SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அழகன் முருகனின் அரிய தகவல்களும் ஆலயங்களும்

2022-11-29@ 10:42:48

சம்பக சஷ்டி - 29-11-2022

கந்தபுராணத்தின் ஒரு பகுதியான சங்கர ஸம்ஹிதை முருகனே ‘பரப்ரம்ஹம்’ என உறுதியாகக் கூறுகிறது.

* கச்சியப்ப சிவாச்சாரியார், தம் கந்தபுராணத்தின் பல இடங்களில் முருகன் மும்மூர்த்தி வடிவினன் என்று குறிப்பிடுகிறார்.

* முருகனை கிருத்திகை நட்சத்திர தினத்தன்றும், செவ்வாய்க்கிழமைகளிலும் வழிபட்டு தீபம், மணி  சமர்ப்பித்தால் வாக்கு மேன்மை ஏற்படும் என்கிறது சிவபுராணம்.  

* தட்சிணாமூர்த்தி வடிவில் தான் சனத்குமாரருக்கு செய்த உபதேசங்களை அவர் முழுமையாகக் கற்றுக் கொண்டதால், ஈசனாக தான் அவரிடமிருந்து உபதேசம் பெற விரும்பினார்.  அவரைத் திருப்திப்படுத்தவே சனத்குமாரர் முருகனாகத் தோன்றி  உபதேசம் செய்தார் என்பார்கள்.

* திலக ஸ்வாமி வடிவினனாக முருகனை பூஜிப்பவர்கள் காரியசித்தி பெறுவர் என யாஞ்யவல்க்ய மகரிஷி கூறியருளியுள்ளார்.

* விசுவாமித்திரருடன் கானகம் சென்ற ராம-லட்சுமணரை ஈசனின் பின்னால் செல்லும் இரு முருகன்கள் போல் தோன்றினர் என்று தன் ராமாயணத்தில் விவரிக்கிறார் வால்மீகி முனிவர்.

* முருகப்பெருமானை உபாசிக்கும் அடியார்களுக்கு பயம், அழிவு, சத்ரு, வியாதி இவை அனைத்துமே அண்டாது.

* கம்பன் தன் ராமாயண யுத்த காண்டத்திலே இந்திரஜித்தை முருகனுக்கு நிகராகவே  போற்றிப் புகழ்கிறார்.

* ஆதித்ய ஹ்ருதய மகாமந்திரத்தில் அகத்தியர் ஆதித்யனை ‘ஸ்கந்த’ என்று முருகப்பெருமானோடு ஒப்பிடுகிறார்.

* விராடன் மனைவி ஸ்தேஷ்ணாவின் ஆணைப்படி கீசகனின் வீட்டிற்குச் சென்ற திரௌபதி தன்னை ஆபத்திலிருந்து காக்க ருத்ரன், அக்னி, பகன், விஷ்ணு, சூர்யன், ஸாவித்ரி, பிரம்மா இவர்களோடு ஸ்கந்தனையும் துதித்தாள்.

* மகாபாரதத்தின் வனபர்வா, சல்யபர்வா, அனுசாசனபர்வா ஆகிய மூன்று பகுதிகளில் ஸ்கந்தனுடைய கதைகள் கூறப்பட்டுள்ளன.

* பகவத்கீதையில் கிருஷ்ணர் ‘ஸேனானீனாம் அஹம் ஸ்கந்த:’ என்று அருளியுள்ளார்.

* குமார தந்த்ரத்தில் முருகனுடைய மயிலுக்கும் காயத்ரி மந்திரம் அருளப்பட்டுள்ளது: ‘சுக்லாபாங்காய வித்மஹே பக்ஷிராஜாய தீமஹி தந்நோ: மயூர ப்ரசோதயாத்’ என்பதே அந்த மந்திரம்.

* சுப்ரமண்ய ப்ரதிஷ்டாவிதி நூலில் முருகனின் மற்றொரு வாகனமான யானை ஐராவத குலத்தில் உதித்தது, வெண்ணிறம், நான்கு தந்தங்கள் கொண்டது, மிகவும் பலமுள்ளது என விவரிக்கப்பட்டுள்ளது.

* முருகனின் வேலாயுதம் சக்தி மிக்கது. ‘வேலாயுதத்திற்கு மேலாயுதமில்லை’ என்ற பழமொழியே உள்ளது.

* ஈசனின் ஸர்வஞ்த்வம், திருப்தி, அனாதிபோதம், ஸ்வாதந்த்ரியம், அலுப்த சக்தி, அனந்த சக்தி போன்ற குணங்களே முருகனின் ஆறுமுகங்கள் என்கிறது கந்தபுராணம்.

* வடநாட்டில் முருகனை பிரம்மச்சாரியாகவே வழிபடுகின்றனர்.

* முருகப்பெருமானின் ஆறு முகங்களுக்கும் ஆறு ஸஹஸ்ரநாம அர்ச்சனை மந்திரங்கள் உண்டு.

* சிங்கப்பூர் டேங்க் ரோட்டில் உள்ள தண்டாயுதபாணி ஆலய முருகனுக்கு சீனர்கள் உட்பட பல்வேறு நாட்டு மக்கள் பக்தர்களாகத் திகழ்கின்றனர்.

* பினாங்கில் தண்ணீர்மலையானாக வலது தொடையில் மரகதம் பதித்தாற்போல் மச்சமுடன் தண்டபாணி அருள்கிறான். இக்கோயில் முழுவதும் பர்மா தேக்கு மரத்தால் அமைக்கப்பட்டுள்ளது.

* இலங்கை மட்டக்கிளப்பில் உகந்தைமலை முருகன் அருள்கிறான். இங்கே முருகனுக்கு முன் மயிலுக்குப் பதில் மூஞ்சுறு பிரதிஷ்டை செய்யப்படுள்ளது வித்தியாசமானது.

* யாழ்ப்பாணம் தேவபுரத்தில் கதிர்வேலாயுதசுவாமி திருவருள்புரிகிறார். இங்குள்ள உற்சவ விக்ரகங்கள் தமிழகத்தின் சுவாமிமலையில் செய்யப்பட்டவை.
 
* பன்னிரண்டு கரங்களோடு போர்த்தளபதி திருக்கோலத்தில், அதேசமயம் தம்பதி சமேதராக முருகப்பெருமானை தென்சேரிகிரி தலத்தில் தரிசிக்கலாம். இத்தலம் பல்லடம் - உடுமலைப்பேட்டை பாதையில் உள்ளது.

* பிரணவத்திற்குப் பொருள் தெரியாத நான்முகனை சிறையில் அடைத்த  ஐந்துமுக முருகப்பெருமானை ஓதிமலையில் தரிசிக்கலாம். கோவை மேட்டுப்பாளையம் அருகில் உள்ள இத்தலத்தில் நான்முகன் அடைபட்ட இரும்புச் சிறையும் உள்ளது.

* பக்தர்கள் கனவில் வந்து தன் ஆலயத்திலுள்ள கண்ணாடிப் பெட்டியில் ஏதேனும் பொருளை  வைக்கச் சொல்லி உத்தரவிடும் முருகனை காங்கேயத்தில் தரிசிக்கலாம். முருகன் உத்தரவுப்படை வைக்கப்பட்ட பொருள் சம்பந்தமாகவே அவ்வருட நிகழ்வுகள் நடப்பது அற்புதம். இத்தலத்தை சிவன்மலை என்றும் அழைக்கின்றனர்.

* கோவில்பட்டிக்கும் சங்கரன்கோவிலுக்கும் இடையே உள்ள கழுகுமலையில், வழக்கத்துக்கு மாறாக, இடப்புறம் திரும்பியுள்ள மயில் மீது ஆரோகணித்து வீற்றிருக்கிறார் முருகப் பெருமான்.

* கையில் கரும்பேந்தி அருளும் கந்தனை திருச்சிக்கு அருகே உள்ள செட்டிகுளத்தில் காணலாம்.

* குறமகளான வள்ளியம்மையுடன் முருகப்பெருமான் கருவறையில் வீற்றிருக்கும் அற்புத தரிசனத்தை குமரி மாவட்டம், தக்கலையிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள குமார கோயிலில் தரிசிக்கலாம்.

* மாமல்லபுரம்-கல்பாக்கம் பாதையில் உள்ள திருப்போரூரில் என்றும் வற்றாத திருக்குளத்துடன் கூடிய ஆலயத்தில் பனைமரத்தால் ஆன சுயம்பு மூர்த்தியான முருகப்பெருமானை தரிசிக்கலாம். சிதம்பரசுவாமிகளால் நிறுவப்பட்ட சக்கரம் இத்தலத்தில், முருகப்பெருமானுக்குச் சமமாக போற்றப்படுகிறது.

* தென்காசியிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள திருமலைக்கேணி குமாரசுவாமி ஆலயத்தில் வஜ்ராயுதம் ஏந்திய அழகே உருவான முருகனை 645 படிக்கட்டுகள் கொண்ட மலையில் ஏறி தரிசிக்கலாம்.

* திருச்சி-மதுரை வழித்தடத்தில் திருச்சியிலிருந்து 26 கி.மீ தொலைவிலுள்ள விராலி மலையில் ஆறுமுகங்களுடன் மயில் மீது அமர்ந்தபடி முருகப்பெருமான் அருள்கிறார். அவருக்கு இரு புறமும் வள்ளியம்மையும், தெய்வானையும் நின்றிருக்கிறார்கள்.

* அருணகிரிநாதருக்கு திருப்புகழைப் பாடும் திறமையை அருளிய முருகப்பெருமானை திருச்சிக்கு அருகே உள்ள வயலூர் திருத்தலத்தில் கண்டு மகிழலாம்.

* திருவாரூரிலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ள எண்கண் தலத்தில், எட்டுக்குடி மற்றும் சிக்கல் தலங்களில் உள்ள அதே தோற்றத்தில் முருகப்பெருமான் காட்சியளிக்கிறார்.

* காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்திற்கும், காமாட்சி அம்மன் ஆலயத்திற்கும் இடையில் சோமாஸ்கந்த அமைப்பில் குமரக்கோட்டம் ஆலயத்தில் கச்சியப்பருக்கு கந்தபுராணத்தை இயற்ற, திகடச் சக்கர எனும் முதல் அடி எடுத்துக் கொடுத்த வேலவனை தரிசிக்கலாம்.

* நாகை, தில்லையாடிக்கருகில் உள்ள திருவிடைக்கழி தலத்தில் குஹ சண்டிகேஸ்வரரோடு அருள்கிறார் முருகப்பெருமான். இது அபூர்வமான அமைப்பு.

* கோவைக்கு அருகில் உள்ள அநுவாவி திருத்தலத்தில் சஞ்சீவிமலையைத் தூக்கிச் சென்ற அனுமனின் தாகத்தை தீர்த்த அழகு முருகனை தரிசிக்கலாம்.

* கோவை கிணத்துக்கடவு எனும் கனககிரியில் உள்ள பொன்மலையில் முருகப்பெருமான் கோயில் கொண்டிருக்கிறார். இவரை பார்வை இழந்த அடியவர் ஒருவர் விழிக்குத்துணை உன் மென்மலர்ப்பாதங்கள் என திடமாக நம்ப, அதிசயமாக அந்த அடியவர்க்கு பார்வையை மீட்டுத் தந்தவர் இந்த முருகன்.

* கல்லால் செதுக்கப்பட்ட வேலை தன் கரத்தில் ஏந்தி செங்கோடன், செங்கோட்டையன் எனும் திருப்பெயர்களில் முருகப்பெருமானை சேலத்திலிருந்து 28 கி.மீ தொலைவில் உள்ள திருச்செங்கோடு தலத்தில் காட்சி தருகிறார்.

* சென்னை பாரிமுனையில் கந்த கோட்டத்தில் செல்வமுத்துக்குமார சுவாமியாக தரிசனம் தரும் முருகன், வள்ளலாரால் மகிழ்ந்து வழிபடப்பட்டவர்.

* திருநெல்வேலியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது இலஞ்சி. தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் தானே மும்மூர்த்திகளாகவும் இருந்து செயல்படுவதை உணர்த்திய முருகப்பெருமானை வரதராஜபெருமாள் என்ற பெயரில் தரிசிக்கலாம்.

* தென்காசிக்கு 6 கி.மீ. தொலைவில் உள்ள ஆய்க்குடியில் மழலைவரம் வேண்டுவோர்க்கு படிப்பாயசம் பிரார்த்தனை மூலம் அருளும் குழந்தை வடிவ குமரனை கண்குளிர காணலாம்.

* சென்னை திருமயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தின் பிராகாரத்தில் சிங்காரவேலவனாக தரிசிக்கலாம்.

தொகுப்பு: ஜெயலட்சுமி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • erode-senthilbalaji-8

  சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!

 • athisayangal

  நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்

 • perunad

  பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!

 • turkeydeath11

  துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!

 • lantern-festival-china

  உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்