SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலைக்கறியமுது இலையமுது

2022-11-10@ 15:20:57

நன்றி குங்குமம் ஆன்மிகம்

மரம், செடி, கொடி போன்றவற்றில் இருக்கும் சமைப்பதற்கு தகுதியான இலைகளைப் பறித்து வந்து சமைத்து உண்கின்றனர். இதனை இலைக்கறியமுது என்பர். அரைக்கீரை, சிறுகீரை, பசலைக்கீரை, மணத்தக்காளிக் கீரை, முளைக்கீரை, தண்டுக்கீரை, முருங்கைக் கீரை, அகத்திக் கீரை, புளிச்சக்கீரை, புளிய இலை, பாலைக்கீரை, பொன்னாங்கண்ணி, வெந்தயக்கீரை, கரிசலாங்கண்ணி கறிவேப்பிலை போன்ற இலைகளை கடைசல், துவையல், கூட்டு, குழம்பு என்று தேவைக்கு ஏற்ப சமைத்து உண்கின்றனர்.

இறைவனுக்கும் கீரை உணவுகள் நிவேதிக்கப்பட்டன. இவை யாவும் மருத்துவ குணம் கொண்டதாகும். நோய் வராமல் காப்பதாகவும் உணவு செரிமான உணவு உறுப்புக்களை பலப்படுத்துவதாகவும் இருக்கின்றன. கோயில்களில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்கள் இறைவனுக்கு இலைக்கறி அமுதான கீரை வகைகள் படைக்கப்பட்டதைத் தெரிவிக்கின்றன.
தியாகேசப் பெருமானுக்கு உச்சிக்காலத்தில் பாகற்காய் குழம்பும் தூதுவளைக் கீரை சுண்டலும் நிவேதிக்கப்பட்டன. தியாகேசர் யோகராஜராக இருப்பவர். யோக நிலையில் ஈடுபடுபவர்களுக்கு பித்தம் ஏறுவதும் கபம் கட்டுவதும் உண்டாகும். பித்தத்தைக் கட்டுப் படுத்த பாகற்காயையும், கபத்தை நீக்க தூதுவளைக் கீரையும் சமைத்து நிவேதித்ததாகக் கூறுகின்றனர்.

திருபெருந்துறையான ஆவுடையார் கோயிலில் யோகநாதராக இருக்கிறார். இதையொட்டி அவருக்கு பாகற்காய் புளிக் குழம்பும் தூதுவளைக் கீரைச் சுண்டலும் நிவேதிக்கப்பட்டன. மேலும், அங்கு அரைக்கீரை நிவேதனமும் செய்யப்பட்டு வந்துள்ளது.புளிய மரத்தின் இலைகளை வதக்கி புளி சேர்த்து பருப்பு வகைகளுடன் அரைத்து புளியிலை அமுதான துவையல் தயாரிக்கப்படுகிறது. இது பொங்கல் தயிர்சாதத்துடன் நிவேதிக்கப்படுகிறது.

கீரை வகைகளை நன்கு வேகவைத்து தாளித்தது கீரைச் சுண்டல் எனப்படுகிறது. கீரை வகைகளை நன்கு தண்ணீர் விட்டு வேகவைத்து சட்டியில் இட்டு மத்தால் கடைந்து தயாரிப்பது கீரைக் கடைசல் அல்லது கீரை மசியல் என்பது பெயராகும். கீரை வகைகளை வதக்கி வைப்பது கீரை பொறியல் எனப்படும். இதன் கீரைக் கறி என்றும் அழைப்பர்.

மாரியம்மன், காளியம்மன் போன்ற தெய்வங்களுக்கு படைக்கப்படும் கூழுடன் முருங்கைக் கீரை, துவையல் சேர்த்து நிவேதிக்கப்படுகிறது. முருங்கைக் கீரையுடன் எள்ளு புண்ணாக்கைச் சேர்ந்து சமைக்கின்றனர். முன்னாளில் எள்ளைச் செக்கிலிட்டு வெல்லம் சேர்த்து ஆட்டும்போது எள் மசிந்து எண்ணெய் வெளியாகும் போது பாதி அரைபட்ட எள்வெல்லக் கலவையை பிடியாகப் பிடித்து வைத்து நிவேதிப்பர் இது நோலை எனப்படும் இதை முருங்கைக் கீரையுடன் சேர்ப்பது வழக்கம். பின்னாளில் இதற்குப் பதிலாக எள்ளு புண்ணாக்கைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.

புளிச்ச கீரை எனப்படும் காசிரிக்கீரை கீரை வகையை புளிசேர்த்து கடைந்து வாணலில் வதங்கி வைக்கப் பயன்படுத்துகின்றனர். இது தெலுங்குப் பெயரால் கோங்குரா என்று அழைக்கப்படுகிறது. இந்த கீரையின் தண்டில் இருந்து நாரைப் பிரித்தெடுத்து உறுதியான கயிறு தயாரிக்கின்றனர்.அறுபத்து மூன்று நாயன்மார்களில் கீரையை இறைவனுக்கு அளித்து பேறு பெற்றவர்கள் இளையான்குடி மாறநாயனாரும் அரிவாட்டாய நாயனாரும் ஆகிய இருவராவர்.

வட்டார வழக்கிற்கு ஏற்ப கீரை நிவேதனம் செய்யப்பட்டு வந்துள்ளது. இறைவனுக்கு கீரைக் கறி சமைத்து உணவிட்ட அடியவராக இளையான்குடி மாறநாயனார் இருக்கின்றார். மழை பொழியும் கனத்த இருள் சூழ்ந்த இரவில் இளையான்குடி மாறநாயனார் இல்லத்திற்கு ஒரு தவசியின் வேடத்தில் சிவபெருமான் எழுந்தருளினார். நாயனாரிடம் பசியால் மிக வருந்துகின்றேன் என்றார். விரைந்து உணவளிப்போம் சற்று ஓய்வெடுங்கள் என்றார்.நாயனார் வீட்டில் சமைப்பதற்கு எதுவும் இல்லை. நாயனார் தயங்காமல் தனது வயலுக்குச் சென்று காலையில் விதைத்த நெல் மழை மிகுதியால் மிதந்து கொண்டிருந்ததை உணர்ந்து அந்த நெல்லை வாரிக் கொண்டு வந்தார். அவர் மனைவியார் அதை அலசி விரைந்து சமைக்க முயன்றார்.

விறகு இல்லை அதனால் விட்டின் ஒரு பகுதியின் நாயனார் மேற்கூரையை வெட்டிக் கொடுத்து அதை வைத்து சோறாக்கினார். கறிக்கு ஏதுமில்லை என்பதை அறிந்த நாயனார் தோட்டத்தில் குழியில் வளர்ந்தும் வளராமலும் இருந்த கீரையைப் வேரோடும் பறித்து வந்து கொடுக்க மனைவியார் பல விதமாகச் சமைத்தார். நாயனாரும் அவர் மனைவியாரும் தவசியாரிடம் சென்று உணவருந்த அழைத்தனர். அவர்களுக்குப் பெருமான் ஜோதி வடிவாகக் காட்சியளித்தார். பின்னர் இடப வாகனத்தில் தேவியாருடன் காட்சியளித்து முக்தியளித்தார்.

கீரையை பலவிதங்களில் சமைத்து நிவேதிக்கப்பட்டதை நாயனார் வரலாறு கூறுகிறது. மேலும் செங்கீரையை அமுது செய்த அடியவரான அரிவாட்டாய நாயனார் வரலாற்றையும் பெரியபுராணம் கூறுகின்றது. இங்கே செங்கீரை என்பதற்கு இளசானதும் சுவையானதும் தரும் கீரைகள் என்றே பொருள் கொள்ள வேண்டும். அரிவாட்டாய நாயனார் வரலாற்றில் அவன் இறைவன் நிவேதனத்திற்கு வேண்டிய செந்நெல், மாவடு, செங்கீரை ஆகியவற்றை கூடையில் வைத்து எடுத்துச் சென்றார் என்பதை சேக்கிழார் குறித்துள்ளார்.

அன்பு போல் தூய செந்நெல்
அரிசி மாவடு மென் கீரை
துன்புபோம் மனத்துக் தொண்டர்
கூடையில் சுமந்த போது


- என்பது சேக்கிழார் திருவாக்காகும்.

இதன்மூலம் ஆலயங்களில் இறைவனுக்கு கீரைகளைச் சமைத்து நிவேதிக்கும் வழக்கம் இருந்ததை அறியமுடிகிறது.இறைவனுக்கு இலைக்கறி அமுதான கீரையை அளித்துப் பேறு பெற்றதைப் போலவே அடியவரான சுந்தரருக்கு நாளும் பாகற்காயும் தூதுவளைக் கீரையையும் அளித்து அன்பைப் பெற்ற அடியவரையும் காண்கிறோம். அவர் அம்பர் தலத்து சோமாசி மாறனார் ஆவார். மரங்களில் இருந்து கிடைக்கும் கீரை அகத்திக்கீரையாகும். அமாவாசை பௌர்ணமி போன்ற புண்ணிய தினங்களில் அகத்திக் கீரையைத் தானமாக அளிப்பர். மேலும் பசுவுக்குத் தீனியாக அகத்திக் கீரையை அளிக்கின்றனர். ஏகாதசி விரதமிருக்கும் வைணவர்கள் மறுநாள் துவாதசியன்று அகத்திக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளுகின்றனர்.

கல்வெட்டுக்களில் இலைக்கறியமுது இலையமுது என்று சொற்களைக் காண்கிறோம். இலைக்கறியமுது என்பது இலைகளான கீரை களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கறியமுது ஆகும். இலையமுது என்றால் அது வெற்றிலையைக் குறிக்கும். இலை அமுதுடன் அடைக்காய் எனப்படும் பாக்கு சேர்த்து நிவேதிக்கப்பட்டது.இலையமுது என்றாலும், அது வெற்றிலை மட்டும் அல்லது பாக்கு வாசனைப் பொருட்களான ஏலம், கிராம்பு, பச்சைக் கற்பூரம் போன்றவற்றை பன்னீர் விட்டு அரைத்து பக்குவமாக்கி வெற்றிலையில் மடித்து நிவேதித்தனர்.

தொகுப்பு: ஜி.ராகவேந்திரன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • erode-dmk-votes-2

  அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!

 • scotland-bonfire-festival

  ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி

 • stalin-corp-31

  மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 • long-whale-newyork

  35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

 • pak-blast-30

  பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்