்டி நின்ற கண்ணன், எவ்வளவு பருகியிருப்பான்?! தான் பெற்ற குழந்தைக்கு தன்னால் பால் புகட்ட முடியவில்லையே என்று வருத்தப்படுபவளின் மனநிலை எப்படி இருக்கும் என்பது அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.

அங்கும் இங்கும் ஓடுவது, மேலே வைத்திருந்த பொருட்களை கீழே தள்ளுவது, சோறு தின்பதற்கு படாத பாடு படுத்துவது, குளிப்பதற்கு அடம் பிடிப்பது இத்தியாதி இத்தியாதிகள்.. சிறையிலே கண்ணனைப் பெற்றெடுத்த தேவகி இந்த இன்பங்கள் எதனையுமே அனுபவிக்கவில்லை. இந்த நெகிழ்வான நிலைமையை, தானே அனுபவித்ததாக ஆழ்வார் பாடுகின்றார். சிறு தாமரைப் பூ போன்ற அழகிய கைகளால் வெண்ணெயை, அதன்பின் தயிரை, அள்ளி அள்ளி உண்டான். கண்ணனின் சேட்டையை கண்டு, தாம்புக்கயிறு கொண்டு அடிப்பதற்கு கையை ஓங்கினாள் யசோதை. வெண்மேகம் போன்று வாயிலே அப்பி இருந்த தயிருடன் ``அம்மா அடிக்காதே... அம்மா..’’ என்று அஞ்சிநின்றான்.

சொல்ல இயலாத அழகுடன் அவன் முகம் ஜொலித்தது. இந்த ஜொலிப்பை யசோதை கண்டு, ``என்னடா கண்ணா.. சமத்து இல்லையா நீ! உன்னை அடிக்க மாட்டேன்’’ என்று யசோதை இன்பம் பொங்க நின்றாளாம். இந்த இன்பத்தை நான் அனுபவிக்கவில்லையே என்று தேவகியின் நிலையில், தான் இருந்து குலசேகர ஆழ்வார் பாடுகின்றார். தமிழ் அமுதும் கிருஷ்ண பக்தியும் செழித்து ஓங்கிய பாடல்.

‘`முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும்
முகிழ் இளம் சிறு தாமரைக் கையும்
எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு
என்கு நிலையும், வெண் தயிர் தோய்ந்த செவ்வாயும்
அழுகையும், அஞ்சி நோக்கும் அந்நோக்கும்
அணிகொள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும்
தொழுகையும் இவை கண்ட யசோதை
கொல்லை இன்பத்து இறுதி கண்டாளே!’’


இந்தப் பாட்டிலே கண்ணனின் அப்பாவித்தனமான பாசாங்கும், அதனை நம்பிய யசோதையின் பாசமும், தேவகி கற்பனை பண்ணுவதாக ஆழ்வார் கற்பனை செய்கிறார். குட்டிக் கண்ணனின் சிவந்த உதடுகளில் ஒட்டிக்கொண்டிருக்கின்ற தயிர் போன்றும், வெண்ணெய் போன்றும் இந்த லௌகீக வாழ்க்கையிலே நாமும் தாமரை இலைத் தண்ணீர் போல் இருந்தோம் என்றால் நிச்சயமாக மனதில் நிம்மதி கிடைக்கும்.

ஆரத் தழுவிய கண்ணன்

செல்லக் குழந்தைகள் எப்பொழுதுமே தனக்கு பிடித்தவர்கள் அருகில் வந்து முதுகுக்குப் பின்னால் நின்று கொண்டு அணைத்துக்கொள்ளும். அந்த அணைப்பிலே இருக்கின்ற சுகம் அலாதியானது. முற்றும் துறந்த முனிவர்களுக்குகூட அந்த அனைத்துப் பேரானந்தத்தை அளித்துவிடும். யசோதை மட்டும் விதிவிலக்கா என்ன?! யசோதை அனுபவித்த அந்த சுகத்தை, தான் அனுபவித்ததாக சிலாகித்து பெரியாழ்வார் பரவசத்தில் பாடுகின்றார். உபயோகப்படுத்தாத உரல் ஒன்று மூலையிலே கிடந்ததாம். அந்த உரலை தன் பிஞ்சுக் கரங்களால் தள்ளிக் கொண்டு வந்து, உறிக்கு கீழே வைத்து, அதன்மீது ஏறி நின்றான் கண்ணன். சுற்று முற்றும் பார்த்து யாரும் வரவில்லை என்று உறுதி செய்து கொண்டான்.

திரட்டுப் பாலின் வாசனை வேறு, ஜம்.... என்று மூக்கிலே ஏறியது. வெண்ணெயினுடைய மெல்லிய நறுமணமும் சேர்ந்து, கண்ணனைக் கிறங்கவைத்தது. வெண்ணெயை கொஞ்சம் அள்ளி சாப்பிட்டான். அதன்பின் கொஞ்சம் திருட்டுப் பாலை சாப்பிட்டான். கண்ணனின் கை சூடு பட்டு, வெண்ணெய் உருகி மணக்கும் பொன் நிற நெய்யாக மாறியது. இந்த நெய்வாசனை மூக்கைத் துளைக்க உள்ளே வந்தாள் யசோதை.

கண்ணனின் சேட்டையை பார்த்து ஆச்சரியப்பட்டு, அமர்ந்து விட்டாள். திருட்டுப் பாலும் வெண்ணெயும் தின்ற வாய் மணக்க, அம்மா என்று செல்லமாக சிணுங்கி அமர்ந்திருந்த யசோதையின் முதுகை கட்டி அணைத்துக் கொண்டு, அம்மா... என்று அழைத்தான். அந்த பால் வாசனையிலே கிறங்கித்தான் போய்விட்டாள் யசோதா. அதே கிறக்கத்துடன் பெரியாழ்வாரின் பாசுரத்தை பார்ப்போம்.

‘‘பொத்த உரலை கவிழ்த்து, அதன் மேல் ஏறி
தித்தித்த பாலும், தடாவினில் வெண்ணெயும்
மெத்தத் திருவயிறு ஆற விழுங்கிய
அத்தன் வந்து, என்னைப் புறம் புல்குவான்:
ஆழியான் என்னை புறம் புல்குவான்’’


சக்கரப் படையை கையிலேயே ஏந்திய நாராயணன் குட்டிக் கண்ணனாக வந்து யசோதையை அணைத்த காட்சியை பெரியாழ்வார் பாடுவது இனிமை. என்ன பேறு பெற்றாளோ யசோதை??!

பெரியாழ்வாரும் பிள்ளைத்தமிழும்

பிள்ளைத்தமிழ் என்பது குழந்தைகளினுடைய வளர்ச்சியை ஒவ்வொரு பருவமாக பாடிவருவது. வளர்கின்ற சிறு குழந்தைகளுக்கு எப்பொழுதுமே வயிறு பெருத்துதான் காணப் படும். நிறைய சாப்பிடப் பிரியப்படும். அப்படி வெண்ணெய் உண்டதனால் வயிறு பெருத்த கண்ணன் நிலவைப் பார்த்து, `அருகே வா..’ என்று அழைக்கின்றானாம். இது பெரியாழ்வாரின் கற்பனை.

‘‘தாழியில் வெண்ணெய் தடங்கை ஆர விழுங்கியபேழை வயிற்று எம்பிரான், கண்டாய் உன்னைக் கூவுகின்றான்: மாமதீ மகிழ்ந்தோடி வா!’’

பெரியாழ்வாரின் அழைப்பைக் கேட்டு நீல நிறக் கண்ணனைக் காண நிலவு வந்ததாம். குளத்திலோ ஆறுகளிலோ குழந்தைகள் விளையாடுவதற்கு ஏதுவான வசதிகள் இன்றைய காலகட்டத்தில் குறைவுதான். சிறு பாத்திரங்களிலே தண்ணீரை எடுத்துக்கொண்டு குழந்தைகள் பொம்மைகளை அதற்குள் குளிக்க வைப்பதைப் பார்த்திருக்கிறோம்.

குழந்தைகளின் குளியல் மேலான ரசனை அமோகமானது. ஆற்றங்கரையிலே ஆடி அழிச்சாட்டியம் செய்துவிட்டு குட்டிக் கண்ணன், சேறும் சகதியுமாக வருகிறான். அழுக்கற்ற தங்கள் உடைகளை அழுக்காக ஆக்கிக்கொள்வதில் அலாதி பிரியம் அழகான குழந்தைகளுக்கு. இதற்கு குட்டிக்கண்ணன் மட்டும் விதிவிலக்கா என்ன?! நீலநிற மேனியிலே செங்காவி நிறத்து சேற்றைப் பூசிக்கொண்டு சின்னஞ்சிறு பிஞ்சு மரகதமலையாக மயிர்ப்பீலி அசைந்தாட சிறுநடை நடந்து வந்தான்.

வந்த அதே வேகத்தில் தயிர்ச் சட்டிக்குள் கையை விட்டு தயிரை உண்டு மகிழ்ந்தான். மிகப்பெரிய பானையிலே வைத்திருக்கின்ற வெண்ணெயையும் உண்டு மகிழ்ந்தான். வெண்ணெய் களவாட்டம் முடிந்த பிறகு மகிழ்கின்ற கண்ணா, அழகிய உன் இரண்டு கைகளையும் தட்டி மகிழ்ந்திடு. பெரியாழ்வாரின் எழில் கொஞ்சும் பாசுரம் இதோ.

‘‘புட்டியிற் சேறும், புழுதியும் கொண்டு வந்து
அட்டி அமுக்கி அகம்புக்கு அறியாமே,
சட்டித்தயிரும் தடாவினில் வெண்ணெயும், உண்
பட்டிக்கன்றே! கொட்டாய் சப்பாணி: பற்பநாபா! கொட்டாய் சப்பாணி!’’


திகட்டாத இனியவனே திட்ட மாட்டேன் வா!

அலங்கார பிரியனான திருமாலின் அவதாரமாகிய கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் அலாதியானது. பிறந்தநாள் முதலாக ஆவினங்களின் மீதும், பால் தயிர் வெண்ணெய் இவற்றின் மீதும் அமோக பிரியம் கொண்டிருந்தான். குழந்தை கிருஷ்ணனுக்கான நைவேத்தியம் தருவதிலே ஆவினங்கள் மகிழ்ந்தன. இது தெரிந்த செய்தி.! என் பெருமானே கண்ணா! உறியின் மேல் நான் வைக்கின்ற வெண்ணெய், பால், தயிர் இவை எதுவுமே அப்படியே இருந்ததில்லை. நண்பர்களுடன் சேர்ந்து நீ கொண்டாட்டமாக உண்டு விட்டுச் செல்கிறாய். மற்றவரிடம் எல்லாம் சொல்லி விடமாட்டேன்.

அப்படிச் சொல்லி அவர்கள் உன்னை கேலி செய்தால் அது நல்ல தாய்க்கு அழகல்ல. ஆகவே நான் மறந்தும்கூட சொல்ல மாட்டேன். என் அழகுச் செல்லமே வந்து குளித்து தூய்மையாக இரு. பெற்ற தாயாக தன்னை பாவித்துக்கொண்டு பெரிய ஆழ்வார் இவ்வாறு பாடுகின்றார்.

‘‘கறந்த நற்பாலும்,
தயிரும் கடைந்து உறிமேல் வைத்த வெண்ணெய் பிறந்ததுவே முதலாகப் பெற்றறியேன்: எம்பிரானே!
சிறந்த நற்றாய் அலர் தூற்றும் என்பதனால்,பிறர் முன்னே
மறந்தும் உரையாட மாட்டேன்: மஞ்சனம் ஆட நீ வாராய்!’’


கறந்த நற்பாலும் என்று பெரியாழ்வார் சொல்கின்ற அழகை கவனிக்க வேண்டும். மிகச் சிறந்த தீவனங்களை போடுவதுடன், கன்றுக் குட்டிகள் முழுமையாக பசியாறிய பிறகு பசுவின் மடிக்காம்பு நோவு கொள்ளாது மென்மையாக கறந்த பால் அது. அதனால் அது நற்பால் ஆயிற்று.

அந்த நற்பாலிலே கிடைத்த வெண்ணெயைத்தான் தன் நண்பர்களுடன் இணைந்து உண்டு மகிழ்ந்தான். தன் தாய்க்குத் தெரியாமலும் ஆய்ச்சியர்களுக்குத் தெரியாமலும் திருட்டுத்தனமாக உண்பதில் அத்தனை ருசி கண்ணனுக்கு. அந்தச் செல்லத் திருட்டுக்கு செல்லமாகக் கோபித்து உரலிலே சிறு கயிறுகொண்டு கட்டிவைக்க யசோதையால் முடிந்தது என்றால் நல்ல தாயாக அவள் பெற்ற பேறு அது. சிறு துண்டுக் கயிற்றிலே கண்ணனால் கட்டுபட முடிந்தது என்று சொன்னால் அது அவனது உயர்ந்த எளிமைக் குணம்.

யசோதையின் தாய்மை எவ்வளவு உயர்ந்தது?! அன்பிற்கு மட்டுமே கண்ணன் அகப்படவும் ஆட்படவும் செய்வான். அதனால்தான் தனது அன்பையே கயிறாக பாவனை செய்து கட்டி வைத்தாள் யசோதை.நம்மாழ்வாரின் பாசுரத்தின் இரண்டு அடிகள் இதனைப் புரிய வைக்கும்.

‘‘மத்து உறு கடை வெண்ணெய் களவினில் உரலிடை யாப்புண்டு
எத்திறம், உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே!’’


என்ன அற்புதமான பாசுரம்! யசோதையின் அன்பு பிடியிலே கட்டுண்டு பயப்படுவதாக போக்கு காட்டிய கண்ணன் அதி அன்பன் அல்லவா?!  பக்தர்களின் அன்பிற்காக அன்பர்தம் அன்பராக எளியவனாக நம்மை காத்து மகிழ்ச்சி தருவதினால், மகிழ்ந்திடுவான் கண்ணன் என்கிறது தெய்வீகம். அன்பைத் தந்திடுவோம் அவன் அன்பைப் பெற்றிடுவோம்.!!

தொகுப்பு: மகேஸ்வரி சற்குரு

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • well-collapes-31

    ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

  • parliammmm_moddi

    இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்