SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வார விசேஷங்கள்

2022-12-10@ 14:00:31

10-12-2022 - சனி  
பரசுராம ஜெயந்தி

பகவான் பல்வேறு அவதாரங்களை எடுத்திருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. அதில், மிகச் சிறப்பாகப் பத்து அவதாரங்களைச் சொல்வார்கள்.

தேவுடைய மீனமாய் ஆமையாய் ஏனமாய்
அரியாய்க் குறளாய்
மூவுருவில் இராமனாய்க் கண்ணனாய்க்
கற்கியாய் முடிப்பாங் கோயில்
சேவலொடு பெடையன்னம் செங்கமல
மலரேறி ஊசடிலாடி
பூவணைமேல் துதைந்தெழு செம்பொடி
யாடி விளையாடும் புனலரங்கமே.


-  என்று இந்த அவதாரங்களை ஆழ்வார்கள் வரிசை இடுகின்றார்கள். பொதுவாக தசாவதாரங்கள் என்றாலும், பாஞ்சராத்ர ஆகமத்தில் அஹிர் புதந்யை சம்ஹிதையில், மஹாவிஷ்ணுவின் அவதாரங்கள் 39 என்று தெளிவுபடுத்தியுள்ளது. இந்த அவதாரங்களைப் பூரண அவதாரம் என்றும், அம்ச அவதாரம் என்றும், ஆவேச அவதாரம் என்றும் வகைப்படுத்துவர். அதிலே, ஆவேச அவதாரம்தான் பரசுராம அவதாரம். விஷ்ணு பகவானின் ஆறாவது அவதாரம். திரேதாயுகத்தில் ஜமதக்கினி முனிவருக்கும், ரேணுகாவுக்கும் குமாரனாக அவதரித்தவர்.

ராமபத்ரா என்றும் இவருக்கு பெயர். கையில் எப்போதும் ஒரு கோடாரி வைத்திருப்பதால், பரசுராமர் என்று பெயர். பரசு என்றால் கோடாலி. கேரளப் பகுதியை கடல் ஆக்கிரமித்தபோது, கடலின் பிடியிலிருந்து பூமியைக் காத்தார் என்று ஒரு வரலாறு உண்டு. அதனால், கேரளதேசத்தை பரசுராமதேசம் என்றும் சொல்வார்கள். வில்வித்தையில் வல்லவர். இவரை ஜெயிப்பதற்கு ஆண்மகனே இல்லை என்று சொல்லும்படியாக வாழ்ந்தவர். நேர்மையற்ற அரச பரம்பரையினர், 21 தலைமுறை வென்றவர்.

மகாபாரதத்தில் தம்முடைய வில்வித்தையை, பீஷ்மருக்கும் துரோணருக்கும் கர்ணனுக்கும் சொல்லித் தருகின்றார். பரசுராம அவதாரத்தைக் குறித்து ஆழ்வார்கள், பாசுரங்களில் பல இடங்களில் பாடி இருக்கின்றார்கள். சப்த சிரஞ்சீவிகள் ஒருவர் (சப்த சிரஞ்சீவிகள்: ஆஞ்சநேயர், விபீஷணன், வியாசர், அஸ்வத்தாமன், பரசுராமர், மகாபலி சக்கரவர்த்தி, மார்க்கண்டேயர்) என்றும் இவரைச் சொல்வார்கள்.

பொதுவாக பரசுராமருக்கு என்று தனிக் கோயில்கள் தமிழகத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், கேரளாவில் திருவனந்தபுரம் மாவட்டம் திருவல்லம் என்ற இடத்தில் பரசுராமருக்குக் கோயில் உள்ளது. வல்லம் என்றால் தலை என்று பொருள். திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமியின் உடைய திருமுடி, இந்த தலம் வரை நீண்டதால் இந்த தலத்திற்கு திருவல்லம் என்ற பெயர் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள்.

11-12-2022 - ஞாயிறு  
தடைகளை எதிர்கொள்ள சங்கடஹரசதுர்த்தி


15 திதிகளில் நான்காவது திதியான சதுர்த்தி தினம். விநாயகருக்கு உரிய தினம். சங்கடங்களை (தடைகளை) நீக்கி காரிய சித்தி பெறச் செய்யும் விரதத்தை இன்று அனுஷ்டிப்பார்கள். காலை முதல் விரதமிருந்து மாலையில் விநாயகர் கோயிலுக்குச் சென்று கொழுக்கட்டை, அப்பம், அவல், பொரி, பச்சரிசி பிட்டு, வெள்ளரிப்பழம், தேங்காய், வாழைப்பழம் முதலிய நிவேதனங்களைப் படைத்து (அருணகிரிநாதர் சொன்னபடி) அறுகம்புல் மாலை சாற்றி வழிபடுவது அமோகமான சுபபலன்களைச் செய்யும். காரியவெற்றியைத் தரும்.

11-12-2022 - ஞாயிறு  
நினைத்தது பலிக்க திருவெள்ளறை சகஸ்ரதீபம்


108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருவெள்ளறை திருச்சிராப்பள்ளி அருகே  துறையூர் செல்லும் வழியில் உள்ளது. இங்குள்ள பெருமாளுக்கு புண்டரீகாட்சப் பெருமாள் (செந்தாமரைக்கண்ணன்) என்று பெயர். கையில், பிரயோகச் சக்கரத்துடன் கிழக்கு நோக்கிய கோலத்தில் காட்சி தருவார். மூலஸ்தானத்தில் 7 மூலவர்கள் உள்ளனர்.

சூரியனும் சந்திரனும் இரண்டு பக்கமும் நின்று சாமரம் வீசும் காட்சி கண்கொள்ளாக் காட்சி. தாயாருக்கு பங்கயச் செல்வி என்ற திருநாமம். இங்கு கார்த்திகை மாதம் கடைசி ஞாயிறு (அதாவது இன்று 11.12.2022) சகஸ்ரதீபம் என்று ஆலயம் முழுதும் தீபமேற்றும் நிகழ்ச்சி தொடங்கும். இந்த தீபத்தை கண்டுவிட்டு, பெருமாளையும் தரிசித்தால், மிகுந்த மகிழ்ச்சியும் நன்மையும் ஏற்படும். நினைத்தது பலிக்கும்.

14-12-2022 - புதன்  
மகிழ்ச்சியை அதிகரிக்கும் மந்தாசஷ்டி


கார்த்திகை மாதம் தேய்பிறை சஷ்டி திதி அன்று (14-12-2022 புதன்கிழமை) விரதம் இருந்து சூரியனை வணங்க வேண்டும். அப்படி வணங்கினால், அவர்கள் சந்ததி பெருமையோடு வாழும். தரித்திரம் விலகி ஐஸ்வர்யம் பெருகும். ஆன்மபலம் அதிகரிக்கும். அன்றைய தினம், காலை பொங்கல் வைத்து சூரியனை, மந்தார மலர்களால் வழிபட வேண்டும். அதனால் இந்த சஷ்டிக்கு மந்தாசஷ்டி என்று பெயர். இதனால் குடும்பம் வசதி வாய்ப்புகளோடு முன்னேறும்.

15-12-2022 - வியாழன்  
சகல நன்மை தரும் சர்வத சப்தமி


கார்த்திகை மாதம் பௌர்ணமியை அடுத்துள்ள சப்தமி திதியை சர்வத சப்தமி என்று அழைப்பர். அன்றைய தினம் விரதம் இருந்து உப்பு மற்றும் எண்ணெய் கலக்காத பிரசாதத்தை சூரிய பகவானுக்கு படைத்து வணங்கவேண்டும். பின்னர், தங்களால் இயன்ற அளவு அந்தணர்களுக்கும், வேதம் வல்லார்களுக்கும், அடியார்களுக்கும், ஏழைகளுக்கும் உதவி செய்யவேண்டும். இதனால், சூரியன் தோஷங்கள் விலகும். ஆரோக்கியம் அதிகரிக்கும். கண்நோய்கள் விலகும். தந்தை மகன் உறவு பலப்படும்.

16-12-2022 - வெள்ளி  
தனுர் மாதப்பிறப்பு


குலதெய்வம், பூர்வீகம், போன்ற நமக்குக் கிடைக்க வேண்டிய பாக்கிய விஷயங்களை குறிப்பது 9-ஆம் இடம். இதனை மூன்றாவது திரிகோண ஸ்தானம் (பாக்கிய ஸ்தானம்) என்பார்கள். தமிழ் மாதங்களில் இது ஒன்பதாவது இடம், தனுர் மாதத்தை குறிப்பது. தனுர் என்பது வில்லை குறிக்கும். மார்கழி குளிரில் உடல் வில் போல் வளையும் என்பதால், சீதோஷ்ணநிலையை அனுசரித்து தனுர் மாதம் என்றார்கள். தனுர் ராசியான குரு பகவானின் வீட்டில், சூரியபகவான் பிரவேசிக்கும் மாதம். மார்கழி மாதத்தை குறித்து, பகவான் கண்ணன் கீதையில் சொல்லியிருக்கிறார். 12 மாதங்களில் தனக்குப் பிடித்த மாதமாக இந்த மார்கழியைக் குறிப்பிடுகிறார்.

தேவர்களுக்கு இது காலை சந்தி நேரம் என்பதால், வழிபாட்டுக்குரிய நேரம். காலையில் எழுந்து கடும்பனியைக் குறித்துக் கவலையின்றி, நீராடி, நெற்றியில் திலகம் அணிந்து, வாழ்வாங்கு வாழும் வரம் வேண்டி, தெய்வத்தின் சந்நதியை நாள்தோறும் நாடிச் சென்று, பின் மற்ற வேலையைத் தொடங்கும் மாதம் இந்த தனுர் மாதம். இதனை அசுப மாதம் என்று சிலர் தவறாகக் கருதுவார்கள். இறை வழிபாட்டுக்கு என்றே ஒதுக்கப்பட்ட ஒரு மாதம் எப்படி அசுப மாதமாக இருக்கும்? தெய்வத்தை நினைக்கும் வேளையில் சாதாரண உலகியல் விஷயங்களில் ஈடுபட வேண்டாம் என்பதற்காகத்தான் இந்த மாதத்தில் திருமண முகூர்த்தங்களை வைத்துக் கொள்வதில்லை.

தமிழகத்தின் தொல் சமயங்களான சைவம், வைணவம் இரண்டுக்குமே உரிய மாதம் இந்த தனுர் மாதம் என்பதால் சிவாலயங்களிலும், விஷ்ணு ஆலயங்களிலும் விடிகாலை வழிபாடுகள் சிறப்பாக நடைபெறும். மணிவாசகர் அருளிய திருவெம்பாவை திருப்பள்ளி எழுச்சியும், ஆண்டாள் நாச்சியார் அருளிச்செய்த திருப்பாவை, தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிச்செய்த திருப்பள்ளியெழுச்சியும் தினசரி வழிபாட்டில் இடம்பெறும். ஒருவகையில் முழுக்கமுழுக்க தமிழ் வழிபாட்டை முன்னிறுத்திய உயர் மாதம் என்று இந்த மார்கழி மாதத்தைச் சொல்லலாம். அந்த மாதத்தின் துவக்க நாள் இன்று.

தொகுப்பு: சங்கர்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • spain-trees-24

  ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

 • gandhi-13

  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

 • taipei-fashion-week-taiwan

  தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

 • kalifffo1

  தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

 • pak-123

  பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்