SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அறிந்த தலம் அறியாத தகவல்கள்

2022-11-30@ 14:44:26

திருப்பனந்தாள்

ஞான உபதேசம்

அன்னை பார்வதி தேவிக்குச் சிவபெருமான் ஞான உபதேசம் செய்த திருத்தலம் இது. நடைபெற்ற நாள் ‘பங்குனி உத்திரம்’. ஞான உபதேசத்திருநாள் இங்கே திருவிழாவாகவே கொண்டாடப்படுகிறது. அன்று மாலையில், உத்திர நட்சத்திரம் இருக்கும் நேரத்தில், அதாவது சுமார் 7-7:30 மணியளவில் இந்த விழா நடைபெறும். அந்த நேரத்தில் இங்கு இருந்து, மந்திரஜபம் செய்வது பல மடங்கு பலன் அளிக்கும்; மந்திரம் சித்தியாகும்.

தோஷம் நீக்கும் தூய திருத்தலம்

சுவாமியும் அம்பாளும் குருவாக எழுந்தருளி அருள்புரியும் திருத்தலம் இது. எல்லாவகையான குரு தோஷங்களையும்; குறிப்பாக ஜனன ஜாதகத்தில் குரு தனித்து இருப்பதால் விளையக்கூடிய தோஷங்களையும் நீக்கும் சக்தி கொண்டது திருத்தலம் இது.

பலகாரக் கொள்ளை

இங்கு அம்பிகைக்குப் பங்குனி உத்திரத் திருநாள் அன்று, ‘பலகாரக் கொள்ளை’ என்பது நடைபெறும். அம்பாளுக்கு சுகியம், அப்பம் முதலான பலவகைப் பணியாரங்களைப் படைத்து, பின் அவற்றை நிலத்தில் வீசுவார்கள். அவற்றைப் பக்தர்கள் பிரசாதமாக ஏற்பார்கள். மண்ணில் விளைந்தவைகளை உண்டு, மண்ணில் வாழும் ஜீவராசிகள், மண்ணுக்குள் போவதற்கு முன், அன்னையின்-அம்பிகையின் அருளை முயன்று பெறுவதே, இந்தப் பலகாரக் கொள்ளையின் அடிப்படை உண்மை.

சடைமுடிகள் 8

அருணஜடேஸ்வரர் எனும் திருநாமத்தில் இங்கு எழுந்தருளி இருக்கும் சிவலிங்கத்தில் எட்டு சடை முடிகள் இருக்கின்றன. எட்டுப் பேர்கள் ஞானம் பெறுவதற்காகத் தேவ உலகில் இருந்து இறங்கிப் பூமியில் உள்ள திருவிசநல்லூரில் வந்து பிறந்தார்கள்; பெருந்தவம் செய்தார்கள்; இங்குள்ள இறைவனிடம் ஞானம் பெற்றார்கள்; எட்டுபேர்களும் மூலலிங்கத்தோடு ஐக்கியம் ஆனார்கள். அதனால் சுவாமி ‘சிவயோக நாதர்’ எனும் திருநாமம் பெற்றார். அதன் காரணமாகவே லிங்கத்தின் திருமுடியில் எட்டு இருக்கின்றன - என்பார் தமிழ்த்தாத்தா உ.வே.சா.

பதினாறும் பெற்ற பெண்

இங்கே வழிபாடு செய்த தாடகை எனும் பெண் (இவள் ராமாயணத்தில் வரும் தாடகை அல்ல. இவள் வேறு)சிவபெருமானுக்கு மாலை சாற்ற முற்படும்போது, மேலாடை நழுவத் தொடங்கியது. ஒரு கையால் ஏதோ ஒரு வழியாக  மேலாடையை இறுக்கியவாறு, மாலை சாற்ற முயன்றாள்; முடியவில்லை. அவளுடைய தூய பக்திக்கு வசப்பட்ட சிவபெருமான், தன் லிங்கத் திருமேனியைச் சற்று வளைத்துக் குனிந்தார். மாலை சாற்றி மகிழ்ந்த தாடகை, மறுபடியும் இடையூறு உண்டாகாமல் இருக்க,சிவபெருமானிடம் வேண்டிப் பதினாறு கைகளைப் பெற்றாள் வழிபாட்டிற்காக.

தாடகை பெற்ற இந்தப் பதினாறு கைகளும் அவள் வழிபாடுசெய்யத் தொடங்கும்போது உண்டாகும்; வழிபாடு முடிந்தவுடன் அந்தக் கைகள் மறைந்துவிடும். 16 கைகளுடன் கூடிய அபூர்வமான இந்தத் தாடகை எனும் பெண்ணின் சிற்பம் இங்குஉள்ளது. வலது பக்கம் ஆறு கைகளும்; இடது பக்கம் பத்துக் கைகளுடன் கூடியதாக உள்ளது அந்தச் சிற்பம்.

தோஷக் கூட்டங்கள் நீங்க

நவக்கிரக தோஷங்கள், நாக தோஷம், கால சர்ப்ப தோஷம், ஜனன ஜாதக குரு தோஷம், சூரிய-சந்திர தோஷங்கள் என, தோஷக்கூட்டங்கள் அனைத்தையும் நீக்கும் சக்தி படைத்தது இந்த ஆலயம். சந்திர-சூரியர்கள், நவக்கிரகங்கள் ஆகியோர் எல்லாம் வழிபட்டுத் துயர்தீர்ந்த அருள் தலம் இது.

தமிழ் அறிவை அருள்பவர்!

அகத்தியர் இத்தலத்திற்கு வந்து, இறைவனைத் தரிசித்து, முறைப்படிச் செய்ய வேண்டிய வழிபாடுகளைச் செய்தார்; சுவாமிக்கு அலங்காரம் செய்தபின் எட்டு விதமான அர்ச்சனைகளைச் செய்து, பதினாறு விதமான உபசாரங்களைச் செய்தார். அகத்தி யரின் அழுத்தமான ஆழமான வழிபாடு, செஞ்சடையப்பரான சிவபெருமானை அவர் முன்னால் நிறுத்தியது. ‘‘அகத்தியா! வேண்டும் வரம் கேள்!’’ என்றார் ஈசன்.

‘‘ஒப்பிலாத் தெய்வமே! உன்னை அன்போடு வழிபாடு செய்பவர்களுக்கு, இந்த லிங்கத்தில் எழுந்தருளி இருந்து, தமிழியல் ஞானத்தை அதாவது தமிழறிவைக் குறையாமல் தந்தருள வேண்டும்’’ என வேண்டினார் அகத்தியர். ‘‘அப்படியே செய்கிறேன்’’ என்றார் சிவபெருமான். தமிழில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதுபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது இது. இங்கு வந்து இறைவனை வேண்டித் தமிழில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதத் தொடங்கினால், அது நல்லமுறையில் நிறைவேறும்.

தீய சக்திகளை விரட்டும் அற்புதம்

திருப்பனந்தாள் ஸ்ரீவீரியம்மன் கோவிலின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, தேர்களை உருவாக்கும் பணி தொடங்கியது. தேவையான மரங்களை வெட்டிக் கொண்டு வருவதற்காக, தொழிலாளர்கள் சிலர் கேரளாவிற்குச் சென்றார்கள். போன தொழிலாளர்கள் அங்கே, மரங்களை வெட்டத் தொடங்கினார்கள்.
கேரளாவில் திடீர்திடீரென மழை பெய்யும். தொழிலாளர்கள் மரம் வெட்டத் தொடங்கிய அந்த நேரத்திலும் எதிர்பாராமல் பெரும் மழை பெய்யத் தொடங்கியது. தொழிலாளர்கள் கவலைப்படவில்லை; ‘‘வீரியாத்தா! வீரியாத்தா!’’ என்று, அம்மனின் திருப்பெயரை உச்சரித்தவாறே, தங்கள் வேலையைத் தொடர்ந்தார்கள். என்ன அதிசயம்! அதே விநாடியில், அவர்கள் மரம் வெட்டிக்கொண்டிருந்த பகுதியில் மட்டும் மழை நின்றது.

மற்ற இடங்களில் எல்லாம் நன்றாகவே மழை பெய்தது. சில நாட்கள் இதே நிலை நீடித்தது. தொழிலாளர்களும் எந்தவிதமான இடையூறும் இல்லாமல், அம்பிகை அருளால் வேலையை முடித்தார்கள். பல வாரங்களில் முடியவேண்டிய வேலை, சில நாட்களிலேயே முடிந்தது. இதை அந்த ஊரில் இருந்த சில கை தேர்ந்த மாந்திரீகர்கள்-மந்திரவாதிகள் பார்த்தார்கள். அவர்கள் பேய், பிசாசு, பில்லி, சூனியம், ஏவல், பூத, பிரேத-முதலான மந்திரங்களில் கரை கண்டவர்கள். ஆச்சரியப்பட்ட அவர்கள், மரம் வெட்டும் தொழிலாளிகளிடம் வந்து, ‘‘உங்களுக்கு மட்டும் எப்படி இது நடந்தது?’’ எனக்  கேட்டார்கள்.

‘‘எங்கள் அன்னை வீரியம்மன் அருளால் நடந்தது இது. அவள் அருள்தான், நாங்கள் வேலைசெய்யும் இடத்தில் மட்டும் மழை பெய்து இடையூறு செய்யாதபடி, எங்களைக் கட்டிக்காப்பாற்றியது’’ என்று பதில் சொன்னார்கள் தொழிலாளர்கள். அதைக்கேட்ட மாந்திரீகர்கள், திருப்பனந்தாளுக்குச் செல்லும் வழியைத் தொழிலாளர்களிடம் கேட்டறிந்து, நேரே திருப்பனந்தாள் வந்து, அம்மனைத் தரிசித்தார்கள்;அம்மனின் அளவிலாத ஆற்றலை உணர்ந்தார்கள்; ‘‘ஆகா! இந்த அம்மனின் சக்தியை அப்படியே திரட்டி (கவர்ந்து) நம் ஊருக்குக் கொண்டுபோக வேண்டும்’’ என்று எண்ணி, உடனே கேரளா  திரும்பினார்கள்.

கேரளா திரும்பிய அந்த மாந்திரீகர்கள், அம்பாளின் சக்தியை ஆகர்ஷணம் செய்வதற்கான யாகத்திற்கான பொருட்களுடன், திருப்பனந்தாளுக்கு வந்தார்கள். ஒருநாள் இரவு நேரத்தில், பெரும் யாகம் ஒன்றைச் செய்தார்கள். என்னதான் முறைப்படி ஸ்வரம் தப்பாமல் மந்திரங்களை உச்சரித்து யாகம் செய்தாலும், அந்த மாந்திரீகர்களால் அம்பிகையின் ஒரு சிறு கலையைக்கூட, இடம் பெயர்க்க முடியவில்லை; தவித்தார்கள். அதே நேரத்தில் அன்னை, திருப்பனந்தாள் (காசி மடம்) மடத்து சுவாமிகளின் கனவில் தோன்றி, மாந்திரீகர்களின் செயல்களைத் தெரிவித்தாள்.

ஸ்ரீசுவாமிகள் அத்தகவலை உடனே, ரோந்துப் பணியாளர்கள் மூலமாக ஊர்மக்களுக்கு அறிவிக்கச் செய்தார். விவரமறிந்த ஊர்மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு, ஆவேசத்தோடு யாகம் நடக்கும் இடத்திற்குச் சென்றார்கள். ஊர் மக்களின் ஆவேசமாக வருகையை அறிந்த மாந்திரீகர்கள் (ஏழு பேர்கள்),  ‘‘அம்மா! உன் சக்தியைக் கவர்ந்துகொண்டு போக எண்ணிய எங்களுக்கு, இங்கேயே உன் திருவடியில் இடம் கொடு!’’ என்று கைகளைக் கூப்பி வணங்கியவாறே, யாக குண்டத்தில் விழுந்து உயிர் துறந்தார்கள். அன்னை அந்த ஏழு பேர்களுக்கும் அவர்கள் விரும்பியவாறே, தன் திருவடி நிழலில் இடம் தந்தாள்.

ஆம்! அந்த ஏழு மாந்திரீகர்களின் வடிவங்களும் இங்கே ஸ்ரீவீரியம்மன் ஆலயத்தில் சிற்பங்களாக உள்ளன. ஆலயத்திற்குள் நான்கும், கருவறை வெளிப்புற மண்டபத்தில் மூன்றுமாக உள்ள அவற்றை இன்றும் காணலாம். எந்த விதமான ஏவலாக இருந்தாலும் சரி! இந்த அன்னையிடம் செல்லுபடியாகாது. அந்தத் தீவினைகளைப் போக்கி, நம்மைக் கட்டிக் காப்பாற்றுபவள், இங்கு எழுந்தருளி இருக்கும் ஸ்ரீவீரியம்மன்.

பெயர்க் காரணம்

பனை மரத்தின் அடியில் பரமன் எழுந்தருளியிருப்பதால் இத்தலம் - திருப்பனந்தாள் எனப்படுகிறது. குங்குலியக்கலய நாயனார் மகன் உயிர் பெறுதல் குங்குலியக் கலயநாயனாரின் மனைவி பெயர் ‘நீலாயி’ என்பது, இங்குள்ள கல் வெட்டால் மட்டுமே அறியப்படும் அரிய தகவல்.

* விசித்திரப்பெயர் விநாயகர்: குங்குலியக்கலய நாயனார் இந்த ஊரில் இருந்தபோது, அவர் மகன் இறந்தான். சடலத்தைக் கொண்டுபோக ஏற்பாடுகளைச் செய்தார் குங்குலியக்கலயர். வரும் வழியில் ஊரின் வடமேற்கு மூலையை அடைந்த நேரம். விநாயகர் அசரீரியாக அருள் செய்தார். அதைக் கேட்ட குங்குலியக்கலயர், சடலத்தை அங்கேயே வைத்துவிட்டு, கோவிலில் இருந்து நாககன்னிகை தீர்த்தத்தைக் கொண்டுவரச் செய்து, சடலத்தின் மீது தெளித்தார். விநாயகர் அருளியபடியே, குங்குலியக்கலயர் மகன் உயிர்பெற்று எழுந்தான்.

திருப்பனந்தாளில் மேலைவீதியில் - வடமேற்கே எழுந்தருளி உள்ள விநாயகரே, இவ்வாறு அருள்புரிந்தார். அதன் காரணமாக இந்த விநாயகருக்கு, ‘பிணமீட்ட விநாயகர்’ எனப்பெயர் வழங்குகிறது. கும்பகோணத்திலிருந்து அணைக்கரை செல்லும் பாதையில் 15 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.

தொகுப்பு: சந்திரமௌலி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • erode-dmk-votes-2

  அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!

 • scotland-bonfire-festival

  ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி

 • stalin-corp-31

  மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 • long-whale-newyork

  35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

 • pak-blast-30

  பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்