SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தெளிவு பெறுஓம்

2022-12-26@ 17:24:44

நன்றி குங்குமம் ஆன்மீகம்

?சமீபத்தில் என் பிறந்த நாளன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம் என்று எண்ணினேன். வீட்டில் இருந்த பெரியோர்கள், இன்று வேண்டாம் என்று தடுத்துவிட்டார்கள். கேட்டால், முன்னோர்கள் சொன்னது என்கிறார்கள். அதற்கு மேல் சொல்லத் தெரியவில்லை. இதைப் பற்றி நம் பழந்தமிழ் நூல்களில் ஏதாவது சொல்லப்பட்டு இருக்கிறதா?
- கிரிதரன், மதுரை. 

 
 இதைப்பற்றிய தகவல்கள், பழந்தமிழ் நூல்களில் நன்றாகவே விரிவாகவே பதிவு செய்யப் பட்டிருக்கின்றன. அந்த தகவல்கள் எல்லாம் அற்புதமான பாடல்களாகவே பதிவு செய்யப் பட்டிருக்கின்றன. தகவல்களைப் பார்த்துவிட்டுப் பாடலைப் பார்க்கலாம்.

ஞாயிற்றுக்கிழமை: தலைக்கு (உடம்பு உட்பட) எண்ணெய் தேய்த்து நீராடினால், உடல் அழகு போய்விடும்.
திங்கட்கிழமை: அதிக பொருள் சேரும்.
செவ்வாய்க்கிழமை: இடையூறு, துன்பம், நோய்கள் உண்டாகும்.
புதன்கிழமை: தெளிந்த நல்லறிவு உண்டாகும்.
வியாழக்கிழமை: அறிவு (சிந்தனை) குழப்பம் நேரிடும்.
வெள்ளிக்கிழமை: சேர்த்து வைத்த பொருள் சேதம் ஆகும்.
சனிக்கிழமை: தலைக்கு எண்ணெய் தேய்த்து நீராடினால், செல்வம் உண்டாகும், ஆயுள் வளரும். கூடாத நாட்களில் எண்ணெய் தேய்த்து நீராட வேண்டிய நிர்பந்தம், சந்தர்ப்பம் வந்தால், அதற்குப் பரிகாரமும் (டேக்டைவர்ஷன் போல) சொல்லியிருக்கிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை: தேய்த்துக்கொள்ள வேண்டிய எண்ணெயில், அலரிப் பூவைப் போட்டு நீராடலாம்.
செவ்வாய்: எண்ணெயில், சிறிது அளவு செழுமையான, வளமான மண்ணைப் போட்டு நீராடலாம்.
வியாழன்: பச்சை அறுகம்புல்லைப் போட்டு நீராடலாம்.
வெள்ளி: எண்ணெயில், பசுவின் காலடி பட்ட மண்ணைச் சிறிதளவு போட்டு நீராடலாம். அரிதான இந்த தகவல்களை அறிந்தவர்கள், இதன்படியே எண்ணெய் தேய்த்து நீராடுவார்கள். இதுவரை பார்த்தவைகளைப் பாடலாகச் சொல்லும் பழந்தமிழ் நூல், அறப்பளீஸ்வர சதகம்.

வரும் ஆதி வாரம் தலைக்கு எண்ணெய் ஆகாது
வடிவ மிகு அழகு போகும்
வளர் திங்களுக்கு அதிகபொருள் சேரும்
அங்கார வாரம் தனக்கு இடர் வரும்
திருமேவு புதனுக்கு மிகு புத்தி வந்திடும்
செம்பொனுக்கு உயர் அறிவு போம்
தேடிய பொருள் சேதம் ஆம் வெள்ளி
சனி எண்ணெய் செல்வமுண்டு ஆயுளும் உண்டாம்
பரிகாரம் உளது ஆதி வாரம் தனக்கு அலரி
பௌமனுக்கான செழுமண்
பச்சறுகு பொன்னவற்கு ஆவெருந்தூள் ஔிப்
பார்க்கவர்க்கு ஆகும் எனவே
அரிதா அறிந்தபேர் எண்ணெய் சேர்த்தே
முழுக்காடுவார் அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினை தருசதுர
கிரி வளர் அறப்பளீஸ்வர தேவனே
(அறப்பளீஸ்வர சதகம்)


?மழை பெய்யும்போது, சில சமயங்களில் பலமாக இடி ஓசையும் கேட்கிறது. வீட்டில் இருக்கும் பெரியவர்கள், ‘‘அர்ஜுனா! அர்ஜுனா! என்று சொல்! கண்ணனும் அர்ஜுனனும் காண்டவ வனத்தை எரிக்கும்போது, தேவேந்திரன் மழையையும் இடியையும் அனுப்பி அதைத் தடுத்தான். அதை மீறி, கண்ணன் அருளால் அர்ஜுனன் வெற்றி பெற்றான். அர்ஜுனா அர்ஜுனா என்று சொல்!’’ என்கிறார்கள். இதன் உண்மை என்ன?
 - சௌந்தர்யா, கோவை.

பலமான இடி ஓசை கேட்கும்போது, அந்த இடி ஓசையில் பலருக்குக் காதுகள் ‘குப்’ பென்று அடைத்துக்கொள்ளும். அப்போது ‘அர்ஜுனா அர்ஜுனா’ என்று சொன்னால், வாய் திறந்து, குவிந்து, அதன் பிறகு பிளக்கும் .(அர்ஜுனா என்று சொல்லிப் பார்க்கலாம்). அவ்வாறு சொல்வதால், தாடைப்பகுதிகள் நன்றாக அகன்று - விரிய, உள்ளே அடைபட்டிருந்த காற்று வெளியேறும். அடைபட்ட காது, சரியாகும். இதைத்தான் நமது முன்னோர்கள், நமது நன்மைக்காகவும், ஆரோக்கியத்திற்காகவும் அவ்வாறு சொன்னார்கள்.

?மார்கழி மாதம் வருவதால் அதை முன்னிட்டு, இந்தக் கேள்வியைக் கேட்கிறேன். மார்கழி மாதத்தில் வீட்டுவாசலில் கோலம் போட்டு, அதில் பூக்கள் வைக்கிறார்களே. அது எதற்காக?
 - ஜெயஸ்ரீ, சென்னை.  


எல்லா வீட்டு வாசல்களிலும் இவ்வாறு, கோலங்களின் மேல் பூக்கள் வைப்பதில்லை. கோலங்களில் பூக்கள் வைக்காத வீடுகளும் உண்டு. கோலத்தில் பூக்கள் வைத்திருக்கும் வீட்டில், பெண்ணோ - பிள்ளையோ திருமணத்திற்கு இருக்கிறார்கள் என்று அறிவிக்கவே, அவ்வாறு கோலத்தின் மீது பூக்களை வைத்தார்கள். மார்கழி மாத அதிகாலை வீதி பஜனையில் பாடிக்கொண்டு வரும் (வெளியூர்க்காரர்கள் உட்பட) அனைவரும், கோலங்களின் மீது வைக்கப் பட்டிருக்கும் பூக்களைப் பார்த்து, ‘‘இந்த வீட்டில் திருமணத்திற்குத் தயாராக இருக்கிறார்கள்’’ என்பதைப் புரிந்துகொள்வார்கள். திருமணம் பேசி முடிப்பார்கள். ஆமாம்! அந்த வீட்டின் நிலைபற்றிய தகவல்களை ஊர்க்காரர்களிடம் நேருக்கு நேராகவே கேட்டு அறிந்து, பேசி திருமணத்தை முடிவுசெய்வார்கள்.

‘மேட்ரிமோனியல்’, அதாவது மணமகள் தேவை - மணமகன் தேவை, எனும் பத்திரிகை விளம்பரங்கள் இல்லாத காலம் அது. வீதிகளே, வரன் பார்க்கும் தகவல்களை வெளிப்படுத்தும் இடங்களாக இருந்தன. அதில் பலவிதமான நன்மைகளும் இருந்தன.கை பேசியில் கூட, மணமகள் - மணமகன் பற்றிய தகவல்கள் கொட்டிக்கிடக்கும் இந்த காலத்தில், கோலத்தில் பூ வைப்பதுயெல்லாம் செல்லுபடியாகுமா? என்று எண்ண வேண்டாம். கை பேசியிலோ, கணினி எனும் கம்ப்யூட்டரிலோ, தகவல்களை அறியலாமே தவிர, விசாரித்து உண்மைகளை அறிய முடியாது. விளைவு? ஒரே நபர் பலரை ஏமாற்றி மணம் முடித்த தகவல்கள் தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் இடம் பெறுவதைப் பார்த்தால் புரியுமே!ஆனால், மார்கழி மாதத்தில் வீட்டு வாசலில் கோலத்தில் பூ வைத்திருக்கும் வீட்டில், நேரே பேசலாம். ஊர்க்காரர், உறவுக்காரர்களிடம் விசாரித்து, உண்மை அறியலாம். அதன்பிறகு நல்ல விதமாகத் திருமணத்தையும் முடிக்கலாம். முன்னோர்களின் செய்கைகள் பொருள் பொதிந்தவை.

தொகுப்பு: சந்திரமௌலி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • spain-trees-24

  ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

 • gandhi-13

  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

 • taipei-fashion-week-taiwan

  தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

 • kalifffo1

  தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

 • pak-123

  பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்