SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆனந்தமாய் என் அறிவாய்

2022-11-28@ 15:52:48

நன்றி குங்குமம் ஆன்மிகம்

அபிராமி அந்தாதி சக்தி தத்துவம்


(சென்ற இதழின் தொடர்ச்சி)

அனுபவம்உமையம்மையை அறியாமல் இருக்கிறோம், அதனால், துன்புறுகிறோம். அந்த துன்பத்தை போக்கிக்கொள்ள பூஜையையும், ஜபத்தையும் செய்வதனால் பாபநாசமும் கிடைக்கும். ஜபம் செய்வதினால் அறியாமை நீங்குகிறது, பூஜையினால் ஞானம்  அடையப்படுகிறது. அப்போது, உமையம்மையானவள் சாதகனுக்கு அனுபவமாகிறாள். இவை அனைத்தையும் ‘‘ஆறும்” என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்.

தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்சாக்த தத்துவத்தை பொறுத்தவரை, உமையம்மையே முழுமுதற் பொருள் சிவன் (சைவம்) விஷ்ணு (வைணவம்) கணபதி (காணாபத்யம்) முருகன் (கௌமாரம்) சூரியன் (சௌரம்) பைரவம் (காபாலிகம்) என்று ஆறு சமயங்கள் அபிராமிபட்டர் காலத்தில் அவர் வாழ்ந்த பகுதியில் பரவியிருந்தது.

அவ்வச்சமயத்தில் உள்ளோர் அனைவரையும் அழைத்து இந்த அறுவகை சமயத்திற்கும் தலைவியாக இருப்பவள் உமையம்மையே என்கிறார் பட்டர். அதைக் காரண காரியங்களுடன் நிறுவுகிறார்.

‘தாரமர் கொன்றையும் செண்பக
மாலையும் சாத்தும் தில்லை
ஊரார் தம்பாகத்து உமை மைந்தனே’ (காப்பு)


கணபதி என்கின்ற காணாபத்திய கடவுளுக்கு தாயாகியவள் உமையம்மையே. இங்கு உமையம்மையே முதன்மைக் கடவுள் என்கிறார். ஆறுமுகம் தாங்கிய முருகப்பெருமானை வணங்குகிற கௌமார பக்தர்களைப் பார்த்து;

‘முன்னான்கு இருமூன்று எனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாய தன்றோ’ (65)


என்று கூறி ஆறுமுகச் செவ்வேலின் தாய் உமையம்மையே என்று நிறுவுகிறார்.

பட்டர் காலத்தில், தழைத்தோங்கிய பைரவர் வழிபாட்டை செய்பவர்களை நோக்கி ‘யாமம் வயிரவர் ஏத்தும்பொழுது எமக்கென்று வைத்த சேமம் திருவடி’ (73) என்று கூறுவதனால், வயிரவரே உமையம்மையை வழிபடுவதை கொண்டே அங்கும் உமையம்மையே முதன்மைக் கடவுள் என்று கூறி நிறுவுகிறார். காலமே கடவுள், காலத்திற்கு காரணமான சூரியனே முதல்வன் என்று வணங்கிய ஜோதிட மற்றும் சௌர வழிபாட்டாளர்களை நோக்கி, அந்த சூரியனே உமையம்மையினிடத்து சரண் புகுந்தான் என்பதை;

‘வந்தே சரணம் புகும் அடியார்க்கு... அலர்
கதிர் ஞாயிறும் திங்களுமே’

(34) என்பதாகக் குறிப்பிடுகிறார்.

விஷ்ணுவையே முழுமுதற் பொருளாக வழிபடும் வைணவர்களுக்கு, அந்த விஷ்ணுவே எம் உமையம்மை என்பதையே ‘தரங்கக் கடலுள் வெங்கட் பணி அணை மேல் துயில் கூறும் விழுப்பொருளே’ (35) என்று குறிப்பிடுகிறார். இவை அனைத்திற்கும் மேலான சிவனை தன்னிகர் அற்ற கடவுளாகக் கருதினாலும், அவன் அனாதி என்பதால் அவனுக்கு எம் உமையம்மை மனைவியாக இருந்து, தாயின் நிலைக்கும் உயர்ந்ததால் உமையம்மையே ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவி என்பதை;

‘தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே அவர்தமக் கன்னையும் ஆயினள், ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம்
துவளேன் இனியொரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே’ (44)


என்பதனால் ஆறு சமயங்களுக்கும் தலைவியாக உமையம்மை இருப்பதையே ‘‘தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்” என்கிறார் பட்டர்.

வேறும் சமயம் உண்டு என்று கொண்டாடிய

மக்கள் சில தெய்வங்களை குறுகிய காலம் வணங்கி, பலன் எதுவும் கிடைக்கவில்லை என்று தாங்களாகவே முடிவு செய்து, அக்கம் பக்கத்தில் உள்ளோர்களின் அனுபவத்தை கேட்டும், பார்த்தும், தான் வணங்குகிற கடவுளை விடுத்து, வேறு ஒரு தெய்வத்தை குறித்து வணங்கும் முயற்சியில் ஈடுபடுவதையே “வேறும் சமயம் உண்டு என்று” குறிப்பிடுகிறார்.

கொண்டாடிய என்பதனால் வணங்கும் முறைகளில் சிறிது மாற்றத்தைச் செய்வதையும், எத்தனை பேர் வணங்கி பயன்பெற்றார்கள் என்ற எண்ணிக்கையும் அடிப்படையில், தனக்கு அனுபவம் இல்லாத நிலையில், பிறருடைய அனுபவத்தையே சான்றாகக் கொண்டும், பிற தெய்வத்தை வழிபட முயற்சிக்கின்றனர்.பூசனை, பலி முதலியன செய்வதினாலும், தெய்வம் ஏறி குறி சொல்லுவதனாலும், நேரடியாக தன் குறைகளை கேட்க முடியும் என்பதனாலும், தீசட்டி சுமந்தல், பச்சை ரத்தம் குடித்தல் போன்ற அதிசயங்களை செய்வதனாலும், நினைத்ததை கூறுதல் போன்ற சில சித்திகளை பெற்ற அடியார்களையும், அவர்கள் கூறும் வழியை முதன்மையாக கருதுகின்றனர்.

மேலும், காலத்தின் அடிப்படையில் இயல்பாக தோன்றும் நிகழ்வு சிலதுக்கம், சிலஇழப்பு, நிறைவேறா ஆசை, தேவைகளின் மிகுதி, அவசரம் முதலியனவும், தன் வழிபாட்டில் மட்டும் நம்பிக்கை அற்ற தன்மை, குறைவான சமய அறிவும், புத்தகத்தை குருவின்றி தானே கற்று அதன்வழிப் பெற்ற சிற்றறிவின் காரணமாகவும், தொன்று தொட்டு வருகின்ற சமய நெறிகளை விட்டு, புதிதாக வெகுவாக பரவுகிற நெறிகளை பின்பற்றி, வேறு தெய்வத்தை நாடுகின்றார் களையே அபிராமி பட்டர். “கொண்டாடிய” என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார்.

வீணருக்கே

பொதுவாக அபிராமி பட்டர், வழிபாட்டிற்கு தகுதியற்றவர்களாக சிலரை மறைமுகமாக வரையறுக்கிறார். அவர்களையே வீணர்கள் என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார். வீணர்கள் என்றால் பயனற்ற காரியங்களை செய்கிறவர்கள் என்று பொருள்.

‘எனது உனது என்று இருப்பார் சிலர்’ (81)
‘கயவர் தம்மோடு என்ன கூட்டு இனியே’
(79)
‘வீணே பலி கவர் தெய்வங்கள் பாற்சென்று’
(64)

‘கல்லாமை கற்ற கயவர் தம்பால்’ (54)
‘அருள் ஒன்று இலாத அசுரர்’ (51)
‘வெறுக்கும் தகைமைகள் செய்யினும்’ (46)
‘பாழ்நரகக் குழிக்கே அழுந்தும்’ (79)


என்ற சில தாழ்வான குணங்களை தன்னத்தே கொண்டவர்களை ‘‘வீணருக்கே” என்று, தன் சமய உயர்வு அறிந்திருந்தும் பிற வழி செல்வோரை பற்றி குறிப்பிடுகிறார். அபிராமி பட்டர், தெளிவான காரணங்களுடன் முன்னோர்களால் சொல்லப்பட்ட அனைத்தையும் எளிதில் அறிய, உணர, செயல்பட வழிவகுக்கும் சமய நெறிகளை செவ்வனே அறிந்திருந்தும், அதை விட்டு பிற சமய நெறிகளை சரிவர உணராமல் உலகியல் முறையில் சமயத்தை சிந்தித்து, தானே `இது தவறு’ என்று முடிவெடுத்து பிற தெய்வங்களை வணங்க முயல்கின்ற
வருடைய பண்பையே வீண் என்கிறார்.

இறைவியை சரியாக வணங்க தன்சமய உண்மைகளை தெளிவான குருவின் உபதேசத்துடன் பின்பற்றுபவர்களின் உயர்வை மறைமுகமாக குறிப்பிடுகிறார்.

அந்தமாக...

இப்பாடலிருந்து சமய வழியை பின்பற்றுபவர்கள், தன் சமய நெறிகளை நன்கு அறிந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். தன் சமயத்தை‌, தானே குறை கூறுவது பயனற்ற தன்மையை விளைவிக்கும், சமய உண்மைகளை அறிய அச்சமய நெறிகளையே பின்பற்ற வேண்டும் என்கிறார்.பிற சமயநெறிகளைக் கொண்டு, தன் சமய நெறிகளை அளவிடலாகாது என்ற சமய உண்மைகளை எப்படி ஆராய்ந்து அறிய வேண்டும் என்பதை இப்பாடலின் மூலம் `ஹேது’ (காரணங்கள்) முதலியவற்றைக் கொண்டு, சில சமயங்களை அறிய உதவுகிற பிரமாணங்களை (சான்றுகளை) விளக்குகிறார். அவ்வழியே அறிய வேண்டும் என்கின்றார். அவ்வழி நின்று இறையருள் பெற முயல்வோம்.

தொகுப்பு: முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • stalin-corp-31

  மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 • long-whale-newyork

  35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

 • pak-blast-30

  பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

 • china-spring-festival

  சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!

 • orange-tree-wishes-27

  ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்