SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காரிய வெற்றிக்கு இந்த 6 விஷயங்கள் முக்கியம்!

2022-11-28@ 14:56:24

ஒரு மனிதனுடைய வாழ்க்கையானது பணம், காசு, பதவி, அழகு இப்படி பலபல விஷயங்களால் அமைக்கப்பட்டிருந்தாலும், ஒட்டுமொத்தமாக அவன் காலக்கணக்கினால் மட்டுமே குறிப்பிடப்படுகின்றான். அசோகரின் காலம் ஒரு காலக் கணக்கு. அரிச்சந்திரன் காலம் ஒரு காலக் கணக்கு. ஒரு மனிதனுடைய காலம் என்பது இந்த உலகத்தோடு தொடர்பு உடையது.

மண்ணில் விழுந்து, மூச்சு இழுத்த நேரத்தை (In) நாம் பிறப்பு என்று எடுத்துக் கொண்டால், அவன் இந்த உலகத்திலே வாழ்ந்து, மூச்சை விட்ட நேரத்தை (Out) இறப்பு என்று எடுத்துக்கொள்ளலாம். வாழ்நாள் (Life Time) என்பது இந்த இரண்டிற்குமான இடைக்காலம்தான். கபீர்தாசர் சொல்வார்; ஒரு மனிதனின் ஆயுள். ‘‘போன மூச்சுக்கும் வந்த மூச்சுக்குமான காலம்தான்” இந்தக் காலக்கணக்கின் அடிப்படைதான் நேர நிர்ணயம்.

எதற்கும் “ஒரு நேரம் காலம் உண்டு” என்று சொல்வார்கள் அல்லவா? இந்த கால நிர்ணய நுட்பத்தைத் தெரிந்து கொண்டு செயல்பட்டால் வெற்றிதான். ஒருவருடைய பிறந்த ஜாதகத்தின் பலா பலன்களை மாற்ற முடியாது. ஆனால், ஒரு செயலைச் செய்யத் தொடங்கும் நேரத்தை, நிர்ணயித்துக் கொள்ளுதல் நம் கையில்தான் இருக்கிறது.

சரியான நேரத்தை நிர்ணயித்து காரியத்தைத்  தொடங்கிவிட்டால், காரியம் வெற்றி பெறும். நன்மை தரும். இதை நமது முன்னோர்கள் அனுபவத்தில் உணர்ந்து, கால நிர்ணயக் கணிதத்தை வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள். காளிதாசனின் உத்தரகாலாம்ருதம் ஆரம்பித்து, பல நூல்கள் இந்த முகூர்த்த நிர்ணய விதிகளை முறையாக வகுத்துக் கொடுத்திருக்கின்றனர்.
 
அப்படிச் சொல்லும் நூல்களில் சில நூல்கள்:

காலப்பிரகாசிகை, காலாமிர்தம், காலவிதானம், உத்தரகாலாம்ருதம், முகூர்த்த சிந்தாமணி, முகூர்த்த தீபிகா இன்னும் இப்படி பல நூல்கள் இருக்கின்றன. விதிப்படிதான் ஒரு செயல் நடைபெறும் என்றாலும், இந்த நேரத்தில் செயலைத் தொடங்கிச் செய்தால், அது ஒரு விதி விலக்காக அமைந்து, விதி தோஷத்தைக் குறைத்து அல்லது விலக்கி, நன்மைகளைச் செய்யும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை.

துல்லியமாகச் சொல்லப்போனால் ஒரு காலத்தில், இந்த நேர நிர்ணய விஷயமே, ஜோதிட சாஸ்திரத்தின் பிரதானமாக இருந்தது. வேத அங்கங்களில் ஜோதிடம் என்பது கால விதான சாஸ்திரம்தான். யாகமோ, ஹோமமோ, பூஜையோ, விரதமோ, வழிபாடோ காலத்தை அனுசரிப்பதுதான். பொதுவாக ஒரு செயலைத் தொடங்கும்போது, சங்கல்ப மந்திரம் சொல்வார்கள். அதில் மிக முக்கியமான இந்த நான்கு வரி ஸ்லோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம்.

ததேவ லக்னம் ஸூதினம் ததேவ
தாராபலம் சந்திரபலம் ததேவ
வித்யா பலம் தெய்வபலம் ததேவ
லக்ஷ்மீ பதேங்கிரி யுக்மம் ஸ்மாரமி

 
ஒரு செயல் நன்மையாக நிறைவேற வேண்டுமானால் அதற்குத் தேவை

1.சரியான லக்னம், 2.சரியான நாள், 3.தாராபலம், 4.சந்திரபலம் 5.வித்யாபலம், 6.தெய்வபலம்.

இவை அத்தனையும் கிடைக்க லட்சுமி நாதனின் இரண்டு திருவடிகள் துணை புரிய வேண்டும் என்பது இந்த மந்திரத்தின் பொருள். “நாள் செய்யும் வேலையை ஆள் செய்ய மாட்டார்கள்” என்று ஒரு பழமொழி உண்டு. முகூர்த்த காலத்தை நிர்ணயிக்கும்போது, யோகபலமும் கரணபலமும் முக்கியம். சுபாப்யாம், ஸூபதிதௌ என்று தொடங்கும் மந்திரத்தில், சுபகரண, சுபயோக, விஷ்ணுகரண, விஷ்ணுயோக, ஏவங்குண, விசேஷண, விசிஷ்டாயாம் என்று நன்மையான காலத்தைப் பற்றி சொல்லிக் கொண்டே போவார்கள்.

கால நிர்ணயம் குறித்து மங்கலகரமான வார்த்தைகள் காதில் விழ வேண்டும். மங்கலவார்த்தைகளும் (ஸ்வஸ்தி ஸ்லோகங்கள்) மங்கல ஓசைகளும் மட்டும் காதில் விழவேண்டும். அதற்காகத்தான் மங்கல காரியங்களில் வேறு அமங்கல ஓசைகள் காதில் விழாத வண்ணம் மங்கல வாத்தியம்  இசைக் கிறார்கள். இந்த மங்கல ஓசை (ஸ்லோகங்கள்) ஒரு செயலைத் தொடங்கும் போது, கால தோஷங்களைக் கண்டித்து
தூய்மைப்படுத்தும்.

ஒரு செயலின் கால நிர்ணயத்தைத் தொடங்கும்போது முதலில் மாத நிர்ணயம், பிறகு கிழமை (நாள்) நிர்ணயம், பிறகு லக்கின நிர்ணயம் என்று நிதானமாக ஆராய்ந்து செய்ய வேண்டும். நம் செயல்கள் வெவ்வேறானவை. திருமணம், சாந்திமுகூர்த்தம், பும்ஸவனம், சீமந்தம், கிரகப்பிரவேசம், பெயர் சூட்டுதல், ஹோமங்கள் செய்தல் என பல காரியங்களை நாம் செய்கின்றோம். காலண்டரில் கொடுக்கப்பட்டுள்ள முகூர்த்தநாளை காது குத்துதல் ஆரம்பித்து, எல்லாவற்றுக்கும் நாம் பயன்படுத்துகின்றோம். அது சரியல்ல. எல்லா ஜுரங்களுக்கும், நோய்களுக்கும் பாராசிட்டமால் மாத்திரை சாப்பிடுவது போல.

ஒவ்வொரு செயல்களுக்குமான கால நிர்ணயம் வேறு வேறு என்பது பலருக்கும் புரிவதில்லை. ஜாதகப் பலன்களை துல்லியமாகச் சொல்பவர்கள்கூட, நேர நிர்ணய விஷயத்தில் கோட்டை விட்டுவிடுகிறார்கள். காரணம் அது அவ்வளவு எளிதான விஷயமல்ல. இன்னொன்று, விதிகளைப் போலவே விதிவிலக்குகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அடுத்து பிராயசித்தம் குறித்தும் நாம் ஆராய வேண்டும். காலம் பார்த்து செய்ய வேண்டிய செயல்கள் காலம் பார்க்காமல் உடனடியாகச் செய்ய வேண்டிய செயல்கள் என்று இரண்டு விதம் இருக்கிறது. கட்டாயமாக, தாமதமின்றி, உடனடியாகச் செய்யவேண்டிய செயல்களின் காலத்தை கருத்தில்கொண்டு பிராயச் சித்தம் எனும் பரிகார விஷயத்தைச்  சொல்லி வைத்தார்கள்.

இன்னொரு முக்கியமான விஷயம்.

எல்லா சுபதினங்களும், எல்லோருக்கும் பொருந்தாது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். ஆனால், காலண்டரில் குறிக்கப்பட்ட சுபதினத்தை, குறிப்பாகத் திருமணம் போன்ற வாழ்வில் ஒருமுறை நடக்க வேண்டிய விஷயங்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு, மண்டபம், ஞாயிற்றுக்கிழமை, லீவு நாள் போன்ற நம் வசதிகளை மட்டும் கவனத்தில் கொண்டு, நாள் குறித்துவிடுகிறார்கள்.

உதாரணமாக, ரிஷப லக்னக்காரர்களுக்கு தனுசு லக்னம் குறித்துக் கொடுத்தால், அது சஷ்டாஷ்டக தோஷத்தைத் தராதா? அதைப்போலவே தனுசுக்கு கடகமும், கடகத்திற்கு  கும்பமும் சஷ்டாஷ்டக தோஷம் தரும். அதுவும், கடகலக்கின சந்திரனுக்கும், கும்பலக்ன சனிக்கும் ஜன்ம விரோதம் அல்லவா. நேர, முகூர்த்த நிர்ணயம் என்பது நம் கையில் கொடுக்கப்பட்ட ஒரு நல்வாய்ப்பு. விதி என்கிற ஜாதக தோஷங்களுக்கு மதி என்ற மருந்துதான் சரியான முகூர்த்த நிர்ணயம். இதில் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயங்களை, நாம் தொடர்ந்து பார்ப்போம்.

தொகுப்பு: தேஜஸ்வி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • eartheyaa

  ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

 • kerala-fest-beauty-28

  அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

 • isreal-22

  இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

 • ADMK-edappadi-palanisamy

  அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

 • germanysstt1

  ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்