SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அஞ்சனை மைந்தனின் அருள் பொழியும் ஆலயங்கள்!

2022-12-23@ 13:03:24

நன்றி குங்குமம் ஆன்மிகம்

அனுமன் ஜெயந்தி - 23.12.2022


‘நாமக்கல்’ என்ற ஊரின் பெயர்க்காரணமே ஆச்சரியமானது. ஆரைக்கல் என்னும் அதிசயமலையை மையமாகக் கொண்ட பகுதி. ஆரைக்கல் என்ற பெயருக்கு முன்பாக நாமகிரித்தாயாரின் திருநாமத்தை இணைத்து நாமகிரிஆரைக்கல் என்று அழைக்கப்பட்டது. இது காலப்போக்கில் நாமக்கல் என்று உருமாறியதாக கூறப்படுகிறது. இப்படி தெய்வாம்சம் நிறைந்த நாமக்கல்லில் 246 அடி உயரம் கொண்ட ஒரே கல், மலையாக காட்சியளிக்க அதன் உச்சியில் கம்பீரமாக காட்சியளிக்கிறது ஒரு கோட்டை.

கோட்டையின் மேற்குத் திசையில் குடவரை சிற்பக் கலையின் உச்சம் தொடும் நரசிம்மர் கோயில். இவை இரண்டிற்கும் நடுநாயகமாக, 18 அடி உயரத்தில் கம்பீரமாக நின்று அருட்பாலிக்கிறார் தேசம் முழுவதும் கொண்டாடும் நாமக்கல் ஆஞ்சநேயர்.வானமே கூரையாக திறந்தவெளியில், தொழுத கைகளுடனும், இடுப்பில் கத்தியோடும் ஆஜானுபாகுவாக நின்று சிந்தையை ஈர்க்கும் ஆஞ்சநேயர் சிற்பம், ஒரே கல்லில் செதுக்கப்பட்டது என்பது தனிச்சிறப்பு. கோயிலின் பக்கவாட்டு சுவர்களில் அஷ்டபுஜநரசிம்மர், வைகுண்ட பெருமாள், வராகர், உலகளந்த பெருமாள் சிற்பங்கள் கவனத்தை ஈர்க்கிறது.

‘‘புராண காலத்தில் இரண்யவதத்திற்குப் பிறகு உக்கிரம் பொங்க காட்சியளித்தார் நரசிம்மர். பிரகலாதனின் வேண்டுகோளால் சாந்தமூர்த்தியாகி, சாளக்கிராம வடிவில் கண்டகி நதிக்கரையில் அமர்ந்தார். விஷ்ணுவை பிரிந்த மகாலட்சுமி, கமலாலயக் குளத்தில் நின்று கணவரை நினைத்து தவம் செய்தார். சஞ்சீவி மலையோடு சாளக்கிராமத்தை தூக்கி வந்த அனுமன், கமலாலயக் குளத்தைக் கண்டதும், தனது தாகம் தீர்க்க சாளக்கிராமத்தை அங்கு வைத்தார். தாகம் தீர்த்த அனுமனால் சாளக்கிராமமான நரசிம்மரை அங்கிருந்து தூக்கிச்செல்ல முடியவில்லை. அப்படியே அந்த இடத்தில் அமர்ந்து மக்களுக்கு அருட்பாலித்து வருகிறார். இப்படி நாமம் சூட்டிய நரசிம்மர் மலையாக அமர்ந்த இடமே ‘‘நாமகிரி’’ என்று போற்றப்பட்டது. அவருடன் அருட்பாலித்த லட்சுமி தேவியை நாமகிரித் தாயார் என்று தேவர்கள் வணங்கினர்.

நாமகிரி, அரங்கநாதர் ஆரைக்கல் என்று மருவிய பெயர், காலத்தின் சுழற்சியில் நாமக்கல் ஆனது. கல்லாய் மாறிய நரசிம்மர், குடவரைக் கோயிலில் அமர்ந்து அருட்பாலிக்க, கோயிலுக்கு வெளியே திறந்த வெளியில் நின்று அவரைக் கைகூப்பி வணங்கினார் ஆஞ்சநேயர்.

கடமையை முடித்து திரும்பிய ஆஞ்சநேயர்

ராமாயணக் காலத்தில், சஞ்சீவி மூலிகையைப் பெறுவதற்காக, இமயத்தில் இருந்து சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்துவந்தார் ஆஞ்சநேயர். பணி முடிந்ததும் மலையை அதே இடத்திலேயே வைத்துவிட்டு திரும்பினார். அவ்வாறு வருகையில் இரண்யவதையினால் உக்கிரமான சாளக்கிராமமான நரசிம்மரையும் எடுத்துவந்தார். சூரியன் உதயமானபடியால், வான்வழியாக வந்துகொண்டிருந்த ஆஞ்ச நேயர், தமது கையிலிருந்த சாளக்கிராமத்தை கீழே வைத்துவிட்டு சந்தியாவந்தனத்தை முடித்தார். மீண்டும் வந்து சாளக்கிராமத்தைத் தூக்க முயற்சித்தார்.

ஆனால், அதைத் தூக்க அவரால் முடியவில்லை. ‘‘ராமனுக்குச் செய்ய வேண்டிய உதவிகளைச் செய்து முடித்துவிட்டு பிறகு வந்து என்னை எடுத்துச் செல்’’ என்று வானில் இருந்து அசரீரி ஒலி கேட்க, ஆஞ்சநேயரும் சாளக்கிராமத்தை அங்கேயே விட்டுவிட்டு கிளம்பினார். ராமன் போரில் வென்று சீதையை மீட்ட பிறகு ஆஞ்சநேயர் மீண்டும் இங்கே வந்தார். ஆஞ்ச நேயர் விட்டுப்போன சாளக்கிராமம் நரசிம்ம மூர்த்தியாக வளர்ந்து நிற்க, ஆஞ்சநேயர் நரசிம்மரை கைகூப்பி வணங்கியவாறு திறந்தவெளியில் நின்று பக்தர்களுக்கு அருட்பாலிக்கிறார்.

கோபுரம் இல்லாதது ஏன்?


காற்று, மழை, வெயில், புயல் என்று இயற்கைச் சீற்றங்கள் அனைத்தையும் தாங்கிக் கொண்டு திறந்தவெளியில் தொழுதகைகளோடு நின்று அருட்பாலிக்கிறார் நாமக்கல் ஆஞ்சநேயர். லோகநாயகனான ஸ்ரீநரசிம்மரே (எதிரில் உள்ள ஆலயம்) கிரி உருவில் மேல் விதானம் இல்லாமல் இருப்பதால் தாசனான எனக்கும் விதானம் தேவையில்லை என்று ஆஞ்சநேயர் திறந்த வெளியில் கோபுரம் இல்லாமல் நின்றிருக்கிறார் என்பதும், நாமக்கல் ஆஞ்சநேயர் நாளுக்கு நாள், வளரும் அபூர்வ சக்தி கொண்டவர். அதனால் அவரை ஒரு கட்டுமானத்திற்குள் வைக்காமல் காற்று வெளியில் பிரதிஷ்டை செய்துள்ளனர் என்பதும் பக்தர்களின் கூற்று.

சிலையின் மகிமை


ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ஆஞ்சநேயர் சிலை பிரம்மாண்டத்தின் பிம்பமாக நிற்கிறது.  பீடத்திலிருந்து 22அடியும், பாதத்திலிருந்து 18 அடியும் உயரம் கொண்ட, ஆஞ்சநேயர் முகம் அழகிய தேஜஸ் ஒளியில் மிளிர்கிறது. எதிரேயுள்ள லட்சுமி நரசிம்மர் ஆலயத்தின் உபகோயில்தான் இந்த ஆஞ்சநேயர் சந்நதி என்றாலும் பக்தர்கள் கூட்டம், இங்குதான் அலை மோதுகிறது. இச்சா சக்தி (நாமகிரி அம்மன்), கிரியா சக்தி (நரசிம்மர்), ஞான சக்தி (ஆஞ்சநேயர்) ஆகிய மூன்று சக்திகளும் ஒருங்கே அமையப்பெற்ற சிறப்புக்குரியது நாமக்கல்.

கல்யாண ஆஞ்சநேயர்

சென்னை தாம்பரத்தை அடுத்த கூடுவாஞ்சேரி - செங்கல்பட்டு செல்லும் சாலையில் உள்ளது. இங்கிருந்து சுமார் 2.கி.மீ. தொலைவில் உள்ளது கல்யாண ஆஞ்சநேயர் திருக்கோயில். பத்மபீடத்தில் நின்ற திருக்கோலம். இடதுகையை இடுப்பில் வைத்திருக்க, வலதுகையில் கதை வைத்த நிலையில் காட்சி தருகிறார். ஜெயவீர ஆஞ்சநேயர். மூலவரான இவர், சதுர்புஜங்களுடன் சங்கு சக்கரமும் தாங்கி, சூரிய புத்திரியான சுவர்ச்சலா தேவியுடனும் காட்சி தருகிறார். இவரின் திருநாமம் கல்யாண ஆஞ்சநேயர்.

குடந்தை ராமசுவாமி


கையில் வீணையேந்திய அனுமனின் திருக்கோலத்தை, பிரசித்தி பெற்ற கும்பகோணம் ராமசுவாமி கோயிலில் தரிசிக்கலாம்.

பிரசன்ன வீரஆஞ்சநேயர் கோயில்

பெங்களூர் மகாலட்சுமிபுரத்தில் 22 அடி உயர ‘பிரசன்ன வீர ஆஞ்சநேயர்’ கோயில் உள்ளது. சிறுகுன்றின் மீது ஆஞ்சநேயர் கிழக்கு நோக்கியுள்ளார். இவருக்கு நேர்எதிரில் கல்லால் ஆன கொடிமரம் உள்ளது. ஆஞ்சநேயரின் வலதுகையில் சஞ்சீவி மலையும், இடதுகையில் கதாயுதமும் கொண்டுள்ளார்.

ஐயங்கார் குளம் ஆஞ்சநேயர்


காஞ்சியிலிருந்து கலவை செல்லும் வழியில் உள்ளது ஐயங்கார் குளம் என்னும் ஊர். இங்குள்ள அனுமன் ஆலயம் லட்சுமி குமார தாத்தாச்சாரியார் என்பவரால் 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இங்கு 136 ஏக்கர் பரப்பளவில் ஒரு குளம் உள்ளது. அதன் தென்புறத்தில் நீராழி மண்டபம் போல் அழகாக அமைந்துள்ளது அனுமன் கோயில். ஒரே கல்லில் வடிக்கப்பட்ட தூண்கள். நாற்புறமும் கோபுரங்கள், நீண்ட மண்டபம், உட்பிராகாரம் என அமைந்துள்ளது. கருவறையில் கைகூப்பியவராகக் காட்சி தருகிறார்  ஆஞ்சநேயர்.

அஞ்சனாதேவி ஆஞ்சநேயர்


மதுரை உசிலம்பட்டி சாலையில் ஆனையூர் உள்ளது. இந்த ஊரில் உள்ள ஐராவதீஸ்வரர் கோயிலில், ஆஞ்சநேயரின் தாயாரான அஞ்சனாதேவிக்குத் தனிச்சந்நதி உள்ளது. அஞ்சனா தேவியின் வலப்புறம் குழந்தை வடிவில் ஆஞ்சநேயரும், இடப்புறம் ஒரு பெண்ணும் காட்சியளிக்கின்றனர்.

சங்கிலி ஆஞ்சநேயர்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்தில் உள்ளது முடியனூர் கிராமம். இங்கே அனந்தவல்லி சமேத ஆதிகேசவ பெருமாள் கோயில் உள்ள ஆஞ்சநேயர், தம் கால்களை கல்லால் ஆன சங்கிலியால் கட்டிக்கொண்டிருக்கிறார். ராமாவதாரம் முடிந்து ராமர் வைகுண்டம் புறப்பட்டபோது அனுமனை அழைக்க, அனுமன் போக மறுத்துவிட்டு, பூமியிலேயே இருக்க விரும்பி தன்கால்களை சங்கிலியால் கட்டிக்கொண்டாராம்.

ஸ்ரீரங்க பக்த ஆஞ்சநேயர்

108 வைணவத் திவ்ய தேசங்களில் முதன்மையான தளம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில். கோயில் வெளிப்புறத்தில், ‘பக்த ஆஞ்சநேயர்’ நெடிய உருவத்துடன் விஸ்வரூபியாக காட்சி தருகிறார்.

ஆதியந்தப் பிரபு


அர்த்தநாரீஸ்வர வடிவம் போல, சங்கர நாராயணர் வடிவம்போல இரட்டைக் கடவுள்கள் இணைந்த வடிவம் எது என்றால் ஆதியந்தப் பிரபு ஆகும். ஆதிக்கு (ஆரம்பம்) பிள்ளையார், அந்தத்திற்கு (முடிவுக்கு) அனுமன். இவர்கள் இருவரும் இணைந்த வடிவமே ‘ஆதியந்தப் பிரபு’. இந்த வடிவத்தை சென்னை அடையாறு மத்திய கைலாச ஆலயத்தில் வணங்கி வழிபடலாம்.

பஞ்சமுக அனுமன்

சென்னையில் உள்ள ஸ்ரீஸ்கந்தாஸ்ரமத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயர் 12 அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் கல் விக்கிரகமாகக் காட்சி தருகிறார். வாயு மூலையை அலங்கரிக்கிறார். இவரை வலம் வரும்போது கோஷ்டத்தில் பக்த ஆஞ்சநேயர், பஞ்சமுக ஆஞ்சநேயர், வீரஆஞ்சநேயர் ஆகிய சுதையான வடிவங்கள் காட்சியளிக்கின்றன.

வீரசாந்த அனுமன்

சென்னை அசோக் நகரில் அமைந்துள்ளது கருமாரி திரிபுர சுந்தரி அம்பாள் திருக்கோயில். இங்கே பல மூர்த்திகளின் சந்நதிகள் உண்டு என்றாலும், இந்தக் கோயிலின் பிரதான நாயகன் அனுமன்தான்! சஞ்சீவி வீர சாந்த ஆஞ்சநேயர் என்ற திருநாமம்கொண்டிருக்கிறார். அனுமன் ஜெயந்தியன்று இவருக்கு 1,00,008 - வடையால் பிரம்மாண்ட மாலை செய்து வழிபடுகிறார்கள்.

பாராயண அனுமன்


முஷ்ணம் திருத்தலத்தில் அமர்ந்த கோலத்தில் ராமாயணத்தைப் பாராயணம் செய்யும் நிலையில் தனிச்சந்நதி கொண்டு காட்சி தருகிறார் அனுமன். அருகில், ராமர் பட்டாபிஷேகம் செய்துகொண்ட கோலத்தில் உள்ளார்.

சிவசொரூப ஆஞ்சநேயர்


வேலூருக்கு அருகில் ராணிப்பேட்டை. இங்கிருந்து சுமார் 10,கி.மீ. தொலைவில் உள்ளது தெங்கால் என்ற ஊர். இங்குள்ள சிவாலயத்தில் நான்கு திருக்கரங்களுடன் மான், மழு ஏந்தியவாறு சிவசொரூபமாக காட்சி தருகிறார். இவரை ‘சிவசொரூப ஆஞ்சநேயர்’ என போற்றுகிறார்கள். இவர் கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்திருக்கிறார். இப்படியொரு அனுமன் தோற்றம் வேறெங்கும் இல்லை.

பிரதாப ஆஞ்சநேயர்

தஞ்சாவூரின் மேல வீதியில் அமைந்துள்ளது ‘பிரதாப ஆஞ்சநேயர் கோயில்’. மராட்டிய மன்னன் பிரதாபசிம்மனால் கட்டப்பட்டது. இவர் வாயு மூலையில் கோயில்கொண்டிருப்பதால் ‘மூலை அனுமார்’ எனப்படுகிறார். இங்குள்ள ஆலயத்தூணில், யோக ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். இவரை வணங்கிவிட்டுத்தான் மராட்டிய மன்னர்கள் போருக்குச் சென்றனராம்.

இரட்டை ஆஞ்சநேயர்

சென்னை வில்லிவாக்கத்தில் கல்யாண சுப்பிரமணியர் ஆலயத்தில் ‘இரட்டை ஆஞ்சநேயர்கள்’ அருள்கின்றனர். 300 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில் தனிச்சந்நதியில் வாலில் மணியுடன் காட்சி தருகிறார்.

அழகு ஆஞ்சநேயர்

புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது குடுமியான் மலை. இங்கு 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவாலயம் உள்ளது. இங்கு அழகான ஆஞ்சநேயர், தலையில் கிரீடம், முறுக்கு மீசை, வில் போன்று வளைந்த புருவங்கள், கழுத்தில் விநோதமான மாலை, காலைச்சுற்றியிருக்கும் வால் என்று நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த வீரஅனுமன் சிற்பம் அரிதான ஒன்று!

ராமதூத அனுமன்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயில் 8-ஆம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்டது. இங்கு ராமதூத அனுமன் காட்சி யளிக்கும் சிற்பம் உள்ளது. தூதனாக வந்த தனக்கு இருக்கை அளிக்காத இராவணன் எதிரில் தனது வாலையே சுருட்டி ஆசனமாக்கி அமர்ந்த நிலையில் அற்புதக் கோலத்தில் காட்சி தருகிறார் ஆஞ்சநேயர்.

அயப்பாக்கம் ஆஞ்சநேயர்

சென்னை அம்பத்தூரில், டன்லப் கம்பெனிக்குப் பின்புறம் உள்ளது ஐயப்பாநகர். அயப்பாக்கத்தில் கோயில் கொண்டு அருட்புரிகிறார் பஞ்சமுக ஆஞ்சநேயர். வராஹர், கருடர், ஆஞ்சநேயர், நரசிம்மர், ஹயக்ரீவர் என்று ஐந்து முகங்களுடன், பத்துக் கரங்கள் கொண்டு அற்புத திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

வரத ஆஞ்சநேயர்

திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள பெரணமல்லூர் ஊரில் உள்ள சிறு குன்றின் மீது குடியிருந்து அருட்பாலிக்கிறார் வரத ஆஞ்சநேயர். இங்கு வரும் எண்ணற்ற பக்தர்கள் கிரிவலம் வந்து வரத ஆஞ்சநேயரை வழிபடுகின்றனர்.

சாளக்கிராம ஆஞ்சநேயர்

தாமிரபரணி நதி வடக்கில் இருந்து தெற் காகப் பாயும் தட்சிண கங்கைக்கு அருகில் தெய்வச்செயல்புரம் என்னும் தலத்தில் அருமையாகக் குடிகொண்டு அருளாட்சிபுரிந்து வருகிறார் ‘விஸ்வரூப சுந்தர வரத ஆஞ்சநேயர்’. சுமார் 5 அடி உயரத்தில் சாளக்கிராமத் திருமேனியராக விஸ்வரூபம் எடுத்து நின்றபடி அருட்பாலிக்கிறார். இதையடுத்து மூலவர் சந்நதிக்கு மேல் சுமார் 77 அடி உயரத்தில் மற்றொரு அனுமனும் காட்சி தருகிறார்.

அபய ஹஸ்த கோல அனுமன்


ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் மேற்கு வாசல் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 2.கி.மீ. தொலைவில் உள்ளது ஒரு அனுமன் கோயில். வால் இல்லாமல் கூப்பிய கரங்களுடன் அருள்கிறார் மூலவர் அனுமன். அருகில் அத்தி மரத்தில் உருவாக்கப்பட்ட அனுமன், அபயஹஸ்த கோலத்தில் அருள் புரிகிறார். இந்த கோயிலுக்குப் பின்புறம் ஆஞ்சநேயர் தீர்த்தம் வளாகத்தில், கடல் மணலால் ஆன சுயம்பு அனுமனையும் தரிசிக்கலாம். ஒரேகோயில் மூன்று அனுமான்கள்.

அனுமந்தக்குடி அனுமன்

இராமபிரானின் வழிபாட்டிற்காகத் திருநள்ளாறு திருத்தலத்திலிருந்து தர்பைப்புல் எடுத்து வரும்போது அனுமன் அமர்ந்து இளைப்பாறிய இடம் அனுமந்தக்குடி. அனுமன் அமர்ந்த குடி என்பது அனுமந்தக்குடி ஆகிவிட்டது. இங்குள்ள சிவன் கோயிலில் ஆஞ்சநேயருக்கு தனிச்சந்நதி உள்ளது.

பெரிய குப்பன் அனுமன்

சென்னைக்கருகில் திருவள்ளூர் பெரிய குப்பம் கிராமத்தில் பிரம்மாண்ட உருவில் பஞ்சமுக அனுமன் அருட்பாலித்துவருகிறார். இவர் விஸ்வரூப பஞ்சமுகர் எனப்படுகிறார். இங்கு ஆகம சாஸ்திரப்படி அல்லாமல் மந்திரசாஸ்திர அடிப்படையிலேயே இந்தச்சிலை அமையப்பெற்றுள்ளது. பஞ்சமுகங்களின் மூலமந்திரங்கள் அந்தந்த முகங்களுக்கு நேரில் உள்ள சுவரில் முறைப்படி தனித்தனியே எழுதப்பட்டிருக்கின்றன.

மாம்பலம் ஆஞ்சநேயர்

சென்னை மேற்கு மாம்பலத்தில் வடதிருநள்ளாறு என்றழைக்கப்படும் கோயிலில் சனிபகவான் சந்நதியும், பஞ்சமுக அனுமான் சந்நதியும் அமைந்துள்ளது.

ஆம்பூர் ஆஞ்சநேயர்

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள பெரிய ஆஞ்சநேயர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் சுமார் 11 அடியில் ஆஞ்சநேயர் தன் காலில் சனிபகவானை மிதித்த கோலத்தில் தெற்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். இந்த திருக்கோயில் 1489-ஆம் ஆண்டு விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டது.

முத்தம்பட்டி ஆஞ்சநேயர்


தர்மபுரியிலிருந்து பெங்களூரு செல்லும் சாலையில் 12.கி.மீ. தொலைவில் உள்ளது முத்தம்பட்டி அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில். இவர் வீரஆஞ்சநேயர் எனப்படுகிறார். அமாவாசை தினங்களில் பெருந்திரளாக பக்தர்கள் வருகிறார்கள்.

அபூர்வ ஆஞ்சநேயர்

கும்பகோணம் - ஆவூர் பாதையில் 8.கி.மீ. தொலைவில் உள்ளது பட்டீஸ்வரம் கோபிநாத பெருமாள் ஆலயம். இங்கே ஸ்ரீமந் நாராயணனின் அனுக்கிரகத்தைப் பெற்ற ஆஞ்சநேயர் ‘இரட்டை ஆஞ்சநேயராக’ வீற்றிருக்கிறார். ஆயிரம் இதழ்கள் கொண்ட அபூர்வத்தாமரை மலரைத் தங்கள் உடலில் தாங்கியுள்ளார்கள்.

தாம்பரம் சானடோரியம் அனுமன்

தாம்பரம் சானடோரியத்தில் அமைந்துள்ளது ராம ஆஞ்சநேயர் கோயில். இங்குள்ள ஆஞ்சநேயர் மிகவும் சக்தி வாய்ந்தவர். ஒவ்வொரு ஆண்டும் அனுமன் ஜெயந்தியன்று ‘அகண்ட பஜன்’ நடைபெறுவது சிறப்புக்குரியது. இதில் ஏராளமான கீர்த்தனைகள் பாடப்படுகின்றன. மற்றொரு சிறப்பு அனுமனை வேண்டி தேங்காய் கட்டுவது. கட்டிய 21-ஆம் நாளில் அவர்களின் பிரார்த்தனைகள் பலிக்கின்றனவாம்.

ஜெயமங்கள ஆஞ்சநேயர்

கோவைமாட்டத்தில் உள்ள இடுகம்பாளையத்தில் மிகப்பழமையான பிரசித்தி பெற்ற ஜெயமங்கள ஆஞ்சநேயர் திருக்கோயில் அற்புதமாக அமைந்துள்ளது. இங்கு பிடியரிசி திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது. மாதத்தின் முதல் சனிக்கிழமை மிகவும் விசேஷம். எண்ணற்ற பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

தாடிக்கொம்பு ஆஞ்சநேயர்

திண்டுக்கல்லுக்கு அருகில் உள்ளது தாடிக்கொம்பு எனும் சிற்றூர். இங்குள்ள சௌந்திரராஜ பெருமாள் ஆலயம் மிகப் பழமை வாய்ந்தது. விஜயநகர அரசர்களால் உருவாக்கப்பட்டது. இங்குள்ள மண்டபத்தில் 10 அடி உயரமுள்ள நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட சிற்பங்கள் உள்ளன. போர்க் கோலம் கொண்ட ராமனை அநாயசமாகத் தாங்கி நிற்கிறார் ஆஞ்சநேயர். முகத்தில் தம் இறைவனைத் தாங்கி நிற்கும் களிப்பு. வில்லில் பூட்டிய அம்பை எய்த நிலையில் காட்சி தருகிறார் ராமர். அபூர்வ சிற்பம் இது.

சப்தஸ்வர ஆஞ்சநேயர்

மயிலாடுதுறை - கும்பகோணத்துக்கு இடையில் உள்ளது கோழி குத்தி வானமுட்டிப்பெருமாள் கோயில். இங்கு ஐந்தடி உயரத்தில் ‘சப்தஸ்வர ஆஞ்சநேயர்’ என்ற அபூர்வமான விக்கிரகம் உள்ளது. இவர் மிகவும் வரப்பிரசாதி. பக்தர்களின் துன்பத்தை விரைந்து களைபவர். இவர் தனது நீண்ட வாலைச் சுருட்டி பின்னந்தலையில் வைத்திருக்கிறார். இந்த விக்கிரகத்தை எங்கு தட்டினாலும் சப்தஸ்வரங்கள் ஒலிக்கும்.

காவல் காக்கும் ஆஞ்சநேயர்

மந்திராலயத்துக்கு அருகில் உள்ளது பஞ்சமுகி திருக்கோயில். ராகவேந்திரர் தியானம் செய்து தரிசித்த ஆஞ்சநேயர் இங்கு குடிகொண்டுள்ளார். ஐந்து முகங்களுடன் அருள்புரிகிறார். இரவுநேரங்களில் கிராமத்தை வலம்வந்து, இவர் காப்பதாக ஐதீகம். அதனால் இவர் ‘காவல் காக்கும் ஆஞ்சநேயர்’ எனப்படுகிறார். அதனால் இவருக்கு பெரியபெரிய காலணிகள் செய்து வைக்கப்படுகின்றன.

கெட்வெல் ஆஞ்சநேயர்

நெல்லையில் கெட்வெல் மருத்துவமனை என்கிற தனியார் நிறுவனம் அழகிய ஆலயம் ஒன்றை அமைத்து விநாயகரையும், ஆஞ்சநேயரையும் பிரதிஷ்டை செய்துள்ளது. இங்கு ஆஞ்சநேயர் வலதுகரம் ஆசிவழங்கியும், இடதுகரம் கதாயுதம் ஏந்தியும் நின்ற திருக்கோலம் கொண்டு அருட்புரிகிறார். இவரை ‘கெட்வெல்’ ஆஞ்சநேயர் என்றே அழைக்கிறார்கள்.

திரிநேத்ரதசபுஜ வீர ஆஞ்சநேயர்

சிதம்பரம் - காரைக்கால் சாலையில் உள்ளது அனந்த மங்கலம். இங்கே ‘திரிநேத்ரதசபுஜ வீர ஆஞ்சநேயர்’ அருளாட்சி புரிகிறார். வேறு எங்கும் காண முடியாத ஓர் அபூர்வ கோலத்தில் இருக்கிறார். இந்த விசேஷ ஆஞ்சநேயர் மூன்று கண்கள், பத்துக்கரங்கள், சிறகுகள், கரங்களில் பத்து வகையான ஆயுதங்கள் என போர்க்கோலத்தில் காட்சி தருகிறார்.

தாராபுரம் ஆஞ்சநேயர்

தாராபுரம், காடு அனுமந்தராயர் சுவாமி திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. சித்திரை, வைகாசியில் இந்தத் திருக்கோயிலில் தேர்த்திருவிழா நடைபெறும். பத்து நாட்கள் உற்சவம் நடைபெறும். இதுபோன்று வேறு எங்கும் உற்சவமோ, தேரோட்டமோ நடைபெறுவதில்லை.

கருடஸ்தம்ப ஆஞ்சநேயர்


ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வேணுகோபால சுவாமி ஆலயம் உள்ளது. இங்கு ஆஞ்சநேயர் கருடஸ்தம்ப ஆஞ்சநேயராகத் தனிக்கோயில் கொண்டு அருட்பாலிக்கிறார். கருடஸ்தம்பத்தின் அடிப்பாகம் 16 அடி சுற்றளவும், உயரம் 60 அடியுமாக உள்ளது. ஒரே கல்லில் உருவானது.

மேலக்காவேரி ஆஞ்சநேயர்

கும்பகோணம் மேலக்காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள ஆலயத்தில் ஆஞ்சநேயசுவாமி, சனிபகவானைத் தன் காலடியில் போட்டு மிதித்தபடி அருள்புரிகிறார். இது ஒரு அபூர்வ தரிசனமாகக் கருதப்படுகிறது. மேலும், இவர் நின்ற நிலையில் கருங்கல்லால் ஆன திருவாசியுடன் காட்சிதருகிறார்.

செங்கல்பட்டு அனுமன்

செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகில் உள்ள தனிஆலயத்தில் குடிகொண்டுள்ள ஆஞ்சநேயரை அழகிய கோலத்தில் காணலாம். இவர் கோட்டைச்சுவரில் சுயம்புவாகத் தோன்றியவர் என்று சொல்கிறார்கள்.

சோளிங்கர் ஆஞ்சநேயர்

அரக்கோணத்திலிருந்து சுமார் 25.கி.மீ. தொலைவில் உள்ள சோளிங்கரில் சிறிய மலை மீது மேற்கு நோக்கி யோக நரசிம்மரைப் பார்த்த வண்ணம் யோக ஆஞ்சநேயர் அமர்ந்துள்ளார். இது மிகவும் அபூர்வமான சேவை. அழகிய பீடத்தின் மீது நான்கு கரங்களுடன் விளங்குகிறார். சதுர்புஜங்களில் சங்கு, சக்கரம், ஜபமாலையும் கொண்டு ஒரு கை விரல்களை மடக்கிய நிலையிலும் காட்சி தருகிறார். இந்த யோக ஆஞ்சநேயருக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் திருமஞ்சனம் நடக்கிறது. ஆறுகால பூஜையும் உண்டு.

சுசீந்திரம் ஆஞ்சநேயர்

நாகர்கோவில் குமரி மார்க்கத்தில் சுசீந்திரம் என்ற புகழ் பெற்ற ஸ்தலம் உள்ளது. மும்மூர்த்திகளும் ஒன்றுசேர்ந்து `தாணுமாலயன்’ என்ற பெயரோடு எழுந்தருளியுள்ளார்கள். இங்கே அனுமன் கூப்பிய கரங்களுடன் சற்று ஒய்யாரமாக நெளிந்தபடியே 18 அடி உயரத்தில் ஆஜானுபாகுவாகக் காட்சியளிக்கிறார். பழம்பெருமை வாய்ந்த இந்த திருக்கோயிலில் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதித்தருளும் இந்த அனுமனைப் பற்றிப் பல கதைகள் வழங்கப்படுகின்றன. இவருக்கு விஸ்வரூப ஆஞ்சநேயர் என்பது திருநாமம்.

நங்கநல்லூர் ஆஞ்சநேயர்

சென்னை நங்கநல்லூரில் கூப்பிய கரங்களுடன் 32 அடி உயரத்தில் விஸ்வரூபராக `ஆதிவியாதிஹர ஆஞ்சநேயர்’ நின்ற திருக்கோலத்தில் அற்புதமாகக் காட்சிதருகிறார்.

பஞ்சவடி ஆஞ்சநேயர்

பாண்டிச்சேரி அருகே பஞ்சவடி என்ற இடத்தில் வராகர், கருடர், ஆஞ்சநேயர், நரசிம்மர், ஹயக்ரீவர் என ஐந்து முகங்களுடன் சுமார் 36 அடி உயரத்தில் நின்ற கோலம் கொண்டு அருட்பாலிக்கிறார்.

வத்திராயிருப்பு ஆஞ்சநேயர் கோவில்

சதுரகிரி  யாத்திரைக்குச் செல்லும் வழியில் உள்ளது வத்திராயிருப்பு ஆஞ்சநேயர் கோவில்.  இந்த ஆலயத்தை ஆற்றங்கரை ஆஞ்சநேயர் என்றும் கூறுவர். பக்தர்களுக்கு வேண்டிய  வரத்தைத் தந்து அருள் தருகிறார். இராமபக்தர்கள் அனுமனை வேண்டும் போது இந்த அனுமனின் கோயில்களுக்கும் சென்று வணங்குங்கள். அப்படி முடியவில்லை என்றாலும் அவனை மனதில் நினைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்குக் கிடைப்பதற்குரிய அனைத்து பேறும்கிட்டும்.

கலியுகத்தில் சிவபெருமானின் மறு அவதாரமான அனுமன், கலியுகத்தின் வாழும் கடவுள் என்றும் நம்பப்படுகிறார். ஒரு பக்தனின் எந்த பிரச்னையாக இருந்தாலும், பகவான் அனுமன் அதை எந்த நேரத்திலும் தீர்த்து வைப்பார் என்றும் கூறப்படுகிறது.

தொகுப்பு : அனுஷா - ஜி. காந்தி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • well-collapes-31

  ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

 • parliammmm_moddi

  இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

 • boat-fire-philippines

  பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

 • us-desert-train-acci-30

  அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

 • mexico-123

  மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்