இந்த வார விசேஷங்கள்
2022-11-21@ 10:17:08

19-11-2022 - சனிக்கிழமை ரமா ஏகாதசி
ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. கார்த்திகை மாத தேய்பிறை ஏகாதசிக்கு ரமா ஏகாதசி என்று பெயர். முசுகுந்தன் என்ற அரசன் தன்னுடைய நாட்டில் ஏகாதசி விரதத்தை எல்லோருக்குமான விரதமாக மாற்றி கடைபிடிக்கும்படி நியமித்தார். ஏகாதசி அன்று ஆடு மாடுகளுக்கு கூட உணவளிப்பது இல்லை. அதுவும் விரதமிருந்து அடுத்த நாள் துவாதசி பாரணை அன்று தான் உண்ணும் என்கின்ற ஒரு சட்டத்தை ஏற்படுத்தியிருந்தார். முசுகுந்தன் மகள் சந்திரபாகா. சந்திரபாகாவை சோபன் என்கின்ற ஒருவனுக்கு மணம் செய்து கொடுத்தார். அவன்
உடல் லையில் பலவீனமானவன். உண்ணா நோன்பு குறித்து ஒரு நாளும் எண்ணாதவன்.
ஒருமுறை அவன் முசுகுந்தன் நாட்டிற்கு வந்தான். அந்த தினம் ஏகாதசி. அன்று அவனுக்கு எங்கும் உணவு கிடைக்கவில்லை. ஒருவேளை உணவு இல்லாவிட்டாலும் உயிரை விட்டுவிடும் பலவீனமான உடல்நிலையைப் பெற்றிருந்த சோபன் ஏகாதசி நாளில் நீரும் சோறும் கிடைக்காமல் தவித்து உயிர்நீத்தான். அவன் இறந்து போனாலும், ஏகாதசி நாளில் விரதம் இருந்து இறந்தவனுக்குரிய புண்ணிய உலகம் கிடைத்தது.
அவன் புண்ணிய உலகம் சென்று புண்ணியத்தின் பலனாக தேவபுரம் என்கின்ற நாட்டின் அரசனானான். ஒரு நாள் முசுகுந்தன் ஆண்ட நாட்டிலிருந்து சோமசர்மா என்கின்ற புரோகிதர் தேவபுரம் நாட்டுக்குச் சென்று அரசனைச் சந்தித்தார். அந்த அரசனின் பூர்வீக கதையை தன்னுடைய தவ வலிமையால் தெரிந்து கொண்டு ‘‘நீ சென்ற பிறவியில் தெரியாமலேயே ஒரே ஒருநாள் இருந்த ஏகாதசி விரதத்தால் இப்படிப்பட்ட புண்ணிய பதவியை அடைந்தாய்’’ என்று சொல்ல, அன்று முதல் அவன் முறையாக ஏகாதசி விரதத்தைக் கடைபிடித்தான்.
எல்லா மக்களும் கடைத்தேறும் படியான நிலையை தன்னுடைய நாட்டிலே ஏற்படுத்தினான். அந்த ஏகாதசி விரதம் ரமா ஏகாதசி விரதம். இன்று விரதம் இருந்து நாளை துவாதசியில் வாழை சம்பந்தப்பட்ட எந்த பொருட் களையும் சேர்த்துக் கொள்ளாமல் அகத்திக் கீரை, நெல்லிக் காய், சுண்டைக்காய் முதலிய காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தானம் செய்ய வேண்டும்.
20-11-2022 - ஞாயிறு ஆனாய நாயனார் குருபூஜை
நாயன்மார்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக தொண்டு புரிந்து சிவனுடைய அன்பையும் அருளையும் பெற்று நிறைவாக சிவபதம் அடைந்தவர்கள் அதில் ஆயர் குலத்தில் பிறந்தவர் ஆனாய நாயனார் ஒரு கொன்றை மரத்தை சிவனாகவே கருதி பூஜை செய்து தம்முடைய குழல்ஓசையால் சிவனை மகிழ்வித்து சிவ புண்ணியம் தேடியவர். பிறந்த ஊர் சோழநாட்டில் திருமங்கலம். அவருடைய குருபூஜை தினம் கார்த்திகை ஹஸ்தம் (இன்று).
21-11-2022 - திங்கட்கிழமை சோம பிரதோஷம்
சிவபெருமானுக்கு சோமன் என்கின்ற பெயர் உண்டு. சந்திரனை முடியில் சூடியவர் என்பதால் சந்திரசேகரன். திங்கட்கிழமை அன்று சிவன் ஆலயத்தை வலம் வந்து வணங்குதல் சிறப்பு. அன்றைய பிரதோஷத்திற்கு சோம பிரதோஷம் என்று பெயர். வறுமை நீங்கவும், நோய்கள் அகலவும், கடன் போன்ற கவலைகள் தீரவும் இன்றைய தினம் சிவாலயத்திற்குச் சென்று சிவதரிசனம் செய்து பிரகாரத்தை வலம் வருவது நன்று. ஜாதகத்தில் ஆறாம் இடமாகிய ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தின் தோஷங்களை நீக்கும் விரதம் இந்த விரதம். இந்த விரதத்தின் மூலமாக எதிரிகளை வெல்லலாம். எதிரிகள் இல்லாத நிலையை அடையலாம். ஆரோக்கியமான வாழ்வைப் பெறலாம்.
21-11-2002 - திங்கட்கிழமை யமதீபம்
கார்த்திகை தேய்பிறை பிரதோஷ நாளில் காலதேவனுக்கு யம தீபம் ஏற்றும் வழக்கமுண்டு. இதன் மூலமாக ஆயுள் தோஷம் நீங்கும். தீர்க்காயுள் கிடைக்கும். விபத்து போன்ற ஜாதக தோஷங்கள் நீங்கும். அன்றைய தினம் ஒரு அகல் விளக்கு கால தேவனுக்காக ஏற்ற வேண்டும்.இதை வீட்டிற்குள் ஏற்றக்கூடாது. நிலை வாசலுக்கு வெளியே உயரமான இடத்தில் நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது அந்த தீபம் எரிய வேண்டும்.
22-11-2022 - செவ்வாய் கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி
ஒரு பருவத்திற்கு 15 கலைகள். ஒவ்வொரு கலைக்கும் ஒரு பெயர் உண்டு. அதிலே 14-ஆவது கலை சதுர்த்தசி. சதுர்த்தசி என்பது சிவனுக்கு உரிய மாத சிவராத்திரி நாள். இந்த நாள்களில் சிவாலயங்களில் இரவு நேரங்களில் விசேஷமான பூஜைகள் நடைபெறும் அதே சதுர்த்தசி தினம் செவ்வாயோடு இணைந்தால் அங்காரக சதுர்த்தசி என்று அழைக்கப்படும்.
கிருஷ்ணபட்சம் எனப்படும் தேய்பிறை, செவ்வாய்க்கிழமையும் சதுர்த்தசி தினமும் இணைந்தால் கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி தினம் என்ற சிறப்பு உண்டு.
ஏதோ ஒரு பிறவியில் செய்த சாபங்களால் இப்பிறவியில் துன்பப்படும் மனிதர்களை மீட்டெடுப்பதற்கான அற்புதமான விரதம். செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உரிய நாளாகும். வீரபத்திரருக்கும் உரிய நாளாகும். புராணத்தில் தட்சண் யாகம் செய்யும்பொழுது தன்னுடைய மருமகனான சிவபெருமானை அழைக்காமல் அவமதித்து யாகம் செய்தார். அதனால் கோபமடைந்த சிவன் தட்சனின் யாகத்தைத் தடுக்கவும், தட்சனை அழிக்கவும், தன்னுடைய ஆவேசமான வீரபத்திரர் உருவத்தை ஏற்படுத்தி அனுப்பினார். அக்னி வீரபத்திரர் அங்கே சென்று தட்சனின் யாகத்தைத் தடுத்து தண்டனை அளித்தார்.
அப்பொழுது சுக்ராச்சாரியார் முதலியவர்கள் அவரைப் பிரார்த்தித்து அவருடைய ஆங்காரமாகிய கோபத்தை நீக்கும்படி வேண்ட, ஆங்காரம் நீங்கி அங்காரகன் ஆனார். அப்படியான தினம் சதுர்த்தசி தினம். இன்னொரு கதையும் கொண்டு. சிவனின் நெற்றிக் கண்ணில் உதித்த ஒரு ஜோதி குழந்தையாக மாறியது. செம்மையும் வீரமும் நிறைந்த அந்த குழந்தையை பூமிப் பிராட்டி எடுத்து வளர்த்ததால் செவ்வாய் என்று பெயர் பெற்றார். அவர் தவம்செய்து கிரக பதவியும் பெற்றார். பூமிகாரகன் என்ற காரகத்துவம் அவருக்கு வழங்கப்பட்டது.
ஜாதகத்தில் செவ்வாய் பலம். இருந்தால் தான் ஒருவருக்கு நிலபுலங்கள் கிடைக்கும். வீடு கட்ட முடியும் பெண்களுக்கு மாங்கல்ய காரகனாக செவ்வாய் விளங்குகின்றார். செவ்வாய் தோஷம் அதிகரித்தால் திருமணத் தடைகள் ஏற்படும். செவ்வாய் இரத்தம், வீரம், விபத்து முதலிய விஷயங்களுக்கும் காரணமாக இருக்கிறார். அவருடைய கோபத்தைத் தணிக்கவும், அருளைப் பெறவும் இந்த நாளில் வணங்குவது நல்லது. மிக முக்கியமாக குலதெய்வத்தை வணங்க வேண்டும். கடல், ஆற்றங்கரை முதலிய தலங்களில் யமதர்ப்பணம் செய்யும் வழக்கமும் உண்டு. ஆயுள் விருத்திக்காக சிறப்பு ஹோமமும் செய்வார்கள்.
22-11-2022 - செவ்வாய்யமதர்ப்பணம்
கார்த்திகை மாதம் தேய்பிறை சதுர்த்தசி அன்று கால தேவனை வணங்கி தர்ப்பணம் முதலிய பூஜைகளைச் செய்ய வேண்டும். ஆயுள் காரகனாகவும், நீதி தேவதையாகவும், சர்வபூத சாட்சியாகவும் விளங்கும் அவரை இன்றைய தினம் தர்ப்பண பூஜை செய்ய வேண்டும். எல்லோரும் இதை செய்யலாம். அமாவாசை தர்ப்பணம் வேறு. யமதர்ப்பணம் வேறு.
23-11-2022 - புதன்கிழமை சர்வ அமாவாசை
சந்திரன் நீசம் அடைந்து விருச்சிக ராசியில் சூரியனோடு இணையும் புனித நாள் அமாவாசை. இன்றைய தினம் முன்னோர்களை நினைத்து நீர்க்கடன் செய்வது ஏற்றது. நீத்தாரைக் காக்கும் விஷ்ணுவின் புதன்கிழமையில் குருவினுடைய விசாக நட்சத்திரத்தில் இந்த தினம் அமைந்திருக்கிறது. முறையாக நீர்க்கடன் செய்பவர்கள் செய்யலாம். அப்படி பழக்கம் இல்லாதவர்கள் குறைந்தபட்சம் தம்முடைய முன்னோர்களை நினைத்து மதியம் இலைபோட்டு பலவிதமான காய்கறிகளோடு உணவு படைத்து அதனை காகத்திற்கு வைத்துவிட்டு உண்ணலாம். பசு(கோ)தரிசனம் செய்து, பசுவுக்கு அகத்திக்கீரை அல்லது வாழைப் பழங்கள் முதலியவற்றை அளிக்கலாம்.
Tags:
This week's specialsமேலும் செய்திகள்
இந்த வார விசேஷங்கள்
இந்த வார விசேஷங்கள்
இந்த வார விசேஷங்கள்
இந்த வார விசேஷங்கள்
இந்த வார விசேஷங்கள்
இந்த வார விசேஷங்கள்
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!