SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆபத்திலிருந்து காத்திடுவாள் ஆண்டாயி அம்மன்

2022-11-09@ 17:00:01

பாப்பாபட்டி, மதுரை

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ளது பாப்பாபட்டி, இந்த பாப்பாபட்டியில் வசிக்கும் பத்து வீட்டுக்காரர்களின் பராமரிப்பில் இருக்கிறது
ஒச்சாண்டம்மன் திருக்கோயில். சுமார் 400 வருடங்களுக்கு முன்பு பாப்பாபட்டி கிராமத்தில் வாழ்ந்து வந்த பகாத்தேவன், சிலம்பம், கூத்து, மல்யுத்தம் என்று எல்லா கலைகளிலும் சிறந்து விளங்கினான். ஒரு முறை கருமாந்தூரில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் சிலம்பபோட்டி, மல்யுத்தப் போட்டி முதலான பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் ஆர்வமுடன் கலந்து கொண்ட பகாத்தேவன் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றான்.

மேலும் அங்கு நடந்த கர்ணன் தெருக்கூத்திலும் தானே கர்ணனாக நடித்து தனது திறமையை வெளிக்காட்டினான். எல்லாவற்றிலும் திறமையைக்காட்டிய பகாத்தேவன் மேல் அங்குள்ள ஒச்சாண்டம்மன் கோயில் பெரிய பூசாரியின் மகள் ஆண்டாள் காதல் கொண்டாள். பரிசளிப்பில் தொடங்கிய அன்புப்பரிமாற்றம் காதலாக மாறிப்போனது. பகாத்தேவனும் காதலித்தான். அதன் நெருக்கமாக ஆண்டாளை, ஆண்டாயி என்றே அழைத்து வந்தான். தனது மகளின் காதல் விசயங்களை ஊரார்கள் மூலம் அறிந்த ஒச்சாண்டம்மன் கோயில் பெரிய பூசாரி, இதற்கு ஒரு முடிவு கட்ட எண்ணினார். உடனே ஆண்டாளை அழைத்து பகாத்தேவனை முறைப்படி நம்ம வீட்டுக்கு பெண் கேட்க வரச்சொல் என்றார்.

ஆண்டாள் பகாத்தேவனை அழைத்து தனது தந்தையார் பெண் கேட்டு வரச்சொன்னதை சொல்ல, ‘‘வந்துட்டா போச்சு’’ என்றான் பகாத்தேவன்.‘‘அதற்கு இப்படி தொடை தெரிய தூக்கி கட்டிய வேட்டியும், முண்டாசும் கட்டி மீசை முறுக்கிவிட்டபடி சண்டியராட்டம் வராத, நல்ல பிள்ளையாட்டம் வா’’ என்றுரைத்தாள்.

‘‘எல்லாத்தயும் மாத்திடுறேன், ஆண்டாயி, அத்தான் மீசையை மட்டும் மாத்தமுடியாது, அது வீரத்தின் அடையாளம், நான் சிங்கம்’’
‘‘சிங்கத்துக்கெல்லாம் எங்கப்பா பொண்ண கட்டி கொடுக்கமாட்டாரு’’
‘‘என்னது, பொண்ண கட்டி கொடுக்க மாட்டாரா, பார்த்துடுறேன், பூசாரியா, நானான்னு...’’
‘‘மாமனார, இப்படி மரியாதை குறைவா பேசக்கூடாது, சரி, சரி, சீக்கிரமா வந்து சேரு,’’
‘‘நீ போ ஆண்டாயி, விருசல வந்துறேன்.’’ என்று கூறிக்கொண்டு பகாத்தேவன் உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டார்களுடன் பெரிய பூசாரி வீட்டிற்கு ஆண்டாயியை பெண் கேட்கச் சென்றான்.

எல்லோர் முன்பும் வைத்து பூசாரி, பகாத்தேவனிடம், ‘உங்கள் குலதெய்வம் எது?’ என்று கேட்க, பதில் சொல்லத்தெரியவில்லை பகாத்தேவனுக்கு. குல தெய்வம் தெரியாத உனக்கு என் குல மகளை தரமாட்டேன் என்றுரைத்த பூசாரி, பெண் கொடுக்க மறுத்துவிட்டார். சினத்துடன் வெளியேறிய பகாத்தேவனிடம், பின் வாசல் வழியாக ஓடி வந்து வழி மறித்த ஆண்டாயி,‘‘ஏவ், கோபபடாதய்யா, உங்க சொந்த பந்தங்க கிட்ட குலதெய்வத்த தெரிஞ்சிட்டு வாய்யா,’’ என்றாள்.

அதற்கு பதிலுரைத்த பகாத்தேவன்,‘‘ஆண்டாயி,. குலதெய்வத்தைக் கேட்டுத்தான் என்னை விரும்பினியா புள்ள, இங்கரு. சிங்கத்தை தூண்டிவிட்ட, இனி அடக்கமுடியாது, நான் அடங்கி போறவன் இல்லடி, அடக்கி ஆள்றவன். எனக்கு என் குலதெய்வம் தெரியாது. எல்லாரு முன்னயும்தான் சொல்லுறேன். நீதான் ஆண்டாயி எனக்கு எல்லாமே. என் குலமே உன்னால தான் உருவாகப்போகுது. அப்போ நீதான்டி என் குலதெய்வம். வாரேன், வந்து வச்சுக்கிறேன். உன் அப்பனுக்கு என்று சொல்ல,’’ உடனிருந்தவர்கள், ஏய் என்ன பேசுத, பெரிய மனுஷன அப்படியெல்லாம் பேசக்கூடாது வா, வா என்று அவனை அழைத்துச்சென்றனர்.

பகாத்தேவன் பேசியதை எண்ணி தூக்கத்தை தொலைத்துக் கொண்டு கட்டிலில் புரண்டு புரண்டு படுத்துப்பார்த்தாள் ஆண்டாள். ஆனால் அவளுக்கு தூக்கம் வரவில்லை. கடைசியாக முடிவு எடுத்தாள். தன்னையே முழுமையாக நம்பிய பகாத்தேவனோடு வாழ்வது என்று. கோழி கூவும் முன்னே புறப்பட்டாள். கோழி கூவும் அதிகாலைப்பொழுதில் பகாத்தேவன் வீட்டில் விளக்கேற்றினாள் ஆண்டாள். அன்றைய விடியலே அவனது வாழ்க்கையிலும் நல்ல விடியலை கொடுத்தது. ஆண்டாயியின் பெற்றோர் அவளுக்காக எடுத்து வைத்திருந்த நகைகள், பட்டாடைகள் எல்லாவற்றையும் கொண்டு கொடுத்து வாழ்த்திச் சென்றனர்.

இருவரும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி, எட்டுப்பிள்ளைகளைப் பெற்றெடுத்தனர். என்னதான் மகிழ்ச்சியாக இருந்தாலும், ஆண்டாயியின் மனதில் கணவனுக்கு குலதெய்வம் இல்லாதது மனக்குறையாகவே இருந்தது. இருப்பினும் தன் வீட்டு குலதெய்வமான ஒச்சாண்டம்மனையே ஒவ்வொரு நொடிப்பொழுதும் நினைத்துக் கொண்டே இருந்தாள். பகாத்தேவன் அண்ணியார், ஆண்டாளைப் பார்த்து எப்ப பார்த்தாலும் மந்திரம் சொல்லி சாமியே நினைச்சிட்டிருந்து நீ முழுக்க சாமியாரா ஆகிருவ போலுக்கு...அப்புறம் என் கொழுந்தனார யார் பார்த்துக்குவா’’ என்று கேலியாக பேசினாள். எதையும் பொருட்படுத்தாமல் தனக்கென தனிப்பாதையை உருவாக்கி அதில் முழுக்கவனம் செலுத்தி வந்தாள் ஆண்டாள்.

ஒருமுறை கருமாந்தூர் ஒச்சாண்டம்மன் கோயில் திருவிழாவுக்கு ஆண்டாயியுடன், அவளது கணவனின் அண்ணன் மனைவியும்  சென்றாள். இவர்கள் இருவரும் அருகருகே அடுப்புக்கூட்டி பொங்கல் வைத்தனர். கோயிலின் வழக்கப்படி எல்லோருடைய அரிசியில் இருந்தும் ஒரு கைப்பிடி அரிசியை நிர்வாகிகள் எடுத்தார்கள். ‘‘வெளியூர்க்காரியான பகாத்தேவன் அண்ணன் மனைவி அரிசியில் கைப்பிடி அரிசி எடுக்க வேண்டாம், அதற்குப் பதிலாக என் அரிசியில் எடுத்துக் கொள்ளுங்கள்’’ என்று சொன்னாள் ஆண்டாயி.

ஆண்டாயியின் பெரியப்பா, சித்தப்பா தான் கோயில் நிர்வாகிகள். என்றாலும், ஆண்டாயி சொன்னதை அவர்கள் கேட்கவில்லை. பகாத்தேவன் அண்ணன் மனைவி பானையிலும் அரிசி எடுத்ததுடன் பொங்கல் பொங்கியதும் அதிலும் ஓர் அகப்பை (கரண்டி) எடுத்தார்கள். ‘தனது ஓரகத்தி (மச்சான் பொண்டாட்டி) முன்னிலையில் தன்னை அவமானப்படுத்தி விட்டார்களே’ என்று அழுதுகொண்டே பொங்கல் பானையை தலையில் வைத்துக் கொண்டு ஆண்டாயி நடையைக் கட்டினாள். அவளுடைய தம்பி மற்றும் வேலைக்காரன் இருவரும்பின் தொடர்ந்தனர்.

எங்கும் கும்மிருட்டு ஆனால், இவள் போகும் பாதை மட்டும் பிரகாசமாக ஒளிர்ந்தது. கொண்டம்பட்டியில் ஒரு தோப்பில் நடந்து வந்த களைப்பு நீங்க சற்று ஒதுங்கி நின்றாள் ஆண்டாயி, சிறிது நேரம் கடந்த பின்பு ஆவேசம் குறைந்தது. அப்போதுதான் தம்பி மற்றும் வேலைக்காரன் இருவரையும் கவனிக்கிறாள். பானையை இறக்கி, 23 இலை போடுகிறாள். 21 இலைகளிலும் இவள் போட்ட உணவை அவள் வணங்கும் தெய்வ சக்திகள் எடுத்துக் கொண்டன. மீதமிருந்த இரண்டு இலைகளில் தம்பியும், வேலைக்காரனும் சாப்பிட்டனர்.  வீட்டை அடைந்த ஆண்டாயி, குரல் கொடுக்கிறாள். வீட்டருகே ஆட்டு மந்தையின் நடுவே படுத்திருந்த பகாத்தேவன், இரவில் தனியாக வந்த ஆண்டாயியை, கடுமையாகக் திட்டி தீர்க்கிறான். ஏற்கெனவே கோபத்தில் இருந்த ஆண்டாயிக்கு, கணவனும் கோபப்படுத்த…

இனி பகாத்தேவனோடு வாழ்ந்தது போதும் என்று கருதிய ஆண்டாயி, வீட்டிலிருந்து வேகமாக கிளம்பி உத்தப்ப நாயக்கனூர் ஜமீனிடம் முறையிட சென்றாள். ஆண்டாயி வந்ததை கண்டு கொள்ளாத ஜமீன், வேட்டைக்குப் போகும் போக்கில் என்ன? எதுக்கு வந்த என்று கேட்க, ஆண்டாயி தலைவிரி கோலமாக நின்றுகொண்டு பற்களை கடித்துக்கொண்டு ஒரு உறுமலோடு கூறினாள் ‘‘தொட்டிலைப் போய் பார் தொட்டியா” என்றாள் (ஜமீன்தார் தொட்டிய நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்தவர் என்பதால், ‘தொட்டியா’ என்று கூறினாள்). ஜமீன் தார் எப்போதும் தொட்டிலில் இருந்துதான் தீர்ப்பு சொல்வது வழக்கம், தேக்கு மரத்தொட்டில் அது.

வேகம் கொண்டு வேட்டைக்குச் செல்ல புறப்பட்ட ஜமீன், விறு விறுவென வீட்டிற்குள் சென்று தொட்டிலைப் பார்த்தார். அதில் அவர்களது குலதெய்வமான ஒச்சாண்டம்மன் புன்னகை சிந்தும் பொன்முகம் கொண்டு அலங்கார தேவதையாகக் காட்சிக் கொடுத்தாள். வௌியே ஓடிவந்தவர், ஆண்டாயியின் காலில் விழுந்து வணங்கி… ‘‘உனக்கு என்ன வேண்டும் தாயே?’’ என்று கேட்க, ‘‘என்கூட வந்திருக்கும் இருவருக்கும் ஆளுக்கு 96 குழி நிலம் கொடு’’ என்று உத்தரவிட்டு, ஊர் திரும்பினாள்.

அதற்குள்ளாகவே… நிலப்பத்திரத்தை எடுத்துக்கொண்டு குதிரையில் ஊருக்கு வந்த ஜமீன்தார், ஊரில் விஷயத்தை சொன்னதும்… எல்லோருக்கும் ஆச்சர்யம். ஊரே சேர்ந்து அவளை வரவேற்றது. பொங்கல்பானையை இறக்கி வைத்து வழிபாடு தொடங்கியதும். ஆண்டாயி, அங்கிருந்த மக்களுக்கு அருள்வாக்கு சொல்ல ஆரம்பித்தாள். அன்றிலிருந்து தனிவீட்டில் அமர்ந்து அருள் வாக்கு சொல்லும் ஆன்மிக சுடரொளியாக அப்பகுதியில் உள்ளவர்களால் பார்க்கப்பட்டாள். பகாத்தேவனும் அவளை தெய்வமாகப் பார்த்தான். ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் உன்னை நான் தாரமாக எண்ணக்கூடாது. வாழ்ந்த நாட்கள் நினைவுகளாக இருக்கும். இனி நீ என் குலதெய்வம் என்றுரைத்தான்.

உசிலம்பட்டி சுற்றுவட்டாரம் முழுவதும் ஆண்டாயி புகழ் பரவியது. ஒச்சாண்டம்மனை நினைத்து வீட்டிலேயே பூஜை செய்து வந்தாள். பூஜை முடிவில் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு குறிசொன்னாள். ஒரு சிவராத்திரியின் போது இரண்டு பூஜை முடிந்து, மூன்றாம் பூஜை நடக்கும்போது ஆண்டாயியைக் காணவில்லை. அப்போது ஒரு அசரீரி கேட்டது. ‘‘நான் ஒச்சாண்டம்மனோடு கலந்துவிட்டேன். என்னை நீங்கள் கோயிலில் வழிபட்டால் போதும்’’ என்று ஆண்டாயி சொல்ல… அன்றிலிருந்து கோயிலில் இருக்கும் ஒச்சாண்டம்மனையே ‘ஆண்டாயி’யாக வழிபட ஆரம்பித்தார்கள் அப்பகுதி மக்கள்.

ஆண்டாயி பயன்படுத்திய ஆபரணங்கள், உடைகள்… உசிலம்பட்டி, நகைக்கடைத் தெருவில் இருக்கும் சின்னகருப்புக்கோயிலில் வைக்கப்பட்டிருக்கிறது. மகாசிவராத்திரியின் போது அங்கிருந்து ஆபரணப்பெட்டி அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக பாப்பாபட்டிக்கு எடுத்து வரப்படுகிறது. அப்போது ஆயிரக்கணக்கானோர் கலந்துகொள்வது அற்புத நிகழ்வாக இன்றளவும் நடைபெறுகிறது. இக்கோயில் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டியில் உள்ளது. ஆண்டாயி கோயிலை ஒச்சாண்டம்மன் கோயில் என்றும், ஆச்சிக்கிழவி கோயில் என்றும் அழைக்கிறார்கள்.

தொகுப்பு: சு.இளங்கலைமாறன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • erode-dmk-votes-2

  அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!

 • scotland-bonfire-festival

  ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி

 • stalin-corp-31

  மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 • long-whale-newyork

  35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

 • pak-blast-30

  பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்