SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கவலை எனும் மாயவலை!

2022-11-14@ 15:56:38

திசைகாட்டும் தெய்வீகம்! 23

திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்

மனிதர்கள் பலர் கவலை என்னும் மாயவலையைத் தனக்குத் தானே உருவாக்கிக் கொண்டு அதில் சிக்கித் தவிக்கிறார்கள்.

‘சந்ததம் பந்தத் தொடராலே
சஞ்சலம் துஞ்சித் திரியாதே!’


 - என்று திருப்புகழில் அருணகிரி நாதப் பெருமானும்.

‘நெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்கி
அஞ்சி உயிர் வாழ்தல் அறியாமை


 - என்று மகாகவி பாரதியாரும் மனித குலத்திற்கு அறிவுரை பகர்ந்தாலும் பலர் கவலைப் படுவதை ஒரு கலையாகவே வளர்த்து வருகிறார்கள். சங்கீதம், நடனம், ஓவியம் போன்றவற்றை கலை என்கிறோர். கலை என்றால் வளர்ச்சி என்று பொருள். இசையும், நாட்டியமும், சித்திரமும் நாளும் நன்கு வளர வேண்டும். எனவே கலை என அவற்றைப் பெயரிட்டுச் சிறப்பிக்கின்றது நம் செம்மொழி.

தேவையற்ற மனக்குழப்பத்தை ஏற்படுத்தும் தீராத வியாதியே தொடர்ந்து ஒன்றைப் பற்றிச் சிந்தித்து அச்செயல் நடைபெறுமா, நடைபெறாதா, இடையில் ஏதாவது தடங்கல் ஏற்படுமா? நமக்கு வேண்டாதவர்கள் தடை செய்து விடுவார்களா என விதவிதமான பயங்களை ஏற்படுத்தும் ‘கவலை’ என்னும் கொடிய நோயைப் பலர் தாங்களாகவே தொடர்ந்து வளர்த்து வருகிறார்கள்.

அதனால் தான் பாரதியார் கவலைப் பயிருக்குப் ஒப்பிடுகிறார். தேவையற்ற இந்த விவசாயத்தால் தான் பலர் உடலும் உள்ளமும். குன்றி பலவீனம் உடையவர்களாகக் காணப்படுகிறார்கள். வெளியூருக்குப் பயணம் புறப்பட்டு விட்டார் ஒருவர். தான் செல்ல வேண்டிய ஊர் வரும் வரை ரயில் பெட்டியில் காற்று வாங்கிக் கொண்டோ, புத்தகம் படித்துக் கொண்டோ அமைதியாகச் சென்றால் தானே நல்லது.

ஆனால் வீணாக எதையோ மனதில் நினைத்துக் கொண்டு விரைகின்ற ரயில் பெட்டிக்குள்ளேயே நிலை கொள்ளாமல் அங்கும் இங்கும் அலைவதினால் என்ன நடக்கும்? போய்ச் சேரவேண்டிய ஊர் சீக்கிரம் வந்து விடுமா? அல்லது ரயில் பாதை மாறி பயணிக்குமா! அவரின் பாதங்கள் தானே பாதிக்கப்படும்! கவலை என்பது இதைப் போன்றது தான். கவலையால் எவ்விதப் பயனும் எவருக்கும் எப்போதும் ஏற்படாது.

கொன்றழிக்கும் கவலை எனும்
குழியில் வீழ்ந்து குமையாதீர்!


என்று புத்திமதி புகட்டும் மகாகவி பாரதியார் மேலும் ஒன்றைச் சொல்கிறார்.

கருதிக் கருதிக் கவலைப்படுவார்
கவலைக் கடலை கடியும் வடிவேல்


என்று தெய்வத்தைச் சரண்புகுவதே நிம்மதியை நம்மவர்க்கு வழங்கும் என்று குறிப்பிடுகின்றார். திருவள்ளுவர் 133 அதிகாரங்களில் 1330 அருங்குறட்பாக்கள் அளித்துள்ளார். அக்குறள் நூலில் ‘கவலை’ என்ற சொல்லை ஒரே ஒரு குறளில் தான் பயன்படுத்துகிறார். திருக்குறள் புத்தகம் முழுவதும் அலசி ஆராய்ந்து பார்த்தாலும் வேறு இடங்களில் கவலை என்ற பதம் காணப்படவில்லை. காரணம் எங்கே மனிதன் தன் கவலையை எடுத்துக் கூற வேண்டும் தெரியுமா?
இறைவன் சந்நிதானத்தில் மட்டும் தான்!

நம் நண்பர்களிடமும், உறவினர் களிடமும் சொந்தக் கதை, சோகக் கதையை விவரித்தால் அவர்கள் இரண்டு காரியத்தைத்தான் செய்வார்கள். ஒன்று நாம் நம் கவலையை ஒப்பிக்கும் பொழுது அவர்கள் கேட்பது போல் பாசாங்கு செய்வார்கள். இல்லையென்றால் ‘இவனுக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும்’ என்று தங்கள் மனத்திற்குள் எண்ணிக் கொள்வார்கள்.

அவ்வளவு தான்! நாம் கேலிக்கு, அல்லது புறக்கணிப்பிற்கு உள்ளாவோமே தவிர நம் வருத்தத்திற்கு வடிகால் ஏற்படாது. எனவே ‘கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா!’ என்று ஆண்டவனிடம் முறையிட்டால் மட்டுமே விமோசனம் ஏற்படும். அதனால் தான்.

‘தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்     
மனக் கவலை மாற்றல் அரிது’

என்று சொல்ல வேண்டிய இடத்தில் ‘கவலை’ என்ற பதத்தை குறிப்பாகக் குறிப்பிடுகிறார். மனித மனம் விசித்திரமானது. தன்னிடம் இருக்கும் பல்வேறு விதமான வாழ்க்கை வசதிகளில் திருப்தி அடையாது இல்லாத ஒன்றுக்கு, அல்லது நமக்குத் தெரிந்தவர்கள் அனுபவிக்கும் ஒன்றிற்கு நம் மனம் ஆசைப்படும். நாமும் அத்தகைய வசதியை அனுபவிக்க வேண்டுமே என்று மீண்டும் மீண்டும் அலைபாயும். ஒருவழியாக ஆசைப்படும் அந்த ஒன்று நம் கைக்கு வந்து விட்டால் அமைதியாகி விடுமா மனித மனம்? மீண்டும் புதிய ஒன்றை நாடி பயணம் மேற்கொள்ளும் இந்த ஆசை நெஞ்சம்.

‘பெற்றதை விடுத்து பெறாததை, மேலாக்கும்
குற்றம் உயிரின் குணம்’


என்று ஞானியர்கள் பாடுகின்றனர்.

‘‘எப்பொழுதும் கவலையிலே இணங்கி
நிற்பான் பாவி
ஒப்பி உனது ஏவல் செய்வேன் உனதருளால் வாழ்வேன்’’


என்று பாடுகிறார் பாரதியார்.

தேவையற்ற, வீணான, பயன்தராத கவலைச் சுழலில் சிக்கித் தவிக்கிற மனிதர்கள் சிலந்தி பூச்சியைப் போல் வலைக்குள்ளேயே தன் வாழ்நாளைக் கழிக்கிறார்கள்.
சிலந்தி வலை பின்னுவது எதற்காக? தனக்கு உணவு வேண்டி வலை விரித்து அதில் சிக்கும் சின்னஞ்சிறு உயிர்களை இரையாக்கிக் கொள்வதற்காகத் தானே!
ஆனால் ஆறறிவு மனிதர்களோ பூச்சியை விட புத்தி குறைவானவர்களாகவே காணப்படுகிறார்கள்.

காரணம்? சிலர் பின்னும் வலையில் அது சிக்குவதில்லை! ஆனால் தாங்கள் உருவாக்கும் கவலை வலையில் தாங்களே சிக்கித் தவிக்கும் பரிதாபகரமான நிலை தான் நம்மவர்கள் பலருக்கு நாளும் நடக்கிறது! வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களை மீண்டும் மீண்டும் எண்ணி மகிழ்வைப் பெருக்கிக் கொள்ளாத மானிடர்கள் துயர சம்பவங்களை மட்டும் அடிக்கடி நினைத்துப் பார்த்து கவலையில் ஆழ்ந்து விடுவது என்ன காரணம்! அறுபது வயதில் நாம் எப்படியிருப்போம் என நாற்பதாவது வயதிலேருந்தே கவலைப்பட ஆரம்பித்து ஐம்பதாவது வயதிலேயே கிழவர்களாகி விடுகிறார்கள் பலர். மனோதிடமும், மன நிறைவும் இல்லாதவர்களைத் தான் கவலை நோய் பற்றிக் கொள்கிறது.

ஒன்றை விட்டு ஒன்றைப் பற்றி
பாசக் கடற்குளே வீழாமல்
மதைற்ற பரிசுத்த நிலையை அருள்வாய்!


என்று பாடுகின்ற தாயுமானவர் சொல்கின்றார்.

விரிந்த இந்த வையகம் முழுவதும் உங்களுக்கே உரிமை என ஒருவர்க்கு உரிமைப்பத்திரம் எழுதிக் கொடுத்தாலும் நீர்ப்பரப்பான கடல் என்வசம் இல்லையே எனக் கவலைப்படும் இந்த பொல்லாத நெஞ்சம். குபேரனுக்கு நிகரான செல்வம் வந்து சேர்ந்தாலும் பித்தளையைத் தங்கமாக்கிக் கொள்ள முடியுமா என்று ஏங்கும் இந்த பேதை மனம். நீண்ட காலம் இப்பூவுலகில் வாழ்ந்த பின்னரும் காயகற்பம் சாப்பிட்டு இன்னும் பல காலம் வாழ வேண்டும் என்று ஆசைப்படும் இந்த அறியாமை நெஞ்சம்.

சாப்பிட உணவு கிடைத்தாலும் தொட்டுக் கொள்ள கறி வகைகள் வேண்டுமே என்ற கவலை. பவனி வர பல்லக்கு கிடைத்தாலும் அதில் விரிக்க பளபளப்பான பட்டு மெத்தை புலவர் என்ற கவலை. படிக்காசு புலவர் பாடுகின்றார். ‘பாலுக்குப் போட சர்க்கரை இல்லை என்பார்க்கும் பருக்கை அற்ற கூழுக்குப் போட உப்பு
இல்லை என்பார்க்கும் குத்தித் தைத்த காலுக்குப் போட செருப்பு இல்லை என்பார்க்கும் ககை தண்டி மேலுக்குப் போடஞ்சனை இல்லை என்பார்க்கும் விசனம் ஒன்றே!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • erode-dmk-votes-2

  அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!

 • scotland-bonfire-festival

  ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி

 • stalin-corp-31

  மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 • long-whale-newyork

  35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

 • pak-blast-30

  பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்