SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெயர் சூட்டிய பெம்மான்

2022-12-27@ 14:40:40

நன்றி குங்குமம் ஆன்மிகம்

தசமுகனாகிய இலங்கேஸ்வரன் கோள்கள் அனைத்தும் வென்றவனாகத் திகழ்ந்திருந்தபோது, ஒரு சமயம் கயிலைமலையை ஒட்டி தன் புட்பகத் தேரைச் செலுத்திவந்தான். அவ்வாறு அவன் செலுத்தி வந்த அப்புட்பகத்தேரோ, மன்னன் குபேரனை ஒருமுறை வென்று அவனிடமிருந்து கைப்பற்றியதாகும். தேர் செல்லும் வழியில் சிவபெருமான் உறைகின்ற கயிலயங்கிரி எதிர்ப் பட்டதால் தேரோட்டம் தடைபட்டது. கோபமுற்ற தசமுகன், தேரினை மேற்செலுத்த இயலவில்லை. உடனே இலங்கேஸ்வரன் தேரினின்று இறங்கி கயிலைமலையையே அகற்ற முயன்றான். தன் தோள்வலிமையால் கயிலை மலையைக் குலுங்க, ஆர்த்து எடுத்து, தலைக்குமேல் உயர்த்தினான். கயிலை மாமலை அதிர்ந்தது.

பத்துத் தோள்களாலும் இலங்கேஸ்வரன் பாரித்து மலையை எடுத்த காலத்தில், உமையவளோ ஈசனிடம் ஊடல் கொண்டு ஒதுங்கி இருந்தாள். அவள் ஊடலுக்குக் காரணம் யாது என்பதை அப்பர் பெருமான், கங்கையைத் தன் சடையில் ஏற்று, மங்கை அவளைத் தீண்டியதால்தான் என்பதை திருமறைக்காட்டுப் பதிகத்தில் ‘‘கங்கை நீர் சடையுள் வைக்கக் காண்டலும் மங்கை ஊடத் தென் கையான் தேர்க்கடாவிச் சென்று எடுத்தான் மலையை” என்பார்.

ஊடியிருந்த உமாதேவி, மலை குலுங்கியதால் நடுக்கமுற்று ஈசனை அணைத்தாள். நங்கையவளின் நடுக்கம் கண்டு நகைத்த ஈசன், தன் கால் விரல் ஒன்றால் தரையில் ஊன்ற, இலங்கையர் கோனின் இருபது தோள்களும் நெரித்தன. மன்னவன் அலறினான். பொருப்பினை எடுத்த தோளும், பொன்முடி பத்தும், புண்ணாய் நெரிப்புண்டன. உடன், தசமுகன் தன் கைநரம்பு ஏழினை எடுத்து கையையே யாழாக்கிஇசைத்தவாறு வேதகீதம் பாடத் தொடங்கினான். இதனை,

அரக்கனார் அருவரை எடுத்தவன் அலரிட
நெருக்கினார் விரலினால் நீடுயாழ் பாடவே


- என்பார் திருநாவுக்கரசர்.

இவ்வாறு பத்துவாய் கீதம் பாட, பண்ணிசையால் மகிழ்ந்த பரமன், தசமுகன்பால் பரிந்து அவனை மலையிலிருந்து விடுவித்ததோடு, அவனுக்கு, ‘‘இராவணன்” என்ற திருநாமத்தைச் சூட்டியதோடு வாளும் தேரும் அளித்து வாழ்நாளும் அருளினார்.இலங்கேஸ்வரனாகிய தசமுகனுக்கு, இராவணன் என்ற பெயரினை அளித்தவர் பரமேஸ்வரன்தான் என்பதைத் தேவாரப் பாடல்கள் இனிதே இயம்புகின்றன.

கைத்தலங்கள் இருபது உடை அரக்கர் கோமான்
கயிலைமலை அது தன்னைக் கருதாது ஓடி
முத்து இலங்க முடிதுளங்க வளைகள் எற்றி
முடுகுதலும் திருவிரல் ஒன்று அவன்மேல் வைப்ப
பத்து இலங்கு வாயாலும் பாடல் கேட்டு
பரிந்து அவனுக்கு இராவணன் என்று ஈந்தநாமத்
தத்துவனை தலையாலங்காடன் தன்னை
சாராதே சாலநாள் போக்கினேனே


- என்பார் நாவுக்கரசர்.

பெயர் மட்டுமன்றி கருக்கு வாளும், தேரும், வாழ்நாளும் பெற்றான் இலங்கேஸ்வரனாகிய இராவணன்.தேவாரப் பாடல்கள் வழி இராவணனது செயல்கள் அறிந்த சோழநாட்டுச் சிற்பிகள், அப்பாடல்களுக்கென்றே எழிலுரு சிற்பங்களைப் படைத்து மகிழ்ந்தனர். தமிழகத்திலுள்ள பல சிவாலயங்களில் இராவணனுக்கிரகமூர்த்தியின் சிற்பங்கள் இடம் பெற்றிருந்தபோதும், பழையாறை, தாராசுரம், கங்கைகொண்டசோழபுரம், திருப்பூந்துருத்தி ஆகிய ஊர்களில் உள்ள சிவாலயங்களில் இடம் பெற்றிருக்கும் சிற்பப் படைப்புகளுக்கும், தஞ்சைப் பெரியகோயிலில் உள்ள இராஜராஜ சோழன் காலத்து ஓவியத்தில் இடம்பெற்றுள்ள இராவணன் கயிலை மலையைப் பெயர்க்கும் காட்சிக்கு இணையாக வேறு படைப்புக்களை ஒப்பிடுதல் சற்று கடினமே.

கீழப்பழையாறை சோமநாதர் ஆலயம் மூன்றாம் குலோத்துங்கனால், புதுப்பிக்கப்பெற்ற கற்றளியாகும். இக்கோயிலின் மகாமண்டபத்தின் உட்பகுதியில், வடபுறம் ஒரு மாடத்தில் கயிலையைப் பெயர்க்கும், இராவணனது சிற்பம் உள்ளது. ஐந்து தலைகள் முன்புறம் தெரிய தசமுகன் கயிலை மலையின்கீழ் ஒரு காலைக் குத்திட்டு அமர்ந்தவாறு முன்னிரு கரங்களால் மலையைப் பெயர்த்து மேலே தூக்குகிறான். அம்முயற்சிக்கு உறுதுணையாகப் பின்னிரு கரங்களை முழங்காலிலும் இடுப்பிலும் அழுத்தியவாறு எழுந்து நிற்க முயலுகிறான்.

அவன் பெயர்க்கும் மலையிலோ புழைகள் பல காணப்பெறுகின்றன. விலங்கினங்கள் பலவற்றில் படுத்தவாறும், உறங்கியவாறும் திகழ்கின்றன. ஒருபுறம் பாம்பொன்று படமெடுத்தாடுகின்றது. சுகாசனராக ஒருகாலைத் தொங்கவிட்டும், மறுகாலை மடித்த நிலையிலும் பின்கரங்களில் மான் மழு ஏந்தியவராக சிவபெருமான் அமர்ந்துள்ளார்.

ஊடல்கொண்டு ஒதுங்கியிருந்த உமையெனும், நங்கையவளோ கயிலை மலையின் ஆட்டம் கண்டு அஞ்சி நடுங்கி, ஊடல் தவிர்த்து பரமனைக் கட்டித் தழுவுகிறாள். தேவியை ஒரு கரத்தால் அணைக்கும் பரமேட்டி, மலையைப் பெயர்க்கும் இராவணனைத் தேவிக்குச் சுட்டும்வண்ணம் மறுகரத்தின் ஓர்விரலை கீழ்நோக்கிக் காட்டுகின்றார். தனது வலதுகால் பெருவிரலால் மலை அழுந்த ஊன்றுகின்றார்.

தேவியின் முகத்தில் பயம் தெரிய, அண்ணலின் முகத்திலோ புன்னகை அரும்புகின்றது. இக்காட்சியில் இராவணன் மலையைப் பெயர்த்துத் தலைக்கு மேல் உயர்த்த முயலுகின்றான். சிவபிரானோ தேவியைத் தழுவியவாறு கால்விரலை ஊன்ற முற்படுகிறார். இச்சிற்பம் சுவரில் காணப்பெறும் புடைப்புச் சிற்பமாக அமையாமல் தனித்த சிற்பமாக உள்ளதால் உண்மையிலேயே இராவணன் கயிலையைப் பெயர்த்து தலைக்குமேல் உயர்த்துவது போன்று திகழ்கிறது.

தாராசுரம் திருக்கோயிலின் ஸ்ரீவிமானத்து வடபுற பித்தியில் சற்று உயரமான இடத்தில் இராவணன் கயிலையைப் பெயர்க்கும் காட்சியும், பின் இராவணனுக்குச் சிவபெருமான் உமா
தேவியோடு அருளும் காட்சியும் ஒன்றுக்கு மேல் ஒன்றாக இடம்பெற்றுள்ளன. இவை விமானத்தின் சுவரில் அமைந்த புடைப்புச் சிற்பங்களாகும். கீழே அமைந்த காட்சியில் இராவணனின் தேர் ஒருபுறம் திகழ தசமுகன் தன் முன்புற முகங்கள் ஐந்தும், கரங்கள் பத்தும் பார்வையில் புலப்படுமாறு தரையில் ஒரு காலை நீட்டியும் மறுகாலை மடித்த நிலையிலும் கொண்டு கயிலயங்கிரியைப் பெயர்த்து தலைக்கு மேல் உயர்த்துகின்றான்.

மலை உச்சியில் அமைந்த குடைவுப் பகுதியில் சிவபெருமான் மேலிரு கரங்களில் மான் மழு ஏந்தியவாறு சுகாசனராக அமர்ந்துள்ளார். அருகே உமாதேவி அவரை நோக்கி அமர்ந்தவாறு ஒரு கரத்தால் அப்பரமனைப் பற்றியுள்ளாள். மலையில் அமைந்துள்ள புழைகளில் சிம்மம், குரங்குகள், மான்கள், பாம்பு ஆகியவை காணப்பெறுகின்றன. விலங்கினங்கள் காணப்பெறும் புழைகளுக்கு மேலாக கயிலையின் தாழ்வரையில் உபமன்ய மகரிஷி, இந்திரன் அதிகாரநந்தி ஆகிய மூவரும் வணங்கும் கோலத்தில் திகழ்கின்றனர்.

பெருமானின் திருவிரல் தரையில் ஊன்றி நிற்கின்றது.மேலேயுள்ள இரண்டாவது காட்சியில், சுகாசன கோலத்தில் சிவபெருமானும் உமையும் அமர்ந்திருக்க எதிரே இராவணன் இருகரம் கூப்பி வணங்கி நிற்கிறான். பிற கரங்கள் மேலுயர்ந்து போற்றுகின்றன. அருகே நிற்கும் பூதகணமொன்று சிவபெருமான் இராவணனுக்கு அளிப்பதற்கு உரிய வாளினை ஏந்தி நிற்கின்றது.

முன் நிற்பவர் இல்லா முரண் அரக்கன் வடகயிலை
தன்னைப் பிடித்து எடுத்தான் முடிதடதோள் இற ஊன்றி
பின்னைப் பணிந்து ஏத்த பெருவாள் பேரோடும் கொடுத்த
மின்னிள் பொலி சடையான் இடம் - வீழிமிழலையே


 - எனத் திருஞானசம்பந்தர் பாடும் காட்சிதான் இங்கு சிற்பமெனத் திகழ்வதைக் காணலாம்.கங்கைகொண்ட சோழீச்சரம் எனும் பெருங்கோயில், முதலாம் இராஜேந்திர சோழனால் எடுக்கப்பெற்றதாகும். இவ்வாலயத்துக் கருவறையின் முன்பகுதியில் இருபுறமும் வாயில்களுடன் திகழும் மண்டபப் பகுதியுள்ளது. இம்மண்டபத்தின் உட்சுவரில் (பித்தியில்) மூன்று அடுக்குகளாக இராவணன் கயிலையைப் பெயர்க்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. கீழ்ப் பகுதியில் இலங்கை வேந்தனின் தேர் ஒருபுறம் திகழ, பூதகணங்கள் எல்லாம் சூழ்ந்து நின்று பார்க்க இராவணன் தன் இருபது கரங்களால் கயிலை மலையைப் பெயர்த்து தலைக்கு மேல் தூக்குகிறான்.

இரண்டாம் அடுக்கில் சிவபெருமான் உமாதேவியோடு அமர்ந்து, தன் கால் விரலை ஊன்றுகிறார். அவர்களுக்கு இருபுறமும் கணங்கள் சூழ்ந்து நிற்கின்றன. மேலேயுள்ள மூன்றாம் அடுக்கில் சிவபெருமான் உமாதேவியோடு அமர்ந்திருக்கிறார். அருகே இரண்டு பூதகணங்கள் நிற்கின்றன. அவற்றுள் ஒரு கணம் இராவணனிடம் அளிப்பதற்காக வாள் ஒன்றினைத் தாங்கி முன் செல்கின்றது. அப்பூதகணத்திற்கு முன்பாக தன் இருபது கரங்களால் வணங்கியும் போற்றியும் இராவணன் மண்டியிட்டு இருக்கும் உருவச் சிற்பம் உள்ளது.

திருப்பூந்துருத்தி சிவாலயத்து இராஜகோபுரத்து வாயிலில் கயிலையை இராவணன் பெயர்த்துத் தூக்கும் சிற்பக் காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. புடைப்புச் சிற்பமாகத் திகழும் இக்காட்சியில், தசமுகன் மண்டியிட்டவாறு கயிலை மலையைத் தூக்குகின்றான். ஒருபுறம் அவனது புட்பகத் தேரும் தேரோட்டியும் காணப்பெறுகின்றனர். பூதகணங்களும் விலங்குகளும் கயிலையில் திகழ ஒரு காலை நீட்டியவண்ணம் சிவபெருமான் அமர்ந்துள்ளார்.

உமாதேவி அண்ணலைப் பற்றியவாறு அமர்ந்துள்ளாள். ஈசனோ, தன் வலக்கரத்தால் அருகிருக்கும் சிவலிங்கத் திருமேனியைத் தாங்கியவாறு திகழ்கின்றார். இது ஒரு அரிய காட்சி. சாளுக்கிய நாட்டு சிற்பங்களிலும் இத்தகைய காட்சிகள் பல இடம்பெற்றுத் திகழ்கின்றன. இராவணன் என்ற பெயரும், வாழ்நாளும், வாளும் பெற்ற தசமுகனாகிய இராவணன் அறநெறி தவறியதால் அனைத்தும் இழந்தான், மாண்டான், அழியாத பழியும் கொண்டான்.

தொகுப்பு: முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • well-collapes-31

  ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

 • parliammmm_moddi

  இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

 • boat-fire-philippines

  பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

 • us-desert-train-acci-30

  அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

 • mexico-123

  மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்