சிவாக்னியை பெற்ற வாகீஸ்வரர் வாகீஸ்வரி
2022-12-09@ 12:53:35

நன்றி குங்குமம் ஆன்மிகம்
சிவாகமங்கள் சிவாக்னிதேவரின் தாய், தந்தையரை வாகீஸ்வரர்-வாகீஸ்வரி என்று குறிக்கின்றன. மகேஸ்வரரான சிவபெருமானும், பார்வதியாகிய கௌரி தேவியுமே வாகீஸ்வரரும் வாகீஸ்வரியும் ஆவர். இவர்களைப் பூசித்து இவர்களிடமிருந்தே சிவாக்கினி உற்பத்தியாகி வேள்விக் குண்டத்தில் வளர்வதாக ஆகமங்கள் கூறுகின்றன.
கும்பாபிஷேகம் முதலிய பெருவிழாக்களில் அமைக்கப்படும் வேள்விச் சாலையில் வாகீஸ்வரர்-வாகீஸ்வரிக்கு என தனியே இரண்டு பூரண கும்பங்கள் அமைத்து அவை சிறப்பாகப் பூசிக்கப்படுகின்றன. இவர்களுடையதிருவுருவத்தைக் குறிக்கும் தியான ஸ்லோகங்கள் பூஜாபத்ததி நூல்களில் உள்ளன.இதன்படி வாகீஸ்வரருக்கு ஐந்து முகங்கள், முகந்தோறும் மூன்று கண்களாகப் பதினைந்து கண்கள். வெண்மையான நிறம்நான்கு கைகள் அவற்றில் அபயம், வரதம், அட்சமாலை தாமரை ஆகியவற்றை ஏந்தியவாறு தாமரைமலரில் வீற்றிருக்கின்றார். வாகீஸ்வரி, கரியநிறத்தை உடையவளாய், இளமையாக எழிலுடன் சந்திரனையும் பூமாலைகளையும் கூந்தலில் அணிந்து கொண்டு புஷ்பவதியாகக் காட்சியளிக்கின்றாள்.
தென்னகத்தில் பல்லவர்களின் ஆட்சிக் காலத்திற்கு முன்பே பரவியிருந்த லகுலீச பாசுபதர்கள் எனும் சைவப்பிரிவினர் சிவபெருமானைச் சதாசிவ மூர்த்தியாகத் தனிச் சிறப்புடன் போற்றினர். சதாசிவ மூர்த்தியின் வடிவ பேதங்களில் ஒன்றான வாகீஸ்வரரையும் வாகீஸ்வரியையும் போற்றி அம்மூர்த் தங்களுக்குக் கோயில் அமைத்து வழிபாடு செய்தனர். அந்தச் சமயத்தின் குருமார்களைப் போற்றிய பல்லவ மன்னர்களும் அவர்களை தொடர்ந்து வந்த சோழப் பேரரசர்களும் வாகீஸ்வர வழிபாட்டைச் சிறப்புடன் ஏற்றுப் போற்றினர். இவர்கள் காலத்தில் வாகீஸ்வரருக்கெனத் தனிக்கோயில்கள் பல கட்டப்பட்டன. இவை வாகீஸ்வரமுடையார் கோயில் என்றே அழைக்கப்பட்டன.
பாசுபதச் சமயக் குருமார்களில் பலர் வாகீசர் என்ற பெயரைச் சூட்டிக்கொண்டிருந்தனர். தனது வழியொழுகும் அன்பர்களுக்கும் அப்பெயரைச் சூட்டினர். எடுத்துக்காட்டாக தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலில் வடக்குப் பிராகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள 108 சிவாச்சாரியர்களின் புடைப்புச் சிற்பங்களில் ஒன்று வாகீசபண்டிதரைக் குறிப்பது இங்கு எண்ணத்தக்கதாகும்.வாகீஸ்வரருக்கு ஐந்து முகங்கள் என்றாலும் கலைஞர்கள் நான்கு திசைகளை நோக்கியவாறு நான்கு முகங்களை மட்டுமே அமைத்துள்ளனர். ஐந்தாவது முகம் மந்திரப் பூர்வமாக மட்டுமே வழிபடப்படும். எனவே, இவரை நான்கு முகமுடையவர் என்று பொருள்பட சதுரானனன் என்றும் அழைப்பர். இப்பெயரால் சதுரானைப்பண்டிதர் என்ற ஒருவர் திருவொற்றியூரில் இருந்ததைச் சோழர்காலக் கல்வெட்டு குறிக்கின்றது.
வாகீஸ்வரரும் வாகீஸ்வரியும் உலகின் ஈசானமாகிய வடகிழக்குத் திசையில் அக்னி மண்டலத்தின் நடுவில் இருப்பதாகக் கருதப்பட்டது. எனவே வாகீஸ்வரர் ஈசானத்துப் பெருந்தேவர் என்றும் அழைக்கப்பட்டார். இதனையொட்டி லகுலீச பாசுபதக் குருமார்கள் ஈசானச் சிவனார், ஈசான பண்டிதர் என்னும் பெயர்களையும் பெற்றிருந்தனர். எடுத்துக்காட்டாக இராஜராஜ சோழனுடைய குலகுருவின் பெயர் ஈசான பண்டிதர் என்பதேயாகும். இவர் நெடுங்காலம் வாழ்ந்தவர். இராஜராஜனின் மகனான ராஜேந்திர சோழனுக்கும் குலகுருவாகத் திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
வாகீஸ்வரரைக் குருவடிவில் தட்சணாமூர்த்தியாகவும் போற்றினர். அந்நிலையில் அவர் இடது கீழ்க்கரத்தில் ஓலைச்சுவடியைத் தாங்கியவராக அமைக்கப்பட்டார். திருவையாற்றுத் தென்கயிலாயம் திருநெய்த்தானம் முதலிய இடங்களில் குருவடிவாக விளங்கும் வாகீஸ்வரரைக் காண்கிறோம். காலப்போக்கில் இந்நிலை மாறியது. லகுலீச பாசுபதர்கள் தனது தனித்தன்மைகளை இழந்து பொதுவான சைவத்தில் கலந்து ஒன்றிவிட்டனர்.
அவர்களால் கட்டப்பட்ட கோயில்களும் கால வெள்ளத்தால் மறைந்துவிட்டன. அங்கிருந்த வாகீஸ்வர, வாகீஸ்வரி வடிவங்கள் பல இடங்களுக்குக்கொண்டு செல்லப்பட்டுக் காட்சிப் பொருளாகிவிட்டன. பின்னாளில் வாகீச வழிபாடு முற்றிலுமாக மறைந்துவிட்டபோதிலும் அபூர்வமாக ஓரிரு கலைஞர்கள் வாகீஸ்வரரை மறக்காமல் அவருக்குச் சிற்பம் அமைத்திருப்பதைக் காண்கிறோம். எடுத்துக் காட்டாக அக்னிலிங்கத்தலமான திருவண்ணாமலையில் வல்லாளமகாராஜன் கோபுரம் என்கிற பெரிய ராஜகோபுரத்தின் அதிஷ்டானத்தில் ஈசான மூலையில் ஒரு மாடத்தில் வாகீஸ்வரரை அமைத்துள்ளதைக் காண்கிறோம்.நெடுங்காலம் உன்னத நிலையில் இருந்த இவ்வழிபாடு சுவடுகூட தெரியாமல் மறந்து விட்டபோதிலும் ஆகம முறைப்படியானவேள்விச் சாலையில் மந்திரப் பூர்வமாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
2. ஆகமம் காட்டும் வாகீஸ்வரர் -வாகீஸ்வரி
சிவாகமங்களிலும், பூஜாபத்தி நூல்களிலும் வாகீஸ்வரர் - வாகீஸ்வரியின் திருவுருவத்தை விளக்கும் தியான ஸ்லோகங்கள் கூறப்பட்டுள்ளன. அஜிதாகமத்தில் ஆவாஹன மந்திரம் சொல்லப்பட்டுள்ளது.
இதன் பொருள்:-நன்கு அமைக்கப்பட்டுச் சமஸ்காரங்கள் செய்து பூசிக்கப்பட்ட குண்டத்தில் அக்னியின் மாதாவான வாகீஸ்வரியையும், தந்தையான வாகீஸ்வரரையும் அழைத்து நிலைப்படுத்தி அர்ச்சிக்க வேண்டும். கௌரி தேவியே அக்னி மாதாவான வாகீஸ்வரியாகவும், பரமேஸ்வரனே பிதாவான வாகீஸ்வரராகவும் இருக்கின்றனர். வாகீஸ்வரர் மூன்று கண்களும் நான்கு தோள்களும் பத்மராகம் போன்ற ஒளியையும் கொண்டவராக வரதம், அபயம் ஆகிய முத்திரைகளுடன், சூலத்தையும், பாசத்தையும் தாங்கியுள்ளார்.
வாகீஸ்வரி தாமரை போன்ற நிறத்தை உடையவளாய்க்கனத்த ஸ்தனங்களுடன் அறிவை விவரிக்கும் புத்தகம், கமண்டலம், அட்ச மாலை (வரதமுத்திரை) ஆகியவற்றைத் தாங்கியுள்ளாள் என்பதாகும். மேலும், காரணாகமத்தின் முதற்பகுதி வாகீஸ்வரரை (முகம் தோறும்) மூன்று கண்களைக்கொண்ட ஐந்து முகங்களையும் சூலம், கபாலம், அபயவரத முத்திரைகளைத் தரித்த நான்கு கரங்களையும் பாம்புகளும் சந்திரனும் அலங்கரிக்கும் ஜடாமகுடமும் கொண்டவராய்க் கூறுகிறது.
தொடர்ந்து ஸ்யாமள (நீல) நிறத்துடன் கூடியவளான வாகீஸ்வரியை வெண்பட்டாடைகளைத் தரித்து பருவமடைந்து இளமை ததும்புபவளாய் பலவிதமான அணிமணிகளைப் பூண்டு அபயவரத முத்திரைகளைத் தரித்துள்ளாள் என்று கூறிப் போற்றுகின்றது. இதனையொத்தே அனைத்து ஆகமநூல்களும் பிரபஞ்சசார சங்கிரகம், கிரியாகிரமஜோதி முதலான பூஜாபத்ததி நூல்களும் வாகீஸ்வர - வாகீஸ்வரியையும் அவர்களிடமிருந்து உண்டாகும் அக்னியின் தோற்றம் வளர்ச்சி ஆகியவற்றையும் விளக்கமாகக் கூறுகின்றன.
தொகுப்பு: சிவதாசன்
மேலும் செய்திகள்
நீலமேகன் திருமங்கையானார்
காத்து அருளும் காஞ்சி காமாட்சி
மனமும் அறிவும் மேலோங்க!
குன்றில் குடியிருக்கும் தமிழ்க்கடவுள் குமரனுக்கு குடமுழுக்கு...!
திரையாக மாறி நின்ற குபேர பீம ருத்திரர்
ஒரு நம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!