SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்ரீபால்பழக்காரி அம்மன்

2022-11-21@ 15:50:24

நம்ப ஊரு சாமிகள்

சாலிச்சந்தை - மதுரை

மதுரை மாவட்டம் பேரையூர் அடுத்துள்ளது சாலிச்சந்தை. இங்கு கோயில் கொண்டு அருள்பாலிக்கிறாள் ஸ்ரீபால்பழக்காரி அம்மன். விருதுநகரில் இருந்து மதுரை மாவட்டம் மங்கல்ரேவ் பகுதியில் வர்த்தகம் செய்ய வந்தவர் பெரியமுத்து. மங்கல்ரேவில் ஒரு யோகியின் தரிசனம் அவருக்கு கிடைத்தது. இருப்பினும் அவர் வழிபட்டு வந்த ஆதிபரமேஸ்வரியை மறக்கவில்லை. அனுதினமும் அம்பாளை நினைத்து பூஜித்த பின்னரே வியாபாரத்தை தொடங்குவார்.
அந்த காலத்தில், சாப்டூர் ஜமீன் கம்பள நாயக்கர்களில் ஒருவர் காமய நாயக்கர் என்ற பட்டமுடன் ஆட்சி செய்து வந்தார்.

அவரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிதான் மங்கல்ரேவ் கிராமம். பெரியமுத்து, வர்த்தக ரீதியாக அடிக்கடி வெளியூர் சென்று வந்தார். அப்போது அவரது தம்பி ஸ்ரீமாரிமுத்து குடும்பக் காரியங்களையும், வியாபாரம் மற்றும் விவசாயங்களையும் பார்த்து வந்தார். பெரியமுத்து, பேரையூர், சாலிச்சந்தை போன்ற ஊர்களில் நிலங்கள் வாங்க திட்டமிட்டிருந்தார். அதற்கு தூத்துக்குடியிலுள்ள மைக்கண் நாடார்குடி சென்று தனது குலதெய்வம் அணைஞ்ச பெருமாள் அய்யன் சுவாமியைத் தரிசித்து, உத்தரவு பெறும் நோக்கத்துடன், மாசி மாதம் திருச்செந்தூரில் உற்சவம் நடைபெறும் நாளில் புறப்பட்டுச் சென்றார்.

பெரியமுத்து சென்று மூன்றாவது நாள் அவரது தம்பி ஸ்ரீமாரிமுத்து, கடைசித் தம்பி ஸ்ரீராமநாதனுடன் மங்கல்ரேவுக்குப் பக்கத்தில் உள்ள நிலபுலன்களைப் பார்த்து வரச் சென்றார். ஊருக்குப் பக்கத்தில் ஒரு புறம் பருத்தியும், மற்றொரு புறம் சோளமும் பயிராகி இருந்தன. அப்போது மழை மேகம் சூழ்ந்திருந்தது. அந்நேரம் அவ்வழியாக வந்த சுமார் 9 வயது நிரம்பிய அந்தணர் குலத்து பாஷையில் பேசிய சிறுமி, இதற்கு மேல் இவ்வழியாக போக வேண்டாம். வந்த பாதையில் திரும்பிச் செல். உன் நன்மைக்காக சொல்கிறேன். என்று கூறிவிட்டு அதே இடத்தில் மயக்கமுற்றாள்.

அவள் மயக்கமுற்ற சில மணி நேரத்தில், அந்த இடத்திலிருந்து வடக்குப் பக்கம் இடி விழுந்து பத்துக்கும் மேற்பட்ட மரங்கள் கருகின. சிறுமி ரூபத்தில் ஆதிபரமேஸ் வரியே வந்து நம்மை காப்பாற்றி இருக்கிறாள் என்று எண்ணினர்.  மாரிமுத்துவும், அவரது தம்பி ராமநாதனும் சிறுமியை பார்த்தனர். மயங்கிய நிலையில் இருந்த அவள், காதில் காதோலை கருகமணி தரித்திருந்தாள். இடது கையில் சிவப்புக் கயிறு கட்டியிருந்தாள். ஸ்ரீமாரிமுத்து, அவளது முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிய வைத்தார்.

மயக்கம் தெளிந்த சிறுமியிடம் ‘‘அம்மா, சாதம் கொண்டு வரச் சொல்றேன், சாப்பிடுவேளா?’’ என்று கேட்டார். அதற்கு அந்த சிறுமி ‘‘சாதம் வேண்டாம், வாழைப்பழமும், பசும்பாலும் கொண்டுவாங்கோ சாப்பிடுகிறேன்’’ என்று கூறினாள். உடனே ராமநாதன், வீட்டிற்குச் சென்று தம்பி காளியப்பனுடன் பாலும் பழமும், பானகமும் கொண்டு வந்தார். சிறுமி, மறுபடியும் மயக்கமுற்றாள். ஸ்ரீமாரிமுத்து, சிறுமிக்கு பச்சைத் தண்ணீர் கொடுக்க மயக்கம் தெளிந்தாள்.
‘‘இனி என் உயிர் நிற்காது. எனக்கு இவ்வளவு உபகாரம் செய்த உங்கள் குலத்தைக் காக்கும் தெய்வமாக விளங்குவேன்.

நான் கேட்ட பாலும் பழமும் எனக்கு வைத்து பூஜித்து வாருங்கள். என்னுடைய அந்திமக் காலத்தில் கொடுத்த பச்சை ஜலத்தை உங்கள் வீட்டில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு கொடுத்து வாருங்கள். அதுவே அவர்களுக்கு சஞ்சீவியாக இருக்கும். இது விவரம் அனைத்தையும் உன் அண்ணன் பெரியமுத்துவின் கனவிலும் சொல்லுகிறேன்,’’ என்று சொல்லி அந்தச் சிறுமி தேகத்தை விடுவித்துக் கொண்டாள் (உயிர் நீத்தாள்).

ஊரார்கள் திரண்டு ஒற்றுமையாய் நின்று சிறுமியின் உடலை அடக்கம் செய்து பிடிமண் எடுத்துக் கொண்டார்கள். அதே நாள் இரவில், மைக்கண் நாடான்குடியில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த பெரியமுத்து கனவில் அணைஞ்ச பெருமான் அய்யன் சுவாமி தோன்றி, பிராமணச் சிறுமியையும் மற்றும் நிகழ்ந்தவைகளைக் காட்டி, ‘‘அவள் உன் குலத்தைக் காக்க வந்தவள்,’’ என்று கூறி அதற்கு ஆதாரமாக நமது முன்னோடி மகா காளன் (பாம்பு) வடிவமாகிய சங்கிலிக் கருப்பன் அணியும் சிவப்பு பவள அரை ஞாணை சிவப்புக் கயிறாகக் கையில் தரித்திருந்தையும் காண்பித்து மேலும், ‘‘நீ நினைத்தபடி பேரையூர் சாலிச்சந்தையிலும் இருந்து கொண்டு என்னையும் இவ்விடம் வந்து பூஜித்து அச்சிறுமியை பால்பழக்காரியாய் அங்கு பிரதிஷ்டை செய்து பூஜித்து வர உனக்கு சர்வ சித்தியும் அருளுவோம்’’ என்று கூறி மறைந்தார்.

இந்த உத்தரவை சிரமேற்கொண்டு பெரியமுத்து, மங்கல்ரேவுக்கு வந்து அங்கு நடந்தவைகளை கேட்டு ஆச்சரியமுற்றார். பின்பு பேரையூர் சாலிச்சந்தை பகுதியில் பிடிமண்ணை வைத்து பீடம் அமைத்து சிலை நிறுத்தி ` பால்பழக்காரி அம்மன்’ என்ற நாமத்தோடு அம்மனுக்குக் கோயில் எழுப்பி பூஜித்துவந்தனர்.
 
பாரம்பரியமாகப் பூஜித்து வந்தார்கள். சங்கிலிக் கருப்பனின், பவள அரைஞாணின் தோற்றமாக பிறக்கும் ஆண்களுக்கெல்லாம் சிவப்பு அரைஞாண் கயிறு கட்டுவதும், பிரசவித்த தாய்மார்களுக்கு பச்சைத் தண்ணீரையே கொடுப்பதும் வழக்கத்தில் இருந்துவருகின்றன. மதுரையில் இருந்து சுமார் 47 கி.மீ தொலைவிலுள்ளது பேரையூர். பேரையூரில் இருந்து சுமார் 3 கி.மீ. தூரத்திலுள்ளது சாலிச்சந்தை. இங்குதான் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறாள்
ஸ்ரீபால்பழக்காரிஅம்மன்.

தொகுப்பு: சு.இளங்கலைமாறன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • erode-dmk-votes-2

  அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!

 • scotland-bonfire-festival

  ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி

 • stalin-corp-31

  மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 • long-whale-newyork

  35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

 • pak-blast-30

  பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்