SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீத்தார் கடன் ஏன் செய்ய வேண்டும்?

2022-11-22@ 15:49:48

கேள்வி: நீத்தார் என்பவர் யார்?

பதில்: இந்த உலகத்தில் வாழ்ந்து, அடுத்தடுத்த சந்ததிகளை உருவாக்கி, மறைந்த நம் குடும்பத்து முன்னோர்கள்.

கேள்வி: இந்த வழிபாட்டின் அடிப்படை என்ன?

பதில்: நன்றிக்கடன்தான். நம்மைப் பெற்றோர், நம்மைப் பெற்றவர்களைப் பெற்றோர் என்ற சந்ததிகளின்  சங்கிலி நினைந்து போற்ற வேண்டும் அல்லவா? அதற்கான தினம்தான் நீத்தார் கடன் நிறைவேற்ற வேண்டிய தினம்.

கேள்வி:  ஆண்டுக்கு எத்தனை தினங்கள் நீத்தார் தினங்களாகச் சொல்லப்பட்டிருக்கின்றன?

பதில்: நாம் ஒவ்வொரு நாளுமே நம்மைப்  படைத்தவர்கள் பற்றியும், நம்மை இந்த அளவுக்கு வாழவைத்தவர்களைப் பற்றியும் நினைக்க வேண்டும். தினசரி வழிபாட்டில் ஒரு சில நிமிடங் களாவது நம்முடைய முன்னோர்களை நினைக் கின்ற முறை உண்டு. சந்தியாவந்தனம் செய்பவர்களுக்குமுன்னோர்களை நினைத்து அர்க்கியம் விடுகின்ற செயல் சொல்லப்பட்டிருக்கிறது. இது தவிர ஷன்னவதி சிரார்த்தங்கள் ஆண்டுக்கு 96 நாட்கள், அவர்களின் நினைவைப் போற்றும் வண்ணம் பெரியவர்கள் வரையறுத்து வைத்திருக்கிறார்கள்.

கேள்வி : அது என்ன 96 நாட்கள்?

பதில்: ஷன்னவதி சிரார்த்தங்கள் என்பார்கள். ஒரு வருடத்தில் 96 தடவை சிரார்த்தங்கள் ஹிரண்ய ரூபமாகச்  செய்து தர்ப்பணம் செய்ய வேண்டும். பன்னிரண்டு மாதங்களின் மாதப் பிறப்பு - 12,  அமாவாசை - 12, அஷ்டகை -12 , வ்யதீபாதம் - 13, வைத்ருதி -  13,மன்வாதி - 14, யுகாதி - 4, மஹாளயம் - 16.

கேள்வி: இவ்வளவும் முடியுமா?

பதில்: இத்தனை நாட்களையும் முறையாக அனுஷ்டிக்க முடியாதவர்களுக்கு 12 அமாவாசை தினங்கள் தர்ப்பணம் செய்ய வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை, அவர்கள் இறந்த மாதத்தில், இறந்த திதியில் சிரார்த்தம் அனுஷ்டிக்க வேண்டும். இதுதவிர, ஆண்டுக்கு ஒரு பருவம், அதாவது புரட்டாசி மாதம் வளர்பிறை
பிரதமையில் ஆரம்பித்து, அமாவாசை வரை (மகாளய அமாவாசை), முன்னோர்களை நினைத்து வழிபாடு நடத்தி நீர்க்கடன் செய்யவேண்டிய தினங்களாக அனுஷ்டிக்க வேண்டும்.

கேள்வி: அவர்கள் மறுபிறவி எடுத்திருக்க மாட்டார்களா? அப்புறம் இந்த  நீத்தார் வழிபாடு எதற்கு?அது அவர்களுக்கு எப்படி பயன் தரும்?

பதில்: இதில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன.

1.அவர்கள் மறுபிறவிகள் எடுத்தாலும், அல்லது முக்தியை அடைந்தாலும், அல்லது பித்ருலோகத்திலேயே இருக்கும் காலத்திலும், நம் பித்ரு பூஜைகள் ஏதோ ஒரு வகையில், பித்ரு தேவதைகளின் மூலம், அவர்களைச் சென்றடைகின்றன. மறுபிறவி பெற்றபின்னும் அது அவர்களுக்கு பயன்படுகிறது.

2. இந்த பூஜையின் பலன் அவர்களை சென்றடையவில்லை என்றாலும், அவர்களை நினைத்துச் செய்யும் நன்றி உணர்வால், நமக்கு நன்மையைத் தருகின்றன. நமது முன்னோர்களில் யார் யார் பிறவா நிலையை அடைந்துள்ளனர் என்பதை நாம் தெரிந்துகொள்ள முடியாததால், பித்ரு பூஜைகளைத் தொடர்ந்து நாம் செய்யவேண்டும் என ஆன்றோர்கள், ரிஷிகள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

நாம் செய்யும் எந்தப் பித்ரு பூஜையும் வீணாவதில்லை. அதனால் பித்ருக்கள் திருப்தியும், மன நிறைவும், மகிழ்ச்சியும் அடைகிறார்கள்.

அவர்கள் மனம் குளிர்ந்து நம்மை ஆசீர்வதிக்கும்போது, அந்த ஆசி நம்மை ஏராளமான கஷ்டங்களிலிருந்து காப்பாற்றிவிடுகிறது.

ஆதலால்தான், பித்ருபூஜைகளின் மகத்தான புண்ணிய பலன் அளவற்றது என் பதையும், எக்காரணத்தைக் கொண்டும் பித்ரு பூஜைகளை விட்டுவிடக்கூடாது என்று பெரியவர்கள் திருப்பித் திரும்பிச் சொல்கிறார்கள்.

கேள்வி: எங்கிருந்து இந்த பூஜைகள் தொடங்குகின்றன?

பதில்: நம் குடும்பத்தில் தந்தைவழி அல்லது தாய்வழியில் ஒருவர் வாழ்ந்து உயிரை விட்ட பிறகு அவருக்கு நீத்தார் என்று பெயர். நீத்தார்  என்பது தான் “பிதுரர்.”
நீத்தார் வழிபாடு “பிதுரர் பூஜை”. அவர்கள் உயிர் விட்ட திதி முக்கியமானது. அன்றிலிருந்தே அவர்களுக்கான கடமைகள் தொடங்குகின்றன.

கேள்வி: வடமொழி நூல்களில்தான் இவர்களைக் குறித்து பெருமையாகப் பேசுகின்றன என்கிறார்கள். பழந்தமிழ் இலக்கியத்தில் இப்படி நீத்தார் வழிபாடு செய்வது குறித்த தகவல்கள் இருக்கின்றதா?

பதில்: நம்முடைய தமிழகத்தில், தமிழ் மரபில், “நீத்தார் கடன்கள்” குறித்து மிக அற்புதமாகப் பேசப்பட்டிருக்கிறது. குறிப்பாக, ‘‘நடுகல் வழிபாடு” என்பது  நீத்தார் வழிபாட்டின் ஒரு அம்சம்தான். அதைப்போலவே, தங்கள் குடும்பத்தில் வாழ்ந்த, திருமணம் ஆகாத பெண்கள் சிலரை, அவர்கள் வாழ்வின் தகுதி கருதி, ‘‘குலதெய்வமாக” ஏற்றுக்கொண்டு கோயில் கட்டி, வழிபடும் வழிபாட்டு முறைகள் உண்டு.

இதில், வடமொழி, தென்மொழி, வட தேசம், தென் தேசம் என்றெல்லாம் வேறுபாடுகள் இல்லை. எட்டு திசைகளைக்  குறிக்கும் பொழுது, பிதுரர் திசையை தெற்கு திசையாகக்  குறிக்கிறார்கள். தமிழ் நூல்களும்  இதே செய்தியைக் கூறி, இவ்வுலகில் வாழ்ந்து, உயிர் நீத்தவர்கள், தென் பகுதியிலுள்ள உலகத்துக்குச் செல்கிறார்கள் என்ற குறிப்பைக்  கொடுத்திருக்கிறார்கள்.

கேள்வி: பிதுரர்களுக்கு தமிழ் இலக்கிய மரபில் என்ன பெயர்?

பதில்: தமிழிலக்கிய மரபு என்பது தமிழ் வாழ்வியல் பண்பாட்டு விழுமியங் களின் பதிவு அல்லவா! பிதுரர்களை, ‘‘தென்புலத்தார்” என்று அழகாக அழைக்கின்றார்கள்.

கேள்வி: பிதுரர்களுக்கு செய்ய வேண்டிய சடங்குகள் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது?

பதில்: முன்னோர்களின் வழிபாடு எத்தனை உயர்வானது என்பதை வள்ளுவப் பேராசான் மிக அழகான  குறட்பாவில் விளக்குகின்றார்.

“தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு
ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை”


என்பது குறள்.

இறந்த முன்னோர், வழிபடும் தெய்வம், விருந்து, சுற்றம், தன் குடும்பம் எனப்பட்ட ஐந்திடத்தும் அறநெறி வழுவாது காத்தல் இல்லறத்தானுக்குத் தலைமையான அறம் என்பது இக்குறளின் திரண்ட பொருள். இதில் தெய்வம் கூட அடுத்ததுதான். தென் புலத்தில் வாழும் முன்னோர்களுக்கு வழிபாடு செய்வதற்கு முதன்மை தருகிறார் வள்ளுவர்.

ஆகையினால், இந்த நீத்தார் கடன் என்பது பழந்தமிழர் வழக்கத்தில் இருந்து வந்த பழமையான வழியே ஆகும். அவர்களை வழிபட்டு அவர்களுடைய வாழ்த்துக்களைப் பெறுவதன் மூலம் தங்கள் குலத்துக்கு எல்லா நலன்களும் விளையும் என்பது தமிழர்களின் நம்பிக்கை.

“தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்”(புறநானூறு 9 பொருள்: தென்றி சைக்கண் வாழ்வோராகிய நுங்குடியில் இறந்தோர்க்குச் செய்தற்கரிய இறுதிச் சடங்குகளைப் பண்ணும்) என்ற சங்கச் செய்யுள் அடி ஒன்றில் “தென்புல வாழ்நர்” என்ற தொடர் இறந்தார் என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது.

இதன் மூலம்,

1. முன்னோர்களுக்கு நீத்தார் கடன் செய்வது அந்த சந்ததியில் உள்ள பிள்ளைகளுக்கு எத்தனை முக்கியம் என்பதும்,
2. அப்படி நீர்க்கடன்கள் செய்பவர்கள், அந்த குலத்து முன்னோரின் தாகம் தீர்த்துக்  காக்கின்றவர்கள் என்றும்,
3. பொன்னுக்கு நிகரானவர்கள் என்றும்,

பழந்தமிழர் கருதியதை, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள இந்தச் செய்தி காட்டுகின்றது.

எனவே “நீத்தார்கடன்” ஆற்ற வேண்டிய பெருமையைப்  புரிந்துகொண்டு முன்னோர்களுக்கு ஒவ்வொருவரும் நீர்க்கடன் செய்ய வேண்டும்.

தொகுப்பு: கோகுலகிருஷ்ணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • erode-dmk-votes-2

  அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!

 • scotland-bonfire-festival

  ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி

 • stalin-corp-31

  மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 • long-whale-newyork

  35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

 • pak-blast-30

  பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்