SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இறைத்தூதர்களின் சொத்து கல்விதான்!

2022-12-02@ 11:53:54

மனிதன் விண்வெளியில் பறந்தாலும் சரி அவனுக்கு மன நிம்மதியையும் சரியான வழிகாட்டுதல்களையும் அளிப்பது ஆன்மிகம்தான். ஆன்மிகம் சார்ந்த முறையான கல்வி அறிவு இல்லாது போனால் மனிதன் வழிதவறிச் சென்றுவிட நிறைய வாய்ப்பு உள்ளது. அதனால்தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கல்வியாளரின் சிறப்பு, வணக்கசாலியின் சிறப்பைவிட உயர்ந்தது என்கிறார்.

நபிகளார் கூறினார்: ‘‘கற்றுணர்ந்த ஓர் அறிஞர் ஒரு வணக்கசாலியைவிடச் சிறந்தவர் ஆவார்; எப்படியெனில், நட்சத்திரங்களுக்கு மத்தியில் நிலவு போல. நிச்சயமாக நல்லறிஞர்கள்தாம் நபிமார்களின் வாரிசுகள் ஆவர். நபிமார்கள் தங்கம், வெள்ளி நாணயங்களைச் சொத்தாக விட்டுச் செல்லவில்லை. அவர்கள் விட்டுச்
சென்றது கல்வியைத்தான். அதைத்தேடிப் பெற்றவர் பெரும் நற்பேறுகளைப் பெற்றவர் ஆவார்.’’ ‘‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்’’ என்பது நாம் அறிந்த முதுமொழி. இந்த முதுமொழி பெரும்பாலும் பள்ளிக்கூட ஆசிரியர்களைக் குறிப்பிடவே பயன்படுத்துகிறார்கள்.

அப்படியல்ல. உண்மையில் மனிதனுக்கு எழுத்தறிவைக் கற்பித்தவன் இறைவன்தான் என்கிறது திருமறை - ‘‘உங்களின் இறைவன் எத்தகைய மாபெரும் கொடையாளன் எனில், அவனே எழுதுகோலைக் கொண்டு கற்றுக்கொடுத்தான். (அதன் மூலம்) மனிதனுக்கு அவன் அறியாதவற்றை எல்லாம் கற்றுக்
கொடுத்தான்’’ (குர்ஆன் 96:1-5).

ஒரு போரின் போது மக்காவைச் சேர்ந்த சிலர் கைதிகளாகப் பிடிபட்டனர். முஸ்லிம்களில் பலரும் அந்தக் கைதிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கோரினர். ஆனால், நபிகளார் என்ன செய்தார் தெரியுமா? அந்தக் கைதிகளில் பலர் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக இருந்தனர். ஆகவே மதீனாவில் உள்ள குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லிக் கொடுத்தால் உங்களுக்கு விடுதலை என்று நபிகளார் அறிவித்தார்கள்.

அதேபோல் அந்தக் கைதிகள் மதீனாவாசிகளின் குழந்தைகளுக்கு எழுதவும் படிக்கவும் கற்றுக் கொடுத்துவிட்டு விடுதலையாகி மகிழ்ச்சியுடன் ஊர் திரும்பினார்கள்.
இதுபோன்ற ஒரு நிகழ்வை உலக வரலாற்றில் எங்கும் பார்த்திருக்க முடியாது. எதிரிகளிடம்கூட கற்றுக் கொள்வதற்குக் கல்வி இருக்குமேயானால் அதையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்ட நபிகளார் கல்விக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

கல்வியைத் தேடி ஒருவன் செல்லும் பாதை உண்மையில் சுவனத்தின் பாதை என்று நபிகளார் சிறப்பித்துக் கூறினார்கள். ‘‘ஒருவன் கல்வியைத் தேடி ஒரு பாதையில் பயணித்தால் சொர்க்கத்தின் பக்கம் கொண்டு சேர்க்கும் பாதையை இறைவன் அவனுக்கு எளிதாக்குவான்’’ என்றார்  நபியவர்கள். உண்மையான கல்வியைப் பெறுவோம். சுவனத்தை நோக்கி நடைபோடுவோம்.

- சிராஜுல்ஹஸன்

இந்த வாரச் சிந்தனை

இவர்களிடம் கேளுங்கள்: அறிந்தவர்களும் அறியாதவர்களும் சமம் ஆவார்களா? அறிவுடையோர்தாம் நல்லுரைகளை  ஏற்கிறார்கள்’’ (குர்ஆன் 39:9).

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • orange-tree-wishes-27

  ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

 • pet-fesitival-mumbai

  மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி

 • france-reform

  பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!

 • new-parliament-pic-20

  பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!

 • cong-ravi-19

  தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்