SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆனந்தமாய் என் அறிவாய்

2022-11-21@ 15:11:48

நன்றி குங்குமம் ஆன்மிகம்

அபிராமி அந்தாதி- சக்தி தத்துவம்  

தேறும்‌ படிசில ஏதுவும்‌ காட்டி, முன்‌ செல்கதிக்குக்‌
கூறும்‌ பொருள்‌, குன்றிற்‌ கொட்டும்‌ தறிகுறிக்கும்‌ சமயம்‌
ஆறும்‌ தலைவி இவளாய்‌ இருப்பது அறிந்திருந்தும்‌
வேறும்‌ சமயம்‌ உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே.
அந்தாதியின் பாடல் எண் 63

ஆதியாக

ஒரு சமயத்தைப் பற்றி நாம் அறிந்துகொள்ள, அதன் கொள்கை நூல்களை முதலில் படிக்க வேண்டும். அது கூறும் நெறிமுறைகளை பின்பற்றியே, சமயத்தைப் புரிந்துகொள்ள முயலவேண்டும். உலகியல் அறிவை கொண்டு, சமய உண்மைகளை அளவிடலாகாது. அதை அறிவதோடு நிறுத்தவோ, செயல்படாமல் புரிந்துகொள்ளவோ, அதில் கூறப்பட்டதற்கு மாறான அனுபவத்தை பெறுவதையோ, சமயம் ஒருகாலும் அனுமதிக்காது. இனி பாடலுக்குள் நுழைவோம்.

தேறும் படி

இச்சொல்லானது, மனதிலே தெளிவு தோன்றும் வகையில் கருத்துக்களை தொகுத்தும் வகுத்தும் உள்ளத்தில் பதியும்படியும், சுருக்கமாகவும் நினைவில் எப்பொழுதும் நிலைத்து நிற்கும்படியாகவும் விளக்கி நிரல்பட கூறுவதாகும். மனமானது, புலன்களோடு தொடர்பு கொண்டு புறவுலகை அடைந்து, அது அறிவிக்கும் வழி தன்னை உணர்ந்துகொண்டு தெளிவின்றி சுக - துக்க அனுபவங்களாக மாறிமாறி மயங்கும் பண்பை கொண்டது. இதையே பட்டர் ‘மருளே’ (36) என்ற சொல்லால் உணர்த்துகிறார். இதை அயதார்த்த சத்தியம் என்கிறது சாத்திரம். இதற்கு நேர்மாறான வகையில் ‘நின்னை உள்ளவண்ணம் பேயேன் அறியும் அறிவு தந்தாய்’ (61) அதாவது, உமையம்மையே தன்னை அறிவித்தாலன்றி அவளருளை தெளிவுற அறிய முடியாது. அவள் அறிவித்த சாஸ்திரங்களின் வழி அறிந்து உணர்ந்து அனுபவிக்க வேண்டும். அந்த அனுபவத்தின் வழி தோன்றும் தெளிவையே ‘‘தேறும் படி” என்கிறார். இதை ‘யதார்த்த சத்யம்’ என்கிறது சாத்திரம்.

அபிராமி பட்டரை பொறுத்தவரை வழிபடுவோர் கொண்டுள்ள கருத்தை குறிப்பிடாமல் உமையம்மை அருளினாலும், சாஸ்திர அனுபவத்தினாலும் தோன்றும் மனத்தெளிவையே ‘‘தேறும் படி”
என்கிறார்.

சில ஏதுவும் காட்டி

‘ஹேது’ என்ற வடமொழிச் சொல்லின் தமிழ் திரிபே ‘‘ஏதுவும்” என்பதாகும். தர்ம சாஸ்திரம் என்பது இறைவனை, ஆன்மாவை, அறிய முடியாத பொருட்களை நம் புலன்களுக்கு அப்பாற்பட்டதை, விளக்கிச் சொல்ல ஏற்பட்ட ஓர் அளவு நூலாகும். அது காரணகாரிய அடிப்படையில் மனம், வாக்கு, காயத்தால், புலன்களுக்கு எட்டும் வகையில் ஒரு பொருளை காண்பதாலும் (ப்ரத்யக்ஷம்) கருதுவதாலும் (அனுமானத்தாலும்) பொருத்தி சிந்திப்பதாலும் (உபமானத்தாலும்) காணாத ஒன்றைக் காட்சிப்படுத்தும் பண்புடையது. சாக்த சித்தாந்தத்தை செவ்வனே ப்ரத்யக்ஷ, அனுமான, சாப்த, அளவைகளைக் கொண்டு சாஸ்திர ப்ரமாணங்களால் உமையம்மையை, அவளின் இருப்பை, வணங்கினால் ஏற்படும் பயனை, சமயவிளக்கத்தைக் கூறுகின்ற முறையை ‘‘சில ஏதுவும்” என்கிறார்.

இந்த சொல்லை, உதாரணத்தைக் கொண்டே விளங்கிக்கொள்ள முடியும். அபிராமி என்ற உமையம்மையை மெய், வாய், கண், மூக்கு, செவிக்குப் புலப்படும் வகையில் உருவம் அமைத்து ஆலயத்தில் எழுந்தருள செய்துள்ளனர். தன்னை வணங்கும் பத்தர்களுக்காக, உமையம்மை தன் தனிக்குணத்தை நேரடியாக காண சில அதிசயங்களைச் செய்து காட்டி இருக்கிறாள் என்பதை பின்னாளில் செவி வழிச் செய்தியாக அறிந்து கொள்ள முடிகிறது. அதில், ஒரு சிலவற்றை குறிப்பிடுவது இச்சொல்லுக்கு விளக்கமாகும்.

அபிராமிபட்டரிடம் ஒருவர் உமையம்மை உண்கிறாளா? என்று கேட்டதற்கு, அவரிடம் பட்டர், கண்டிப்பாக என்றார். எப்படி என்று கேட்டதற்கு, பட்டர், ``இன்றிலிருந்து ஐந்து நாளைக்கு உமையம்மை உண்ணுவதால் பிரசாதம் உப்பற்றதாக இருக்கும்’’ என்றார். கேள்வி கேட்டவர், உப்பை அதிகமாக போட்டு நெய்வேத்தியம் செய்தார். ஐந்து நாளைக்கும் பிரசாதம் பெற்றவர்கள், ``என்ன சுவாமி பிரசாதத்தில் உப்பில்லை’’ என்று உப்பை அதிகமாக போட்டவரிடமே கேட்டுவிட்டு சென்றனர்.

இவ்வாறு உமையம்மையின் இருப்பை காட்டுவது ப்ரத்யக்ஷ ப்ரமாணமானமாகும். உப்பை அதிகமாக போட்டும், அது இறைவிக்கான நெய்வேத்தியத்தில் ஏறாமல் இருப்பது உமையம்மையின் அருளால்தான். அதுபோல், ஒருநாள் மழை அதிகமாக இருந்தது. மன்னர் இன்று வருவார் என்றார் பட்டர். அக்காலத்தில், மன்னர் வருவார் என்றால் முன்னரே அறிவிப்பு தரப்படும். அதிகாரிகள் வருவார்கள். அந்த அறிவிப்பு எதுவும் இல்லாமல் இருப்பதால், யாரும் அதை நம்பவில்லை. அவர் சொன்னது போலவே, மன்னர் வந்தார். இது போல், பட்டர் உமையம்மையின் அருளினால் வாழ்நாளில் நிறைய அதிசயங்களை செய்து காட்டியுள்ளார்.

இவற்றை காரணங்களாக கொண்டு, இறைவி இருக்கிறாள் என்பதை நம்புங்கள். அவள் ஒவ்வொரு நாளும் நம்மை கவனிக்கிறாள் என்பதை பிறருக்கு அதிசயங்களால் புலப்படுத்தியும்கூட, உலகியல் காரணங்களை சுட்டிக்காட்டி, இது எல்லாம் அம்மன் அருள் இல்லை என்று கூறுபவர்கள், அக்காலத்திலேயே இருந்திருக்கிறார்கள். இப்படி ஏற்றுக் கொள்ளாத பண்பு இருக்கிறது. உப்பு போட மறந்திருப்பார். ராஜா வருவது முன்னமே பட்டருக்கு தெரிந்திருக்கும் என்று உலகியல் சார்ந்து சிந்திப்போருக்கு காட்டவே, “சில ஏதுவும் காட்டி” என்ற வார்த்தையைச் சுட்டிக் காட்டுகிறார். நம்பிக்கை அற்றவருக்கு காரணகாரிய அடிப்படையிலும், நம்பிக்கை உள்ளவர்களுக்கு இறையருளால் என்பதையும் சூட்டவே “சில ஏதுவும் காட்டி” என்றார்.

முன் செல்கதிக்கு கூறும்

இச்சொல்லை புரிந்து கொள்வதற்கு முதலில் “கதி” என்ற சொல்லை புரிந்துகொள்ள வேண்டும். கதி என்பதற்கு மனிதர்கள் தங்களின் துக்கத்தைப் போக்கிக் கொள்வதற்கும், சுகத்தை அடைவதற்கும், குழப்பமான சூழலில் தெளிவான முடிவெடுப்பதற்கும் உதவும் வழி எதுவோ, அல்லது உதவுவது எதுவோ அதுவே ``கதி'' என்ற சொல்லால் குறிப்பிடுகின்றார். மேற்கண்ட வழியை தெளிவு செய்ய, பலர் பின்பற்றியதை அனுபவத்தில் அறிந்தவர்கள், கண்டவர்கள் ஒருவர் இருவர் அல்ல என்பதை நன்கு உறுதி செய்து கொண்டால், அந்த வழியையே தானும் பின்பற்ற முயல்வர். அப்படிப்பட்ட நம்பிக்கைக்குரிய பலபேர் பயனடைந்த வழியையே ‘‘முன் செல் கதி” என்றார்.

“கூறும்” என்ற சொல்லால் துன்பம், நீக்கி, இன்பத்தை அடைய தெளிவாக வழி வகுத்துக் கூறும் சாஸ்திரங்களையே குறிப்பிடுகிறார். அந்தாதியைப் பொறுத்த வரை, அனைவராலும் முக்காலத்திலும் நம்பத் தகுந்த வழியாக வழிபாட்டையே குறிப்பிடுகிறார். உமையம்மையே, முழுமுதற் பொருளாக கொண்டு வழிபடத்தக்கவள். அவளை வழிபடுவதனாலேயே துன்பம் நீங்கும், இன்பம் பெருகும், நன்மை வளரும் என்று சாக்த வழிபாட்டுச் சாஸ்திரங்களில் கூறிய நெறி முறைகளையே ‘‘முன் செல்கதிக்கு கூறும்” என குறிப்பிடுகின்றார்.

பொருள்

இப்பாடலை பொறுத்தவரை பொருள் என்ற சொல்லால் உமையம்மையையே குறிப்பிடுகின்றார். உதாரணமாய், சைவத்தை பொறுத்தவரை முப்பொருள் உண்மை என்பர். அதில் ‘‘பொருள்” என்பது பசு, பதி, பாசம் என்ற மூன்றையும் குறிப்பதாக உள்ளது. அதே வைணவத்தில் சித், அசித், சித்தசித், சாக்தத்தில் ‘ஏகமேவ அத்விதீயம்’ அது இரண்டற்றது என்று இறைவியையே குறிப்பிடுகின்றார். அதையே பொருள் என்று கூறுவர். பட்டர் உமையம்மையையே ‘பொருளே பொருள் முடிக்கும் போகமே’ (36) என்று கூறுவதால் நன்கு அறியலாம். அந்த வகையில், அனைத்து உயிர்களும் போகம் என்ற நன்மையான இன்பத்தை துய்க்கவே விரும்புகின்றன.

அந்த இன்பத்திற்கு காரணமான உலகப் பொருளாகவும், உள்ள மகிழ்ச்சியாகவும், பசி, தூக்கம் போன்ற உணர்வுக்கு காரணமாக உமையம்மையே இருக்கின்றாள். இதையே ‘ஊரும் முருகு சுவை ஒளி ஊறொலி ஒன்றுபட சேரும் தலைவி சிவகாம சுந்தரி’ (68) என்பதனாலும் ‘களிக்கும் களியே’ (23) என்பதனாலும், துன்பங்களை போக்குவதில் ‘தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே’ (நூற்பயன்) என்பதினால் அவளை வணங்குவோர்க்கு ஒரு தீங்கும் விளையாது என்பதை பலவகையிலும் உணர்த்துகிறார். உமையம்மையே அனைத்திற்கும் காரணம் என்றும், நமக்குச் சூட்டும் சாஸ்திர பொருளையே ‘‘பொருள்” என்றும் குறிப்பிடுகின்றார்.

குன்றிற் கொட்டும் தறி

அபிராமிபட்டர், தான் வாழும் காலத்தில் தன்னை சுற்றியிருந்த சில பொருட்களை, நினைவுகளை, மனதில் கொண்டு அதன் மூலம் உமையம்மையை பற்றிய உண்மையை விளக்கி கூறுவதற்கு முயன்றிருக்கிறார். அந்த வகையில், பழங்காலத்தில் அந்தணர் இல்லங்களில் மாட்டு கொட்டகையில் ஒரு மரத்துண்டை கூர்மையாக சீவி அதை பூமியில் ஆழ ஊன்றுவார்கள். அதில் மாடுகளை கட்டி வைப்பார்கள். அதை தஞ்சை தமிழில் தறி என்றும், முளைக் குச்சி என்றும் குறிப்பிடுவர்.

சமய உண்மைகளை கற்று, அதை பின்பற்றாமல், அதன் ஆசாரங்களை பழகாமல் இருப்போர்களுக்கு உபதேசம் செய்வது என்பது மரத்தால் ஆன கூர்மையான தறியை பூமியில் ஊன்றாமல் மலைமேல் ஊன்றினால் அந்த முயற்சியானது பயன் தராது. அதுபோல், சமய உண்மைகளை அறிந்தும் பின்பற்றாதவர்களுக்கு யாதொரு பயனும் விளையாது. மேலும், சமய உண்மைகளை அவர்களிடத்து உபதேசிப்பது என்பது உபதேசிக்கும் குருவுக்கும், துன்பம் விளைவிக்கும் என்பதை அறிவுறுத்துகிறார். அதையே ‘‘குன்றிற் கொட்டும் தறி” என்று அவர் காலத்துப் பழமொழியை பாட்டில் பதித்திருக்கிறார்.

குறிக்கும் சமயம்

“குறி” என்ற சொல்லுக்கு மதக்கொள்கை, இலக்கு என்று பெயர். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நால்வகை பயனையும் தரவல்லது எதுவோ, அதுவே குறி எனப்படும். அதையே குறிக்கோள் என்றும் குறிப்பிடுவர். எந்த ஒரு செயலும், முழுப் பயனை விளைவிப்பதற்கு முன்னர், மனதிலே சரியாக நிச்சயிக்கப்படும். அப்படி நிச்சயித்து செயலாக்கம் பெறாத நிலையில், மனதில் மட்டுமே உள்ள நிலையில், அதை குறி என்று குறிப்பிடுவர். இதையே ஆகமங்கள் சங்கல்பம் ‘தெளிந்த தீர்மானம்’ என்கிறது. பூஜை செய்வதற்கு முன் இதை குறிப்பிடுவார்கள்.
அந்த சங்கல்பத்தில் செயலை குறித்து காலம், இடம், செய்முறை, பயன், திட்டம், செய்பவன் செயலில் வரும் இடையூறு அதை நீக்கும் முறை என எல்லாவற்றையும் தெளிவாக வரையறுத்து குறிப்பிடுவர். அதையே “குறி” என்று குறிப்பிடுகிறார்.

அபிராமிபட்டர் அந்த சங்கல்பத்தில்தான் காலத்தை தவறாக குறிப்பிட்டார். அதுதான் அபிராமி அந்தாதிக்கு வித்தாக அமைந்தது. சாக்த தத்துவத்தை பொறுத்தவரை உமையம்மையை வழிபாடு செய்யும் முறை, காலம், செய்ய வேண்டிய இடம், செய்ய வேண்டிய முறை, செய்வதனால் ஏற்படும் பலன், செய்வதற்கு சொல்ல வேண்டிய மந்திரம், பூஜைக்கு தேவையான பொருள், இவைகளைப் பற்றி எல்லாம் விளக்கமாக குறிப்பிடுவது கல்பம் என்னும் வழிபாட்டுச் செயல்முறை விளக்கம். இதையே ‘‘குறிக்கும் சமயம்” என்ற சொல்லால் நமக்கு விளக்கிக் கூறினார்.

ஆறும்

சமயத்தை நிறுவ ஆறுவகை பண்பை பண்டையோர் பின்பற்றினர். அது பிரத்யட்சம், அனுமானம், அனுபவம் சாப்தம், சாதனம், சத்தியம். ‘‘ஆறும்” என்பதற்கு வழி என்றும் ஒரு பொருளுண்டு. இந்த ஆறின் வழியேதான் சமயம் உறுதி செய்யப்படுகிறது. அவற்றை ஒவ்வொன்றாய் காண்போம்.

பிரத்யட்சம்


புலன்களுக்கு புலப்படுத்திக் காட்டுவது பிரத்யட்சம் எனப்படும். கண்டு, கேட்டு, நுகர்ந்து, உற்று, சுவைத்து உண்மையை அனுபவிக்க, சாத்தியப்படுத்துகின்ற அளவையைக் குறிப்பிடுவர்.

அனுமானம்

பிரத்யட்சத்தில் தோன்றும் ஒரு பகுதியைக் கொண்டு தோன்றாத மறுபகுதியை உறுதி செய்வது அனுமானம் எனப்படும். ``லிங்கம் பராமர்ஷம்’’ என்னும் உறுதி செய்யப்படும் உண்மை அனுபவம் ஒரு பொருளின் சிறப்பான தன்மையைக்கொண்டு அப்பொருள் இருப்பதை உறுதிசெய்கிறது.

சாப்தம்

மூலாகமங்கள் என கூறப்படும் இருபத்தெட்டு ஆகமங்கள் மற்றும் வேதங்கள் மட்டுமே சாப்தப்பிரமாணம் எனப்படுகிறது. இந்த ஆகமங்களில் சொல்லப்பட்டிருக்கிற கருத்துக்கள் காரண காரிய ஆய்வின்றி சொன்னதை சொன்ன வண்ணமே ஏற்கிறது ஆதி சைவம். இதில் சொல்லப் பட்டிருப்பதை அனுபவச் சாத்தியப்படுத்தும் வல்லமை அந்த வேதாகமத்திற்கு உண்டு என்பதனால் இது தனித்து சிறக்கிறது.

சாதனம்

ஒவ்வொரு சமயமும், கருத்தாக்க கொள்கை, செயலாக்க கொள்கை என இரண்டு கொள்கையை பெற்றுள்ளது. செயலாக்கத்துக்கு உதவுவது என்பது சாக்தத்தை பொருத்தவரை ஜபம், பூஜை, இவை இரண்டு மட்டுமே.

சத்யம்

கருத்தாக்க கொள்கையே சத்யம் எனப்படுகிறது. உள்ளது ஒரே பொருள் அதுவே உமையம்மை. அதுவே அனைத்துமாய் இருக்கிறது. அதை அறியாவிடில் துன்பம் விளைகிறது. அறிந்தால் ஆனந்தம் வருகிறது. அறியாமையை, மாயை என்றும், அறிவதை ஞானம் என்றும் குறிப்பிடுவர். இதயே பட்டர் ‘ஆனந்தமாய் என் அறிவாய்’ (11) என்று குறிப்பிடுவதால் அறியலாம்.

தொகுப்பு: முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • stalin-corp-31

  மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 • long-whale-newyork

  35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

 • pak-blast-30

  பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

 • china-spring-festival

  சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!

 • orange-tree-wishes-27

  ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்