SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாரெங்கும் ஒளிரும் பரமேஸ்வரனின் ஆலயங்கள்

2022-12-05@ 12:09:04

* த்ரியம்பகேஸ்வரம் எனும் ஜோதிர்லிங்கத் தலம் மகாராஷ்டிரா, நாசிக்கில் உள்ளது. இந்த லிங்க ஆவுடையாரில், பிரம்ம, விஷ்ணு, ருத்ரர் மூவரும் பூஜை செய்த தாமரை மொட்டுகளின் அடையாளம் உள்ளது.

* காசியில், ஜோதிர்லிங்கமாக விஸ்வநாதர் எழுந்தருளியுள்ளார். தினமும் இரவில் வில்வ தலங்களில் சந்தனத்தால் ராமநாமத்தை எழுதி விஸ்வநாதப் பெருமானுக்கு ஏழு பண்டாக்கள் பூஜை செய்யும் சப்தரிஷி பூஜை புகழ் பெற்றது.

* குஜராத், வீராவலியில் சோமநாதம் எனும் ஜோதிர்லிங்கத் தலம் உள்ளது. சந்திரனின் (சோமன்) நோயைப் போக்கியவர் இந்த ஈசன். அதனாலேயே சோமேஸ்வரர். இந்திரன், சூரியன், கிருஷ்ணன், ஜனமேஜயன், பாண்டவர் என பலரும் இவரை வணங்கி பேறு பெற்றுள்ளனர்.

* மத்தியப் பிரதேசம், உஜ்ஜயினியில் மகாகாளேஸ்வரம் எனும் ஜோதிர்லிங்கத் தலத்தில் மகாகாளேஸ்வரராக ஈசன் திகழ்கிறார். மகாகாளி பூஜித்த இந்த ஈசனுக்கு செய்யப்படும் விபூதிக்காப்பும், பஞ்சகவ்ய அபிஷேகமும் பெயர் பெற்றவை.

* சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ளது ஓங்காரேஸ்வரம் எனும் ஜோதிர்லிங்கத்தலம். பிரணவமான ஓம் எனும் மந்திரம் சதாசர்வகாலமும் இந்த ஈசனை துதித்துக் கொண்டிருப்பதாலேயே அவர் இப்பெயர் பெற்றார்.

* உத்ராஞ்சல் மாநிலத்தில் உள்ளது கேதாரேஸ்வரம் எனும் ஜோதிர்லிங்கத்தலம். இமயமலைமீது கங்கைநதிபாயும் பனி படர்ந்த சூழலில், பாறை வடிவில் அருள்கிறார் கேதாரீஸ்வரர். இத்தல தீர்த்தங்களாக கங்கையும், கௌரிகுண்டமும் விளங்குகின்றன.

* மஹாராஷ்டிரா, எல்லோராவிற்கு அருகில் உள்ளது குஷ்மேஸ்வரம் எனும் ஜோதிர்லிங்கத் தலம். தஞ்சை பெரிய கோயில் விமானம் போன்று கலையழகு கொண்ட கோயில் இது. கருவறை நந்திக்கு முன் ஆமை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

* ஆந்திர மாநிலம் சைலத்தில் மல்லிகார்ஜுனம் எனும் ஜோதிர்லிங்கத்தலம் உள்ளது. திருமகள் பிரதிஷ்டை செய்து வணங்கிய லிங்கம். ஆகவே இத்தலம் சைலம்; மல்லிகை மரங்கள் நிறைந்த பகுதியாதலால் மல்லிகார்ஜுனம். காசியைப் போன்றே கருவறைக்கே சென்று மல்லிகார்ஜுனரை வழிபடலாம்.

*  ஔரங்காபாத்திற்கு அருகே உள்ளது வைஜயநாத் ஜோதிர்லிங்கத்தலம். அசுரர்களை வெல்ல, முப்பெருந்தேவியர் பிரதிஷ்டை செய்து பூஜித்த லிங்கம், வைஜயநாதர். இவரை வழிபட்டால் வெற்றி எளிதாகும்.

* ராமேஸ்வரம், ஒரு ஜோதிர்லிங்கத் தலம். ராமபிரானின் பாவத்தைப் போக்கியவர் இத்தல ராமநாதர். கோயிலின் பிராகாரமும், சுதையினாலான மிகப் பெரிய நந்தியும் உலகப்புகழ் பெற்றவை.

* மஹாராஷ்டிரா, டாகனியில் சிறு மலைமீது பீமசங்கரர் ஜோதிர்லிங்கம் அமைந்துள்ளது. பீமனுக்கு அருளிய மூர்த்தி இவர். இவரை நினைத்தாலேயே சகல வளங்களும் கிட்டும் என்பது நம்பிக்கை.

* மஹாராஷ்ட்ரா, ஔண்டாவில் நாகநாதம் எனும் நாகேஸ்வரர் ஜோதிர்லிங்கமாக அருள்கிறார். பாற்கடலைக் கடைய உதவிய வாசுகி நாகம் இந்த ஈசனை பிரதிஷ்டை செய்து வழிபட்டது. இவரை, அவரவர் இடத்திலிருந்தபடியே வேண்டிக்கொண்டாலும் நாகதோஷங்கள் நீங்குகின்றன. பாம்பு ஆபத்தும் உண்டாவதில்லை.

* பஞ்சபூதத் தலங்களுள் ஒன்றான சிதம்பரத்தில் திருமூலநாதரே மூலவர். ஆனாலும் நடராஜப் பெருமானே பிரதான மூர்த்தி. மூவர் பாடிய தேவார திருப்பதிகங்களை உலகிற்குத் தந்த தலம் இது.

*  காளஹஸ்தி காளத்திநாதர் லிங்கம் சிறப்பு வாய்ந்தது. இதன் அடிப்பாகத்தில் சிலந்தி, இரு யானைக் கொம்புகள், உச்சியில் ஐந்துதலை நாகம், வலக் கண்ணில் கண்ணப்பர் பெயர்த்து எடுத்து அப்பிய அவரது கண் வடு ஆகியன காணப்படுகின்றன. இத்தல புராணக் கதைகளைச் சித்தரிக்கும் லிங்கம் இது என்றே வியக்கலாம்.
 
* காஞ்சியில் ஏகாம்பரநாதரை தரிசிக்கலாம். காமாட்சி அம்மனால் உருவாக்கப்பட்ட மண் லிங்கம் இவர். இத்தல மாமரம் நான்கு கிளைகளிலும் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய சுவை களில் கனிகளைத் தருகிறது. உற்சவ ஏகாம்பரேஸ்வரர் 5008 ருத்ராட்சங்களால் ஆன பந்தலின் கீழ் கண்ணாடி அறையில் அருட்பாலிக்கிறார்.

* மலைஉருவாகவே ஈசன் தோன்றுவது திருவண்ணாமலையில். அதனால்தான் இங்கு கிரிவலம் உலகப்புகழ் பெற்றுள்ளது. கிருத யுகத்தில் நெருப்புமலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன்மலையாகவும் இருந்து, தற்போது கல்மலையாக மாறியிருக்கிறது.

* திருவானக்காவலில் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரிக்கு குருவாக மந்த்ரோபதேசம் செய்தார். அதனால் இங்கே அகிலாண்டேஸ்வரிக்கும் ஜம்புகேஸ்வரருக்கும் திருமண வைபவம் நடத்துவதில்லை.

* முசுகுந்த சக்ரவர்த்தி தேவேந்திரனிடமிருந்து பெற்று வந்து பிரதிஷ்டை செய்த மூர்த்தி திருவாரூர் தியாகராஜர். தினமும் சாயரட்சை பூஜையின்போது சகல தேவர்களும் இவரை தரிசிக்க வருவதாக ஐதீகம்.

* கீழவீதியில் விசுவநாதர், மேலவீதியில் ரிஷிபுரீஸ்வரர், தெற்கு வீதியில் ஆத்மநாதர், வடக்கு வீதியில் சொக்கநாதர் ஆகியோர் மத்தியில் மகாலிங்கேஸ்வரர் கோயில் கொண்டிருப்பது திருவிடைமருதூரில். எனவே இது பஞ்சலிங்கத் தலம். மகாமேருவுடன் அருளும் மூகாம்பிகை இத்தலத்தில் விசேஷம்.

* சென்னை திருவான்மியூரில் உலகோருக்கு ஏற்படும் நோய்களிற்கான மருந்துகளையும், மூலிகைகளின் விசேஷங்கள் பற்றியும் அகஸ்தியருக்கு உபதேசம் செய்த ஈசன் மருந்தீஸ்வரராக தரிசனம் தருகிறார்.

தொகுப்பு: கிருஷ்ணா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • erode-dmk-votes-2

  அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!

 • scotland-bonfire-festival

  ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி

 • stalin-corp-31

  மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 • long-whale-newyork

  35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

 • pak-blast-30

  பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்