SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வினைகளைப் போக்கும் விநாயகர் தலங்கள்

2022-12-12@ 15:30:19

* நாட்டரசன்கோட்டை அருகே உள்ள வாணியங்குடி எனும் ஊரில் அடைக்கலம் காத்த அம்மன் ஆலயத்தில் விநாயகப் பெருமான் அம்பிகை
வடிவில் வழிபடப்படுகிறார்.

* காஞ்சி புரத்தை அடுத்த தேனம்பாக்கம் சிவாலயத்தில் அம்மையப்பனுடன் அருள்புரியும் சோமகணபதியை தரிசிக்கலாம்.

* லிங்கம் போன்ற பாண உருவமும் அதில் கணபதி உருவமும் கொண்ட வித்தியாசமான விநாயகரை தீவனூரில் பொய்யாமொழி விநாயகர் ஆலயத்தில் காணலாம். விழுது விடாத மூன்று ஆலமரங்கள் இத்தலத்தில் மும்மூர்த்திகளாக வணங்கப்படுகின்றன.

* திருப்பாதிரிப் புலியூர் எனும் கடலூரில் அன்னை பெரிய நாயகியின் தவத்திற்கு உதவிய விநாயகர் கையில் பாதிரி மலர்களை ஏந்தி தரிசனமளிக்கிறார்.

* சென்னையில், நங்கநல்லூர் செல்லும் வழியில் உள்ளகரம் எனும் இடத்தில் விஜய கணபதி கோயில் கொண்டருள் கிறார். இங்கு விஜயகுமாரசுவாமி, விஜயதுர்க்கை, விஜய மணிகண்டன், விஜயமாருதி என எல்லோருமே விஜய எனும் அடைமொழியுடன் வணங்கப்படுகின்றனர். இந்த ஆலயத்தில் தினந்தோறும் கணபதி ஹோமம் நடைபெறுவது சிறப்பு.

* சென்னை கிழக்கு தாம்பரம் ஸ்கந்தாஸ்ரமத்தில் புவனேஸ்வரி அன்னையின் எதிரே சுவாமிநாதன் எனும் பெயரில் முருகப் பெருமான் அருள, விநாயகர், கமல விநாயகர் எனும் திருநாமத்துடன் தேவியின் கருவறையருகே சந்நதி கொண்டுள்ளார்.

* பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்தபோது வந்த அமிர்தத்தை, தன்னை வணங்காததால் விநாயகர் மறைத்தார். தவறை உணர்ந்த தேவாசுரர்கள் அவரை வணங்க, அமிர்தத்தை காட்டியருளிய விநாயகரை திருக்கடவூரில் கள்ளவாரணப் பிள்ளையார் எனும் பெயரில் தரிசிக்கலாம்.

* காஞ்சிபுரம் வேலூர் பாதையில் உள்ள திருவலம் எனும் திருத்தலத்தில் மாங்கனிக்காக அம்மையப்பனை வலம் வந்த விநாயகரையும் அந்த விநாயகருக்கு மாங்கனியை அளித்த தனுமத்யாம்பாளையும் தரிசித்து மகிழலாம்.

* திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியின் உக்ரம் தணிக்க தேவியின் காதுகளில் சக்ரம், சிவசக்ரம் பொறித்த தாடங்கங்கள் அணிவித்த பிறகும், உக்ரம் தொடர்ந்தது. உடனே ஆதி சங்கரர் அன்னையின் முன் விநாயகரைப் பிரதிஷ்டை செய்ய, உடனே தேவி குளிர்ந்தாள். அந்த விநாயகரை இன்றும் தரிசிக்கலம்.

* திருப்பூவனம் திருத்தலத்தில் மந்திர விநாயகர், கற்பக விநாயகர், ஒட்டுக்கல் வெள்ளை விநாயகர் என மூன்று விநாயகப் பெருமான்கள் திருவருள் புரிகின்றனர்.

சுந்தரரும், சேரமான் பெருமானும் கயிலை சென்றபோது, ஔவையாரையும் உடன் வருமாறு அழைத்தனர். ஔவையார் கணபதி பூஜையை முடித்து விட்டுத்தான் வருவேன் எனக் கூறிவிட, அவர்கள் முன்னே சென்றார்கள். ஆனால், கணபதி பெரிய விஸ்வரூபம் எடுத்து ஔவையை அவர்களுக்கு முன்பே கயிலையில் சேர்த்தார். அந்த திருவடிவத்தை, திருக்கோவிலூரில் பெரியானை கணபதி எனும் பெயரில் தரிசிக்கலாம்.

கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயம் 15 ஆண்டுகள் திருப்பணி நடைபெற்றது. அப்போது திடீரென மன்னன் கணக்குப்பிள்ளையிடம் சந்தேகப்பட்டு கணக்கு கேட்க, கணக்கெழுதாத அவர் கணபதியிடம் புலம்ப, கணபதி கணக்கு விவரங்களை துல்லியமாக அவனுக்கு அறிவித்தார். அந்த விநாயகர் கணக்கு விநாயகராக இன்றும் அருள் புரிகிறார்.

நாவல், பவளமல்லி, வில்வம், அரசு, நெல்லி, அத்தி, மந்தாரை, வேம்பு, வன்னி ஆகிய ஒன்பது தலவிருட்சங்கள் சூழ வீற்றருளும் விநாயகரை மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் தரிசிக்கலாம். இவரை வழிபட நவகிரக தோஷங்கள் நீங்குகின்றன.

தன் தந்தையான ஈசனை இஷ்ட தெய்வமாக வழிபட்ட நீலகண்ட விநாயகரை சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத்தில் தனி சந்நதியிலும், தன் தாயைப் போல் வடிவெடுத்த விக்னேஸ்வரி எனும் விநாயக வடிவை ஆலயத் தூணிலும் தரிசிக்கலாம்.

தொகுப்பு: ஜி. ராகவேந்திரன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • spain-trees-24

  ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

 • gandhi-13

  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

 • taipei-fashion-week-taiwan

  தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

 • kalifffo1

  தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

 • pak-123

  பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்